சில தருணங்களும் சில நிகழ்வுகளும் 34: குழந்தை வரம்

By செய்திப்பிரிவு

ஒரு சுவரொட்டி கண்ணில் பட்டது. ‘மஞ்சள் நீராட்டு விழா’ என்று. தமிழ்நாட்டில்தான் பெண் மலர்ந்து தாயாகத் தயாராகிவிட்டதை ஊர் கூட்டிக் கொண்டாடுவார்கள். இதை இன்றைய பெண்கள், அதுவும் படித்த பெண்கள் விரும்புவதில்லை. வெட்கக் கேடு என்று நினைக்கிறார்கள். ஆனால், தொலைக்காட்சியிலும், பத்திரிகைகளிலும் மாதவிடாய்க்கான சாதனங்களையும் சுகாதாரத்தையும் விளம்பரப்படுத்துவதைப் பற்றி கவலைப்படுவதில்லையே!

இன்று மலர்ந்த பெண்ணுக்கு முதல் தாவணி, முதல் புடவை, விஸ்தாரமான மாமன் சீர் செய்வதில்லைதான். ஆனாலும் புதுத் துணியும், வீட்டோடு நீராட்டி, புட்டு சுட்டு விழா எடுப்பார்கள். என் முதல் புடவை நல்ல மஞ்சள் நிறத்தில் பூப்போட்ட ‘ஸ்விங்’ வாயில். இப்போதும் நினைவில் நிற்கிறது.

கல்யாணமான சில மாதங்களுக்குப் பிறகு தம்பதியைச் சந்திக்கும் உற்றார், உறவினர், அண்டை அயலார்கள்கூட ‘என்ன விசேஷம் ஒன்றுமில்லையா?’ என்று கேட்பார்கள். இன்று இந்த வழக்கம் பெரும்பாலும் மறைந்துவிட்டது. இன்று பெற்றோர்கள்கூடக் கேட்கத் தயங்குகிறார்கள். தம்பதியர் குழந்தை பெறுவது பற்றித் தீர்மானிப்பது அவர்களது உரிமை என்று நினைக்கிறார்கள். காரணங்கள் பல இருக்கலாம். பெற்றோர் மனதில் ஓடும், கேட்கத் தயங்கும் கேள்விகள் பல. ‘தள்ளிப் போட்டிருக்கிறார்களா அல்லது வேண்டாம் என்று நினைக்கிறார்களா அல்லது ஏதேனும் குறையா, அப்படியானால் யார், பெண்ணா பிள்ளையா, மருத்துவர் உதவியை நாடினார்களா?’. இப்படிப் பல கேள்விகள்.

பெண் பிறக்கும்போதே அவளது சினைப் பையில் சினை முட்டையை உற்பத்தியாக்கக்கூடிய திசுக்கள் 20,000-க்கும் மேல் இருக்கின்றன. மாதா மாதம் தவறாமல் மாதவிடாய் ஏற்படும் பெண், குழந்தைப் பேறில்லாமல் இருக்கும் சாத்தியம் மிகக் குறைவு. அதுவும் 18 - 28 வயதில் தாம்பத்யம் நடத்தினால், 30 - 35 வயதுக்குப் பிறகு கருத்தரிப்பது சற்று சிரமம்.

இரண்டு சினைப் பைகள், நடுவில் கருப்பை கிட்டத்தட்ட முக்கோண வடிவம். அதன் கீழ் மேல் முனைகளிலும் கருக் குழாய்கள். அவற்றிலும் நுனி விரல்கள் போல் இருக்கும். இந்த நுனி, சினைப் பையின் அருகில் இருக்கும். ஆனால், தொடாமல் இருக்கும். ஒவ்வொரு மாதமும் ஒரே ஒரு சினை முட்டை வளர்ந்து முதிர்ந்து, மாதச் சுழற்சியின் நடுவில் வெடித்துக் கரு முட்டையை வெளிப்படுத்தும்.

ஆணின் விதைப் பையில் விந்தணுக்களை உற்பத்தி செய்யக்கூடிய திசுக்கள் உள்ளன. விந்துவின் நீரில் பல லட்சக்கணக்கான விந்தணுக்கள் நீந்திக் கொண்டிருக்கும். அவற்றுக்கு ஒரு தலையும் வாலும் இருக்கும்.

வெளிப்பட்ட கருமுட்டை கருக்குழாயில் ஈர்க்கப்பட்டு உள் புகும். உடலுறவில் வெளிப்படும் விந்து அணுக்கள் யோனிக் குழாயில் வாலின் உதவியால் நீந்தி கருப்பையின் வாயுள் புகுந்து கருக் குழாயை அடையும். இது ஒரு பெரிய சாதனை. ஒலிம்பிக் வீரர்களை முறியடிக்கும் அதிசயம். இதில் வெற்றி பெறும் விந்தணு வாலை இடித்து கரு முட்டையின் வெளிப்புறச் ‘சுவரை’ துளைத்து உட்புகுந்து கருமுட்டையுடன் இணைந்து வளரத் தொடங்கும். மரபணுக்கள் கூடிப் பிரிந்து ஆணோ, பெண்ணோ கரு வளரத் தொடங்கும்.

கவனிக்க: பாலினத் தீர்மானத்தை ஆணின் மரபணுதான் செய்கிறது. அதனால், பெண் குழந்தை பிறப்பதற்குத் தாய் காரணமல்ல. இது எத்தனை சொன்னாலும் ஏறாத விவரம்.

குழந்தையின்மை எதனால் என்று கண்டுபிடித்துச் சரியாக்கும் வழிமுறைகள் உள்ளன. பெண்ணைப் பரிசோதனை செய்து உடல்ரீதியான குறைகளோ, வியாதிகளோ இருந்தால் கண்டுபிடிக்கலாம். ரத்த சோகை, தைராய்டு சுரப்பியின் வேலை, மற்ற ஹார்மோன்களின் குறைபாடுகள், சர்க்கரை வியாதி... இவையெல்லாம் சரி செய்யக்கூடியவை. பிறகு சுலபமான நுண்சப்த அலை (Ultra sound) பரிசோதனை மூலம் கருப்பை, சினைப்பை அனைவற்றையும் துல்லியமாகக் காண்பது சுலபம். சினை முட்டை உருவாகிறதா, உருவானால் எப்போது முதிர்கிறது, எப்போது வெடித்துக் கருமுட்டையை வெளிப்படுத்துகிறது என்று கண்டுபிடித்தால் மாதச் சுழற்சியில் அந்த 2 - 3 நாட்களில் உடலுறவு கொண்டு கருத்தரிக்க முடியும். உற்பத்தி, வளர்ச்சி வெளிப்படுதல் ஆகியவற்றில் குறைபாடு இருந்தால் மருந்துகளின் மூலம் சரிசெய்ய முடியும்.

மாதவிலக்குப் பிரச்சினை இருந்தால் எதனால் என்று கண்டறிய பல பரிசோதனைகள் உள்ளன. ‘ஹார்மோன்’ பிரச்சினை, சினைப்பை நீர்க் கட்டிகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுச் சரியாக்க முடியும். அதேபோல் கருத்தரித்துத் தங்காமல், மீண்டும் மீண்டும் சிதைவு ஏற்பட்டால் காரணம் கண்டுபிடிக்க பரிசோதனைகள், சரியாக்க மருந்துகள் உள்ளன.

குழந்தையின்மையில் ஆண்களுக்கு உளரீதியான பிரச்சினை இருக்கிறது. ஆண்மை (தாம்பத்யம்) வேறு மலட்டுத் தன்மை வேறு என்பதைப் பெரும்பாலான ஆண்கள் அறிவதில்லை. அல்லது ஏற்றுக்கொள்வதில்லை. 50 - 60 வருடங்களுக்கு முன்கூடக் கணவனைக் குழந்தையின்மைக்கு மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளச் சொன்னால்கூடக் கணவனின் முகம் சுருங்கும். அவரது தாயாரோ ‘என் பிள்ளை ஆம்பிளை சிங்கம். எங்க வம்சத்திலேயே மலடு கிடையாது’ என்று குரலை உயர்த்துவார். உடலுறவு கொள்ளும் திறன் இருந்தால்கூட விந்துவில் உயிரணுக்கள் இல்லாமல் போகலாம். அல்லது எண்ணிக்கை மிகக் குறைவாகவோ, குறையுள்ள, திறனற்ற உயிரணுக்கள் இருக்கலாம். அதேபோல மிகக் குறைந்த ஆண்மை (உடலுறவு கொள்ளும் திறன்) உடையவரின் விந்துவில் நிறைய, நல்ல உயிரணுக்கள் இருக்கலாம்.

மருத்துவப் பரிசோதனையில் பெண்ணுக்குக் கூறியதுபோல் ஆணுக்கும் உடல்ரீதியான வியாதிகள், குறைகள் உள்ளனவா என்று பரிசோதித்து ஆவன செய்யலாம். முக்கியமாக விந்து நீரைப் பரிசோதித்து உயிரணுக்களின் எண்ணிக்கை, அமைப்பு, நீந்தும் திறன் எல்லாம் சில நிமிடங்களில் கண்டுபிடிக்க முடியும். விதைப் பையில் ஒரு சிறிய பகுதியை எடுத்து (biopsy) சோதித்து விந்து உற்பத்தியில் ஏதேனும் குறை உள்ளதா என்று கண்டறிய முடியும்.

குழந்தையின்மைக்குப் பல தீர்வுகள் உள்ளன. மேற்கூறிய குறைகளுக்குத் தீர்வு கண்டும் கருத்தரிக்கவில்லை எனில் மாற்று வழிகள் என்னவென்று பார்ப்போமா? உயிரணுக்கள் நன்றாக இருந்தும் எண்ணிக்கை குறைந்தால் விந்துவின் நீர்த் தன்மையைச் சுருக்குவதன் மூலம் எண்ணிக்கை அதிகரிக்கும். செயற்கை முறையாக விந்துவை வெளிப்படுத்திச் சுருக்கி, பெண்ணின் கரு முட்டை வெளியாகும் 2 - 3 தினங்களில் இந்த விந்துவை கருப்பையின் உள்ளே செலுத்தலாம்.

செயற்கை முறையில் கருத்தரித்தலைப் பற்றி ஊடகங்களிலும், விளம்பரங்களிலும் கண்டிருப்பீர்கள். இதைச் ‘செயற்கை’ என்று கூறினாலும், இந்த முறை உடலுக்கு வெளியில் நிகழ்வதாலும் கண்காணிப்பில் நிகழ்வதாலும்தான் இது செயற்கை. பெண்ணின் சினைப்பையை மருந்தால் தூண்டிவிட்டு ஒன்றுக்கு மேற்பட்ட கரு முட்டைகளை உருவாக்கி அவற்றை ஊசிமூலம் வெளியே எடுத்து அதேபோல் ஆணின் விந்துவையும் வெளிப்படுத்தி இவற்றைப் பரிசோதனைக் குழாயில் இணையச் செய்து கரு உருவாவதைக் கண்காணிப்பார்கள். கரு உருவானதும் ஏற்கெனவே தயார்படுத்தப்பட்ட நிலையில் இருக்கும் பெண்ணின் கருப்பையினுள் செலுத்தி அது வேர் பிடித்து வளருவதைக் கண்காணிப்பார்கள். சரியானபடி வளரத் தொடங்கினால் கவலையே இல்லை. இது செயற்கையில் உருவாக்கப்பட்ட இயற்கை கர்ப்பம்தான்.

இதுவே பெண்ணின் கருப்பையில் பிரச்சினை என்றாலோ, மீண்டும் மீண்டும் கருச்சிதைவு ஏற்பட்டது என்கிற விவரம் இருந்தாலோ இந்த வெளியில் உருவாக்கப்பட்ட கருவை ‘வாடகைத் தாயின்’ கருப்பையில் செலுத்தி வளரச் செய்வார்கள். இதில் சில விதிமுறைகள் கண்டிப்பாகக் கடைபிடிக்கப்படும். ‘வாடகைத் தாய்’க்குக் குழந்தையின் பெற்றோர் யாரென தெரிவிக்கக் கூடாது. அதுபோல ‘வாடகைத் தாய்’ யாரென்று பெற்றோர் அறியக் கூடாது. இந்த நிகழ்வுக்கு முன்னரே ‘வாடகைத் தாய்’, பத்திரத்தில் தன் சம்மதத்தையும் பெற்ற குழந்தையின் மீது தனக்கு ஒரு உரிமையும் இல்லையென்றும் எழுதி பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

ஆணுக்கு விந்துவில் உயிரணுக்கள் இன்மை அல்லது குறைவாக இருந்தால் விந்து தானம் பெறலாம். இதற்கு ஆண் நல்ல மனப் பக்குவமும் புரிதலும் உள்ளவராக இருக்க வேண்டும். தாய்மைக்குப் பெண் ஏங்குவதுபோல் ‘தந்தமை’க்கு ஆண் ஆவலாக இருக்க வேண்டும். இதில் உடல்ரீதியான தொடர்பே இல்லை. மருத்துவரும் கூடியவரை அந்த ஆணின் தோற்றத்துக்குக் கிட்டத்தட்ட ஒத்துப் போகும்படியான ஒருவரைத்தான் விந்து தானத்துக்குத் தேர்ந்தெடுப்பார். இதில் ரகசியம் முழுமையாகக் காக்கப்படும். கொடுத்தவர் யார் எனப் பெற்ற தம்பதியருக்கும், அதேபோல் யாருக்குக் கொடுத்தோம் என்று கொடுத்தவருக்கும் தெரியவே தெரியாது. நம் குழந்தைக்குத் தாயின் மரபணுக்கள் இருக்கின்றனவே என்று தம்பதியர் சந்தோஷிக்க வேண்டும்.

எதிர்காலத்தில் வேறு ஒரு ஆணின் விந்து என்று நினைத்து மனைவியைப் பற்றிய மனத் தடுமாற்றமே கணவனுக்கு ஏற்படக் கூடாது. ஒரு கணமேனும் அப்படித் தோன்றினால் அது மிகப் பெரிய துரோகமாகும்.

20-க்கும் மேலான வருடங்களுக்கு முன் ஆண்மைக் குறைவுக்கு அதாவது ஆணுறுப்புக்கு விறைப்புத் தன்மை இல்லையோ, குறைவோ இருந்தால் அதற்குச் சரியான தீர்வுகள் இருந்ததில்லை. ‘சிந்தாமணி, சிட்டுக்குருவி லேகியம், காண்டா மிருகத்தின் கொம்பு’ போன்ற சந்தேகத்துக்குரிய ஒளஷதங்கள்தான் வளையவந்தன. ஏன் இன்றுகூட இவற்றை நம்புவார்கள். அதுவும் வயதாகியும் இளமையாக உடலுறவு கொள்ள ஏங்குபவர்களிடையே இவை பிரபலம். இன்று பலன் தரும் தீர்வுகள் உண்டு. ரத்த நாளங்களை விரியச் செய்து ஆணுறுப்பைப் பெரிதாக்கும் ஊசி மருந்துகளும் மாத்திரைகளும் உண்டு. வேறு ஒரு வகையான ‘ஜெல்’ போன்ற வஸ்துவும் பலன் தரும்.

குழந்தையின்மைக்கு வேறு தீர்வு இல்லையெனில் தத்து எடுக்கலாம். தத்தெடுப்பது என்பது நம்மிடையே காலம் காலமாக இருப்பதுதான். அது ஏக்கத்தினால் அல்லாமல் சொத்துக்கு வாரிசு வேண்டும் என்கிற அடிப்படையில் நடந்திருக்கிறது. வளர்ந்த பிள்ளைகளை உறவிலிருந்தே தத்து எடுத்துக்கொள்வார்கள். கொடுமை என்னவென்றால் ஆண்களையே தத்தெடுப்பார்கள். இது ஒரு வைதீகச் சடங்காக ஊரறிய, உறவறிய விழாவாக நடைபெறும்.

பலர் அந்நியமான குழந்தைகளைப் பாசத்தினால் எடுத்து அபிமானத்தினால் வளர்க்கிறார்கள். இவர்களுக்கென சொந்தக் குழந்தைகள் இருக்கக் கூடும்.

குழந்தை இன்மைக்காகத் தத்தெடுப்பது நம் நாட்டு நீதி விதிகளுக்கு உட்பட்டு நடந்தால்தான் செல்லுபடியாகும். மத்திய அரசில் இதற்கெனவே ஒரு துறை இருக்கிறது. தம்பதிகளுக்கு என சில தகுதிகள், வரைமுறைகள் உண்டு. அதேபோல் பதிவு செய்யப்பட்ட காப்பகங்களில் இருந்துதான் குழந்தையைப் பெற முடியும். குழந்தைகள் நலப் பிரிவு மூலம் நம் கோரிக்கையைப் பதிவுசெய்துகொள்ள வேண்டும். அரசு அதை ஏற்றதும் குழந்தை எங்கே இருக்கிறது என்று தெரிவிக்கப்படும். அதை தம்பதியர் போய்ப் பார்த்துத் தமக்குச் சரியாகும் என்று தோன்றினால் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு (3 மாதங்கள் என நினைக்கிறேன்) தற்காலிகமாக குழந்தையை அவர்கள் கொண்டு சென்று வளர்க்கலாம்.

குழந்தைகள் நலப் பிரிவிலிருந்து ஆய்வாளர்கள் வீட்டுக்கு வந்து குழந்தையின் நலம், சரியாக நடத்தப்பட்டு இருக்கிறதா, ஒட்டிக்கொண்டு இருக்கிறதா என்றெல்லாம் கண்காணிப்பார்கள். திருப்தி இல்லையெனில், குழந்தையைக் காப்பகத்துக்கே திரும்பக்கொண்டு போக அவர்களுக்கு உரிமை உண்டு. அதேபோல் உங்களுக்கும் குழந்தைக்கும் பொருந்தவில்லை என்றால் திருப்பி அனுப்பிவிடும் உரிமையும் உண்டு. எல்லாம் சரியானால்தான் நிரந்தர தத்துப் பதிவு செய்து பத்திரங்கள் வழங்கப்படும்.

சிறு குழந்தையாக இருந்தால் இது அதிக தாக்கத்தை ஏற்படுத்தாது. இரண்டாம்கெட்டானாக 3 - 4 வயதுள்ள குழந்தையானால் இப்படிப் புலம்பெயரும் பந்தாடல் எப்படிப்பட்ட குழப்பத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. அதனால், தம்பதியர் அறிவுபூர்வமாக கலந்தாலோசித்துத் தீர்மானிக்க வேண்டும். ஒட்டுதலை ஏற்படுத்த முயல வேண்டும்.

தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்குப் புரிந்துகொள்ளும் வயது வந்தவுடன் அவர்கள் தத்துக் குழந்தைதான் என்பதைப் பெற்றோரே தெரிவித்துவிட வேண்டும். பள்ளியில் மற்ற குழந்தைகளிடமிருந்தோ, மூன்றாம் மனிதரிடமிருந்தோ இதை அறிந்தால் குழந்தை அதிர்ச்சியும் குழப்பமும் அடையும். ‘மற்ற பெற்றோர்கள் கடவுள் எந்தக் குழந்தையைக் கொடுத்தாலும் பெற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், நாங்கள் நீதான் வேண்டும் என்று தேடி வரமாகப் பெற்றுக்கொண்டோம்’ என்று பந்தத்தைக் கூறுவது நலமல்லவா?

குழந்தையை வளர்ப்பது சாதாரண காரியம் அல்ல. ஐந்து வயதுவரை குழந்தையால் நமக்குத் தொந்தரவும், வேலையும் அதிகம். 15 வயதுக்குப் பின் பெற்றோர்கள் குழந்தைக்குத் தொந்தரவு ஆகிவிடுகிறார்கள். ஆக 10 வருடங்கள் அதாவது 5 வயதிலிருந்து 15 வயது வரைதான் குழந்தைகளைக் கூடி இருந்து நாம் அவர்களையும் அவர்கள் நம்மையும் சந்தோஷமாக அனுபவிக்க முடிகிறது.

என் தாயார் சொன்னது காதில் ஒலிக்கிறது. ‘‘உள்ளே இருக்கும்வரை உடம்புக்குத்தான் பாரம். ஆனால், ஒரு குழந்தை தாயின் மனதுக்கு என்றைக்கும் பாரம்’’ என்பார். சுகமான சுமையாக வாழ்வின் வரமாக இருக்க குழந்தை வேண்டும்.

சந்திப்போம்... சிந்திப்போம்...

கட்டுரையாளர், இதயநோய் நிபுணர் (பணி நிறைவு)

டாக்டர் கல்யாணி நித்யானந்தன், 1969-ல் தமிழகத்தின் முதல் கரோனரி சிறப்பு சிகிச்சைப் பிரிவு சென்னையில் அமையக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர்.

தொடர்புக்கு:joenitya@yahoo.com

ஓவியம்: வெங்கி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்