சில தருணங்களும் சில நிகழ்வுகளும் 33: வயிறு கொண்டது வாசப்படி கொள்ளும்!

By செய்திப்பிரிவு

அது 1958ஆம் ஆண்டு. நாலரை வருட மருத்துவப் படிப்பும், பரீட்சைகளும் முடிந்த பிறகு 'Internship' என்ற பயிற்சியைத் தொடங்கியிருந்தேன். அது ஒரு வருடத்துக்கு. மருத்துவத்தின் பல பிரிவுகளில் நோயாளிகளைக் கவனித்து சிகிச்சை அளிக்கும் பயிற்சி. அதில் மூன்று மாதங்களுக்குப் பிரசவ வார்டில் பணி. அந்த மூன்று மாதங்களுக்குள் ஒவ்வொருவரும் 20 பிரசவங்களை நாங்களே நடத்த வேண்டும். உதவி மருத்துவரும், அனுபவமுள்ள செவிலியரும் மேற்பார்வை பார்ப்பார்கள்.

அந்த ‘மேற்பார்வை’யை ஆங்கிலத்தில் வர்ணித்தால் 'Masterly inactivity and watchful expectancy' என்று கூற வேண்டும். கேள்விகளும் விடைகளும் குரு சிஷ்யர்களிடையே பரிமாறப்படும். நாங்கள் இரண்டிரண்டு பேராக முறை வைத்து எட்டு மணி நேரம் டியூட்டி. சில சமயம் அந்த எட்டு மணி நேரத்தில் ஒரு பிரசவம் கூட நடக்காது. கர்ப்பிணிக்கு நல்ல வலி எடுக்கும்போது எங்கள் டியூட்டி முடிந்துவிடும். அடுத்து வரும் ஜோடி அரை மணி நேரத்தில் பிரசவத்தை நடத்தித் தங்கள் கணக்கை ஏற்றிக்கொள்வார்கள்.

ஒரு வேடிக்கை, எங்கள் குழுவில் இருந்த ஒருவர் பெயர் ‘ஸம்பூர்ணம்’. அந்த மாத ‘போஸ்ட்டிங்’ பட்டியல் தயாரித்தவர், ஸம்பூர்ணத்தைப் பெண் மாணவியுடன் ஜோடி சேர்த்துவிட்டார். வேடிக்கை என்னவென்றால் அந்த ஸம்பூர்ணம் ஓர் ஆண். எங்கள் வகுப்பறையில் பேரோடு பதிவுசெய்து கூப்பிடும்போது இன்னும் சில குளறுபடிகள் நடந்திருக்கின்றன. ‘பஞ்சநாதம்’ எனப் பெண் மாணவியும் ‘பரிமளம்’ என ஓர் ஆணும் இருந்ததால்தான் குழப்பம். நல்லவேளையாக திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து யாரும் வகுப்பில் சேரவில்லை. அங்குதான் ‘கல்யாணி’, ‘கோமதி’ என்றெல்லாம் ஆண்களுக்குப் பெயரிடுவார்கள். இந்தக் காலத்தில் இப்படிப் பெயரிட்டால், 15 வயதிலேயே அந்தப் பையன்கள் தந்தையுடன் முரண்டு பிடித்து ‘சதீஷ்’ என்றோ ‘நரேன்’ என்றோ ‘கெஜட்டில்’ பதிந்து பெயர் மாற்றம் செய்துகொண்டிருப்பார்கள்.

நான் இந்தப் பயிற்சியை மேற்கொண்டு இருக்கும்போது கர்ப்பிணி. கிட்டத்தட்ட எட்டாம் மாதம். இது எனக்குப் பிரசவத்தைப் பற்றிய நல்ல அனுபவம். பெரும்பாலான கர்ப்பிணிகள் நல்ல வலி எடுக்கும் போதுதான் வாய்விட்டு அரற்றுவார்கள். ஆனால், சிலரோ எழுந்து உட்கார்ந்தோ அல்லது நடந்து கொண்டும், போர்வையைத் தோளைச் சுற்றிப் போட்டு, அங்குமிங்கும் சக கர்ப்பிணிகளைப் பார்த்துக்கொண்டே ‘அம்மா, அய்யோ’ என்று ‘சும்மா’வானாலும் குரல் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். மற்றும் சிலரோ நல்ல வலி எடுத்தவுடன் கணவனைத் திட்டத் தொடங்குவார்கள். ‘எல்லாம் இந்தப் பாவியால்தான் இத்தனை வேதனை. யாருக்கு வேண்டும் இந்தக் குழந்தை’ என்று கோபப்படுவார்கள். அது நான்காவது, ஆறாவது குழந்தையாக இருக்கும். இப்படிப்பட்ட ஒரு பெண்மணிக்குப் பிரசவம் ஆகி ‘கொழுக்கு மொழுக்கு’ என்று ஒரு குழந்தை. என் சக மாணவி அவளிடம் சென்று வேடிக்கையாக ‘உங்களுக்கு வேண்டாம் என்றீர்களே, நான் எடுத்துக்கொண்டு போகட்டுமா?’ என்று கேட்டார். என்ன பதில் வந்தது தெரியுமா? ‘ஆங்... இன்னாம்மா இப்டிப் பேசுறே, வயிறு கொண்டது வாசப்படி கொள்ளாதா?’ என்றாரே பார்க்கலாம். பெற்றவுடன் தாய்மை எப்படிப் பொங்குகிறது பார்த்தீர்களா?

பிரசவ வேதனைக் குரல்களை நாலா பக்கமும் கேட்டுக் கேட்டு, நான் என்ன உறுதி எடுத்துக்கொண்டேன் தெரியுமா? எனக்குப் பிரசவ வலி எடுக்கும்போது உரக்கக் குரல் கொடுக்க மாட்டேன் என்று. அதைத் தீவிர முக்குவலி எடுக்கும்வரை கடைப்பிடித்தேன். இத்தனைக்கும் என் வலி 16 - 18 மணி நேரம் நீடித்தது. என் அம்மாவுக்குப் பத்தாவது பிரசவத்தில்கூட இப்படித்தானாம். இந்த மரபணுக்களை எனக்குச் ‘சீர்’ கொடுத்திருக்கிறார்கள்! மருத்துவமனையில் கூட இருந்த என் மாமியார் ‘கல்யாணி, கொஞ்சம் சத்தம் போடு. அடக்கி வைக்காதே. கண் திருஷ்டி விழும்’ என்று கவலைப்பட்டார்கள்!

ஆயுதப் பிரயோகம் செய்து பிரசவம் பார்க்கும் முறையும் கற்பிக்கப்பட்டது. ஆயுதத்தைச் சரியாகச் சிசுவின் தலையின் இரண்டு பக்கமும் பக்குவமாகப் பொருத்தி, ‘லாக்’ செய்து கையில் பிடிகளைப் பிடிக்க வேண்டும். கால்களைத் திடமாக ஊன்றிக்கொண்டு, நேராக நின்று, மெல்ல பின்னால் சாய்ந்து நம் உடல் கனத்தின் உதவியால் வெளியில் இழுக்க வேண்டும். ஒரு பின்னிரவில் இப்படி ஆயுதப் பிரசவம் பார்க்க வேண்டிய நிலை. நான் இரவு முழுவதும் கண் விழித்ததால், கொஞ்சம் சோர்வாயிருந்தேன். இதை எனக்கு உதவி செய்யும் மூத்த செவிலியர் கவனித்திருக்கிறார். அவர் என்னிடம் ‘ஆயுதத்தைப் பொருத்திப் பூட்டியவுடன் பிடியை என்னிடம் கொடுங்கள். நான் இழுக்கிறேன்’ என்றார். நான் தயங்கியபோது சிரித்துக்கொண்டே ‘நீங்கள் விழ நேர்ந்தால் நான் ஒரே சமயத்தில் இரண்டு பிரசவங்களையும் பார்க்க நேரிடும்’ என்றார்.

சில சமயங்களில் கர்ப்பிணிகள் நேரம் கடந்து வருவார்கள். அவர்களின் தள்ளுவண்டியுடன் ஓடிக்கொண்டே வந்து பிரசவம் பார்க்க நேரும். ஒரு முறை கட்டிடத்தின் வாயிலில் இருந்து ஒரு ரிக்ஷாக்காரரின் கூக்குரல். ‘டாக்டர்... டாக்டர்.. சீக்கிரம் வாங்க’ என்று. ரிக்ஷாவில் ஒரு நிறைமாத கர்ப்பிணி. வியர்வையில் குளித்து, முகம் வெளுத்து உதட்டைக் கடித்துக்கொண்டு கால்களைச் சற்று அகட்டியவாறு அமர்ந்திருந்தார். உடுப்பைச் சற்றுத் தூக்கி நான் குனிந்து பார்த்தபோது திடுக்கிட்டேன். சிறிய வட்டமாக குழந்தையின் உச்சி மண்டை ‘கருகரு’வென்ற முடியுடன் தென்பட்டது. நல்லகாலமாக வாட்டசாட்டமான ஒரு அலுவலர் (வார்டு பாய்) அருகில் இருந்தார். அவர் அந்தப் பெண்மணியை ‘அலேக்’காக தூக்கிக்கொண்டு ஓடி, தள்ளுவண்டியில் கிடத்தி வேகமாகத் தள்ளிக்கொண்டு பிரசவ அறையை அடைந்தார். சில நிமிடங்களில் ஊறிய மொச்சைக் கொட்டையைப் பிதுக்குவதுபோல் பிரசவம். தாயும் சேயும் நலம்.

என் நல்ல நண்பர் ஒருவர் எங்கள் குழுவில் இருந்தார் (ள்). நான் வார்டில் அங்குமிங்குமாக நடந்து கர்ப்பப்பை சுலுவாகி இருக்கிறதா, உதிரப் போக்கு இருக்கா என்று உறுதி செய்து கொண்டிருப்பேன். அருகில் வந்து என் நண்பர், ‘ஆடி அசைந்து வயிற்றைத் தள்ளிக்கொண்டு போர்க்கப்பல் மாதிரி ஏன் இங்கும் அங்கும் அலைகிறாய்? உட்காரு ஒரு இடத்தில். நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்றார்(ள்). அந்தப் பரிவு கலந்த அதட்டலை மறக்க முடியுமா?

கர்ப்பிணி மருத்துவமனையில் அனுமதிக்கும் அறையை அடைந்தவுடன் எங்கள் அறையில் ஒரு மணி ஒலிக்கும். எங்களில் ஒருவர் போய் கர்ப்பிணியைப் பரிசோதித்து பிரசவ வலியில் இருக்கிறாரா, அல்லது லேசான வலிதானா என்று உறுதிப்படுத்திக்கொண்டு பிரசவ அறைக்கோ காத்திருக்கும் வார்டுக்கோ அனுப்பி வைப்போம். ஓர் இரவில் மணி ஒலித்தது. நான் போய்ப் பார்த்தபோது ஒரு நரிக்குறவ தம்பதி. கணவர் மூன்று வயதுக் குழந்தையைப் பிடித்திருந்தார். மனைவி பிரசவ வலியில். ஆனால், முகத்தில் துளிக்கூடப் பதற்றமோ கவலையோ இல்லை. அவர்களது மொழியில் கணவரிடம் ஏதோ சொல்ல அவர் வெளியில் சென்று மரத்தடியில் அமர்ந்துவிட்டார்.

தோளில் தொங்கும் துணிப்பையுடன் மனைவி பிரசவ அறையை அடைந்தார். ஒரு மணி நேரத்தில் சுகப் பிரசவம். குழந்தையை பெட்ஷீட்டில் கிடத்திவிட்டுப் போனேன். மூன்று மணி நேரம் கழித்துத் தாயை வழக்கம்போல் பரிதசோதித்துவிட்டு அவரையும் குழந்தையையும் வார்டுக்கு அனுப்பச் சொல்லிக்கொண்டிருக்கும்போது, அந்தத் தாய் கட்டிலை விட்டு இறங்கினார். தன் பையில் இருந்து ஒரு நீண்ட துணியை எடுத்து தோளின் குறுக்காகக் கட்டி இடுப்பின் அருகில் முடிந்துகொண்டார். குழந்தையை வாரி எடுத்துத் தூளி போன்ற அந்தத் துணியில் கிடத்திக் கொண்டார். இடுப்பிலிருந்து ஒரு சுருக்குப் பையை எடுத்தார். அதிலிருந்து இரண்டு நாணயங்களை மேஜை மேலிருந்த செஞ்சிலுவை உண்டியலில் போட்டார்!. குனிந்து கும்பிட்டார். அரசியல்வாதி கெட்டார் போங்கள்! ‘‘நாங்க எங்க மருந்து சாப்பிட்டுக்குவோம். இரவு வேளை, ஆஸ்பத்திரியைத் தாண்டிப் போறேமேன்னுதான் உள்ளே வந்து பெத்தேன். இல்லாட்டி நாங்களே பார்த்துக்குவோம்” என்று சொல்லி, கம்பீரமாக வெளிநடந்தார். நாங்கள் திறந்த வாயை மூட ஒரு நிமிஷம் ஆயிற்று!

பிரசவம் என்பது இயற்கையான நிகழ்வு. வியாதியல்ல. பயப்பட வேண்டியது இல்லை. வலிதான் உண்மை. ஆனால், அந்த வலிக்கு ஒரு முடிவு உண்டு. அதுவும் எப்பேர்பட்ட மகிழக் கூடிய முடிவு! ஒவ்வொரு முறையும் குழந்தை வெளிவருவதைப் பார்க்கப் பார்க்கச் சலிக்காது. கழுத்தை வளைத்து உச்சந்தலை வெளிப்பட்டவுடன் தலை திமிரும். அடுத்த வலியில் சிசு பக்கவாட்டில் திரும்பி தோள்களை மேலும் கீழுமாக அசைத்து வெளிவந்து குழவி நழுவி விழும். சில கணங்களில் முகம் சுருக்கி அழத் தொடங்கும்போது எவ்வளவு அதிசயமான நிகழ்வு!

உங்களுக்குத் தெரியுமா? சிசுவின் தலையின் விட்டம் மூணே முக்கால் அங்குலம். தோள்களின் அகலமும் அதேதான். தாயின் இடுப்பெலும்பில் உள்ள பிரசவப் பாதையின் விட்டமும் அதே மூணே முக்கால் அங்குலம்தான். எந்தப் பொறியாளர் இதை இப்படி வடிவமைத்து இருக்கிறார்? ஒருமுறை பிரசவத்தை (மனிதனுடையதோ, மிருகத்துடையதோ) பார்த்த யாரும் கடவுள் அல்லது இயற்கை சக்தி இருப்பதை மறுதலிக்க முடியாது!

பாலூட்டி மிருகங்களும் அவை அவை அமைப்புக்கேற்ப பிரசவிக்கின்றன. உதாரணமாக மாடுகளும் குதிரைகளும் பிரசவிக்கும்போது முன் கால்களை நீட்டி அதன் மீது தலையை வைத்தவாறு வெளிப்படுகின்றன. மிருகங்கள் பிரசவ வலியில் அரற்றுவது இல்லை. நின்றும் நிலை கொள்ளாமல் வலியை அனுபவிக்கும். ஆனால், அலறுவதில்லை.

நமது பரிணாம வளர்ச்சி, வாழ்க்கை முறை, ஆறாம் அறிவு, விஞ்ஞானம் எல்லாம் பிரசவத்தின் அனுபவத்தை மாற்றிவிட்டன. வரமா? சாபமா? தெரியாது!

பி.கு: இலவச இணைப்பாக ஒரு குறுஞ்செய்தி: குதிரைகள் இரட்டைக் குட்டிகளைப் பிரசவிப்பதில்லை. அப்படி இரட்டைக் கரு உருவானால் அது கலைந்துவிடும். இதை எனக்கு கால்நடை மருத்துவர் (ரேஸ் குதிரைகளைக் கவனிப்பவர்) சொன்னார்.

சந்திப்போம்... சிந்திப்போம்...

கட்டுரையாளர், இதயநோய் நிபுணர் (பணி நிறைவு)

டாக்டர் கல்யாணி நித்யானந்தன், 1969-ல் தமிழகத்தின் முதல் கரோனரி சிறப்பு சிகிச்சைப் பிரிவு சென்னையில் அமையக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர்.

தொடர்புக்கு:joenitya@yahoo.com

ஓவியம்: வெங்கி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்