தனியாகத் தொலைக்காட்சி முன் அமர்ந்து, துணைக்கு இருக்கும் பெண் கொடுத்த மோரைக் குடித்துக்கொண்டே பாட்டியாகிய நான், என் தாயாரையும் அந்தக் கால பாட்டிகளையும் பற்றி நினைத்தேன். எந்த வாரிசின் வீட்டில் இருந்தாலும் பேரன், பேத்திகளுக்குக் கதை சொல்லி, கையில் சாதம் போட்டு, கீரை ஆய்ந்துகொண்டு இருப்பார்கள். ஊறுகாய், பட்சணம், வடாம், வத்தல் என்று தானாகவோ, வேலையாட்களின் உதவியுடனோ தயார் செய்வார்கள். சுத்தப்படுத்தி வெயிலில் வைக்க வேண்டிய மளிகை சாமான்களை மொட்டை மாடியிலோ, கொல்லைப்புறத்திலோ, முற்றத்திலோ வைத்து எடுப்பார்கள். இன்றைய ‘புறாக் கூண்டு’களில் இதை நினைத்துப் பார்க்கக்கூட முடியாது! இவை திணிக்கப்பட்ட பொறுப்புகள் அல்ல. தானாக ஏற்றவைதான்.
கடுகு, மிளகு, இருக்கான்னு பார்க்கணும், ‘பில்’ கட்டணும், பிளம்பர், எலக்ட்ரீஷியன் தேடணும், முக்கியமாக இன்று என்ன சமைப்பது என்று தீர்மானிக்கணும் என்று எந்தவொரு கவலையும் இல்லை. போட்டதைச் சாப்பிட்டுவிட்டு, ருசியைப் பற்றிச் சில சமயம் ‘கமெண்ட்’ அடித்துவிட்டு நிம்மதியாக இருக்கலாம். கட்டை மணையில் தலை வைத்து, ஆனந்த விகடன், கலைமகள், கந்தன் கருணை, தெய்வத்தின் குரல் படிப்பார்கள். நடுவில் ஒரு கோழித் தூக்கம்!
பணியிலிருந்து ஓய்வுபெற்ற தம்பதியர் தனியாகத்தான் வாழ்கிறார்கள். சில சமயம் ஓய்வுபெறுவதற்கு முன்பேயே தெருவுக்குத் தெரு, பேட்டைக்குப் பேட்டை இப்படிப்பட்ட தம்பதிகளைத்தான் பார்க்கிறோம். அடுத்த தெருவிலோ, பேட்டையிலோ, மாகாணத்திலோ பெண்ணோ பிள்ளையோ இருக்கிற காலம் போய் அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்றாகிவிட்டது. 24 மணி நேரத்தில் பறந்து வந்துவிடும் தூரம்தான் என்று சமாதானம் செய்துகொண்டாலும், டெல்லி, கொல்கத்தா என்றால் 24 மணி நேரமும் 5000 ரூபாதான். வெளிநாடெல்லாம் 24 மணி நேரமும் 50,000 ரூபாயும் ஆயிற்றே? என்னதான் ‘வாட்ஸ்அப்’, ‘ஃபேஸ்புக்’, இ-மெயில் இருந்தாலும் வயது கூடிவரும் பெற்றோருக்கு உள்ளூர ஒரு பயம், ஒரு பாதுகாப்பின்மை வாட்டத்தான் செய்கிறது.
நானும் இப்படிப்பட்ட கதியில்தான் இருக்கிறேன். மேலும், மருத்துவராக இருப்பதால் பலமுறை வயோதிக தம்பதிகளுடைய அவசர மருத்துவ உதவிக்குப் போன அனுபவத்தால் சில எண்ணங்கள் என் மனத்தில் சுழன்றுகொண்டு இருக்கின்றன. வயதான மாமியார், மாமனார், தாயார் மூவரையும் பல வருடங்கள் கூடவே வைத்து கவனித்துக்கொண்டது, எனக்கு என் முதுமையில் சில விஷயங்களில் எப்படி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்கிற படிப்பினையை அளித்திருக்கிறது. ஏனெனில், நானும் என் மக்களுடன் இருக்கவில்லையே!
» சில தருணங்களும் சில நிகழ்வுகளும் 30: சீனத்து ‘தவசி’ப்பிள்ளையிடம் கற்ற பாடம்
» சில தருணங்களும் சில நிகழ்வுகளும் 29: கட்டுப்பாடுகளின் காரணங்கள்
என்னதான் கை கால் திடமாகவும், சுய தேவைகளைக் கவனித்துக்கொள்ளும் வலு இருந்தாலும் சில ‘வருமுன் காக்கும்’ செளகரியங்களை நாம் செய்துகொள்ள வேண்டும்.
மிக முக்கியமான ஒன்று... அவசர உதவி தேவைப்பட்டால் யாரைக் கூப்பிட வேண்டும், எப்படிக் கூப்பிட வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டும். கூப்பிடுவது அடுத்த வீட்டிலோ, ஃபிளாட்டிலோ இருக்கும் நண்பர்களாக இருக்கலாம். அல்லது தி.நகரில் இருக்கும் மச்சினன் பிள்ளையோ, அக்காவின் பேரனாகவோ இருக்கலாம். அவர்கள் ஆபத்துக்குக் கூப்பிட்டால் உடனே வருபவர்களாக இருக்க வேண்டும். அவர்களது தொலைபேசி, அலைபேசி எண்கள் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும். உங்கள் அலைபேசியில் அவை துரிதமாக அழைக்கும் வகையில் (Quick dialup mode) பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும். இவருடைய எண்கள் வெளிநாட்டில் உள்ள நம் மக்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
முக்கியமாக இந்த விவரங்களைக் குளிர்சாதன பெட்டி அருகிலோ, தொலைபேசியின் அருகிலோ ஒரு வெள்ளைத் தாளில் தெளிவாக எழுதி ஒரு அட்டையில் ஒட்டி வைக்க வேண்டும்.
கூட்டுக் குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு ஒரு நல்ல யோசனை. பக்கத்துக் குடியிருப்பில் ஒலிக்குமாறு ஒரு ‘பஸ்ஸர்’ இணைப்புக் கொடுத்து அதன் ‘ஸ்விட்ச்’சை எப்போதும் அருகில் வைத்துக்கொள்ளுங்கள். ஒயர் இணைப்பு இல்லாத கருவிகள் கிடைக்கின்றன. ஒரு முக்கிய விவரம். மிக்க அவசர நிலையானால் ஒழிய இதை உபயோகிக்க வேண்டாம். நேரிலோ, அலைபேசியிலோ கூப்பிடும் நிலையானால் அதையே செய்யவும். மயக்கம், மார்பு வலி, கீழே விழுதல் போன்ற தீவிர நிலை ஏற்பட்டால் இதை உபயோகிக்கலாம். அப்போதுதான் அடுத்து உள்ளவர்களுக்கு நிலைமையின் தீவிரம் புரியும்.
60 வயதுக்கு மேல் விழுந்தால் சுளுக்குகின்ற வயதில்லை. உடைகின்ற வயது என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். வயது கூடும்போது சுதாரித்துக்கொள்ளும் திறன் (பேலன்ஸ்) குறைந்து விடும். ‘ஸ்பான்டிலைடிஸ்’ போன்ற கழுத்தெலும்பு பாதிப்பு, அல்லது ரத்தக் குழாய்களில் பாதிப்பு முதலியவற்றால் நாம் திடுமென்று குனிவதாலோ, தலையைத் திருப்புவதாலோ, அண்ணாந்து பார்ப்பதாலோ தலைச்சுற்றல் ஏற்பட்டு விழ நேரலாம். கைக்கு எட்டாத சாமானை எடுக்க ஸ்டூலின் மீது கண்டிப்பாக ஏற வேண்டாம்.
பெரும்பாலான எலும்பு முறிவுகள் தண்ணீர் உள்ள தரையில், முக்கியமாகக் குளியலறையில் வழுக்கி விழுவதால்தான் நேர்கின்றன. பாத்ரூமில் விழுந்துவிட்டவரை வெளியில் கொண்டுவர எவ்வளவு சிரமம் தெரியுமா? ஏனென்றால், பாத்ரூம் கதவுகள் உட்புறம் திறப்பவையாக இருக்கும். கதவின் அருகில் விழுந்திருப்பவர் தடையாக இருப்பார். குளியலறை கதவை வெளிப்புறம் திறக்கும்படியாக மாற்றி அமைக்கலாமே! வசதி இல்லையெனில் தள்ளுக் கதவு (Sliding door) வைக்க முடியும். உள்புறம் தாழ்ப்பாளே வேண்டாம். நீங்கள் இருவர்தானே.
எங்கள் வீட்டில் நடந்த ஒரு வேடிக்கையான சம்பவம் நினைவுக்கு வருகிறது. நான் குளியலறை உள் தாழ்ப்பாளை நீக்கியது என் மாமியாருக்குப் பிடிக்கவில்லை. ‘நான் உள்ளே இருப்பது தெரியாமல் யாராவது கதவைத் திறந்தால்..?’ என்றார். நான் அவருக்கு ஒரு சின்ன ரேடியோ (டிரான்ஸ்சிஸ்டர்) வாங்கிக் கொடுத்து ‘அம்மா நீங்கள் உள்ளே இருக்கும்போது இதைப் போட்டுவிடுங்கள். பாட்டு கேட்டு, நீங்கள் உள்ளே இருப்பதைத் தெரிந்துகொள்ள முடியும்’ என்றேன்.
ஒருநாள் வெகுநேரமாய் குளியலறையில் பாட்டு ஒலித்துக்கொண்டே இருந்தது. நான் கவலையுடன் மெல்ல கதவைத் திறந்தால், உள்ளே யாரும் இல்லை. என் மகள் வந்து ‘அம்மா முத்தாச்சி வாசல் வராந்தாவில் இருக்கிறார்’ என்றாள். மாமியார் வெளியில் வரும்போது ரேடியோவை நிறுத்தாமல் வந்திருக்கிறார். இதுவும் வயோதிகத்தின் வெளிப்பாடுகளில் ஒன்று!
குளியல் அறையில் சரியான உயரத்தில் கைப்பிடிகள் வைக்க வேண்டும். குழாயின் அருகில் ‘கம்மோட்’ -இன் அருகில், நன்றாகப் பதிக்கப்பட்டவையாக இருக்க வேண்டும். பணிப்பெண் தரையை ஈரத் துணியால் துடைக்கும்போது அதை நன்றாகப் பிழிந்து துடைக்கிறாரா, உடனே மின் விசிறியைச் சுழல விட்டு ஈரம் காய்கிறதா என்று பார்க்க வேண்டும். அவரிடம் ஒரு அறையைத் துடைக்கும் முன் ‘துடைக்கப் போகிறேன். வராதீர்கள்’ என்று உங்களிடம் சொல்லும்படி கூறுங்கள்.
எல்லா வட்டாரங்களிலும் மருந்துக் கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு வீட்டிற்கே மருந்துகள் கொண்டு வந்து கொடுக்கிறார்கள். தொலைபேசியிலேயே தேவையைத் தெரிவிக்கலாம். வரும் மருந்தெல்லாம் உங்கள் மருத்துவர் பரிந்துரைத்தவைதானா என டாக்டர் சீட்டுடன் கவனமாகப் பாருங்கள். சில சமயம் வேறு பெயரில் வேறொரு கம்பெனியின் மாத்திரையை அனுப்பக்கூடும். பெயர் வித்தியாசப்பட்டால் உடனே கடைக்குத் தொலைபேசி மூலம் விசாரியுங்கள். மூலப் பொருள் அதேதானா (generic name) என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கடைக்காரரிடம் இனி வேறு பிராண்ட் மருந்து அனுப்புவதானால் நம்மிடம் அனுப்புவதற்கு முன் தெரிவிக்க வேண்டும் என்று சொல்லுங்கள். முக்கியமாக மாத்திரையில் உள்ள மருந்தின் அளவு (dose) மருத்துவர் குறிப்பிட்டபடிதானா என்று நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள். அலுமினியப் பட்டைகளில் (foil pack) சிகப்பிலும், நீலத்திலும் நுணுக்கி எழுதப்பட்டிருக்கும். நாம் கண்ணைச் சுருக்கிக்கொண்டு வெளிச்சத்தில் சாய்த்து சாய்த்துப் பார்த்தாலும் பல சமயங்களில் படிக்க முடிவதில்லை என்பது வேறு விஷயம்.
தம்பதிகள் இருவரும் என்ன மருந்து, எந்த வேளை, எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதைத் தெளிவாக எழுதி வைப்பது நல்லது. உங்களுக்கும், உதவிக்கு வருபவருக்கும் உபயோகமாக இருக்கும். கடையில், மருந்துகளை வேளா வேளைக்கும், வாரம் முழுவதும் போட்டு வைக்கப் பெட்டிகள் கிடைக்கின்றன. தமிழிலும், ஆங்கிலத்திலும் ‘ஞா - தி’ என்றோ 'Sun - Mon' என்றும் மூன்று வேளைக்கு ‘கா - மா - இ’ என்று குறியிட்டு இருக்கும். இரவு மாத்திரைகளை அடுத்த வாரத்துக்காகப் போட்டு வைப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
உங்கள் மருந்துப் பெட்டியின் மீது ஒரு சிகப்பு ஸ்டிக்கர் பொட்டை ஒட்ட வைத்துவிட்டால் உங்களது என்று கண்டுகொள்ள செளகரியம். மருந்தைக் கணவர் சாப்பிட்டாரா என்று உறுதிப்படுத்திக்கொள்ள பெட்டியை செக் செய்தாலே போதும். ஒருவேளை மாத்திரையை உட்கொள்ள மறந்தால் அது சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் மாத்திரையானாலும் கூட ஒன்றும் தீங்கு வராது. ஆனால் இரட்டிப்பு டோஸ் கண்டிப்பாகக் கூடாது. கவனமாக இருங்கள்.
சந்திப்போம்... சிந்திப்போம்...
கட்டுரையாளர், இதயநோய் நிபுணர் (பணி நிறைவு)
டாக்டர் கல்யாணி நித்யானந்தன், 1969-ல் தமிழகத்தின் முதல் கரோனரி சிறப்பு சிகிச்சைப் பிரிவு சென்னையில் அமையக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர்.
தொடர்புக்கு: joenitya@yahoo.com
ஓவியம்: வெங்கி
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 hour ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago