சில தருணங்களும் சில நிகழ்வுகளும் 30: சீனத்து ‘தவசி’ப்பிள்ளையிடம் கற்ற பாடம்

By செய்திப்பிரிவு

அமெரிக்காவிலிருந்து என் மகன் குடும்பத்துடன் வந்திருந்தான். அவர்களுக்குப் பிடித்தமான உணவு வகைகளைச் சமைக்க என் தாயுள்ளம் பட்டியலிட்டுக்கொண்டு இருந்தது. சாப்பாட்டு மேஜையைச் சுற்றிக் குடும்பம் அமர்ந்து பேச்சு, சின்ன சின்ன விவாதங்கள், கேலிச் சிரிப்புகள். அநேக வீடுகளில் இது நடக்கும் என்று நினைக்கிறேன்.

என் மகன் ‘‘மா... நீங்கள் எஸ்.எஸ்.வி. 9 பண்ணுகிறீர்களா? ரொம்ப நாளாச்சு’’ என்றான். அது என்ன எஸ்.எஸ்.வி.? அது ஒரு சைனீஸ் சைவ உணவு (stewed seasoned vegetables). அதை நான் செய்யக் கற்றுக்கொண்டதின் பின்னால் ஒரு சுவாரசியமான கதை இருக்கிறது.

அன்று முன்னிரவு 11 மணி. மாரடைப்பு அவசர சிகிச்சைப் பிரிவு. 10 மணியிலிருந்து அமைதி நிலவுகிறது. இது தற்காலிகம்தான் என்று எங்கள் குழுவுக்குத் தெரியும். தள்ளுவண்டியில் அவசரமாக ஒரு நோயாளி கொண்டுவரப்பட்டார். முகம் வெளுத்து வியர்வை வழிய சற்று மேல் மூச்சு வாங்கிக்கொண்டிருந்தார். பரபரவென்று எங்கள் குழு வேலையில் இறங்கியது. பிராண வாயு, இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் பார்க்கக் கருவிகள், மானிட்டர் எல்லாம் பொருத்தி ரத்தக் குழாயுள் குளுக்கோஸ் ஏற்றி ECG-யும் எடுக்கப்பட்டது. தீவிர மாரடைப்பு என்று தெரியவந்தது. நினைவுடன் இருந்தபோதிலும் நோயாளியின் வாயிலிருந்து ஒரு வார்த்தைகூட வரவில்லை. பயத்துடன் விழித்துக்கொண்டு இருந்தார்.

நிலைமை கட்டுக்குள் வந்த பிறகுதான் நான் அவர் முகத்தை நன்கு கவனித்தேன். சீனக்களை. நோயாளியுடன் வந்தவர் வெளியில் இருந்தார். அவரிடம் நோயாளியின் நிலையை விவரித்து, அவரைப் பற்றிய விவரங்களைக் கேட்டேன். இவர் அண்ணாசாலையில் உள்ள ஒரு சீன உணவகத்தில் தலைமை சமையல்காரராம். கூட்டி வந்தவர் அந்த உணவகத்தின் முதலாளி. அவரால் ஆங்கிலம் பேச முடிந்தது, ஒரு தினுசாக! நோயாளிக்கு சீன மொழியைத் தவிர வேறு எந்த மொழியும் தெரியாதாம்.

மறுநாள் முதல் அவரது உடல்நிலை மெல்ல மெல்ல முன்னேறத் தொடங்கியது. இனி கஞ்சி, சூப், பால் முதலிய ஆகாரங்களைக் கொடுக்கலாம் என்று சொன்னதும், அந்த முதலாளி தர்மசங்கடத்துடன் நெளிந்து, ‘‘மருத்துவமனையில் தங்கவைக்க யாரும் இல்லை. நான் காலையிலேயே தேவைப்பட்ட எல்லா உணவையும் கொண்டு வந்து கொடுத்து விடுகிறேன். தயவுசெய்து இங்குள்ளவர்களே இவருக்குக் கொடுக்க ஏற்பாடு செய்ய முடியுமா? சிரமத்துக்கு மன்னிக்க வேண்டும்’’ என்றார். பிறகு அப்படித்தான் நடந்தது. மொழியின்றி சைகைகளினாலேயே ‘கதகளி’ நாட்டியம் செய்து அவரைச் சமாளித்தோம். தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து வார்டுக்கு மாற்றப்பட்டபோதும் நான் அடிக்கடி போய் செவிலியர் அவரது தேவைகளைக் கவனிக்கிறார்களா என்று மேற்பார்வை பார்த்துவந்தேன். ‘சைகை’ மொழியும் தொடர்ந்தது.

அவர் நன்கு குணமாகிப் போனார். ஒரு மாதத்திற்குப் பிறகு மறுபரிசோதனை பிரிவுக்கு வந்தார். நன்கு தேறி மீண்டும் சமையலை மேற்பார்வை செய்யத் தொடங்கி இருப்பதாக அவரது முதலாளி கூறினார். அவரிடம் நான் மருந்து விவரம், ஓய்வு, உணவு பற்றி விவரித்துக்கொண்டு இருந்தபோது, அந்த நோயாளி என்னைச் சுட்டிக் காட்டியவண்ணம், சற்று பதற்றத்துடன் முதலாளியிடம் என்னவோ சொல்லிக் கொண்டிருந்தார். நான் என்ன பிரச்சினை என்று கேட்டபோது சங்கடத்தோடு, ‘‘இவருக்கு நீங்கள் நிறைய உதவினீர்களாம். அதனால் பதிலுக்கு உங்களுக்கு ஏதாவது பரிசளிக்க விரும்புகிறார்’’ என்றார்.

நான் சிரித்துவிட்டு, ‘‘மனிதாபிமான உதவிதான். பெரிதில்லை. பரிசு ஒன்றும் தேவையில்லை’’ என்று மறுத்தேன். நோயாளி மேலும் பதற்றத்துடன் பேசிக்கொண்டிருந்தார். ‘‘நீங்கள் ஏதாவது ஏற்கவில்லையானால் 'XIE' (அதுதான் அவர் பெயர் ‘ஷீ’ என்று உச்சரிக்க வேண்டுமாம்) மிகவும் வருத்தப்படுவார்’’ என்றார்.

எனக்கு திடீரென்று ஒரு யோசனை தோன்றியது. என் மகனுக்கு மிகவும் பிடித்த ஒரு சைனீஸ் சைவ உணவு ஒன்று உண்டு என்று சொன்னேன் அல்லவா? அதை எப்படிச் செய்வது என்று இவரிடம் கற்றால் என்ன? இவர் பெயர்பெற்ற சைனீஸ் உணவகத்தின் தலைமை சமையல்காரர். இவரைவிடச் சிறந்த ஆசிரியர் கிடைப்பாரா? முதலாளியிடம் என் ஆவலைத் தெரிவித்தேன். இதை ‘ஷீ’யிடம் தெரிவித்ததும் அவர் முகம் பளீரென்று மலர்ந்தது. தலையை ஆட்டியபடி முதலாளியிடம் பேசினார். சீன மொழியில் எப்படி வகுப்பு நடக்கும்? இருவரும் மாறி மாறி அவர்கள் மொழியில் பேசத் தொடங்கினார்கள். நான் என் வேலையைப் பார்க்க நகர்ந்தேன். சில நிமிடங்களில் அந்த உரிமையாளர் என்னிடம் வந்தார். ‘‘எங்களுக்கு மதியம் 3 மணிக்கு வேலை நேரம் முடிந்து 2 மணி நேரம் ஓய்வு கிடைக்கும். அப்போது டாக்டரம்மா உணவகத்துக்கு வந்தால் உங்களுக்கு அந்த உணவைத் தயாரித்துக் காட்டுவார் ‘ஷீ’” என்றார்.

அதுதான் நடந்தது. காய்கறிகளை ஒவ்வொன்றாக எப்படி நறுக்க வேண்டும், தீயின் அளவு, எதற்குப் பின் எதை இட வேண்டும், ஒவ்வொன்றின் சமைக்கும் பதம் எல்லாம் படிப்படியாக விஸ்தாரமாக செய்து காண்பித்தார். சுவையோ சுவை! பிறகு ஒரு நாள் நான் அதை வீட்டில் செய்து மதியம் ‘ஷீ’யிடம் எடுத்துச் சென்றேன். அவர் சுவைத்து கட்டைவிரலை உயர்த்திக் காட்டிப் புன்னகைத்தார்.
இன்றும் என் மகன், “என் அம்மா செய்யும் ‘எஸ்.எஸ்.வி. செஷ்வான் ஸ்டைல்’ மாதிரி நான் அமெரிக்க சைனீஸ் உணவகங்களில் ருசித்ததே இல்லை” என்று சான்றிதழ் வழங்குவான். சீனாவில் எப்படியோ தெரியாது!

சந்திப்போம்... சிந்திப்போம்...

கட்டுரையாளர், இதயநோய் நிபுணர் (பணி நிறைவு)

டாக்டர் கல்யாணி நித்யானந்தன், 1969-ல் தமிழகத்தின் முதல் கரோனரி சிறப்பு சிகிச்சைப் பிரிவு சென்னையில் அமையக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர்.

தொடர்புக்கு: joenitya@yahoo.com

ஓவியம்: வெங்கி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE