இன்று 'No Touch' என்கிற புதிய ‘தீண்டாமை’யும் சுத்தமும் கரோனா கற்றுக்கொடுத்த வாழ்க்கை முறையாகிவிட்டன. இது புதிதல்ல. நாம் மறந்த வழக்கம்தான். இன்று வெளியிலிருந்து வந்ததும் குழாயின் அருகிலோ ‘சானிடைசர்’ பக்கத்திலோ போகும்போது என் நினைவில் ஒலிப்பது என் அத்தையின் குரல். ‘‘காலையும் கையையும் நன்னா அலம்பிண்டாயா? ஸ்கூல்லேர்ந்து வந்தவுடன் மேலே வந்து விழாதே. போய் துணியை மாற்று.’’
அன்றெல்லாம் காலணியை வீட்டின் வெளியே விட்டுவிட்டு முற்றத்தில் உள்ள கங்காளத்தில் உள்ள நீரை சொம்பில் மொண்டு பாதங்களை ஒன்றின் மேல் ஒன்றாகத் தேய்த்து, குதிகாலையும் நன்றாகக் கழுவிக் கொள்வோம். 60-களில் என் குழந்தைகள் பள்ளியில் இருந்து திரும்பிய உடனே என் தாயாரோ, மாமியாரோ அவர்கள் ‘ஷூ, ஸாக்ஸ்’-ஐ வெளியில் விட்டு குளியலறையில் கை, கால்களைக் கழுவிக்கொள்வதை மேற்பார்வை பார்ப்பார்கள். நான் மாற்று உடுப்புகளைத் தயாராக வைக்க வேண்டும். உடை மாற்றிய பிறகுதான் சிற்றுண்டியும் பாலும் தரப்படும். படுக்கப் போகும்போது கழுவாவிட்டாலும் ஈரத்துணியால் பாதங்களைத் துடைத்துக்கொள்வார்கள்.
என் தாயாரும், பாட்டி முதலிய அந்தத் தலைமுறையினரும் குளிக்கப் போகும்முன் ‘மடி’ துணிகளை ஒரு மூங்கில் கழியின் நுனியில் கொண்டு போவார்கள். குளித்த பின்தான் அவற்றைத் தொடுவார்கள். உணவு உண்ண அவரவருக்குத் தனித்தனி தட்டுகள், டம்ளர்கள். சாப்பிட்டதும் அவற்றை அடுக்களையில் கழுவுவதோ அந்தத் தொட்டி முற்றத்தில் போடுவதோ கூடாது. அதேபோல் திரவங்களை வாய்வைத்துக் குடிப்பது தவறு. தூக்கித்தான் வாயில் ஊற்றிக் குடிக்க வேண்டும்.
கரோனா காலத்தில் நோயாளிகளை அணுகும்போது தலையிலிருந்து கால்வரை மூடிக் கொண்டுதான் வருகிறார்கள். இது நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்கத்தான். வெளியிலிருந்து உள்ளேயும், உள்ளேயிருந்து வெளியேயும் பரவுவதைத் தடுக்கும் ‘இருவழிப் பாதுகாப்பு’ என்பதை நம் முன்னோர் அறிந்து இருந்தார்கள்.
» சில தருணங்களும் சில நிகழ்வுகளும் 28: ஏற்பதும் மகிழ்ச்சியே!
» சில தருணங்களும் சில நிகழ்வுகளும் 27: புலம் பெயர்ந்தோர் - நடப்பட்ட நாற்றுகள்!
இந்த விதிமுறைக்குச் சிறந்த உதாரணம் அந்தக் காலத்தில் பிரசவித்த தாயையும் சேயையும் பாதுகாத்த விதம்தான். பிரசவங்கள் வீட்டிலேயே உள்ள பிரசவ அறையில் நடக்கும். அனுபவமுள்ள ஒரு பெண்மணியோ அல்லது கிராமத்து மருத்துவச்சியோதான் மேற்பார்வை பார்த்து நடத்துவார்கள். பிரசவ அறையின் ஒரு மூலையில் ஒரு நீண்ட குழி இருக்கும். நன்கு மெழுகப்பட்டு அதிலே சுத்தமான, விளக்கெண்ணெய் தடவப்பட்ட ஒரு வாழை இலை விரிக்கப்பட்டு இருக்கும். நல்ல வலி தொடங்கியதும் கர்ப்பிணி அந்த மூலையில் உட்கார வைக்கப்படுவார். குத்திட்டு இரு முழங்கால்களையும் கைகளால் அணைத்துக் கொண்டு, அந்தக் குழி கால்களின் இடையில் இருக்குமாறு அமர்ந்து இருப்பார். குழந்தை வெளிப்படும்போது அந்த இலையில் ஏந்தப்படும். தொப்புள் கொடி நறுக்கப்பட்டு, சுத்தமாகத் துணி விரிக்கப்பட்ட புது முறத்தில் குழந்தை கிடத்தப்படும். நஞ்சு வெளிப்பட்டதும் அது புதைக்கப்படும். அல்லது சில கிராமங்களில் அதைத் துணியில் முடிந்து கிராமத்தின் வெளியே மரத்தில் கட்டப்படும்.
பிரசவித்த பெண்ணைச் சுத்தப்படுத்தி, ஒரு நீண்ட துணியால் வயிற்றையும் இடுப்பையும் சுற்றிக் கட்டுவார்கள். இது தளர்ந்த தசைகளுக்கு ஆதரவு தரும். பிறகுதான் தொடங்கும் நான் முன்பு கூறிய ‘இருவழிப் பாதுகாப்பு’. அடுத்த 40 நாட்கள் தாயும் சேயும் அந்த அறையிலேயே இருப்பார்கள். குடும்பத்தைச் சேர்ந்த அத்தையோ, சித்தியோ, அக்காவோ, அவர்களுடைய தேவைகளைக் கவனித்துக்கொள்வார். எப்படித் தெரியுமா?
குளித்து விட்டுத்தான் அறைக்குள் போவார். ஆம். ஒவ்வொரு முறையும், தாயையும் சேயையும் கவனித்து விட்டு வெளியில் வந்ததும் மீண்டும் ஒரு குளியல். தாய் - சேய் இருவருடைய உடுப்புகளும் துணிகளும் தனியாகத்தான் துவைக்கப்படும். முடிந்தால் ஓடும் நீரில். பார்க்க வருபவர்கள் அறையின் வாயிலில் நின்றுதான் பார்க்க வேண்டும். குழந்தையைக் கையில் எடுத்து நீட்டிக் காண்பிப்பார்கள். யாரும் குழந்தையைத் தொட அனுமதி இல்லை. இக்காலத்து மருத்துவரீதியாகப் பார்த்தாலும் இந்த 40 நாள் தனிமைப்படுத்தலுக்கு அர்த்தம் இருக்கிறது. பிறந்த சிசுவுக்கு நோய்த் தடுப்பு சக்தி முழுமையாக ஏற்பட 6 வாரங்கள் பிடிக்கும் என்பதுதான் உண்மை.
11-ம் நாள் புண்யாகவாசனத்துக்குக்கூட தாய் சேயுடன் ஆரத்தி எடுக்கும் சமயம், சில நிமிடங்களுக்கு வெளியில் வருவார். எளிதில் செரிமானம் ஆகக் கூடிய உணவு, காய்கறிகள், பால் கஞ்சி முதலியன தாய்க்கு அளிக்கப்படும்.
தெருவிலோ, உறவிலோ, நட்பு வட்டத்திலோ ஒரு இறப்பு நேர்ந்தால் ஈமச் சடங்குகள் தொடங்கும் முன்பே அந்த வீட்டுக்குப் போய் துக்கம் விசாரிப்பது வழக்கம். வீடு திரும்பிய உடனே வாயிலிலோ, பின்புறத்திலோ கை கால்களைக் கழுவி விட்டுத்தான் உள்ளே நுழைவோம். நேராகக் குளியல் அறையிலோ கிணற்றடியிலோ தலை குளிப்போம். இது நம் வழக்கம். இது ஏன் என்று நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? அந்த நபர் இறந்த காரணம் தொற்றுநோயாகக்கூட இருக்கலாம். அதனால்தான் இந்தச் சுத்தம் செய்துகொள்ளும் பழக்கம். ‘தீட்டு’ என்ற பெயரிட்டு மக்களை அந்த வழக்கத்திற்கு உட்படுத்தியிருந்தார்கள். இன்று கரோனாவில் இது மீண்டும் வந்திருக்கிறது.
இதேபோல்தான் மற்ற தொற்று ‘வைரஸ்’களான பெரியம்மை, சின்னம்மை, ஊவாமுள் (தட்டம்மை), அம்மை, புட்டாளம்மை, கக்குவான் முதலிய நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இருக்கும் வீடுகளும் தனிமைப்படுத்தப்பட்டன. (கரோனாவின் containment-ஐ நினைவுபடுத்துகிறதா?) வீட்டின் வாயிலில் வேப்பிலை செருகப்பட்டு இருக்கும் (நோட்டீஸுக்குப் பதில்). அந்த வீட்டினுள் யாரும் போக மாட்டார்கள். வீட்டிலுள்ளவர்களும் சுத்தமாகத்தான் இருப்பார்கள். ‘அம்மன் கோபம்’ குளிர்விக்க வேண்டும் என்றபடி வேப்பிலை, மஞ்சள் முதலிய கிருமி நாசினிகள் உபயோகப்படுத்தப்படும். இளநீர், கஞ்சி, மோர் முதலியவை நோயாளிக்கு உணவாகும்.
நோய் குணமாகும்வரை வீட்டில் வறுப்பது, பொரிப்பது, ஏன் தாளிப்புகூடச் செய்ய மாட்டார்கள். இன்றைய மருத்துவரீதியாகப் பார்த்தால் இது எவ்வளவு புத்திசாலித்தனமானது தெரியுமா? இந்த நோயாளிகளுக்கு நுரையீரல் பாதிப்பு வந்து தீவிரமாகக் கூடும் (நியூமோனியா, ப்ரான்கைடிஸ் - இன்றைய கரோனா போல்). கொப்புளங்கள் உச்சத்தில் இருக்கும்போது பாயில் வாழை இலை, வேப்பிலை பரத்தி மெல்லிய துணியால் மூடி அதன் மீது படுக்க வைப்பார்கள். புண்கள் காய ஆரம்பித்தவுடன் வேப்பிலையும், மஞ்சளும் அரைத்துப் பூசுவார்கள். ‘மூன்று குளி’ ஒன்று விட்டு ஒரு நாள் ஜலம் விட்டு, பொருக்கள் வீழ்ந்த பிறகுதான் ‘தீட்டு’ நீங்கும். ‘சமூக இடைவெளி’யான தடையும் நீங்கி, நோயாளி எல்லோரோடும் பழகலாம். இதுவும் மிகச் சிறந்த பழக்கம். அந்தப் பொருக்குகளில்தான் கிருமிகள் இருந்து நோயைப் பிறருக்குப் பரப்பும். இதை நம் முன்னோர்கள் அனுபவப்பூர்வமாக அறிந்திருந்தனர்.
அடிபட்ட இடங்களில் மஞ்சளும் சுண்ணாம்பும் தடவினார்கள். சேற்றுப் புண் ஆற கடுக்காயும் மஞ்சளும் அரைத்துப் பூசினார்கள். வீக்கம் வடிய சுடுசோற்றில் மஞ்சளும் விளக்கெண்ணெயும் கலந்து துணியில் கட்டி ஒத்தடம் கொடுத்தார்கள். கட்டி வந்து பழுத்து உடையாமல் இருந்தால் இதேபோல் சூடு ஒத்தடம்தான். சில சமயம் அரிசி மாவில் மஞ்சளும் விளக்கெண்ணெயும் கலந்து துணியில் பரத்தி கட்டியின் மீது வைத்துக் கட்டினார்கள். ஊமைக் காயத்துக்குத் தவிடோ, உப்போ துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்கப்படும். சுடு நீரில் உப்பும் மஞ்சளும் கலந்து தொண்டைப் புண்ணுக்குக் கொப்பளிக்கச் சொல்வார்கள் (புட்டாளம்மைக்குக்கூட).
இவை எல்லாம் ‘கை வைத்தியம்’, ‘பாட்டி வைத்தியம்’ என்று கேலி செய்யப்படுகின்றன. ‘மவுத் வாஷ்’, ‘ஹீட்டிங் பாட்’, ஆயின்மென்ட் என்று இன்று உலவி வருகின்றனதானே? அறுவை சிகிச்சை இன்றி கட்டிகள் பழுத்து உடைந்து சீழும் ரத்தமும் வெளியேறும். ‘முளை’ (கட்டிப்பட்ட சீழ்) வெளியேறிவிட்டதா என்று பார்ப்பார்கள். அப்போதுதான் கட்டி முழுமையாக ஆறத் தொடங்கும்.
விளக்கு வைத்த பிறகு நகம் வெட்டாதே, தலை சீவாதே, உக்ராண அறையில் இருந்து சாமான்களை (முக்கியமாக ஊறுகாய் முதலியவை) எடுக்காதே என்ற கட்டுப்பாடுகளின் காரணம் என்ன தெரியுமா? அந்தக் காலத்தில் பிரகாசமான விளக்குகள் கிடையாது. வெளிச்சம் குறைவான சமயத்தில் நகம் வெட்டிக்கொள்வது கஷ்டம். கீழே விழும் முடி, நகம் கண்ணுக்குத் தெரியாமல் போகலாம். மங்கிய ஒளியில் சாமான்களுக்குள் பூச்சி, பொட்டு விழ வாய்ப்பு உண்டு. இவைதான் உண்மையான காரணங்கள்.
நம்மவரின் பல கட்டுப்பாடுகள் உடல் நலம், சுத்தம் சம்பந்தப்பட்டவைதான். சிறியவர்களுக்கும், வெளி உலக அறிவு அதிகம் பெறாதவர்களுக்கும் இவை புரியாது. இதனால்தான் என்னவோ அவை ‘தெய்வ குற்றம்’, ‘வீட்டுக்கு ஆகாது’, ‘தீட்டு’ என்று சற்று பயத்தை ஏற்படுத்துவதாகக் கூறப்பட்டன. குழந்தைகளிடம் ‘பொய் சொன்னால் சாமி கண்ணைக் குத்தும்’ என்றும், ‘இருட்டில் போனால் பூச்சாண்டி பிடித்துக்கொள்ளும்’ என்றும் சொல்வது. குழந்தைகள் வளர்ந்த பிறகு இவை சின்ன, தீமையற்ற பொய்கள் என்று தெரிந்துகொள்கிறார்கள். அதே போலத்தான் இந்தக் கட்டுப்பாடுகளின் காரணத்தையும் புரிந்துகொள்வார்கள். விதிகளை மீறும்போது அபராதம் விதிக்கப்படும் என்ற தயக்கம் ஏற்படச் செய்வதுபோல கடவுளைக் காட்டி கட்டுப்பாடுகளை அமல்படுத்தினார்கள்.
யோசித்துப் பார்த்தால் உடல் சுத்தம், உணவில் சுத்தம், சுற்றுப்புறச் சுத்தம் இவற்றின் முக்கியத்துவத்தை நம்மவர் நன்றாக அறிந்திருந்தார்கள். நோய்கள் சுத்தக் குறைவாலோ, ஒட்டுவாரொட்டியாகவோ பரவும் என்ற நுண்ணறிவு காலம் காலமாக இருந்து இருக்கிறது. நிஜக் காரணங்களை பற்றிச் சிந்திக்காமல் நல்ல பழக்கங்களை ‘மூட நம்பிக்கை’ என்று நாம் இழந்திருக்கிறோம்.
ஒரு கரோனா தேவையாக இருந்தது, சுத்தத்தைப் பற்றியும் ‘தீண்டுதலை’ப் பற்றியும் நெற்றியில் அடித்த மாதிரி கற்றுக்கொடுக்க. ஒரு முழு வட்டம். நம் வாழ்க்கையையே புரட்டிப் போட்டிருக்கிறது.
கீதாசார்யன் இதைத்தான் சொன்னானோ? தேவைப்படும்போது மீண்டும் ‘வந்து’ அழிப்பேன், கற்பிப்பேன், காப்பேன் என்று!
சந்திப்போம்... சிந்திப்போம்...
கட்டுரையாளர், இதயநோய் நிபுணர் (பணி நிறைவு)
டாக்டர் கல்யாணி நித்யானந்தன், 1969-ல் தமிழகத்தின் முதல் கரோனரி சிறப்பு சிகிச்சைப் பிரிவு சென்னையில் அமையக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர்.
தொடர்புக்கு: joenitya@yahoo.com
ஓவியம்: வெங்கி
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
7 days ago
கருத்துப் பேழை
7 days ago
கருத்துப் பேழை
7 days ago
கருத்துப் பேழை
8 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
14 days ago
கருத்துப் பேழை
14 days ago
கருத்துப் பேழை
14 days ago
கருத்துப் பேழை
21 days ago
கருத்துப் பேழை
21 days ago
கருத்துப் பேழை
21 days ago