சமூகத்தில் அதிகார வர்க்கத்தால் ஒடுக்கப்படும் எளியவர்களை ‘கோவேறு கழுதைகள்’, ‘ஆறுமுகம்’, ‘செடல்’, ‘எங் கதெ’, ‘செல்லாத பணம்’, ‘வாழ்க வாழ்க’ ஆகிய நாவல்களிலும், அறுபத்துச் சொச்சம் சிறுகதைகளிலும் ரத்தமும் சதையுமாகப் படைப்பாக்கியவர் இமையம். குடும்பம் எனும் அமைப்பைக் கட்டிக்காக்கும் இடத்தில் சாதி மேலோங்கியிருக்கிறது என்பதைக் கோடிட்டுக் காட்டும் ‘செல்லாத பணம்’ நாவலுக்கு 2020-க்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இலக்கியத்தின் எல்லாத் தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தேர்வு இது என்பதற்கு சமூக ஊடகங்களில் இமையத்துக்குக் கிடைத்துவரும் வாழ்த்துகளே சாட்சி. ‘செல்லாத பணம்’ ஒரு பெருந்துயரத்தைப் பேசும் நாவல் மட்டுமல்ல; நாவலில் காவல் நிலையம் இருக்கிறது, அரசியலர்கள் வருகிறார்கள், ஒரு மருத்துவமனை உயிர்ப்புடன் எழும்பி நிற்கிறது, எரிந்துபோனவர்களுடன் வாழும் செவிலியர்கள் இருக்கிறார்கள்; இவ்வளவு விஷயங்களையும் விசாரிக்கும் நாவலாகவும் ‘செல்லாத பணம்’ இருக்கிறது. அரசு மருத்துவமனை என்றாலே முகஞ்சுளிக்கும் பொதுப்புத்தியை இந்நாவல் பொய்யாக்குகிறது. மருத்துவமனை குறித்து எழுதப்பட்ட புனைவுகளில் ‘செல்லாத பணம்’ ஓர் அபூர்வம். அந்த வகையில், இலக்கிய வாசகர்கள், சாதி எதிர்ப்புச் செயல்பாட்டாளர்கள் மட்டுமின்றி, மருத்துவ மாணவர்களும் வாசிக்க வேண்டிய நாவலாகிறது. இமையத்துடன் உரையாடியதிலிருந்து...
‘செல்லாத பணம்’ நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்திருப்பது உங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி தரக்கூடியது?
‘செல்லாத பணம்’ நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்திருப்பதில் எனக்கு விசேஷமான மகிழ்ச்சி கிடையாது. ‘கோவேறு கழுதைகள்’ நாவலுக்கே கிடைத்திருக்க வேண்டும். அப்போது கொடுத்திருந்தால் ஒரு இளம் எழுத்தாளருக்கு விருது கொடுத்த பெருமை சாகித்ய அகாடமிக்கு வந்துசேர்ந்திருக்கும். இல்லையென்றால், ‘செடல்’ நாவலுக்காவது கொடுத்திருக்க வேண்டும். இது தாமதமான அங்கீகாரம்.
1994-ல் வெளியான ‘கோவேறு கழுதைகள்’ நாவலில் ஆரம்பித்து 2020-ல் வெளியான ‘வாழ்க வாழ்க’ வரையிலான எழுத்துப் பயணம் உங்களுக்கு எவ்வளவு திருப்திகரமாக இருந்திருக்கிறது?
என்னுடைய முதல் நாவலே நிகரற்ற நாவல் என்று பெயர்பெற்றது. அதிலிருந்து என்னுடைய எல்லா எழுத்துகளுக்குமே அப்படியான மதிப்பு கிடைத்திருக்கிறது. இந்தப் பயணத்தில் நான் என்ன கற்றுக்கொள்கிறேன் என்றால், இன்னும் பொறுப்பாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும் என்பதுதான். இந்தப் பாடத்தை நான் சாகும் வரை கற்றுக்கொண்டேதான் இருக்கப்போகிறேன்.
வெவ்வேறு விதங்களில் வெளிக்காட்டும் சாதியின் கோரமுகத்தை மட்டுமல்லாமல், தங்கநாற்கரச் சாலை, செல்பேசி போன்ற நவீன வாழ்க்கையின் அம்சங்கள் ஏற்படுத்தும் சிக்கல்களைப் பற்றியும் கணிசமான கதைகள் எழுதியிருக்கிறீர்கள். ஒருபுறம், சாதியச் சிக்கல்களைப் பிரதானமாகப் பேசும் நீங்கள், இன்னொருபுறம் நவீன வாழ்க்கைச் சிக்கல்களை எழுதுவதற்கான கருப்பொருளாக எடுத்துக்கொள்வது ஏன்?
நான் சாதியத்தின் வெவ்வேறு முகங்களைக் காட்டவில்லை. தமிழ்ச் சமூகத்தின் வெவ்வேறு முகங்களைக் காட்டுகிறேன். அந்த வெவ்வேறுபட்ட முகத்தில் சாதியும் ஒரு அம்சம். நான் இன்றைய வாழ்க்கை என்னவாக இருக்கிறது என்று ஆவணப்படுத்த விரும்புகிறேன்... அவ்வளவுதான். 1910-ல் தட்டச்சு இயந்திரம் வந்தபோது அது நவீன வாழ்க்கையாக இருந்தது. பிறகு, கால்குலேட்டர் வந்தது. அது ஒரு நவீன வாழ்க்கையாக இருந்தது. அடுத்தது கணினி, செல்பேசி. ஒரு நவீனம் வரும்போது ஏற்கெனவே இருக்கும் நவீனம் செத்துப்போகிறது. நான் வாழும் காலத்தில், நான் வாழும் இடத்தில் என்னோடு வாழக்கூடிய சமூகம் என்னவாக இருக்கிறது என்று எழுதுவதே இலக்கியம். இதுதான் என்னுடைய எழுத்து.
உங்களுடைய சிறுகதைகள் பலவும் நாவலாக விரித்துச் செல்லக்கூடிய சாத்தியம் கொண்டவை. ஒரு அனுபவம் உங்களிடம் எப்படி நாவலாகவும் சிறுகதையாகவும் மாறுகிறது?
அது அந்தக் கதையின் மையத்தைப் பொறுத்தது. சில கதைகள் என்னை எழுது எழுது என்று கேட்கும். சில கதைகள் என்னை விட்டுவிடு போதும் என்று சொல்லும். கதைதான் தீர்மானிக்கிறது... நான் அல்ல. எழுதும்போது கதையின் குரலை யார் கேட்கிறாரோ அவரே சிறந்த எழுத்தாளர்.
உங்கள் படைப்புகளில் பெண்களே பிரதானம். அவர்களின் வேதனை, புலம்பல், ஒப்பாரி எல்லாவற்றையும் கலையாக்கியிருக்கிறீர்கள். பெண்களுக்கு ஏன் முக்கியத்துவம் தர நினைத்தீர்கள்?
பெண்களின் வாழ்க்கையை நான் எழுதுகிறேன் என்று சொல்வது உண்மையில் பொய். ஆண்களால் பாதிக்கப்படுபவள்தானே பெண்? எனில், ஆண் இல்லாமல் அங்கே பெண் எப்படி வந்தது? என்னுடைய படைப்புகளில் நேரடியாக ஒரு பெண் இருக்கலாம்; ஆனால், திரைக்குப் பின்னால் அந்தப் பெண்ணைத் துன்புறுத்துவதோ கஷ்டப்படுத்துவதோ தீக்குளிக்க வைப்பதோ யார்? ஆண்தானே? ஆக, இது ஆண் உருவாக்கும் துயரம் அல்லது சமூகம் உருவாக்கும் துயரம் அல்லது கலாச்சாரம் உருவாக்கும் துயரம் என்று பார்க்க வேண்டும். நான் எழுதுவது பெண்களின் வாழ்க்கையை அல்ல; நான் எழுதுவது சமூக வாழ்க்கையைத்தான். சமூகம் எனும் வீட்டுக்குள் போவதற்குப் பெண் ஒரு கதவாக இருக்கிறாள்.
‘செல்லாத பணம்’ நாவலில் வரும் ரவியை ஒரு தலித்தாக அடையாளப்படுத்த வேண்டாம் என்று ஓரிடத்தில் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால், சில வாசிப்புகள் ரவி ஒரு தலித் என்பதாக இருந்தன. அவன் தலித்தாக இல்லாதபட்சத்தில் பெண் வீட்டாரிடம் வெளிப்படும் ஆழமான வெறுப்புக்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும்?
பொருளாதாரம் ஒரு காரணம், படிப்பு ஒரு காரணம், ஒழுக்கம் ஒரு காரணம், அவன் செய்யக்கூடிய வேலை ஒரு காரணம். இதெல்லாம்தான் அந்த வெறுப்புக்குக் காரணம். இந்த நான்கும்தானே சமூகத்தில் ஒரு மதிப்பைக் கொடுக்கிறது!
சாதியத்தை வீரியமிழக்கச் செய்யக்கூடிய ஆற்றல் இவற்றுக்கு இருப்பதாக நினைக்கிறீர்களா?
ஆமாம், நிச்சயமாக இருக்கிறது. பொருளாதாரம், கல்வி, ஒழுக்கம், தொழில் இவற்றில் நீங்கள் மேம்பட்டிருந்தால் அங்கே சாதி பின்னால் போய்விடும். சாதி சமரசம் செய்துகொள்ளக்கூடிய இடங்கள் இவை. இந்த நான்கிலும் நீங்கள் தோற்றுப்போகும்போது சாதி அதன் உச்ச எல்லையில் நிற்கும்.
ரேவதியின் தற்கொலை முடிவுக்கு இரண்டு தரப்புகளில் யார் காரணம் என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட முடியாத அளவுக்கு ‘செல்லாத பணம்’ நாவல் கட்டப்பட்டிருக்கிறது. இந்தப் புள்ளியைத் தொடும் எண்ணம் எங்கே தொடங்கியது?
ஒரு திருத்தம். அது தற்கொலை அல்ல; கொலை. நான் இரண்டு தரப்பு நியாயத்தையும் பேச வேண்டும் என நினைக்கிறேன். எதன் மீதும் தனிப்பட்ட ஈர்ப்போ, ஏதேனும் கதாபாத்திரங்கள் மீது தனிப்பட்ட கசப்போ கிடையாது. என்ன நடந்தது என்பதைச் சொல்வதுதான் என்னுடைய நோக்கம். சரி, நான் ஒரு கேள்வியைக் கேட்கிறேன்: இன்றைக்குத்தான் இந்தத் தீக்குளிப்பு நடக்கிறதா? தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய நாட்டார் பெண் தெய்வங்கள் பலவும் கொலை செய்யப்பட்டவைதான். நாளைக்கு எல்லோரும் படித்தாயிற்று, பொருளாதாரத்தில் மேம்பட்டாயிற்று என்று வைத்துக்கொண்டாலும் இனி இது நடக்காதா என்றால் நடக்கும். அந்த அடிப்படையில்தான் ‘செல்லாத பணம்’ நாவலைப் பார்க்கிறேன். மனித சமூகம் இருக்கும் வரை இந்த வன்முறை இருக்கும். மேலும், சமூக வன்முறை என்று ஒன்று இருக்கிறது. நாவலில் அவனை அந்தக் குடும்பம் மட்டும் அவமானப்படுத்தவில்லை; அந்தத் தெரு அவமானப்படுத்துகிறது, ஊர் அவமானப்படுத்துகிறது. ஏனெனில், அவனிடம் பணம் இல்லை, படிப்பு இல்லை, அந்தஸ்து இல்லை.
ஒடுக்கப்பட்டவர்களின் கண்ணோட்டத்தில் வாசிப்பு சாத்தியப்படும் போது ஒன்றாகவும், ஒடுக்குபவர்களின் கண்ணோட்டத்தில் வாசிக்கும்போது வன்முறையை ஆதரிப்பதாகவும் வாசிக்க இடம் இருக்கிறது, இல்லையா? இலக்கியம், சினிமா போன்ற கலை வடிவங்களில் வன்முறைகள் எப்படிக் கையாளப்பட வேண்டும்?
இதற்கு உதாரணம், ‘பெத்தவன்’ கதை. ‘செல்லாத பணம்’ நாவலும் நல்ல உதாரணம்தான். இதைப் படிக்கக்கூடிய இரண்டு தரப்புமே குற்றவுணர்வுக்கு உள்ளாகும். சமூகம் ஒரு இழிசெயலைச் செய்யும்போது அதை எடுத்துக்காட்ட வேண்டியது இலக்கியத்தின் வேலை. அதன் வழியே வாசகர்களுக்குக் குற்றவுணர்வை ஏற்படுத்துவதுதான் அடிப்படை. அந்தக் குற்றவுணர்வு வழியாக மீண்டும் இந்தத் தவறைச் செய்யக் கூடாது என்பதுதான் எதிர்பார்ப்பு.
- த.ராஜன், தொடர்புக்கு: rajan.t@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
2 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago