பொங்கலுக்கு வேலை செய்பவர் எல்லாருக்கும் புதுத் துணி எடுக்க வேண்டும், நீயும் வா என்று என் தோழி அழைத்தாள். நாங்கள் சென்றது சின்னாளம்பட்டி என்கிற ஒரு சிற்றூர். துணிகளுக்குப் பேர்போனது. செளராஷ்டிர நெசவாளிகள் அதிகம் வசிக்கும் இடம் என்று என் தோழி கூறினாள்.
புலம் பெயர்ந்து நூற்றுக்கணக்கான வருடங்களாக தமிழ்நாட்டில் வசிப்பவர்களைப் பற்றி என்னைச் சிந்திக்க வைத்தது. சென்னையில் என் சக மாணவியான சுந்தரியின் நினைவு வந்தது. அவளும் அவள் சகோதரியும் பேசிக்கொள்ளும் மொழி அது என்று சொன்னாள். பிறகு நான் மதுரையில்தான் இந்த செளராஷ்டிர மக்களைப் பற்றி அறிந்தேன். அங்கே அவர்களைப் ‘பட்டுநூல்காரர்கள்’ என்று கூறுவார்கள்.
இவர்களுடைய பூர்வீகச் சரித்திரம் மிக சுவாரஸ்யமானது. நம் நாட்டு வரைபடத்தில் வடமேற்கில் மாங்காய் வடிவத்தில் ஒரு பூகற்பம் நினைவிருக்கிறதா? ‘கத்தியவாட்’, ‘செளராஷ்ட்ரா’ எனப்படும் இடம் அது. ‘கட்ச்’ வளைகுடா அருகில் முகலாயர் காலத்தில் அங்கிருந்து இவர்கள் புலம் பெயர்ந்தார்கள். என்ன காரணம் என்று எனக்குத் தெரியாது; கேள்விப்பட்டதுதான். 'Tie and dye' என்கிற அந்தப் பிரதேசத்து நெசவைத் தெற்கில் கொண்டுவந்தவர்கள் இவர்கள்தான். ‘சுங்குடி’ புடவைகளை அறிமுகப்படுத்தினார்கள்.
மதுரையில் ‘தேவாங்கர் சத்திரம்’ என்று ஒரு கட்டிடம் உண்டு. முன் கதவைத் திறந்ததும் ஒரு ரேழி. அதைக் கடந்தவுடன் விசாலமான முற்றம். நான்கு புறமும் ஓட்டுக் கூரையுடன் தாழ்வாரங்கள். சுவரில் பல அமைப்புகளில் கதவுகள். அவற்றின் முன்பு பாயில் அடுக்கப்பட்ட புடவைகள், துண்டுகள். இந்தக் காலத்து ‘மால்’களை நினைவூட்டும். நாம் சுற்றிப் பார்த்து வேண்டியவற்றை வாங்கிக்கொள்ளலாம். ஒரு கடையில் நமக்கு வேண்டிய நிறமோ, வகையோ இல்லையென்றால் அந்தக் கடைக்காரரே வேறு ஒரு கடைக்காரரைக் கூப்பிட்டு, அவர்கள் மொழியில் நம் தேவையைத் தெரிவித்து அங்கே அனுப்பி வைப்பார். ஏனெனில் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் ஏதாவது ஒரு வழியில் உறவினராக இருப்பர்!
இன்று வத்தலக்குண்டு பகுதியில் இந்தப் பெண்மணிகள் இட்லி, தோசை மாவு அரைத்து விற்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள். காலையிலும் மாலையிலும் அரைத்து விற்கிறார்கள். வாங்க வருபவர்கள் பாத்திரம் கொண்டு வந்து வாங்க வேண்டும். ‘மக்காத குப்பை’ பைகள் கிடையாது. இவர்களும் அந்த தேவாங்கர் சத்திர வணிகர்கள்போல ‘என்னிடம் மாவு தீர்வு விட்டது. அந்த அக்காவிடம் போய் வாங்கிக் கொள்ளுங்கள்’ என்று கைகாட்டுகிறார்கள். கூட்டுறவு வியாபாரக் கொள்கையை நன்கு அறிந்து இருக்கிறார்கள்.
இன்று இவர்களது இளைய தலைமுறையினர் பலர் நெசவுத் தொழிலைக் கைவிடாமல் இருக்கிறார்கள். பலர் நெசவு இயந்திரச் சாலைகள் வைத்துத் துணிகளைத் தயாரிக்கிறார்கள். சுங்குடிப் புடவைகளையும் இந்தக் காலத்துக்கு ஏற்ப, பழைய நூல் கட்டிச் சாயம் தோய்த்து நூல் பிரிக்காமல் அழகாக அச்சிட்டு விற்கிறார்கள். தென்னிந்திய பாரம்பரிய கரைகளுடன் கிடைக்கின்றன.
என் மனம், இதேபோல் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் இருந்து வந்து தமிழ்நாட்டில் தலைமுறை தலைமுறையாக வாழும் பலரைப் பற்றி நினைத்தது. மார்வாரிகள், குஜராத்தியர், ராஜஸ்தானத்தைச் சேர்ந்தவர், மராத்தியர் ஆகியோர் புலம்பெயர பல காரணங்கள். வடமேற்கிலிருந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சூழ்நிலை காரணமாக, தற்காப்புக்காக வந்தவர்கள். என்னவெல்லாம் இழந்து வந்தார்களோ தெரியாது. உடலாலும், மனத்தாலும் காயம்பட்டு வந்து எழுந்து, இன்று நலமாக வாழ்கிறார்கள்.
கும்பகோணத்தில் நிறைய குஜராத்தி நகை வியாபாரிகள் இருக்கிறார்கள். இவர்கள் அழகான (பிராமண) தமிழ் பேசுவதைக் (‘ழ’வுடன்) கேட்டிருக்கிறேன். சென்னை நகரிலும் பல நகைக்கடைகள் இவர்களுடையதுதான். மார்வாரி வியாபாரிகளையும், கடைகளையும் எல்லாத் தெருக்களிலும் பார்க்கலாம். இவர்கள் தங்கள் மொழியை விடாமல் பேசுகிறார்கள். பரம்பரைத் தொழிலும் செய்கிறார்கள். அவர்களது பண்டிகைகளையும் வீட்டில் கூடியும் கொண்டாடுகிறார்கள்.
சத்ரபதி சிவாஜியால் தஞ்சாவூருக்கு வந்தவர்கள் மராத்தியர். அங்கே அரசாட்சி செய்தவர்கள் கலைகளைப் போற்றி வளர்த்தவர்கள். பல கோயில்களில் நிவந்தங்கள் இவர்களால் ஏற்படுத்தப்பட்டவை. தமிழைக் காத்து வளர்க்கும் ‘சரஸ்வதி மஹால்’ எத்தனை அரிய பொக்கிஷம். இவர்கள் மொழி காலப்போக்கில் சற்று சிதைந்து இன்று ‘தஞ்சாவூர் மராத்தி’ ஆகிவிட்டது.
ராஜஸ்தானில் இருந்து குடிபெயர்ந்தவர்கள் ஆந்திர மாநிலம் வழியாக, தெற்கே வந்து ராஜபாளையம் அருகில் குடிகொண்டார்கள். வீட்டில் பலர் தெலுங்கு பேசுகிறார்கள். இவர்கள் பெயரில் ‘ராஜா’ என்கிற அடைமொழி உண்டு. இவர்கள் திருமணங்கள் இன்றும் ராஜஸ்தானி வழக்கப்படிதான் நடக்கின்றன. கல்யாணம் நடக்கும் சமயத்தில் மண்டபத்தில் பெண்கள் இருக்க மாட்டார்கள்! இந்தப் பெண்கள் சாதாரணமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் காணப்படுபவர்கள். மணப்பெண்ணுக்கு முகத்திரை, மணமகனுக்கு ‘ரோஸ்’ நிறத்தில் கம்பீரமாகத் தலைப்பாகை, ஜரிகை ‘கோட்டு’. இவர்களில் பலர் தொழிலதிபர்கள். சமூக நல அக்கறை கொண்டவர்கள். இயற்கையாகவே கண்ணியமும் விருந்தோம்பலும் இவர்களுக்கு உண்டு. 47-48-இல் சுதந்திரம் பெற்ற காலத்தில் நடந்த கசப்பான, வருந்தத்தக்க நிகழ்ச்சிகளை என் வயதினர் மறந்திருக்க முடியாது. 12 வயதில் என் மனதில் அவை பலமான தாக்கத்தை ஏற்படுத்தின.
அப்போது வடமேற்கிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் ‘ஸிந்தி’கள். எத்தனையோ துயர்களை உடலாலும் மனத்தாலும் அனுபவித்தவர்கள். தளராமல் எழுந்து நின்று, இன்று துணிக் கடைகள் நடத்துகிறார்கள். சொற்திறன் உள்ள இவர்கள் கடைக்குள் நுழைந்தால் வெறுங்கையோடு வெளியே வரவே முடியாது. ‘பஹின்ஜி, இந்தப் புது ரகத் துணிகளை சும்மா பாருங்க’ என்று பிரித்துப் பிரித்துப் போட்டு அசத்திவிடுவார்கள். ஒரு ரவிக்கைத் துணி வாங்கப் போய் இரண்டு புடவைகளுடன் வெளியே வருவோம்.
பிறகு வேலைக்காகவும் கல்வி காரணமாகவும் பலர் தெற்கிலிருந்து வடக்கே போனார்கள். என் அம்மாவின் காலத்தில் திண்டுக்கல்லில் பிறந்த அம்மாவை சென்னையில் வேலைசெய்பவருக்கு மணம் முடித்தபோது, ‘‘ஏன் வடக்கே கொடுக்கிறாய்?’’ என்று கேட்ட உறவுகள் இருந்ததாம். இன்று டெல்லியும், பிலானியும் சாதாரணமாய்ப் போயின. போன இடத்தில் சரளமாக இந்தி பேசக் கற்றார்கள். சப்பாத்தி சாப்பிடவும், செய்யவும் கற்றார்கள். ‘பூஸா சிக்ரி’ என்று கேட்டிருக்கிறீர்களா? வட்டமான இரும்பு அடுப்பு, நடுவில் ஒரு குழாய். அதைச் சுற்றி மரத்தூளைக் கெட்டியாகத் திணித்து, பிறகு அந்தக் குழாயை உருவிவிடுவார்கள். அந்தத் துளையில் தீ வைக்கப்படும். நன்கு பிடித்து எரியும்வரை புகையோ புகை. வீட்டுக்குள் வைக்க முடியாது. காலை நேரத்தில் எல்லா வீடுகளுக்கு முன் இவை புகைந்துகொண்டு இருக்கும்.
அது நன்றாகத் தீ பிடித்தபின், அசுர வேகத்தில் ‘கணகண’வென்று எரியும். சமையலுக்கு வேண்டியவற்றை முன்னாலேயே தயார் செய்து கொண்டு, சமைக்கத் தொடங்கினால் நிற்காமல் சமைக்கும் சாமர்த்தியம் வேண்டும். ‘கிடுகிடு’வென்று முடியும். சென்ற இடங்களில் எல்லாம் தென் மாநிலக்காரர்கள் ஒன்றாகி நம் பண்டிகைகளைக் கொண்டாடுகிறார்கள். டெல்லியில் கரோல்பாக், மும்பையில் மதுங்கா, கொல்கத்தாவில் பாலிசஞ்ஜ் என்று நம்மூர் கடைகள், பொருட்கள், இட்லி, வடை, சாம்பார், முருங்கைக்காய் போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டு அந்த ஊர்க்காரர்கள் மோகிக்கும்படி ஆகிவிட்டன.
60-களில் அநேக இந்தியர்கள் மேற்கத்திய நாடுகளுக்குச் சென்று அங்கேயே தங்கி இன்று அடுத்த தலைமுறையினர் தோன்றிவிட்டார்கள். இன்றும் இந்திய உணவு, மொழி, பாரம்பரிய வழக்கங்கள், பண்டிகைகளைக் கைவிடாமல் இருக்கிறார்கள். அன்று தொலைக்காட்சியில் அங்கேயே பிறந்து வளர்ந்த பதின்பருவக் குழந்தைகள் சரளமாக, அழகாகத் தமிழில் உரை நிகழ்த்தியதைக் கேட்டு மகிழ்ந்தேன். பாட்டு, நடனம், ஏன் கோலம் போடுவதில்கூடத் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள். சென்ற இடத்தில் வென்று வருகிறார்கள்.
என் கொழுந்தன் மனைவியுடன் ஜெர்மனியில் ஒரு சிறிய நகரத்தில் மலையாளத்தில் பேசியவாறு வாடகைக் காரில் விமான நிலையத்திற்குப் போய் கொண்டிருந்தார்களாம். அந்த வண்டியோட்டி ஆச்சரியமாக, ஆனந்தமாக ‘‘ஸாருக்கு ஏது நாடாண?’ என்று கேட்டு மலையாளத்தில் பேசிக்கொண்டே வந்தாராம். தாய்மொழியை எதிர்பாராமல் கேட்பது தாய் மடியின் சுகம் போன்றது அல்லவா? வணிகம் செய்ய நாட்டுக்கோட்டை செட்டியார், சிங்கப்பூர், மலேசியா, ரங்கூன் முதலிய நகரங்களை நாடி கீழ்த்திசை சென்றார்கள். அங்கும் நம் கலாச்சாரத்தை விடவில்லை. முருகனும் மாரியம்மனும் கூடவே சென்றார்கள். கோடிக்கரை இஸ்லாமியர்களும் கிழக்கே வணிகத்துக்காகப் போனார்கள். சோழர் காலத்திலேயே கீழை நாடுகளுடன் வணிகம் நடந்ததை நாம் அறிவோம். அதன் சின்னங்கள் இன்றும் அந்த நாடுகளில் இருக்கின்றன.
கேரளத்து ‘நாயர்’ டீக்கடை இல்லாத ஊர்களே இல்லை. எவரெஸ்ட் சிகரத்தில் ஹிலரி போனபோது அங்கும் ஒரு டீக்கடை இருந்திருக்கலாம்! வெளிநாடுகளில் இருந்தும் இந்தியாவுக்குள் மக்கள் வருவது சரித்திர காலத்துக்கு முன்பேயே நிகழ்ந்திருக்கிறது. மத்திய ஆசியாவிலிருந்துதான் ஆரியர் வந்து இங்கே குடியேறினார்கள். சண்டையிட வந்த கிரேக்கர்கள் குடியேறவில்லை. வந்த முகலாயர்கள் அரசாண்டு குடியேறினார்கள். அதில் அக்பர் போன்றவர்கள் இந்தியாவை நேசித்தவர்கள். போர்ச்சுக்கீசியர், ஃபிரெஞ்சுக்காரர்கள் தங்கினார்கள். வணிகம், போர் எல்லாம் செய்து இன்றும் அவர்களின் அடையாளங்கள் இங்கே இருக்கின்றன.
வணிகராக வந்த ஆங்கிலேயர்கள்தான் பிறகு ஆளத் தொடங்கி, பிரித்தாளும் சூழ்ச்சிகள், கல்வியால் சாமர்த்தியமாகப் பல மாற்றங்களை செய்து கோலோச்சினார்கள்.
ஆனால், அவர்களில் பலர் இங்கு ‘மணம்’ முடித்து ஆங்கிலோ - இந்தியச் சமூகம் ஏற்பட காரணமானார்கள். சிலர் நிஜமாகவே இந்தியாவை விரும்பினார்கள். கடந்த நூற்றாண்டில் பல மேற்கத்தியர்கள் இங்கே சுற்றுலாப் பயணிகளாகவும் யோகா, ஆத்மா தேடல் என்றும் வந்து, சிலர் நம் நாட்டை விரும்பி வாழ்ந்தார்கள்.
இங்கே வந்த சீன மக்களை என் சிறு பருவத்திலேயே பார்த்திருக்கிறேன். சைக்கிளின் பின்னால் பெரிய துணி மூட்டையை ஏற்றி தெருக்களில் ‘ஸிழ்ழ்க்க்’ என்று (ஸில்க்) கூவி விற்பார்கள். சீனப்பட்டு 1 கஜம் 6 அணா (30 - 30 பைசா) என்று வாங்கிய நினைவு இருக்கிறது. சீன பல் வைத்தியர்கள் உண்டு. சீன உணவகங்கள் இன்றும் உண்டு.
கொடூரமான, வேதனையான பலவந்த புலம் பெயர்தலும் நடந்தது. கொத்தடிமைகளாக, தென்னாப்ரிக்கா, ஃபிஜி தீவு மற்றும் மொரீஷியஸ் தீவுக்குப் பலர் அழைத்துச் செல்லப்பட்டார்கள். இன்றும் அவர்களின் வழித்தோன்றல்கள் அங்கே தனித் தன்மை முழுவதும் மாறாமல் வாழ்ந்து வருகிறார்கள். சென்ற 20 - 30 வருடங்களாக நம் நாட்டின் வடகிழக்குப் பகுதியிலிருந்து புலம் பெயர்ந்து வருபவர் இருக்கிறார்கள். வேலை வாய்ப்பின்றி, வறுமை காரணமாக இவர்கள் வருவதுதான் வருந்தத்தக்கது. ‘வெளியே போனால் வீட்டிலுள்ள உணவுக்கு ஒரு வாய் குறையுமே’ என்ற எண்ணத்தினால் வருகிறார்களோ தெரியவில்லை.
இங்கே குறைந்த ஊதியத்தில், பணியிடத்திலேயே பெரும்பாலும் தங்கி வேலை செய்யும் இவர்களைப் பல கடைகளில் சென்னையில் கண்டு பரிதாபப்பட்டிருக்கிறேன். இந்தக் கொடுமையின் பிரம்மாண்டமான அளவை ‘கொரோனா’ நமக்குக் காட்டியது. வருத்தப்படுவதா, பரிதாபப்படுவதா, கோபப்படுவதா எனத் தெரியவில்லை. உருப்படியாக ஏதும் செய்ய முடியாத இயலாமை மனத்தை குன்றச் செய்தது.‘கரோனா’ கால மந்திரமாகிய ‘இதுவும் கடந்து போகும்’ என்று நினைக்கலாம். ஆனால், காலம் மாறும்போது மீண்டும் வறுமை, மீண்டும் இடைத்தரகர்களுடைய ஆசை வலை, அவை மாறுமா? தெரியவில்லை.
இன்று மக்கள் போகும் வழி இரு வழிச்சாலை ஆகிவிட்டது. வேற்றுமைகளை ஏற்றுக்கொண்டு ஒற்றுமையாக வாழக் கற்போம். எதிர்மறையான விளைவுகள் உள்ளனதாம். ஆனால், எதில்தான் எதிர்மறை இல்லை? ஒட்டுச் செடிகள் நேர்மறையான பலனையே கொடுக்கின்றன. உப்பும் சர்க்கரையையும்போல் சேர்ந்த இடத்தில் ஒன்றிக் கலந்து சுவையூட்டும்படி வாழ்வோம். இது ஆறுதல் இல்லை... திருப்தி. உலகமே ஒரு கிராமம் என்பது உண்மை!
சந்திப்போம்... சிந்திப்போம்...
கட்டுரையாளர், இதயநோய் நிபுணர் (பணி நிறைவு)
டாக்டர் கல்யாணி நித்யானந்தன், 1969-ல் தமிழகத்தின் முதல் கரோனரி சிறப்பு சிகிச்சைப் பிரிவு சென்னையில் அமையக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர்.
தொடர்புக்கு: joenitya@yahoo.com
ஓவியம்: வெங்கி
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago