சில தருணங்களும் சில நிகழ்வுகளும் 26: அங்காமணி சீர்

By செய்திப்பிரிவு

சில வருடங்களுக்கு முன் வெளிநாட்டிலிருந்து வந்திருந்த ஒரு மருத்துவருடன் காரில் போய்க்கொண்டிருந்தேன். மாலையில் ஒரு பெரிய பார வண்டி நீளமாக 12 சக்கரங்களுடன் போய்க்கொண்டிருந்தது. அதன் மேல் ஒரு புது கொதிகலன். மிகப் பெரியது. என் நண்பருக்கு ஒரே ஆச்சரியம். ‘நூதனமான ஒரு இயந்திரம் போன நூற்றாண்டு வண்டியில் போகிறதே’ என்று காரை நிறுத்திப் படம் பிடிக்கத் தொடங்கினார். “இதை எங்கள் ஊரில் யாருமே நம்ப மாட்டார்கள்” என்று தலையை அசைத்தார். “புதியதும் பழையதும் கலந்ததுதான் இந்தியா” என்று சிரித்தேன்.

‘பூம்பூம்’ மாடுகளை நினைவிருக்கிறதா? பல நிறத்துணிகள் மாட்டின் கழுத்திலும் தன் கழுத்திலும் போட்டிருப்பார். மாட்டுக்காரர் ‘டும்டும்’ என்று ஒலி எழுப்பியவாறு செல்ல, ‘நல்ல’வர்களுக்கு மாடு தலையை ஆட்டும். கோசாலைகளைச் சில மடங்களிலும் கோயில்களிலும் பார்க்கலாம். அந்த மாட்டிற்குக் கொடுக்க அகத்திக்கீரை விற்கப்படும். முதியோர் இல்லங்களைப் போல் வயதான மாடுகளைப் பராமரிக்க சில அறக்கட்டளைகள் இருக்கின்றன. இந்த இடங்களை ‘பிஞ்சிராப்போல்’ என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன். என்ன மொழி, என்ன அர்த்தம் என்று தெரியவில்லை. யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.

நம் நாட்டில்தான் வேத காலம் முதல் பாலைக் காய்ச்சி உபயோகிக்கிறோம். மேலை நாடுகளில் ‘பதப்படுத்தும்’ முறை (பாஸ்ச்சுரைஸேஷன்) வரும்வரை பாலைப் பச்சையாகத்தான் குழந்தைகளுக்குக் கொடுத்துவந்தார்கள். வெண்ணெய்கூடப் பச்சைப் பாலைக் கடைந்துதான் எடுக்கிறார்கள். 1960-61களில்கூட இங்கிலாந்திலும் ஐரோப்பிய நாடுகளில் ‘தயிர்’, ‘யோகர்ட்’ கிடைக்காது. நம்மூர் ‘யசோதை’கள்தாம் பாலைக் காய்ச்சி, உறைகுத்தி, தயிராக்கி, கடைந்து வெண்ணெய் எடுத்து நெய்யாக்கினார்கள். மோரும் கொடுத்தார்கள். ஆயுர்வேதத்தில் உடல் நலமாக இருக்க மூன்று விதிகளைக் கூறியிருக்கிறார்கள். நீரைச் சுருக்கி (கொதிக்க வைத்து), வேரைப் பெருக்கி (நீர் கலந்து), நெய்யை உருக்கி உபயோகிக்க வேண்டும் என்பதுதான் அது.

அன்று மாடுகளுக்கு இங்கிலாந்தில் ‘காசநோய்’ வருவதுண்டு. இந்தப் பச்சைப்பாலைக் குடிப்பதால் பல குழந்தைகளுக்கு ‘மாட்டுக்காச நோய்’ வரும். நாம் பாலைக் காய்ச்சுவதினால் அது நம் நாட்டில் கிடையாது. பாலைப் பதப்படுத்தும் முறை அங்கு வந்த பிறகு இந்த நோய் மறைந்துவிட்டது.

‘மாட்டம்மை’ என்று ஒரு வைசூரி நோய் இருந்தது. அம்மைத் தடுப்பு ஊசியை அந்தக் காலத்தில் கண்டுபிடித்த மருத்துவர் ‘மாட்டு அம்மை’யிலிருந்துதான் வெற்றிகரமாகக் கண்டுபிடித்தார்.

பால் ‘கவர்’களைச் சுத்தம் செய்து பிரித்து மழை கோட்டுகளாகத் தைக்கிறார்கள். நடுவில் ‘பரிசுப் பேப்பர்’ நல்ல பூக்களுடன் கூடியதை வைத்து அழகான தோளில் மாட்டும் ‘ஜோல்னா’ பை தைக்கின்றனர். மறுசுழற்சி செய்வதில் நம்மவர் கில்லாடிகள். விரிந்த பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை ஒரு நீளமான பிளாஸ்டிக் துண்டை விரிசலின் மேல் சூடுபடுத்தி ஒட்டிவிட்டு அதைக் குப்பைக்கூடை ஆக்குகிறார்கள்.

அன்றெல்லாம் ‘மக்காத குப்பை’ என்று ஒன்றையும் எறிய மாட்டார்கள். கண்ணாடி பாட்டில்கள், பேப்பர், பழைய பாத்திரங்கள், துணிகள் எல்லாவற்றுக்கும் உபயோகமுண்டு. வீதிகளில் பழைய துணிகளுக்குப் பண்ட மாற்றாகப் புதுப் பாத்திரங்களை பேரம் பேசி வாங்கலாம். 1969-ல் நான் புது வீடு கட்டி குடிபுகுந்தபோது என் தாய், எட்டு பழைய ஹார்லிக்ஸ் பாட்டில்களை வாங்கி, நாடார் கடையில் கிடைக்கும் ‘எவர்சில்வர்’ மூடிகளைப் பொருத்தித் தாளிக்கும் பொருள்களை ‘அங்காமணி’ சீர் போல் நிரப்பி எனக்குப் பரிசாக அளித்தார். யோசித்து, நேரம், சக்தி, பணம் எல்லாம் செலவழித்துக் கொடுத்த பரிசை விலைமதிக்க முடியுமா? இன்னும் ஏழு குப்பிகள் உபயோகத்தில் உள்ளன. ஒன்றுதான் உடைந்துவிட்டது.

அந்தக் காலத்தில் குழந்தைகளுக்குக் ‘கட்டி’ என்ற ஒரு வயிற்று நோய் வரும். ஆனால், அது எளிய மக்களுடைய குழந்தைகளை அதிகம் பாதிக்கவில்லை. இரண்டாம் உலகப் போர் முடிந்த உடன்தான் அலுமினியப் பாத்திரங்கள் புழக்கத்துக்கு வந்தன. பிறகு ‘எவர்சில்வர்’ வந்தது. 50களுக்குள் இந்தக் ‘கட்டி’ வியாதி முற்றுமாக மறைந்துவிட்டது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இதைப் பற்றி ஒரு ஆராய்ச்சி நடந்தது. அதன் முடிவு ஒரு ஆச்சரியமான உண்மையை வெளிப்படுத்தியது. முன்னெல்லாம் பித்தளை, வெண்கலப் பாத்திரங்களில் ‘ஈயம்’ (வெள்ளீயம்) பூசி உபயோகப்படுத்தினார்கள். பாலை அதில் காய்ச்சி, அதிலேயே வைத்து, மறுமுறை உபயோகிக்க மீண்டும் அதிலேயே காய்ச்சுவார்கள். பல மணி நேரம் அந்த ஈயம் பூசிய பாத்திரத்தில் இருக்கும்போது, மிகச் சிறிய அளவில் அந்த ‘ஈயம்’ பாலில் கலந்துவிடுகிறது. இந்த அளவு பெரியவர்களை ஒன்றும் செய்வதில்லை. ஆனால், இளங்குழந்தைகள், பாலை மட்டுமே ஆகாரமாகக் கொண்டு இருப்பவை, இந்த ‘ஈயம்’ ஈரலைப் பாதித்துவிடுகிறது. பாலை மண் பாத்திரத்தில் காய்ச்சும் எளிய மக்களுடைய குழந்தைகளுக்கு ஒன்றும் ஆவதில்லை.

இந்த வியாதிக்குச் சிகிச்சை செய்யும் இரு பாரம்பரிய வைத்தியர்கள் இருந்தார்கள். ஜம்மி வெங்கடரமணய்யா மற்றும் பில்லா பாப்பையா பாத்ருடு. இருவரும் ஆந்திரக்காரர்கள்.

மாடுகள் மட்டுமா நகரத்திலிருந்து மறைந்துவிட்டன? வீட்டுக்குள் வந்து மின் விசிறியின் மேல் ‘கப்’பில் கூடு கட்டும் குருவிகள். அதைத் தடுக்க நாங்கள் அந்தக் குப்பியைத் தலைகீழாக மாட்டினோம். அலைபேசித் தொடர்பு கோபுரங்களால்தான் சிட்டுக் குருவிகள் நகரத்திலிருந்து மறைந்ததாகக் கூறுகிறார்கள். நான் மொரிசீயஸ் தீவுக்குப் போனபோது அங்கே திறந்தவெளியில் ஒற்றையாக உயரமாகத் தென்னை மரம் இருக்கும். எனக்கு இது புதிராக இருந்தது. அப்போது வண்டியோட்டி ஒருவர் சிரித்துக்கொண்டே “மேடம் அதை நன்றாகக் கூர்ந்து கவனியுங்கள்” என்று சொன்னார். அப்போதுதான் கவனித்தேன். அதன் ஓலைகள் காற்றில் அசையவே இல்லை என்று. பிறகு சொன்னார், “அவை எங்கள் அலைபேசித் தொடர்பு கோபுரங்கள். உலோகத்தால் கட்டப்பட்டவை. சுற்றுப்புற அழகைக் கெடுக்கும் என்பதால் இப்படிச் செயற்கை தென்னை மரங்களாகக் கட்டி இருக்கிறோம்” என்று. “சபாஷ்” என்றேன்.

கருப்பாகக் குண்டாகச் சில்வண்டுகள் வீட்டினுள் தவறி வந்து மூடிய ஜன்னல் கண்ணாடி மேல் ‘டொக் டொக்’ என்று மோதும். துணியை வீசி அவற்றை வெளியேற்றுவோம். மழைக்காலத்தில் தாழ்வாகப் பறக்கும் தும்பிகள் இரவில் விளக்கு ஏற்றியதும் கூட்டம் கூட்டமாக விளக்கைச் சுற்றிப் பறக்கும் ஈசல்கள். ஒரு தட்டில் தண்ணீர் நிரப்பி விளக்குக்கு அருகில் தூக்கிப் பிடிப்போம். தண்ணீரில் பிரதிபலிக்கும் வெளிச்சத்தில் அவை ‘கொத்து கொத்து’ என்று விழும். அந்தத் தண்ணீரை வெளியில் கொட்டுவோம். மழைக்காலத்தில் ‘க்ராக் க்ராக்’ என்று ஒற்றையாகத் தொடங்கி பிறகு ‘டூயட்’ ஆகி ‘கோரஸ்’ ஆக ஒலிக்கும் தவளைகளின் சங்கீதம். நாங்கள் கடற்கரை அருகில் இருந்ததால் கடல் புறாக்களின் ஓசை, நண்டுகள், சில சமயம் முயல், பச்சைப் பாம்பு, குரங்குகள் என்று அனைத்தையும் பார்ப்போம்.

அன்று ஐந்து வீடுகள். இன்று 500 குடியிருப்புகள். பூச்சிகள் வராமல் இருக்க பூச்சி மருந்துகள் அடிக்கப்படுகின்றன. பூச்சிகள் இல்லை. அதனால், பூச்சி தின்னும் பல்லிகளும் இல்லை. ‘கரோனா’வின் உபயத்தால் நான் பூச்சி மருந்தடித்துப் பல மாதங்கள் ஆகிவிட்டன. பறப்பன, ஊர்வன என்று பூச்சிகள் வரத் தொடங்கிவிட்டன. என்ன ஆச்சரியம் ஒன்றிரண்டு பல்லிகளைப் பார்க்கிறேன், கேட்கிறேன்.
இதேபோல் மறைந்தவை, மறந்தவை எத்தனை எத்தனை என்கிற நினைவுகள் என் மனது அசை போடுவதற்கு உணவாகி இருக்கின்றன.

சந்திப்போம்... சிந்திப்போம்...

கட்டுரையாளர், இதயநோய் நிபுணர் (பணி நிறைவு)

டாக்டர் கல்யாணி நித்யானந்தன், 1969-ல் தமிழகத்தின் முதல் கரோனரி சிறப்பு சிகிச்சைப் பிரிவு சென்னையில் அமையக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர்.

தொடர்புக்கு: joenitya@yahoo.com

ஓவியம்: வெங்கி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

8 days ago

கருத்துப் பேழை

8 days ago

கருத்துப் பேழை

8 days ago

கருத்துப் பேழை

9 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

22 days ago

கருத்துப் பேழை

22 days ago

கருத்துப் பேழை

22 days ago

மேலும்