பைடன் காலத்திலாவது முடிவுக்கு வருமா வெள்ளைநிற ஆதிக்கம்?

By ஆர்.கே.ராகவன்

அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றுக்கொண்டதையொட்டி எழுந்த ஆரவாரங்களைத் தாண்டி, கரோனோ பெருந்தொற்றைச் சமாளிக்கவும் தற்போதைய சிக்கல்களிலிருந்து பொருளாதாரத்தை விடுவிக்கவும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற விமர்சனங்களே அளவில் மிகுந்திருந்தன. துயர்மிகுந்த இத்தகைய அசாதாரணமான காலங்களில் இத்தகைய விமர்சனங்களைத் தவிர்க்கவும் முடியாது. அதே நேரத்தில், ஜனவரி 6 அன்று ட்ரம்ப் ஆதரவாளர்களால் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்றக் கட்டிடத்தில் நடத்தப்பட்ட தாக்குதலைக் குறித்து பெரும்பாலான அரசியல் விமர்சகர்கள் உரிய முக்கியத்துவத்தைக் கொடுக்கவில்லை அல்லது அதைப் பொருட்படுத்தவே இல்லை என்பது சற்றே ஏமாற்றமளிக்கின்றது.

பிளவுபட்டுக் கிடக்கும் காவல் துறை

பிளவுபடுத்தும் உணர்ச்சிகள், ஒழுங்கின்மை மற்றும் வன்முறைகள் அதிகரித்துவருகையில், அரசு செயல்படாத நிலைக்குக் கூட்டாட்சித்துவம் என்ற சாக்குப்போக்குகளை இன்னும் நீண்ட காலத்துக்குச் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. அமெரிக்காவில் உள்ள 50 மாநிலங்களும் ஒன்றிணைந்து பைடன் அரசாங்கத்தின் கரங்களை வலுப்படுத்த வேண்டும். அதிகார மையத்தில் நிகழும் மாற்றங்களின்போது வெள்ளையின ஆதிக்கவாதிகளால் தூண்டிவிடப்படும் பயங்கரவாதச் செயல்களை முழுமையாகக் களைந்தெறிவதில் பைடனின் நிர்வாகத்துக்கு மிகப்பெரும் சவால்கள் காத்திருக்கின்றன. உலக நாடுகளுக்கிடையில் தனக்குள்ள மரியாதையை அமெரிக்கா தக்கவைத்துக்கொள்ள வேண்டும் எனில், உள்நாட்டுப் பயங்கரவாதத்தின் வேர்களை அது களைந்தெறிய வேண்டும், அவை வளர்வதற்கு அனுமதிக்கக் கூடாது.

பொறுப்பேற்றிருக்கும் புதிய அரசானது, இந்தத் தவறுகளையெல்லாம் எப்படி சரிசெய்யப்போகிறது என்பதை வைத்துத்தான் அதன் வெற்றி மதிப்பிடப்படும். குறைந்தபட்சம், சிறுபான்மையினருக்கு எதிராக அதிலும் குறிப்பாக ஆப்பிரிக்க- அமெரிக்கர்களுக்கு எதிராகப் பாரபட்சமாக நடந்துகொள்வதாக பரவலாக உணரப்படும் குற்றவியல் நீதி முறையின் தவறுகள் சரிசெய்யப்பட வேண்டும். அமெரிக்கச் சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மைகளை நீக்குவதற்குப் பாடுபடுவதாக பைடன் அளித்த உறுதிமொழிகளில் இதுவும் உள்ளடங்க வேண்டும். அவரது தொடக்க உரையில், கறுப்பு-வெள்ளையினத்தவரிடையே வளர்ந்துவரும் பிளவுகளைக் குறித்து அவர் குறிப்பிட்டு எதையும் சொல்லவில்லை.

அந்நாட்டிலுள்ள ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் பாதுகாப்பு அமைப்புகளால் குறிப்பாக காவல் துறையினரால் பாரபட்சத்துடன் நடத்தப்படுகின்றனர் என்பதே அங்கு மிகவும் பரவலாக நிலவிவரும் கருத்து. காவல் துறையினராலும் சிறை அதிகாரிகளாலும் பாரபட்சத்துடன் நடத்தப்பட்ட பெரும்பாலான ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் ஆழ்ந்த அவநம்பிக்கையை அலட்சியம் செய்யாமல் அது குறித்து பைடன் பேசுவது மட்டுமே இச்சிக்கலுக்குத் தீர்வாக அமையும்.

லாஸ் ஏஞ்செல்ஸ் நகரத்தின் மையப்பகுதியில் 1991-ல் ராட்னி கிங் தாக்கப்பட்டதைப் போல, துரதிருஷ்டத்துக்கு ஆளான குடிமக்களின் மீது காவல் துறையும் சிறைத் துறையும் மூர்க்கத்தனமாக நிகழ்த்திய அட்டூழியங்களின் ஆழமான வடுக்களைச் சுமந்து நிற்பதுதான் அமெரிக்காவின் குற்றவியல் நீதிமுறை வரலாறு. அத்தகைய தொடர் நிகழ்வுகளில் ஒன்றாக மிகவும் சமீபத்தில் நடந்ததை யாரால் மறந்திருக்க முடியும்? கடந்த ஆண்டு மே 25 அன்று கள்ள நோட்டைக் கொடுத்து சிகரெட் வாங்குவதற்கு முயல்கிறார் என்று கடைக்காரர் கொடுத்த தகவலையடுத்து அங்கு வந்த மினியாபொலிஸ் காவலர் ஒருவரால் 46 வயதான ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொல்லப்பட்டதையடுத்து நாடு முழுவதும் நடந்த போராட்டங்கள், சராசரி ஆப்பிரிக்க- அமெரிக்கர்களுக்கும் காவல் துறைக்கும் இடையேயான உறவு சரிசெய்யப்பட முடியாத அளவில் இருப்பதை உறுதிப்படுத்துகிறது.

சரிவிகிதமற்ற சிறைத் தண்டனைகள்

அமெரிக்காவின் தற்போதைய மக்கள்தொகை 32 கோடி. அவர்களில் ஆப்பிரிக்க- அமெரிக்கர்களின் எண்ணிக்கை மட்டும் ஏறக்குறைய 4.5 கோடி. மக்கள்தொகையில் கணிசமான பங்கு வகித்தாலும் அச்சமூகத்திற்குள் நிலவும் மோசமான வறுமையானது குற்றவியல் நீதியமைப்பில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. குற்றங்கள் பொதுவாக பொருளாதார நிலைகளின் விகிதப்படியே அமையும்- எப்போதுமே அப்படியில்லை - என்று நம்பப்படுகிறது.

கடந்து வந்த காலங்களில் போதுமான புள்ளிவிவரங்களைக் கொண்டு நிரூபிக்கப்படவில்லை என்றாலும்கூட சராசரியாக வெள்ளையினத்தவர்களைக் காட்டிலும் ஆப்பிரிக்க-அமெரிக்கர்களே அதிகமாகக் குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக ஒரு கருத்து செல்வாக்கு பெற்றுவிட்டது. அதிக எண்ணிக்கையிலான ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் சிறையில் இருப்பதை விளக்குவதற்கு இக்கருத்து அடிக்கடி மேற்கோள் காட்டப்படுகிறது. தற்போதைய அதிகாரபூர்வமான புள்ளிவிவரங்களின்படி, சிறைவாசிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டபோதிலும் 2019 இறுதியில் இன்னமும் ஒரு லட்சம் கறுப்பினக் குடிமக்களில் 1,096 ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் சிறையில் இருக்கிறார்கள். ஒப்பீட்டளவில், வெள்ளையினத்தவரின் விகிதம் வெறும் 214 மட்டுமே.

அனைத்து வகையான குற்றத் தடுப்பு நடவடிக்கைகளும் தங்களைக் குறிவைத்தே மேற்கொள்ளப்படுவதாக ஆப்பிரிக்க- அமெரிக்கர்கள் தீவிரமாக நம்புகிறார்கள். கண்டிப்புடன் கூடிய காவல் துறையின் மீது நம்பிக்கை கொள்பவர்கள் இந்தச் சிக்கலுக்கு முகம்கொடுத்தாக வேண்டும். கடைவீதிகளில் ஒழுங்கின்மைப் பிரச்சினைகளைக் கையாளும்போது பைடனின் அரசு இந்த விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். காவல் துறை என்பது மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியது அவசியமானது. அதே வேளையில், காவல் துறையின் தவறுகளைக் கூட்டாட்சி அரசு வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கவும் கூடாது.

கறுப்பினத்தவருக்கும் வாய்ப்பு

கூட்டாட்சி அரசும் மாநில அரசுகளும் மற்றொரு பிரச்சினையையும் எதிர்கொண்டுவருகின்றன. ஆட்சி நிர்வாகத்தில் பன்மைத்துவம் வேண்டும் என்பதில் பைடன் நம்பிக்கை கொண்டிருக்கிறார். இவ்விஷயத்தில், காவல் துறைக்கும் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. பல பதிற்றாண்டுகளாக அனைத்துவகையான முயற்சிகளும் எடுக்கப்பட்டாலும்கூட, இன்னமும் காவல் துறை என்பது அங்கு பெரும்பகுதி வெள்ளையினத்தவரின் ஆதிக்கத்திலேயே தொடர்கிறது. ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் சில காரணங்களுக்காகக் காவல் துறை பணிகளில் சேர்வதை விரும்பவில்லை. அவற்றில் முக்கியமானது, வெள்ளையினத்தைச் சேர்ந்த உயரதிகாரிகளால் தாங்கள் தொந்தரவுகளுக்கு உள்ளாகலாம் என்ற அச்சமே. இந்நிலையில், அமெரிக்க நாட்டின் பன்மைத்துவத்தைப் பிரதிபலிக்கும்வகையில், காவல் துறையிலும் மாற்றங்களை உருவாக்குவதே வெற்றிக்கான மந்திரம்.

அமெரிக்காவில் உள்ள குற்றவியல் நீதி அமைப்புகளுக்குத் தேவையான சீர்திருத்தங்களின் பட்டியலை விரிவுபடுத்திக்கொண்டே போகலாம் என்றாலும் அவற்றில் மிகவும் உடனடியாகச் செய்யப்பட வேண்டியது, ஆப்பிரிக்க-அமெரிக்கர்களின் பார்வையில் காவல் துறையினர் மீதான நம்பிக்கையை மீட்டெடுப்பதே. எளிதாகச் சொல்லிவிடலாம் என்றாலும் அதைச் செய்வது கடினம். இரு கட்சிகளும் கருத்தொருமித்து இவ்விஷயத்தை அணுகும்பட்சத்திலேயே அதை சாத்தியப்படுத்த இயலும்.

- ஆர்.கே.ராகவன், ஹார்வர்ட் சட்டப் பள்ளியின் முன்னாள் வருகைதரு பேராசிரியர்.
தி இந்து, சுருக்கமாகத் தமிழில்: புவி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 hour ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்