சில தருணங்களும் சில நிகழ்வுகளும் 24: தோழிப்பெண் ஊர்வலமும் பூரி தக்‌ஷிணையும்!

By செய்திப்பிரிவு

அந்தக் கால திருமணத்தின்போது, பின் தோட்டத்தில் பெரிய பந்தல் போட்டிருப்பார்கள். அதில் கோட்டை அடுப்பு. பெரிய குழி. 4 அடி அகலம், 6 அடி ஆழம், 10 - 12 அடி நீளம். சுக்காய் காய்ந்த சவுக்கு விறகு. கோலமிடப்பட்டு விடிகாலையில் கற்பூரம் ஏற்றிய பிறகு எரியத் தொடங்கும். பெரிய பெரிய பாத்திரங்கள், பெரிய கரண்டிகள், ஜாரணி எனப்படும் கண்சட்டுவங்கள். மணக்க மணக்கக் குழம்பும் ரசமும் கொதிக்கும்.

சாப்பாட்டு நேரம் நெருங்கும்போது ஒன்று நடக்கும். நாள் கணக்காக ஓடி உழைத்த ஊர்க்காரர்கள் திடீரென்று காணாமல் போய்விடுவார்கள். கல்யாண வீட்டில் இருந்து குடும்பத்தினர் ஒருவர் வீடு வீடாகப் போய் ‘இலை போட்டாகிவிட்டது. சாப்பிட வாருங்கள்’என்று அழைக்க வேண்டும். அப்போதுதான் வருவார்கள். அமர்ந்து ரசித்துச் சாப்பிட்டு, சாவகாசமாய் வெற்றிலை போட்டுக்கொண்டு அரட்டை அடிப்பார்கள்.

உணவுக்காக உழைக்கவோ, உதவவோ இல்லை. உறவுக்கும் நட்புக்கும் என்று தெரிவிக்கும் தன்மானம். அதற்குப் பதில் மரியாதையாக உண்ண வரும்படி வருந்தி அழைக்கும் பழக்கம்.
சாப்பாட்டின்போது பந்தி விசாரணை குடும்பத்தினர்தான் செய்ய வேண்டும். வீட்டுப் பெண்களால் நெய்யும், ஆண்களால் குடிநீரும் பரிமாறப்பட வேண்டும். புரோகிதர்கள் உண்ணும்போது இலையின் ஒரு நுனி அடியில் ஒரு வெள்ளி நாணயம் வைக்கப்படும். நாலணாவும் ஒரு ரூபாயும்தான் அந்தக் காலத்தில் வெள்ளியால் ஆனவை. இதுதான் பூரி தக்‌ஷிணை. இதேபோன்ற பூரி தக்‌ஷிணை, வந்திருக்கும் ஆண்களுக்கு எல்லாம் ஐந்தாம் நாள் தாம்பூலத்துடன் தரப்படும். முதல் நாள் முகூர்த்தம் முடிந்தவுடன் முகூர்த்த வெற்றிலை பாக்கு வழங்குவார்கள். பிறகு வந்தவர் எல்லாருக்கும் ஐந்தாம் நாள் புறப்படும்போது தேங்காய், வெற்றிலை, பாக்கு வழங்கப்படும்.

இன்று ‘கானா’ பாட்டு என்று கேட்கிறோமே! அதுபோல் பெண்கள் ‘இட்டுக்கட்டி’ பாடி ஆடும் நிகழ்ச்சிகள் நடக்கும். மணப்பெண் முகூர்த்தப் புடவை உடுத்தியதும், அவள் முதலில் அணிந்திருந்த கண்ணூஞ்சல் புடவை மீது அவளையும் கல்யாணத்துக்குத் தயாராக இருக்கும் ஒரு பெண்ணையும் அமரவைத்து, ‘ஏத்தி இறக்கு’வார்கள். ஒரு பாத்திரத்தின் உள்ளே விளக்கை வைத்து ‘ஏத்தடி விளக்கேத்தடி அம்மாம் பொண்ணுக்கு ஏத்தடி’ என்று தொடங்கி மாறி மாறிப் பாடி திருஷ்டி கழிப்பார்கள். நலங்கின்போது கேலிப்பாடல்கள். பெண்கள் பந்தியில் சம்பந்தி அம்மாளை கேலி செய்யும் பாடல்கள் என்று சரளமாகப் பாடப்படும். முளைத்த பாலிகையை மேள தாளத்துடன் நதியிலோ, குளத்திலேயோ கரைத்து வந்தவுடன் வட்டமாக நின்று ‘குதிச்சுப்’ பாடுவார்கள். குனிந்து, கும்மியடித்தவாறே மாறி மாறிப் பாடுவார்கள். தாளம் தப்பாமல் இயல்பாகவே நேருக்கு நேர் இருப்பவர்கள் குறுக்காக இடம் மாறுவார்கள்.

மூன்றாம் நாள் தோழிப்பெண் ஊர்வலம் என்று ஒன்று நடைபெறும். மணப்பெண்ணும் ஒரு தோழியும் சாரட்டில் ஏறி வீதி உலா வருவார்கள். ஒவ்வொரு வீட்டின் முன்பும் அந்த வீட்டுப் பெண்மணி ஆரத்தி எடுப்பார். எதிர் மரியாதையாக தட்டில் சர்க்கரை தரப்படும். அப்போது என்ன நடக்கும் தெரியுமா? அந்தப் பெண்மணியின் விரல்கள் அந்தச் சர்க்கரையை துழாவும். ஒரு வெள்ளி நாலணாவுக்காக. அது இல்லை என்றால் அவமானம்!

நான்காம் நாள் ‘நிறைமனை’. மணமக்கள் இருவரும் மேளதாளம், பெட்ரோமாக்ஸ் விளக்கு, சுற்றம் புடைசூழ ஊர்வலம். வண்டியில் மாப்பிள்ளை பெண்ணுடன் சில குஞ்சு குளுவான்களும் ஏறி இருக்கும். நாகஸ்வர வித்வான் நின்று நிறுத்தி, வாசித்துத் தன் திறமையை வெளிப்படுத்துவார். ஐந்தாம் நாள் ஆசீர்வாத நிகழ்ச்சி. மாப்பிள்ளை அங்கவஸ்திரத்தின் ஒரு நுனியைப் பிரித்து ஏந்திப் பிடிப்பார். புரோகிர்கள் ‘பஞ்சாதி’ சொல்லுவார்கள். போட்டி போட்டுக்கொண்டு, சம்ஸ்கிருதத்தில் மந்திரங்களைச் சொல்வது புரியாவிட்டாலும் கேட்க நன்றாக இருக்கும். ஒருவர் சொன்னதும் அனைவரும் ‘ததாஸ்து’ (அவ்வாறே ஆகுக) என்று சொல்லி ஆசீர்வதிப்பார்கள். மஞ்சள் அரிசியை அங்கவஸ்திரத்துள் வீசுவார்கள். பிறகு வந்திருப்பவர்கள் தங்கள் வசதிக்கேற்ப பரிசு அளிப்பார்கள்.

வரிசையில் மேடையில் ஏறி கவரையோ, பொட்டலத்தையோ அளித்து சிரித்து வீடியோ எடுப்பதல்ல. அநேகமாக பணமோ, நகையோ, வெள்ளிச் சாமானாகவோதான் இருக்கும். இதற்கும் ஒரு வரைமுறை உண்டு. தாய்மாமனுக்குத்தான் முதல் உரிமை. பிறகு அத்தை, அதன் பிறகுதான் தாத்தா பாட்டிகூட. என்ன கொடுத்தாலும் இன்னார் இன்னது கொடுக்கும் ஆசீர்வாதம், பதினாயிரம் கட்டி வராகன் என்றுதான் கூறப்படும். வரிசை மாறியதனால் கோபித்து ‘பிகு’ பண்ணி, சகோதரி வந்து கெஞ்சும்படி செய்யும் மாமன்மார்களும் உண்டு. தினம் இரு நேரம் ‘ஒளபாசனம்’ என்னும் ஹோமம் உண்டு. அந்த அணையாத ஹோமத்தீ ஒரு பானையில் சேமிக்கப்பட்டு, புகுந்த வீட்டுக்கு எடுத்துச் செல்லப்படும். கடைசியாகக் ‘கட்டுச்சாதக் கூடை’. இலையில் பொதிந்து, பேப்பரால் சுற்றப்பட்டு புளியஞ்சாதமும், தயிர் சாதமும், வடாம், ஊறுகாய்களுடன் ஒரு கூடையில் கட்டிக் கொடுப்பார்கள். கூடவே பூசணி, பறங்கிக்காய், புடலை, வாழைக்காய் இருக்கும். சம்பந்திகள் ஊர் போய்ச் சேர்ந்த உடனோ, வழியிலோ பசியாறத்தான். மறுநாள் சமையலுக்குக் காய்கறிகள்.

இன்று நேரமும் சுருங்கி, உறவுகளும் சுருங்கிவிட்டன. திருமணம் போன்ற நிகழ்வுகளை நம் வசதிக்கேற்ப நடத்தித் தரும் நிறுவனங்களும் வந்துவிட்டன. மணமக்களின் பெற்றோர்கள் கவலையும் பதற்றமும் அற்று திருமணத்தை நடத்த முடியும். காசோலையைக் கிழித்தால் மட்டும் போதும். ஐந்து நட்சத்திர ஹோட்டல்களின் வரவேற்பாளினிகளைப் போல் நேர்த்தியாக உடுத்தி, அளவான புன்னகையுடன் நடமாடும் பெண்கள். வாயிலில் வரவேற்பு முதல், போகும் போது தாம்பூலப் பை தருவதுவரை செய்து விடுகிறார்கள். மடிசார் உடுத்திய மாமிகள்கூட இந்த நிறுவனங்களில் இருக்கிறார்கள். மணப் பெண்ணுக்கு, நாத்தனாரின் கடமையான ஒன்பது கஜம் புடவை கட்டுவதிலிருந்து புரோகிதரின் வைதீகத் தேவைகள், ஆரத்தி கரைப்பது வரை எல்லாம் செய்கிறார்கள். இந்தக் கால நாத்தனார்களுக்கு அநேகமாக மடிசார் கட்டிவிடத் தெரியாது.

உறவுகளுக்கு வேலையோ, பொறுப்போ இல்லை. ஆனால், உறவுகளின் அணுக்கத்தையும், ஆசையுடன் பகிர்ந்துகொள்வதையும் நாம் இழந்து கொண்டிருக்கிறோம். வேதனைதான்!
இந்தக் ‘கரோனா’ காலத்தில் கல்யாணமே காணொலிக் காட்சியாகிவிட்டது. பழைய பாட்டு ஒன்று நினைவுக்கு வருகிறது. ‘அம்மாப் பொண்ணுக்குக் கல்யாணம்... அவவாத்திலே சாப்பாடு, கொட்டு மேளம் கோவிலிலே, வெற்றிலை பாக்கு கடையிலே, சுண்ணாம்பு சுவத்திலே’ என்று. கல்யாணம் என்கின்ற பந்தமாவது நடக்கிறதே என்று ஆறுதல் கொள்ளும் நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோமோ? சாட்சியாக நிற்கும் தேவதைகள்தான் சொல்ல வேண்டும். இதுவும் கடந்து போகும். வீடு முழுக்க உறவுகளோடும் நண்பர்களோடும் நிஜமாகவே அட்சதை தூவி மணமக்களுக்கு ஆசி கூறும் நாட்கள் வரும் என்று நம்புவோம்!

சந்திப்போம்... சிந்திப்போம்...

கட்டுரையாளர், இதயநோய் நிபுணர் (பணி நிறைவு)

டாக்டர் கல்யாணி நித்யானந்தன், 1969-ல் தமிழகத்தின் முதல் கரோனரி சிறப்பு சிகிச்சைப் பிரிவு சென்னையில் அமையக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர்.

தொடர்புக்கு: joenitya@yahoo.com

ஓவியம்: வெங்கி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்