1987-ல் பணியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகுதான், நான் தொலைக்காட்சியை அடிக்கடி பார்க்கத் தொடங்கினேன். பெரும்பாலும் என் கணவருடன் அவர் பார்க்கிற டென்னிஸ் போட்டிகள், செய்திகள், சில ஆங்கிலப் பரப்புகள்தான். அப்போது எனக்குப் பூத்தையல் (எம்ப்ராய்டரி) தைப்பதில் ஆர்வம் ஏற்பட்டது. தொலைக்காட்சி பார்க்கும்போது கை இந்த வேலையைச் செய்யும். தொலைக்காட்சியின் ஒலி காதில் விழும். திடீரென்று வசனம் நின்றால், என்ன நடக்கிறது என்று தலையைத் தூக்கிப் பார்ப்பேன். என் மாமியார் ‘கல்யாணி டிவி கேட்கிறாள், பார்க்கவில்லை’ என்று கேலி செய்வார்.
கணவரின் மறைவுக்குப் பிறகுதான் தமிழ் தொடர்களைப் பார்க்கத் தொடங்கினேன். அதுவும் மாரடைப்பு வந்து தேறிக்கொண்டிருந்தபோது ‘கட்டாய அறை சிறை’. ஒரு மாதம் தொலைக்காட்சிதான் துணையிருந்தது. இப்போது மூன்றாம் மாரடைப்பு, ஒரு இடுப்பு மூட்டு மாற்று சிகிச்சை. பிறகு கரோனா என்னை முடக்கிப் போட்டிருக்கிறது. எனக்கு உதவி செய்ய ஒரு நல்ல அம்மணி இருக்கிறார். தொலைக்காட்சியின் பரம ரசிகை. பழங்கால கறுப்பு - வெள்ளை படங்களும், பாடல் - நடனக் காட்சிகளும் ஒரு சேனலில் ஒளிபரப்பப்படுவதை எனக்கு அறிமுகப்படுத்தினார். வெளிப்புறக் காட்சிகள்கூட ஸ்டூடியோவின் உள்ளே செட் போடப்பட்டு எடுத்திருப்பார்கள். பின்னணியில் மலைகளும் மேகங்களும் வரையப்பட்ட திரைதான். செடிகளில் பூத்துக் குலுங்குவதுகூடச் செயற்கைதான். அந்த நாட்களில் சமூகப் படங்களில் உள்ள சில உடைகள் இக்காலத்தவை போன்று இருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. சிகையலங்காரம் வெகு விவரமானவை. யாரும் தலைவிரி கோலமாக இருப்பதில்லை, கோபமாக இருக்கும் கண்ணம்பா உள்பட.
தொடர்களை மட்டுமல்லாமல் விளம்பரங்களையும் கவனிக்கத் தொடங்கினேன். சில விளம்பரங்கள் ரசிக்கும்படியானவை. சில கேலிக்கூத்தானவை. சில எரிச்சலூட்டும். குழந்தைகள் நடிக்கும் சில, நல்ல ரசனையோடு இருக்கின்றன. ‘மறந்துட்டேன். இன்று டாமிக்கு விரதம்’, ‘அப்பா இது உங்கள் வாயின் ‘என்ட்ரி’ பாயிண்ட்’ என்று வகுப்பு ஆசிரியை போல பேசுவதும், ‘இந்த அண்ணா இன்னும் எங்கெல்லாம் போகணுமோ’ என்று சோப்பு கொடுப்பதும், சாக்லேட்டுக்காக அழகாக வர்ணம் தீட்டும் குழந்தைகள், பெரியோரிடம் ஆசி பெறும் குழந்தைகள் போன்றவை நல்ல உதாரணங்கள்.
சில வருடங்களுக்கு முன் நிறங்கள் படிக்கும் ஆசிரியை பல்லைக் காட்டி ‘என்ன நிறம்?’ என்று கேட்கும்போது, சற்றுத் தயங்கிவிட்டு ‘ஆஃப் ஒயிட்’ என்று ஒரு குழந்தை சொல்லும். அபாரம். தம்பி பாப்பாவைக் கொசு கடிக்காமல் பார்த்துக்கொள்ளும் பையன். எல்லாம் நன்று. ஆனால், ஒரு தாயாக எனக்கு ஒரு கவலை. பிஞ்சிலே பழுத்ததாகச் சிறு வயதிலேயே கிடைக்கும் புகழ் மாலைகள் குழந்தைகளுக்குத் தலைக்கனம் ஏறாமல் பெற்றோர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.
» சில தருணங்களும் சில நிகழ்வுகளும் 20: கொடிக்குப் பாரமான காய்
» சில தருணங்களும் சில நிகழ்வுகளும் 19: காதலில் தோல்வியடைந்தால்...
சில விளம்பரங்கள் அர்த்தமற்றவை. தலை வெடித்து சாக்லேட்டாகச் சிதறும். பின்னல் நீளமாக இருப்பதால் ‘குட்டி’ அல்ல, இந்த சோப்பு போட்டுக் குளித்துவிட்டு முயன்றால் அலைபேசி ‘சிக்னல்’ கிடைக்கும், ‘சில சமயம் ஒன்றும் செய்யாமல்’ இருக்கும் இளைஞன் வாய் ஒயாமல் சாக்லேட்டைக் குதப்பிக்கொண்டு இருப்பது இதெல்லாம். வயதாகி, தனிமையில் தவிப்பதைத் தவிர்க்க மணம் செய்ய தீர்மானிக்கும் இருவர். நல்லதுதான். ஆனால், இதற்கும் பற்பசைக்கும் என்ன சம்பந்தம்? பார்க்கப் போனால் அந்த இருவருடைய பற்களும் ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லையே?
என் உறவினர் ஒருவர் பெரிய விளம்பர நிறுவனத்தில் உயர் பதவியிலிருந்தார். அவர்களது ஒரு விளம்பரம் எப்படி எரிச்சல் ஊட்டுவதாக இருக்கிறது என்று சுட்டிக் காட்டினேன். அவர் என்ன சொன்னார் தெரியுமா? ‘‘எங்கள் குறிக்கோள் இந்த விளம்பரமும் அதில் குறிப்பிட்ட பொருளும் எல்லாருடைய நினைவிலும் நிற்க வேண்டும் என்பதுதான். அது எரிச்சலுடன் இருந்தாலென்ன? மகிழ்ச்சியுடன் இருந்தால் என்ன?” என்றார். யோசித்துப் பார்க்கும்போது உண்மைதான் என்று தோன்றியது.
சில காட்சிகள் எல்லாத் தொடர்களிலும் வழக்கமாக இருக்கின்றன. கவலையாக இருக்கும் பெண்மணி பாலைப் பொங்கி வழியவிடுவார். பேசிக்கொண்டே கீரை ஆய்வார் அல்லது காய்கறி நறுக்குவார். விருந்தினருக்கு காபி கலப்பார். ‘இன்ஸ்டன்ட்’ காப்பிதான். ஒருவர்கூட ‘பில்டர் காபி’ கலப்பதையோ, டீ போடுவதையோ கண்டதில்லை. இந்த லட்சணத்தில் ‘காபி நன்றாகப் போடுகிறீர்கள்’ என்று நற்சான்றிதழ் வேறு. ‘பத்து நிமிஷத்தில் சமையல் ஆகிவிடும். சாப்பிட்டு விட்டுத்தான் போக வேண்டும்’ என்று உபசரணை. நல்ல காலம் எந்த விருந்தினரும் ‘சரி’ என்று சொல்வதில்லை.
சாப்பிடுபவர் யாரும் ‘வாஷ்பேசி’னுக்குப் போய் கை கழுவுவதோ, வாய் கொப்பளிப்பதோ இல்லை. தட்டில்தான் கை கழுவுவார்கள். ஒரு பெண்ணும் அதை ஆட்சேபிப்பதைக் கண்டதில்லை.
படுக்கை அறையில் இருக்கும் பெண்மணி ஒன்று புடவைகளை மடித்துக்கொண்டிருப்பார். அல்லது தலையணைக்கு உறை போடுவார். அலமாரியை ஒழிப்பதோ, தூசு தட்டுவதோ, புத்தகங்களை அடுக்கியோ கண்டதில்லை.
ஒரு பெண்மணி கோபித்துக்கொண்டு வீட்டை விட்டுப் போகத் தீர்மானிப்பார். பீரோ மேலிருந்து ஒரு ‘ஏர் பேக்’ எடுத்து, அலமாரியிலிருந்து 3 - 4 புடவைகளைச் சுருட்டித் திணிப்பார். ரவிக்கையோ, உள் பாவாடையோ கிடையாது. ஏன், பற்பசை, சோப்புகூட எடுத்துக்கொள்ள மாட்டார். பெண்கள் எல்லாம் தலையை விரித்துத்தான் போட்டிருப்பார்கள். ஒரு தொடரில் உணவகத்தில் தற்காலிகப் பணியாளராக வரும் ஆணுக்கு ‘கிராப்’ தலையில் தொப்பி. ஆனால், உரிமையாளரின் பெண் நீண்ட முடியைத் தோள் வழியாக முன்னால் தொங்கவிட்டுக்கொண்டு சாம்பார் பரிமாறுவாள். என்னத்த சொல்ல? பெண்கள் சர்வாலங்கார பூஷிதைகளாகத்தான் படுக்கச் செல்வார்கள். தோளில் தலைப்புக்கு குத்தப்பட்ட பின்கூட அப்படியே இருக்கும். காலையில் தலை குளித்துத் துணி கட்டியிருப்பது முன் தலையை மூடி இருக்காது. துணி விழாமல் இருக்க ‘ஸ்லைடு’ குத்தியிருப்பது நன்றாகத் தெரியும். யாரும் கவனிப்பதில்லை.
சந்திப்போம்... சிந்திப்போம்..!
கட்டுரையாளர்: கல்யாணி நித்யானந்தன், இதயநோய் நிபுணர் (பணி நிறைவு),
டாக்டர் கல்யாணி நித்யானந்தன், 1969-ல் தமிழகத்தின் முதல் கரோனரி சிறப்பு சிகிச்சைப் பிரிவு சென்னையில் அமையக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர்.
தொடர்புக்கு: joenitya@yahoo.com
ஓவியம்: வெங்கி
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago