சில தருணங்களும் சில நிகழ்வுகளும் 19: காதலில் தோல்வியடைந்தால்...

By செய்திப்பிரிவு

இன்று எல்லா ஊடகங்களிலும் - நாளிதழோ தொலைக்காட்சியோ, வலைதளமோ, காதலை மறுத்த பெண்களைக் காயப்படுத்துவது அல்லது தற்கொலை முயற்சி ஆகியவற்றில் இளைஞர்கள் ஈடுபடுவதைக் காண்கிறோம். தாயாகிய என் நெஞ்சில் இந்தச் செய்திகள் பிசைகின்றன. என் நினைவுகளைப் பின்னோக்கி இழுத்துச் சென்றன.

முதன்முறையாக இருபாலரும் படிக்கும் மருத்துவக் கல்லூரியில்தான் படித்தேன். அன்றும் உணர்ச்சிகளும் சந்தர்ப்பங்களும் இன்று போலத்தான். நாங்கள் எப்படி இவற்றை எதிர்கொண்டோம் என்று நினைத்துப் பார்த்தேன்.

ஸ்டான்லி மருத்துவமனையை அந்தக் காலத்தில் ‘கஞ்சித்தொட்டி ஆஸ்பத்திரி’என்று சொல்வார்கள். ஏதோ ஒரு பஞ்ச காலத்தில் மக்கள் பசியாற ஆங்கிலேய அரசு கஞ்சி வழங்கும் இடமாக இது இருந்ததாம். இந்தப் பெயரையே சிலநேரம் கேலியாகச் சொல்வார்கள். இதைச் சார்ந்த மருத்துவக் கல்லூரியில்தான் சேர்ந்திருந்தேன். இங்கே பெரும்பாலும் வெளியூர் மாணவர்கள், அதுவும் சிறிய ஊர்களிலிருந்து வந்தவர்கள்தாம். அன்று ‘மண்ணின் மைந்தர்’கோட்பாடு வராததால் பல மாகாணங்களில் இருந்து வந்த மாணவர்களும் இருந்தனர். பகட்டும் பசப்பும் இல்லாத உள்ளங்கள். பலருக்கு வந்த புதிதில் ஆங்கிலமே சரளமாகப் பேசக்கூடத் தெரியாது. என் சக மாணவி ஒருவர் சேலத்துக்கு அருகில் உள்ள ஒரு சிற்றூரைச் சேர்ந்தவர். கல்லூரி தொடங்கிய சில நாட்களில் மாலையில் ‘‘ஐயோ என்ன சொல்கிறார்கள் என்றே புரியவில்லை. பிறகுதானே பாடத்தைப் புரிந்துகொள்ள முடியும்’’என்று அழுவார். இரண்டொரு மாதங்களிலேயே முன்னேறிவிட்டார் என்பது வேறு விஷயம்.

பெண்கள் விடுதியும் ஆண்கள் விடுதியும் அடுத்தடுத்து. கல்லூரிக்குப் போக தெரு வழியாகப் போகாமல், ஆண்கள் விடுதி வழியே போனால் குறுக்கு வழி. சீனியர் மாணவிகள் அந்த வழியாகப் போவார்கள். புது மாணவிகளுக்குத் தயக்கம். சவால்கள் என்றால் எனக்குப் பிடிக்கும். தைரியமும் அதிகம். (அது அசட்டுத் தைரியமா எனத் தெரியாது). அதனால், அந்த வழியாக நானும் போகத் தொடங்கினேன். அப்போதுதான் ‘பராசக்தி’ படம் வெளியாகியிருந்தது. அந்தப் பட உபயத்தில் ஆண்கள் விடுதியின் மாடியில் இருந்து சிலர் ‘கல்யாணி திரும்பிப் பார், திரும்பிப் பார்..’ என்று கூவினார்கள்.

இரண்டாம் நாளும் அது தொடர்ந்தது. மூன்றாம் நாள் நான் சட்டென்று நின்று, ‘‘திரும்பிப் பார்த்துவிட்டேன். என்ன வேணும் அண்ணா?’’என்று கூவினேன். உடனே கைப்பிடிச் சுவரின் மேல் தெரிந்த தலைகள் மறைந்தன. பின்வந்த நாட்களில் சிறு புன்னகையும் கையசைப்பும்தான். சக மாணவர்கள் பலர் பெண்களுடன் பேசியதுகூட இல்லை. இருந்தாலும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்போல உணர்ந்தோம். நாங்கள் இருட்டிய பிறகு திரும்பும்போது, அது கல்லூரி நூலகத்திலிருந்தோ, திரையரங்கிலிருந்தோ எதுவாக இருந்தாலும், எங்கள் கல்லூரி மாணவர்கள், எங்களைக் கண்டால் பாதுகாப்பாகப் பின் தொடர்ந்து விடுதி வாயில்வரை வருவார்கள்.

ஒரு முறை எனக்கு ஏற்பட்ட நூதன அனுபவத்தைக் கூறுகிறேன். எங்கள் விடுதிக்கு எதிரில் பொதுப்பணித் துறையைச் சேர்ந்த பணிமனை இருந்தது. ஓர் இரவு கல்லூரி நூலகத்திலிருந்து எட்டு மணி அளவில் திரும்பியபோது அருகிருந்த சில ‘குடிமகன்’கள் தரக்குறைவான வார்த்தைகளைப் பேசி சிரித்து பின்தொடர்ந்து வந்தார்கள். வழக்கம்போல் மாணவர்கள் துணைக்கு வருகிற தைரியத்தில் நான் நடையை வீசிப் போட்டு விடுதியின் வாயிலை அடைந்ததும் திரும்பி அருகில் வந்த ஒருவனின் கன்னத்தில் அறைந்தேன். மற்றதை அந்த மாணவ மணிகள் பார்த்துக் கொண்டார்கள். தர்ம அடிதான்.

மறுநாள் கல்லூரியில் இந்தச் செய்தி பரவி சில மாணவர்கள் என்னைக் கண்டதும் கன்னத்தை மூடிக்கொண்டு பயப்படுவது போல் நடித்து கேலி செய்தார்கள், ‘இவுங்க டேஞ்சர்பா’ என்று.

ஒருமுறை நான் விடுமுறையில் இருந்து திரும்பும்போது, வெள்ளத்தால் புகைவண்டி பல மணி நேரம் தாமதமாகி நள்ளிரவில் சென்னையை அடைந்தது. கவலையுடன் வண்டியில் இருந்து இறங்கினால் வரவேற்புக் குழுவாக மூன்று நண்பர்கள். பாவம், காத்து நின்றிருக்கிறார்கள். பிறகு சூடான தேநீர் அளித்து சைக்கிள் ரிக்ஷாவில் கொட்டும் மழையில் என்னைப் பத்திரமாக விடுதியில் சேர்த்தார்கள். மறக்க முடியுமா?

இந்த மூவரில் ஒருவர் 30 வருடங்களுக்குப் பிறகு திரும்ப இதேபோல் உதவினார். அவர் நியூயார்க் நகரில் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தார். க்ளீவ்லேண்டில் உள்ள மகனிடம் நான் தங்கப்போவதை அறிந்த அவர் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது என் மகன் கவலையில் ஆழ்ந்திருந்தார். ஏனென்றால், என் விமானம் இயந்திரக் கோளாறால் பல மணி நேரம் தாமதமாக நியூயார்க் நகரை அடைந்திருக்கவில்லை. அதனால், உள்நாட்டு விமானத்தைப் பிடிக்க இயலாது என்று என் நண்பரிடம் சொல்லி இருக்கிறான்.

‘‘நான் கல்யாணிக்கு வேண்டியதைச் செய்கிறேன்’’ என்று கூறிவிட்டு அதேபோல நடு இரவில் விமான நிலையத்தில் குழப்பத்துடன் நின்ற என்னைச் சந்தித்தார். பிறகு அதே நகரில் உள்ள வேறு ஒரு விமான நிலையத்துக்கு அடித்துப் பிடித்துக் கூட்டிப் போய் ஏற்கெனவே முன்னேற்பாடாகச் செய்திருந்த பயணச் சீட்டை என் கையில் திணித்து அந்த மாற்று விமானத்தில் ஏற்றி என் மகனிடமும் அலைபேசியில் விவரத்தைச் சொல்லி இருந்தார்.

‘‘நடு இரவில் உன்னைப் பயணச் சிக்கலில் இருந்து விடுவிப்பதே என் வேலை ஆகிவிட்டது’’என்று சிரித்து அந்தப் பழைய நிகழ்வை நினைவுகூர்ந்தார். இத்தனைக்கும் அந்த 30 வருடங்களில் மிகக் குறைவாகவே நாங்கள் இருவரும் தொடர்பு கொண்டிருந்தோம். காலத்தால் மெருகு குறையாத நட்பு.

கடைசி பரீட்சைக்கு ஒரு மாதம் இருந்தபோது அவசர சிகிச்சைக்காக வேறு ஒரு மகளிர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். என் சக மாணவர்களில் இருவர் முறை வைத்துக்கொண்டு தினமும் 3 - 4 மணி நேரம் பாடங்களை வாசித்து விவாதித்தார்கள். பரீட்சையில் நான் முதலிடம் பெற்றபோது, இவர்கள் இருவரும் துளி பொறாமை இல்லாத மகிழ்ச்சியுடன் ‘தோ பார்டா... படிச்சது நாம... முதலிடம் இவளுக்கு’ என்று கேலி செய்து இனிப்புக் கொடுத்து வாழ்த்தினார்கள். இதுபோன்ற எத்தனையோ நட்பின் அடையாளங்கள்.

வெளியூரிலிருந்து மாணவர்களின் பெண் உறவுகள் சென்னைக்கு வந்தால், உரிமையுடன் அவர்களை எங்களுடன் விடுதியில் தங்க வைப்பார்கள். கோயிலுக்கும் கடைகளுக்கும் நாங்கள் கூட்டிப் போவோம். அக்காவோ, அம்மாவோ கொண்டு வரும் ‘தீனி’களில் எங்களுக்கும் பங்கு உண்டு. அதேபோல் எங்களது ஆண் உறவுகளை மாணவர் விடுதியில் தங்க வைத்து ராஜ உபசாரம் நடக்கும்.

இந்த சகோதரத்துவம் என்பது வெறும் வாய்ச்சொல் அல்ல. ‘நீங்க என் அண்ணா மாதிரி’என்று தப்பித்துக்கொள்ளும் பாசாங்கும் அல்ல. எங்கள் இடையிலும் காதல்கள் மலர்ந்திருந்தன. சில நிலைத்தன. வருடங்கள் காத்திருந்து வெற்றி பெற்றன. சில பிரிந்தன. சில நிறைவேற வழியே இல்லாத காதல் என்று தெரிந்தும் அந்த ஜோடியை அனுதாபத்துடன்தான் பார்த்தார்கள். மோகத்தின் முப்பதும் ஆசையின் அறுபதும் கழிந்து நட்பும் அக்கறையும் தொடர்ந்தன.

முக்கியமானது என்னவென்றால் முறிந்த உறவுகளிலோ, ஏற்கப்படாத, மறுக்கப்பட்ட காதல்களிலோ கசப்பு இல்லை. குற்றம் சாட்டவில்லை, பழிவாங்கும் செய்கையோ, எண்ணமோ இருந்ததில்லை. ஒருதலைக் காதலில் மனம் நொந்த ஆண்கள் மதுவையோ, தற்கொலையையோ நாடியதில்லை. ‘தேவதாஸ்’போல தாடி வளர்த்துப் பாடினார்களா என்று தெரியாது. பிற்காலத்தில் அவரவர் வாழ்க்கைத் துணையுடன் இந்தப் பழைய நபர்களைச் சந்திக்கும்போது, அறிமுகப்படுத்தி நட்பைக் கூறும்படியான கண்ணியத்துடன் இருந்தது. ஏற்கப்படாத காதலை, “அந்தக் காலத்தில் (இப்போது பேரன், பேத்தி எடுத்தவர்!) இவள் மீது ஒரு கண் இருந்தது. இவள்தான் கண்டுகொள்ளவே இல்லை’’ என்று கூறி சிரிக்கவும் முடிகிறது.

அன்று காதல் ஜோடிகள் விடுதி மரத்தடியிலோ, கல்லூரி வராந்தாவிலோ, சிற்றுண்டி உணவகத்திலோ மணிக்கணக்காகப் பேசுவார்கள். சில சமயம் திரையரங்குகளில். ஆனால், எல்லை மீறியதாகக் கேட்டதில்லை. அன்றும் உணர்ச்சிகளும், சந்தர்ப்பங்களும் இன்று போல்தான். எப்படி எதிர் கொண்டோம் என்பதுதான் வேறானது.
வளர்ப்பா, குடும்பப் பின்னணியா? ‘தோலார் சுவர் வைத்து இசாலாயெழுப்பி தசை கொண்டு மேய்ந்த’ உடலைக் கல்லூரியில் சேர்ந்த உடனே உயிரற்றுப் பின்னால், உயிரோடும் பார்த்ததனால் உணர்ச்சிகள் உடலைத் தாண்டியவை என்கிற அறிவா? உடல் சொல்வதை மனம் கேட்கும் நிலை மாறி மனம் சொல்வதை உடல் கேட்கும் பக்குவமா?

அன்று 50 - 60களில் பெற்றோர் சொல்வதை அநேகமாக எல்லா இளைஞர்களும் மதித்தார்கள். பெற்றோரும் இப்படி மேற்படிப்புக்கு அனுப்புகிறோம், அதுவும் பெண் பிள்ளைகளை. அதனால், மாற்றங்களும் வாழ்க்கை பற்றிய முடிவுகள் எடுக்கும் துணிவும் அறிவும் ஏற்படும் என்று ஒருவாறு எதிர்பார்த்தார்கள். இன்று பெற்றோர் குழந்தைகளிடம் பேச, அறிவுரை கூறத் தயங்குகிறார்கள். பிள்ளைகளிடம் ஏன் பயப்படுகிறார்கள் என்று தோன்றுகிறது. எங்கே தவறு? தோளுக்கு மேல் வளர்ந்ததால் அதிகத் தோழமை காட்டிவிடுமோ? வேலி என்பது தடையல்ல.

சந்திப்போம்... சிந்திப்போம்..!

கட்டுரையாளர்: கல்யாணி நித்யானந்தன், இதயநோய் நிபுணர் (பணி நிறைவு),

டாக்டர் கல்யாணி நித்யானந்தன், 1969-ல் தமிழகத்தின் முதல் கரோனரி சிறப்பு சிகிச்சைப் பிரிவு சென்னையில் அமையக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர்.

தொடர்புக்கு: joenitya@yahoo.com

ஓவியம்: வெங்கி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்