சில தருணங்களும் சில நிகழ்வுகளும் 16: ஐந்தறிவா, ஆறறிவா?

By செய்திப்பிரிவு

நம் கதைகளில் அரசர்கள் குதிரை மீதும் யானை மீதும் சவாரி செய்தாலும், ஊர்வலமாகத் தேரில்தானே போகிறார்கள்? நம் தெய்வங்கள் ஊர்வலமாக அநேகமாக ஒரு விலங்கின் மீதோ பறவையின் மீதோ தான் ஆரோகணிக்கிறார்கள். மூஞ்சூறு, நாய், ஆந்தை போன்றவைகூட வாகனம்தான். சூரியனுக்கு மட்டும்தான் தேர். அதுவும் ஒற்றைச் சக்கரம்தான்.

விலங்கு, பறவை இவற்றுக்கு ஐந்தறிவுதானா? நம் தினசரி வாழ்வில் பல விலங்குகள் மிக புத்திசாலித்தனமான செயல்களைச் செய்வதை நான் கண்டிருக்கிறேன். வீட்டுச் செல்லப் பிராணிகள், நாம் வழக்கமாகச் செய்யும் செயல்களை என்னமோ கையில் கடிகாரம் கட்டிக்கொண்டு இருப்பது போல் நமக்கு நினைவூட்டுகின்றன. என் பூனை அதிகாலை ஐந்து மணிக்கு நான் எழுந்திருக்கவில்லை எனில் ‘மியாவ்’ என்று குரல் கொடுப்பது மட்டுமன்றி என் மீது ஏறி நடந்து என் முகவாயை நக்கும். இன்னொன்று, நம்புவதே கடினம். நான் குளிக்கப் போகும் முன் புடவையை எடுத்தவுடன், பாவாடை வைக்கும் அலமாரிக்கும் அதை எடுத்தவுடன் என் ரவிக்கைகள் உள்ள இடத்துக்கும் ஓடும். அங்கே ஓடிப் போய், நான் வரக் காத்திருக்கும்.

என் முன்னறையின் வராந்தாவில் பறவைகளுக்குத் தண்ணீரும் (குடிக்கவும், குளிக்கவும்) உணவும் வைப்பது வழக்கம். அணில்களும் வந்து அழகாகப் பருக்கைகளைக் கையில் பிடித்துத் தின்னும். வைக்கத் தாமதமானாலோ, மதியம், நடுப்பகலில் தண்ணீர் அளவு குறைந்தாலோ காக்கைகள் கூப்பிடும்.
காகத்தைக் கண்டு புறாவும் அணிலும் பயப்படும் என்றுதானே நினைப்போம்? அடை காக்கும் பெண் புறா ஒன்று (கூடும் முட்டைகளும் என் ஜன்னலுக்கு வெளியில்) காலையில் அவசரமாகத் தீனிக்கு வரும். ஒருநாள் அதன் அருகில் வந்த காகத்தை, தின்பதை நிறுத்தாமலேயே வலது சிறகை விரித்து, அந்தக் காக்கையை அடித்தது தாய்மை கொடுக்கும் தைரியம்தானோ? அதே மாதிரி ஒரு அணிலும் உரக்க ‘கீச்கீச்’ என்று சப்தமிட்டுக் காக்கையை விரட்டியதைப் பார்த்து வியந்தேன்.

உணவு முக்கியம். அதனால் நம் செல்லப் பிராணியான நாய்கூட உண்ணும்போது நம்மை அருகில் வர விடுவதில்லை. எங்கள் வீட்டின் அருகில் உள்ள கோயில் யானைகூடத் தான் உண்ணும்போது பார்வையாளர்கள் அருகில் வருவதை விரும்பாமல் சன்னமாகப் பிளிறும். என் பணியிடத்தில் நாங்கள் அனைவரும் உண்ணும்போது ஜன்னல் வழியாக ஒரு அணில் வரும். கொஞ்சம் கொஞ்சமாய் அது நாங்கள் தரும் உணவை உண்ணப் பழகிவிட்டது.

ஒருநாள் நான் பாதி சமோசாவை கொடுத்தபோது அணில் அதில் உள்ள பட்டாணிகளை நீக்கிவிட்டுத் தின்றது! இதேபோல் என் மாமியார் வீட்டுப் பூனை, அவர் தரும் மிக்சரை விரும்பிச் சாப்பிடும். ஆனால், அதில் உள்ள வேர்க்கடலை, முந்திரி ஆகியவற்றைத் தின்னாது. வேறொரு பூனை தயிர் சாதம், இட்லி, ரவை - சேமியா உப்புமா என அனைத்தையும் நன்றாக மொக்கும். வெண்பொங்கலை மாத்திரம் தொடவே தொடாது. ஏன், விருப்பு வெறுப்புகள் எல்லாம் மனிதர்களுடைய ஏகபோக உரிமையா? ஒருவேளை சில உணவு வகைகளுக்கு ஒவ்வாமை இருப்பதை இந்த விலங்குகள் அறிந்திருக்குமோ? பால், பால் சார்ந்த உணவு வகைகளைச் சில பூனைகள், நாய்கள் தொடாது என்று ஒரு கால்நடை மருத்துவர் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

காஞ்சி காமாட்சி கோயிலில் நடந்த ஒரு சுவையான சம்பவம். கோயில் யானைக்குக் கொடுக்க ஒரு சீப்பு வாழைப்பழத்துடன் போனோம். அந்த யானைக்குக் காலை உணவு கொடுத்துக்கொண்டு இருந்தார்கள். ஒரு கோணி நிறைய முட்டைகோஸ் தின்றுகொண்டு இருந்தது. தின்னும் அவசரத்தில் சில துண்டுகள் தரையில் சிந்தியிருந்தன. சற்றுப் பொறுத்து வரலாம் என்று நினைத்து நாங்கள் நகர முற்படும்போது, யானை தும்பிக்கையை நீட்டி அந்த வாழைப்பழ சீப்பை லாவகமாக பிடுங்கிக்கொண்டது. உடனே தின்றதா? அதுதான் இல்லை. தன் பக்கத்தில் தரையில் வைத்துவிட்டு முட்டைகோஸ் அனைத்தையும், கீழே விழுந்த துண்டுகள் உட்பட தின்றுவிட்டுப் பிறகு அந்தப் பழங்களைத் தின்றது.

பின் ஒருமுறை, அதே கோயிலில் பெரிய யானையைப் பாகன் குளிப்பாட்டிக் கொண்டிருந்தார். அவருக்கு உதவியாக ஒரு இளைஞர். அவர் பின்னாலேயே யானைக் குட்டி சுற்றிக்கொண்டு இருந்தது. அவர் மண்டபத்தை விட்டு வெளியே செல்ல முயன்றபோது அந்தக் குட்டி, அவரது மணிக்கட்டைத் துதிக்கையால் பிடித்து இழுத்தது. அந்த இளைஞர் குட்டியின் பக்கம் திரும்பி என்னவோ சொன்னார். உடனே அது கையை விட்டுவிட்டுத் தலையைத் தொங்கப்போட்டு ‘சரி’ என்பதுபோல் ஆட்டியது. நாங்கள் அவரிடம் என்னவென்று கேட்டபோது, அவர், ‘‘எனக்கு வேலையிருக்கு... என்னை விடு என்று சொன்னேன். இவளுக்கு எல்லாம் புரியும். நல்லவேளை... மனித பாஷை பேசத் தெரியவில்லை. தெரிந்திருந்தால் எங்களைப் பற்றி தேவஸ்தானத்தில் போட்டுக் கொடுத்து விடுவாள்’’ என்று கூறிச் சிரித்தார்.

இன்னொரு குட்டி யானை சம்பவம். பல வருஷங்களுக்கு முன்பு தாயை இழந்த சின்னஞ்சிறு குட்டி யானை மைசூரு மிருகக் காட்சி சாலைக்குக் கொண்டு வரப்பட்டு அங்குள்ள ஒரு பணியாளர் அதற்குப் பொறுப்பாக்கப்பட்டு வளர்க்கப்பட்டது. அமுல் நிறுவனத்தார் தினம் 10 டின் பால் உணவை இலவசமாகப் பல மாதங்கள்வரை கொடுத்து வந்தார்கள். நான் குடும்பத்துடன் அங்கே சென்றபோது அந்தக் குட்டி ‘செவிலித் தாயான’ அந்தத் தோட்டக்காரர் கூடவே நின்று அவரது முதுகை, தோளைத் தடவிக்கொண்டே இருந்தது. அவர் எழுந்து போனபோது பிளிறிக்கொண்டே உடன் ஓடியது. பிரசவத்தினால் மட்டும் தாய் அல்ல; வளர்ப்பினாலும் தாய் என்கிற அடையாளம் உண்டு.

குருவாயூரில் யானைகளுக்கு ஒரு தோட்டம் உண்டு. அதைப் பார்க்க ஒரு முறை போனேன். ஒரு பெரிய ஆண் யானை பாகனுடன் சாவதானமாக நடந்து வந்து கொண்டிருந்தது. அருகில் ஒரு பெரிய தொட்டியில் ‘ஹோஸ்’ பைப் மூலம் தண்ணீர் நிரம்பிக்கொண்டிருந்தது. யானை அருகில் வந்து நின்றது. சரி... தண்ணீர் குடிக்கத்தான் என்று நினைத்தோம். துதிக்கையால் உறிஞ்சிக் குடித்ததா? அதுதான் இல்லை. அந்தப் பைப்பை துதிக்கையால் எடுத்து வாய் ஓரத்தில் ‘ஸ்டைலாக’ சொருகிக் கொண்டு (நாம் ‘ஸ்ட்ரா’வால் குளிர்பானம் குடிப்பதுபோல்) உறிஞ்சியது!

யானைகளின் தாகத்தைப் பற்றிய வேறொரு நிகழ்வு. வறட்சியான கோடைகாலம். கூடலூரில் யானைகள் காடுகளிலிருந்து முன்னிரவில் நீர் தேடி தோட்டங்களுக்குள் நடமாடத் தொடங்கின. ஒருநாள் இரவு எட்டு மணி அளவில் ஒரு மருத்துவர் வீட்டுத் தோட்டத்தில் நான்கைந்து யானைகள் புகுந்து அங்குள்ள வாழை மரங்களை முறித்து இளம் தண்டுகளைத் தின்றுவிட்டுப் போயின. அதை அந்த மருத்துவர் அலைபேசியில் காணொலியாகப் பதிவு செய்திருந்தார். குலை தள்ளியிருந்த காய், கனிகளைத் தொடவே இல்லை. தண்டுகளில் தான் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது என்பதை அவை தெரிந்து கொண்டிருந்தன. அடுத்த நாள் காலையில் ஊருக்குத் தண்ணீர் கொண்டுவரும் பிவிசி குழாயை உடைத்து யானைகள் தாகம் தீர்த்துக்கொண்டது தெரியவந்தது. அதுவும் சரியாக 'L' கூட்டு முனையை உடைத்திருந்தன. அந்த 'L' கூட்டு முனைதான் பலவீனமான இடம் என்று யானைகளுக்குத் தெரிந்திருந்தது.

சந்திப்போம்... சிந்திப்போம்..!

கட்டுரையாளர்: கல்யாணி நித்யானந்தன், இதயநோய் நிபுணர் (பணி நிறைவு),

டாக்டர் கல்யாணி நித்யானந்தன், 1969-ல் தமிழகத்தின் முதல் கரோனரி சிறப்பு சிகிச்சைப் பிரிவு சென்னையில் அமையக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர்.

தொடர்புக்கு: joenitya@yahoo.com

ஓவியம்: வெங்கி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்