சில தருணங்களும் சில நிகழ்வுகளும் 13- சிவசக்திக்கு ஒரு வேண்டுகோள்!

நடு ஜாமத்தில் 3 மணிக்குத் தூக்கம் கலைந்து விழித்தேன். கவலைகள் எல்லாம் என்னுடன் விழித்துக்கொண்டன. தீர்வு காண முடியாதவை, பூதாகரமாய், இருளாய் என்னை அழுத்துகின்றன. கரோனா அரக்கனின் பிடியில் புரட்டிப் போடப்பட்ட வாழ்க்கை. முதுமை, தனிமை, நிச்சயமில்லாத எதிர்காலம், பெற்றதும் சுற்றமும் அருகில் இல்லாத, ஏன் அருகிலேயே வர முடியாத நிலைமை.

இறப்புகூட அவ்வளவு அச்சுறுத்துவதாக இல்லை. ஆனால், நோய் கண்டு மருத்துவமனையில் அருகில் யாரும் வர முடியாத நிலை ஏற்பட்டால்? நினைத்துப் பார்க்கக்கூட அச்சமாய் இருக்கிறது. தொண்டை வறள்கிறது. கடந்த 5 மாதங்களில் சில உறவுகளுக்கும் சில நண்பர்களுக்கும் இந்த நிலை ஏற்பட்டு இருக்கிறது. உடல் வீட்டுக்கு வராமலே மயானத்துக்குச் செல்கிறது.

மேற்கூறியவை இங்கே நிறைய முதியோரின் நிலையும் அச்சமும்தான். உள்ளத்தால் உடலால் துவண்டுபோய்விடுகிறோம். பொழுது விடிவதைப் போல நம் அச்சங்களுக்கும் கவலைகளுக்கும் விடிவு வரும். சூரியன் அஸ்தமிக்கும்போது நாளை விடியுமா என்று நாம் நினைப்பதுகூட இல்லை. இந்த இரவில் வேறு ஓர் இடத்தில் இந்த உலகில் பகல்தான். அது நம்மை நோக்கி நகரும் என்பதுதான் இயற்கையின் உறுதியான நியதி.

குடும்பத்தோடு வசிக்கும் முதியவர்களுக்கே பிறரைச் சார்ந்து இருப்பது, அதுவும் உடல் ரீதியாக உதவி தேவைப்படுவது சகிக்க முடியாத கஷ்டம்தான். உருண்டு விழும் பேனாவையோ, பறந்துபோகும் பேப்பரையோ உடனே எழுந்து எடுக்க நமது முட்டிகளும், முதுகும் முரண்டு பிடிக்கின்றன. திரும்பத் திரும்ப யாரையாவது உதவிக்குக் கூப்பிட்டால் சலித்துக்கொள்வார்களோ என்கிற தயக்கம். ‘லாக்டவுனில்’ தினசரி வாழ்க்கை... அதுவும் தனியாக வசிக்கும் முதியோருக்குப் போராட்டம்தான். மனமும் உடலும் தளர்ந்து போகின்றன. கொடுத்துப் பழகிய கைகள் ஏந்தும் கைகளாகிவிட்டனவே என்கிற ஆதங்கம்.

இது போராட்டமல்ல... சவால்தான் என்று எடுத்துக்கொண்டால் மனத்தளர்வை வெற்றிகொள்ள முயல வேண்டும். கட்டாயம் ஓரளவாவது வெற்றிகொள்ள முடியும். மன உறுதி உடல் தளர்வைக் குறைக்கும். மீசைக்கார கவிஞனின் பாடல்தான் நினைவுக்கு வருகிறது. ‘‘என்னைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்... வல்லமை தாராயோ! இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே...!’’ அம்மா தாயே, சிவசக்தி, என் வேண்டுதல் அத்தனை பெரியதல்ல... சொல்லப் போனால், கொஞ்சம் சுயநலமானதுதான். ‘‘வல்லமை தாராயோ என் தேவைகளை நானே கவனித்துக்கொள்ளும்படி’’ என்றுதான் வேண்டுகிறேன்.

கீதாச்சாரியன் சொன்ன மாதிரி, நேற்றும் இன்றும் நாளையும் நடப்பதெல்லாம் அவன் கையில்தான். உண்மை!

தாயாகிய உனக்குக் குழந்தைக்கு என்ன தேவை, எப்போது கொடுக்க வேண்டுமென்று தெரியும்தான். ஆனால், பசிக்கும்போதோ, விழுந்து அடிபடும்போதோ, தாயிடம்தானே கேட்கவும் நச்சரிக்கவும் முடியும்?

தாயே! மன உரத்தையும் உடல் நலத்தையும் தா... துவளும்போது தூக்கிப் பிடி... பாரத்தைத் தலையில் ஏற்றும்போது உன் கை தலைக்கும் பாரத்துக்கும் நடுவில் இருக்கட்டும்... உன் அருள் சுடர் எல்லா இருளையும் விலக்கட்டும்!

நா.முத்துக்குமாரின் கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது.

‘பேச்சற்ற பெருநிலையும்

மூச்சற்ற முதுநிலையும்

பரிசாகத் தாராயோ தாட்சாயணி!’

எனக்காகவும் என் போன்ற சூழ்நிலையில் இருப்பவர்களுக்காகவும் இதை வேண்டுகிறேன்.

சந்திப்போம்... சிந்திப்போம்..!

கட்டுரையாளர்: கல்யாணி நித்யானந்தன்,
இதயநோய் நிபுணர் (பணி நிறைவு),

டாக்டர் கல்யாணி நித்யானந்தன், 1969-ல் தமிழகத்தின் முதல் கரோனரி சிறப்பு சிகிச்சைப் பிரிவு சென்னையில் அமையக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர்.

தொடர்புக்கு: joenitya@yahoo.com

ஓவியம்: வெங்கி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE