கடைசியில் அமெரிக்காவின் தேர்தலில் மிகப் பெரிய குறுக்கீடு, ரஷ்யாவிடமிருந்தோ, சீனா அல்லது ஈரானிடமிருந்தோ வரவில்லை. அமெரிக்க அதிபரிடமிருந்தேதான் வந்திருக்கிறது.
நான் இதை எழுதிக்கொண்டிருக்கும் தருணத்தில், வெள்ளை மாளிகையைக் கைப்பற்றும் அளவுக்கு உறுதியான நிலையில் ஜோ பிடன் இருக்கிறார்; செனட்டில் குடியரசுக் கட்சியினரின் பெரும்பான்மை தொடரும் எனும் சூழல் நிலவுகிறது. எனினும், இந்தத் தேர்தலில் வென்றது யார் என நமக்கு இப்போது உறுதியாகத் தெரியாது.
அடாவடித்தனம்
ஆனால், அதிபர் ட்ரம்ப் தான் வெற்றி பெற்றுவிட்டதாக புதன்கிழமை காலையிலேயே அறிவித்ததுடன், சட்டரீதியாக உதவுமாறு வாக்காளர்களிடமே உதவி கேட்டிருக்கிறார். இதன் மூலம் மக்களிடம் அவர் பொய் சொல்லியிருக்கிறார் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது. அவரது இந்த அடாவடித்தனம் அமெரிக்காவின் தேர்தல் அமைப்பையும், அமைதியான முறையில் ஆட்சி மாற்றம் எனும் கருத்தாக்கத்தையும் மலினப்படுத்துகிறது.
» மீட்புக்கான கலைத்திட்டம்: ஊரடங்குக்குப் பிறகான கல்வித் தேவை!
» சில தருணங்களும் சில நிகழ்வுகளும் 10: தீபாவளியைச் சிறப்பாக்கும் ‘சுளுந்து’
உச்ச நீதிமன்றம் என்னதான் அரசியல்மயமாகி இருந்தாலும் இப்படியான ஒரு மோசடிக்கு உதவி செய்யும் என்று கருதிவிட முடியாது. ட்ரம்ப் தோல்வியடைந்த பின்னரும் அதிபர் அலுவலகத்தில் அவர் தொடர்ந்து இருக்க முடியும் என்று நான் நம்பவில்லை. ஓவல் அலுவலகத்தில் இருந்துகொண்டு தன்னைத் தற்காத்துக்கொள்ள அவர் முயற்சி செய்தால், ஜனவரி 20-ல் அவர் பாதுகாப்பாக வெளியேற்றப்படுவார்.
தேசபக்தரா ட்ரம்ப்?
அதேசமயம், ரஷ்யர்கள் வழக்கமாகச் செய்ய முயலும் ஒரு காரியத்தை ட்ரம்ப் ஏற்கெனவே செய்துவிட்டார். அமெரிக்கத் தேர்தல் மீதான சந்தேகத்தைக் கிளப்புவதும் அமெரிக்காவின் ஸ்திரத்தன்மையைக் குலைப்பதும்தான் அது. 2016 அதிபர் தேர்தலின்போது, தேர்தலில் ஹேக்கிங் (ஊடுருவல்) செய்யும் ரஷ்யர்கள், குழப்பத்தையும் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தி புதிய அரசின் சட்டபூர்வத் தன்மையைச் சேதப்படுத்தியதன் மூலம் அமெரிக்கா மீது தகவல் போரை நிகழ்த்தியதாக 2018-ல் எஃப்.பி.ஐ குற்றம்சாட்டியது. கிட்டத்தட்ட அதே வேலையைத்தான் ட்ரம்ப் செய்துகொண்டிருக்கிறார். அமெரிக்கக் கொடியை அணைத்து முத்தமிடுவதன் மூலம் தன்னை ஒரு சிறந்த தேசபக்தராக அவர் காட்டிக்கொள்ளலாம். ஆனால், அவரது இந்தச் செயல் அமெரிக்காவுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும்.
இந்த விஷச் சூழலைக் கடந்து ஜோ பிடன் வென்றாலும், முறைகேடான தேர்தல் என்று பலரும் குறிப்பிடப்போகும் இந்தத் தேர்தலுக்குப் பின்னர், மிக மோசமாகப் பிளவுற்றிருக்கும் ஒரு தேசத்தைத்தான் அவர் கைக்கொள்ளப்போகிறார். ஆட்சி நிர்வாகம் அவருக்குக் கடினமானதாக இருக்கப்போகிறது என்பது மட்டுமல்ல, உலகம் முழுவதும் செல்வாக்கைச் செலுத்துவது அமெரிக்காவுக்கும் கடினமான விஷயமாகவே இருக்கும். ஒருபுறம் ரஷ்ய ஹேக்கர்கள் அமெரிக்க அரசு மீது நாசவேலை நிகழ்த்தியிருக்கிறார்கள் என்றால், வெள்ளை மாளிகையில் இருந்துகொண்டு அப்படியான ஒரு வேலையை அதிபரே செய்வது இன்னும் துயரமானது.
தான் வெற்றி பெற்றுவிட்டதாக ட்ரம்ப் அறிவித்ததைப் போலவோ, தேர்தலில் நீதிமன்றம் குறுக்கிட வேண்டும் என்று அழைப்பு விடுத்தது போலவோ துணை அதிபர் மைக் பென்ஸ் ஏதும் பேசிவிடவில்லை. குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் பலரும் அமைதி காக்கவே செய்கிறார்கள்.
தேர்தல் அமைப்பின் குளறுபடிகள்
அமெரிக்கத் தேர்தல் அமைப்பின் நேர்மைத்தன்மை மீதும், அமைதியான ஆட்சி மாற்றத்தின் மீதும் ட்ரம்ப் நிகழ்த்தியிருக்கும் சமீபத்திய தாக்குதல், கடந்த சில ஆண்டுகளில் அவர் சொல்லிவந்த பொய்கள், தேர்தல் அமைப்பை இழிவுபடுத்தும் அவரது முயற்சிகள் ஆகியற்றின் தொடர்ச்சிதான். அமெரிக்காவின் தேர்தல் முறை நிச்சயம் ஜனநாயக விரோத அம்சங்களைக் கொண்டிருக்கிறது என்பது உண்மைதான் என்றாலும், ட்ரம்ப் பேசுவது அவற்றைப் பற்றி அல்ல.
நேரடியாக வாக்காளர்கள் செலுத்தும் கோடிக்கணக்கான வாக்குகள் மூலம், ஜோ பிடன் எளிதாக வெற்றி பெற்றுவிட முடியும். எனினும், தேர்தல் முடிவுகள் இப்படி சந்தேகத்துக்கிடமாக இருப்பதற்குக் காரணம் வாக்காளர் குழு (எலெக்டோரல் காலேஜ்)தான். 2000 முதல் 2016 வரை, மூன்றில் இரண்டு முறை குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் மக்களின் நேரடி வாக்குகளைப் பெறுவதில் தோல்வியடைந்திருந்தாலும் அதிபர் பதவியை அடைய முடிந்தது. செனட்டிலும் இதுபோன்ற பிரச்சினைகள் உண்டு. செனட் சபையில் குடியரசுக் கட்சி உறுப்பினர்களை ஒப்பிட, 1.4 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களின் பிரதிநிதிகளாக ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஆனால், குறைந்த மக்கள்தொகை கொண்ட மாநிலங்கள் வெளியிலிருந்து தரும் அழுத்தத்தின் காரணமாக செனட் சபையில் ஜனநாயகக் கட்சியினர் சிறுபான்மையினராக இருக்கின்றனர்.
வாக்காளர்கள் மத்தியிலும் பாரபட்சம்
“அமெரிக்கா ஒரு ஜனநாயக நாடு அல்ல. குடியரசு நாடு” (உண்மையில் இரண்டும்தான்!) என்று யூட்டா மாநிலத்தைச் சேர்ந்த குடியரசுக் கட்சி செனட் உறுப்பினர் மைக் லீ பகிரங்கமாகவே கூறினார். செனட் உறுப்பினர்களை நேரடித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க வழிவகுத்த 17-வது சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றுகூட மைக் லீயும், டெக்சாஸைச் சேர்ந்த குடியரசுக் கட்சி செனட்டர் டெட் க்ரூஸும் பரிந்துரைத்தார்கள். செனட்டர்கள் மீண்டும் மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டால், குடியரசுக் கட்சியினர் மேலும் சில இடங்களைப் பெறுவார்கள்.
இன்னும் சொல்லப்போனால், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பெரும்பாலானோர் வாக்காளர்களிடம் அச்சத்தை விதைப்பதாகவே தெரிகிறது. வெற்றிக்கான சிறந்த வழி அதுதான் என்றே அக்கட்சி நம்புகிறது. அமெரிக்காவில் இன்றைக்குத் தேர்தல் வரி இல்லை; கறுப்பின வாக்காளர்களின் வாக்குரிமையைப் பறிக்கும் ‘தாத்தா காலத்து உட்பிரிவுகள்’ இல்லை. ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் நடைமுறையில் இருந்த அந்தத் தடைகளைக் குடியரசுக் கட்சி அதிகாரிகள் தற்போது நவீனமயமாக்கியிருக்கிறார்கள்.
வாக்களிக்கும் முறையில் நிறத்தின் அடிப்படையிலான தடைகளை அவர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். கறுப்பினத்தவர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களில் 74 சதவீதம் பேர், வெள்ளையினத்தவர்கள் அதிகம் நிறைந்த பகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களைவிட, 30 நிமிடத்துக்கும் அதிகமாக வரிசையில் காத்திருந்து வாக்களிக்க வேண்டியிருக்கிறது என ‘சயின்டிஃபிக் அமெரிக்கன்’ இதழில் கடந்த ஆண்டு வெளியான ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
ட்ரம்ப்பே கடந்த மார்ச் மாதம், அதிகமானோர் வாக்களிக்க வேண்டும் என்று ஊக்குவிக்கும் முயற்சிகளை எதிர்ப்பதாகக் கூறினார். “அதிகமானோர் வாக்களிக்க வேண்டும் என்பதை நீங்கள் ஒப்புக்கொண்டால், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஒருவரை மீண்டும் இந்த நாட்டில் (அதிபராக) தேர்ந்தெடுக்கவே முடியாது” என்று அதற்குக் காரணம் சொன்னார்.
அதிக வாக்குகளும் ஒரு கேள்வியும்
கடந்த 120 ஆண்டுகளில் இந்தத் தேர்தலில்தான் அதிகமான வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அமெரிக்க வரலாற்றில் ஜோ பிடனும் ட்ரம்ப்பும் நம்பர் 1 மற்றும் நம்பர் 2 வெற்றியாளர்களாகக் கருதப்படலாம். முந்தைய தேர்தலைவிட லட்சக்கணக்கான வாக்குகளை அதிகம் பெற்றிருக்கிறார் ட்ரம்ப்.
வாக்குக் கணிப்பைப் பொறுத்தவரை, வெள்ளையின ஆண்களில் 58 சதவீதம் பேரின் வாக்குகளுடன், கறுப்பின ஆண்களில் 18 சதவீதம் பேரின் வாக்குகளையும், லத்தினோ ஆண்களில் 36 சதவீதத்தினரின் வாக்குகளையும் ட்ரம்ப் வென்றிருக்கிறார்.
இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியினருக்கு நல்ல வாய்ப்பு. தேர்ந்தெடுக்கத் தகுதியான வேட்பாளர்களாகவே அக்கட்சியினர் பார்க்கப்பட்டார்கள். ட்ரம்ப்பிடமிருந்து புதிது புதிதாக வந்த சீற்றங்கள், அவர் தொடர்பாக வெளியான ஊழல், முறைகேடு புகார்கள், அவரது குடும்ப உறுப்பினர்களும் முன்னாள் உதவியாளர்களும் அவர் குறித்து முன்வைத்த விமர்சனங்கள்… எல்லாவற்றுக்கும் மேலாக 2.30 லட்சம் அமெரிக்கர்களைக் கொன்று, நாட்டின் பொருளாதாரத்தை நாசப்படுத்திய, பெருந்தொற்றைக் கையாள்வதில் ஏற்பட்ட தோல்வி எனப் பல அம்சங்களும் இருந்தன.
அத்தனையையும் வாக்காளர்கள் பார்த்திருக்கிறார்கள். ஆனாலும், அவர்கள் இவற்றைப் பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளவில்லை. கரோனா வைரஸ் அதிகமாகப் பரவியிருக்கும் 10 மாநிலங்களில் 9-ல் ட்ரம்ப் வென்றிருப்பதாக சுகாதாரப் பேரழிவுகள் மேலாண்மை நிபுணரான டாக்டர் இர்வின் ரெட்லெனர் கூறியிருக்கிறார்.
ரஷ்யாவின் வேலைகளைச் செய்து, இந்தத் தேர்தலை மலினப்படுத்தும் ட்ரம்ப்பின் முயற்சிகளைக் கண்டு விரக்தியடைந்திருக்கும் அதேவேளையில், இன்னொரு கேள்வியுடனும் நான் போராடிக்கொண்டிருக்கிறேன். கோடிக்கணக்கான மக்கள் கடந்த நான்கு ஆண்டுகாலமாக ட்ரம்ப்பைக் கவனித்து வந்திருக்கிறார்கள்.
கோவிட்-19 பெருந்தொற்றைக் கையாள்வதில் அவர் செய்த குளறுபடிகளால் பெரும் வலியை அனுபவித்த பின்னரும், அவர் சொன்ன அடுக்கடுக்கான பொய்களைக் கேட்ட பின்னரும், அமெரிக்க நிறுவனங்கள் மீதான அவரது தாக்குதல்களையும் கவனித்த பின்னரும் - எப்படித்தான் முந்தையத் தேர்தலைவிடவும் அவருக்கு அதிகமாக வாக்களித்திருக்கிறார்கள் என்பதுதான் அந்தக் கேள்வி.
நன்றி: தி நியூயார்க் டைம்ஸ்
தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago