வீட்டின் அமைப்புக்கு ஏற்ப வாழ்க்கையா அல்லது வாழ்முறைக்கேற்ப அமைக்கப்பட்ட வீடா? இந்தக் கேள்வி ஒரு பழைய வழக்குச் சொல்லை நினைவூட்டும். ‘நெய்க்குத் தொன்னை ஆதாரமா அல்லது தொன்னைக்கு நெய் ஆதாரமா?’. பதில் ஒன்றுதான். ஒன்று இல்லாமல் மற்றது இல்லை என்பதே அடிப்படை உண்மை. பெரியப்பாவின் வீட்டை விவரிக்கும்போது அந்தக் காலத்து வாழ்க்கை முறையையும் அறிய முடியும்.
பெரியப்பாவின் வீட்டின் வெளித் திண்ணைகளைத் தாண்டியதும் பெரிய நிலைக் கதவு. அதைக் கடந்ததுமே ரேழி. அதில் இடப்பக்கம் ஒருவர் படுக்கும் அளவு ஒரு திண்ணை. வலப்புறம் ஒரு சிறிய அறை, ‘குதிர் உள்’. மேல் தளத்திலிருந்து தரை வரை ஒரு வட்டமான குதிர். அதாவது, நெல் சேமிக்கும் கலம். இந்தக் குதிரின் வாய்ப்பகுதி மொட்டை மாடியில். அந்த ‘வாய்’ ஒரு மரப்பலகை மற்றும் இரும்புத் தகடால் மூடப்பட்டு இருக்கும். மாடியில் நெல் காய வைக்கப்படும். மாலையில் நெல் காய்ந்ததும் இந்த மூடிகள் திறக்கப்பட்டு நெல் குதிரின் உள்ளே தள்ளப்படும். இந்த வேலையைச் சிறியவர்களான நாங்கள்தான் செய்வோம். இரண்டு பாதங்களாலும் ‘குஷி’யாகத் தள்ளுவோம். தேவைப்படும்போது குதிரின் கீழ் பக்கம் அறையில் உள்ள ஒரு சொருகு மூடியைத் திறந்து நெல்லை எடுத்து உமி நீக்க மில்லுக்கு அனுப்புவார்கள்.
ரேழிக்கு அப்பால், மூன்று பக்கங்களில் தாழ்வாரங்களால் சூழப்பட்ட நடு முற்றம். அதன் மேற்புறம் இரும்புக் கம்பிகளால் கூரை. கதிரவனும் வருணனும்தான் வர முடியும். முற்றத்தின் ஒரு மூலையில் பித்தளை அண்டாவில் நீர். பக்கத்தில் ஒரு சொம்பு. வெளியில் இருந்து வீட்டிற்குள் வருமுன் செருப்பை வெளியில் விட வேண்டும். (அன்று பலர் செருப்பே அணிவதில்லை என்பது வேறு விஷயம்!). வீட்டிற்குள் வந்தவுடன் முற்றத்தில் கை, கால் கழுவ வேண்டும். (கரோனாவுக்குப் பயந்து அல்ல!) மாலை நேரமானால் முகத்தையும் கழுவிக்கொண்டு, அடுத்து ஒரு தூணின் உச்சியில் தொங்கும் விபூதி மடலிலிருந்து விபூதி எடுத்து நெற்றிக்கு இட்டுக்கொள்ள வேண்டும்.
மற்றொரு மூலையில் ஒரு மல்லிக்கொடி. இடதுபுறத் தாழ்வாரத்தை ஒட்டி கூடம். முற்றத்தின் மூலைகளிலும் தாழ்வாரமும் கூடமும் சேரும் இடத்திலும் ‘வழுவழு’ என்று மரத்தூண்கள். மேலே பித்தளைப் பூண் கட்டியிருக்கும். நாங்கள் கையால் தூணைப் பிடித்துக்கொண்டு சுற்றிச் சுற்றி வருவோம். ‘நாலு மூலை தாச்சி’ விளையாடுவோம்.
» சில தருணங்களும் சில நிகழ்வுகளும்: 5 - புழக்கடையில் புலி!- இரண்டாம் உலகப்போர் அனுபவங்கள்
» சில தருணங்களும் சில நிகழ்வுகளும்: 4- அன்பைப் பரிமாறக் கிடைத்த வாய்ப்பு
கூடத்தின் மேலே வரிசையாக மர உத்திரங்கள். ‘மெட்ராஸ் டெரஸ்’ எனப்படும். எதிர் சுவரில் வரிசையாகச் சட்டமிட்ட படங்கள் கறுப்பு வெள்ளையில். முன்னோர்கள் கம்பீரமாய், ஆனால் ‘உம்’ என்ற முகத்துடன். சில படங்கள் ‘ப்ரெளன்’ நிறத்தில் இருக்கும். அவற்றை 'Sepia Print' என்று கூறுவார்கள். படங்களின் கீழே நடுவில் பூஜை அலமாரி. மையத்தில் பெரிய முருகன் படம். சுற்றும் மற்ற தெய்வங்கள். முழு நீள குத்துவிளக்கு, குப்பியில் எண்ணெய், தீப்பெட்டி, பஞ்சபாத்ரம், உத்திரிணி ஒரு தட்டு.
கூடத்தில் ஒரு பக்கம் அகலமான ஊஞ்சல். பலகையின் நான்கு மூலைகளிலும் சங்கிலி மாட்டுவதற்காகப் பித்தளை கொண்டிகள். இதில் நாங்கள் வீசி, வீசி ஆட முடியாது. பெரியவர்களோடுதான் உட்காருவோம். நாங்கள் விளையாட கொட்டடிக்குத் தோட்டத்து மரத்தில் சிறிய பலகை ஊஞ்சல் தாம்புக் கயிறால் கட்டப்பட்டு இருக்கும். கூடத்தின் உத்திரத்திலிருந்து கீழே கொக்கியுடன் கூடிய கம்பிகள் தொங்கும். மண்ணெண்ணய் விளக்குகள் மாட்ட. சில நேரம் ஒரு ‘பெட்ரோமாக்ஸ்’ விளக்கு தொங்கும். ‘பெட்ரோமாக்ஸ்’ விளக்கில் ஒளி விடும் ‘மாண்டில்’ வெறும் எரிந்த சாம்பல்தான். தொட்டால் பொடிந்து விடும் என்று நான் கேள்விப்பட்டபோது ஆச்சரியமும் அதேசமயம் அவநம்பிக்கையும் அடைந்தேன். ஒருமுறை அதை சோதித்துப் பார்த்து, அது பொடிந்து நல்ல திட்டு வாங்கிக் கொண்டேன்.
கூடத்தின் இடதுபுறம் ஒரு அறை. நீளவாக்கில் அழிக்கம்பிகள் போடப்பட்டிருக்கும் பலகணி. அதன் வழியாக வெளித் திண்ணையும் தெருவும் தெரியும். அறையின் ஒரு புறம் ஒரு கருங்காலிக் கட்டில். அதன் மீது மடித்து வைக்கப்பட்ட ஜமக்காளங்கள், போர்வைகள், அடுக்கப்பட்ட தலையணைகள்.
கூடத்தின் வலப்புறம் ‘உக்ராண உள்’ எனப்படும் சாமான் அறை. பெரிய மர ‘ஷெல்ஃப்’களில் பித்தளை சம்புடங்கள், துத்தநாக ‘ட்ரம்’கள். மண் தட்டால் மூடி செம்மண்ணால் ‘வேடு’ கட்டப்பட்ட பெரிய பானைகள். அரிசி மூட்டை, வருஷாந்தர’ சாமான்கள். உளுந்து, துவரை இத்யாதி...
முன் வாசலுக்கு நேரே முற்றத்தைக் கடந்து பின் ரேழி. அதில் விறகு, சுளகு, முறம், உரல் இயந்திரம் எல்லாம் ஒருபுறம் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும்.
அந்தப் பக்கத்து தாழ்வாரத்தின் இடது கோடியில் ஆட்டுக்கல், முக்காலி. அதன் அருகில் மூன்று அடி உயர இரும்புக் குழாய் தரையில் பதிக்கப்பட்டு இருக்கும். அதில் சுற்றி சுருக்கிடப்பட்டு கயிறு. எதற்குத் தெரியுமா? அதன் முன் கலயச் சட்டியில் தயிர் வைத்து, உள்ளே மத்தை நட்டு, மேலே ஒன்றும் கீழே ஒன்றுமாய் இரண்டு கயிறு வளையங்கள் மாட்டப்படும். இந்த இரண்டின் நடுவில் கயிறு இரண்டு, மூன்று முறை சுற்றப்படும். அந்தக் கயிற்றின் இரு நுனிகளையும் கைகளில் பிடித்து முன்னும் பின்னுமாய் இழுத்தால் மத்து இருபுறமும் மாறி மாறி சுழலும். இதுதான் தயிர் கடைதல். சிறிது நேரத்தில் வெண்ணை திரண்டு மேலே மிதக்கும். அதை வாகாக எடுத்து, பக்கத்தில் உள்ள அடுக்கில் உள்ள ஜலத்தில் மிதக்க விடுவார்கள். நாங்கள் கை நீட்டினால் ஆளுக்கு ஒரு உருண்டை தரப்படும்.
பின் ரேழியைக் கடந்தால் பெரிய சமையலறை. ‘அடுக்களை’, ‘அடிசில்’ என்பது சமைக்கப்பட்ட உணவைக் குறிக்கும் அழகான தமிழ்ச் சொற்கள். ‘அடப்பண்ணி வைத்தல்’ என் சொல் சமைப்பதைக் குறிக்கும். ஒரு புறம் சுவரில் ஒரு பலகணி. அதன் கீழே ஒரு இரட்டை அடுப்பு மற்றும் ஒரு ஒற்றை அடுப்பு. விறகைச் சொருக இரண்டு, அல்லது ஒரு வழி. இந்த ஒற்றை அடுப்பில் ஒரு கொடி அடுப்பு இருக்கும். அதாவது ஒரு ‘n'-ம் ஒரு 'O'-ம் சேர்ந்த மாதிரி. விறகு எரியும் ஜ்வாலை ஒரு வளைவு வழியாக அந்தக் ‘கொடி’ அடுப்பை அடையும். இது நமது ‘காஸ்’ அடுப்பில் உள்ள சின்ன பர்னர் மாதிரி. நிதானமாக வேக வேண்டிய பொருட்கள் கொடி அடுப்பில் வைக்கப்படும். அநேகமாக காலை நேரங்களில் இதில் ஒரு குண்டானில் பருப்பு வெந்து கொண்டு இருக்கும், அடிபிடிக்காமல்.
அடுப்புகளின் அருகில் ஒரு ஊதுகுழல், ஒரு விசிறி. ஒரு மூலையில் ஒரு தொட்டி முற்றம். அதன் அருகில் தண்ணீரால் நிரப்பப்பட்ட குடங்கள், ஜோடுதவலை, ஒரு சொம்பு எல்லாம் பளபளவென்று தேய்க்கப்பட்டவை.
இடப்புறம் கருங்கல் மேடை. அதில் நாலைந்து பித்தளை டப்பாக்கள். ஒரு எண்ணெய்த் தூக்கு. அடுத்து இரண்டு மரவைகள். இவை வட்டமான மரக்கலன்கள். அதன் ஒரு ஓரத்தில் சாண் நீள மரக்கம்பு பதிக்கப்பட்டிருக்கும். மரமூடி அதில் சொருகப்பட்டிருக்கும். தள்ளினால் மூடவும், திறக்கவும் முடியும். ஒன்றில் புளியும், ஒன்றில் கல் உப்பும் இருக்கும்.
நீண்ட சதுர வடிவில் சொருகு மூடியுடன் மர ‘அஞ்சறைப் பெட்டி’. பெயர்தான் ‘அஞ்சறை’யே தவிர அதில் 6 - 8 அறைகள். இவற்றில் தாளிக்கும் பொருட்கள். அருகில் வாயகன்ற சிறிய கண்ணாடி குப்பி. அதனுள் கட்டிப் பெருங்காயம் நீரில் கரைந்து கொண்டிருக்கும். குழம்போ, ரசமோ கொதித்து இறக்குமுன், இதன் மூடியைத் திறந்து, ஆள்காட்டி விரலால், ஒரு சுழற்று சுழற்றி, அந்த தண்ணீரை ஊற்றுவார்கள். அப்போதெல்லாம் பெருங்காயம் கட்டியாக, மஞ்சள் நிற தகர டப்பாவில் விற்கப்படும். பெருங்காயம் காலியானாலும், அதன் மணம் அதில் நிற்கும். இதனால்தானோ என்னவோ வாழ்ந்து கெட்டவரை ‘பெருங்காயம் வைத்த டப்பா’ என்று கூறுவார்கள். அதேபோல ‘லொடலொட’ காரையும் ‘பெருங்காய டப்பா’ என்று கேலி செய்வார்கள். சுவரில் ஒரு ஆப்பைக் கூடு. அதில் தட்டுகள், கரண்டிகள், மர ஆப்பைகள் இருக்கும்.
சந்திப்போம்... சிந்திப்போம்..!
கட்டுரையாளர்: கல்யாணி நித்யானந்தன்,
இதயநோய் நிபுணர் (பணி நிறைவு),
டாக்டர் கல்யாணி நித்யானந்தன், 1969-ல் தமிழகத்தின் முதல் கரோனரி சிறப்பு சிகிச்சைப் பிரிவு சென்னையில் அமையக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர்.
தொடர்புக்கு:joenitya@yahoo.com
ஓவியம்: வெங்கி
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
3 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago