சில தருணங்களும் சில நிகழ்வுகளும் 5: புழக்கடையில் புலி!- இரண்டாம் உலகப்போர் அனுபவங்கள்

By செய்திப்பிரிவு

இரண்டாம் உலகப்போர் நடந்கொண்டிருந்த காலம் அது. எதற்கும் தட்டுப்பாடு, கட்டுப்பாடு. ஒருவருக்கு ஆறு அவுன்ஸ் (170 கிராம்) ரேஷன் அரிசி, ரொட்டி, துணிகள், மண்ணெண்ணெய் என எல்லாம் குறிப்பிட்ட அளவுதான். வாரா வாரம் வாங்க வேண்டும். நீண்ட வரிசையில் நிற்க வேண்டும். உலோகத் தட்டுப்பாட்டால் குண்டூசிக்குக் கூடத் தட்டுப்பாடு. அதற்குப் பதில் கருவேல முள்ளைப் பயன்படுத்தினார்கள்.

ஜப்பானியப் படைகள் ரங்கூனையும் பர்மாவையும் அடைந்துவிட்டன (இன்றைய யாங்கூன், மியான்மர்). புழக்கடைக்கு வந்துவிட்டது புலி. இங்கும் புலி வரும் என்று சொன்னார்கள். அந்தப் பயத்தில் இருட்டடிப்பு, ஜன்னலில் கருப்புத் திரைகள், தெருவிளக்குகள் அணைக்கப்பட்டு இருண்ட இரவுகள், குண்டு வீசப்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான ஒத்திகைகள், தெருவுக்குத் தெரு வைக்கோல் போர் வடிவில் சிமெண்ட் பதுங்குமிடங்கள், அவற்றில் சில பூமிக்கடியில். ரோந்துக்காகக் காவலர்கள், ‘ஏர் ரெய்ட்’ வார்டன்கள். பெரும்பாலும் தன்னார்வலர்கள்தான். வீடுகளில் எங்கே பதுங்குவது என்று பரிந்துரைத்தார்கள். மணல் மூட்டைகள், தண்ணீர் பக்கெட்டுகள் தயார்படுத்தப்பட்டன.

வாரத்தில் மூன்று முறையாவது அபாயச் சங்கு மேலும் கீழுமாய் ஒலிக்கும். ஒத்திகைதான். பிறகு சீராக ஒலிக்கும். ‘ஆல் கிளியர்’ வரை பதுங்கியிருப்போம். நான் அப்போது முதல் வகுப்பு மாணவி. பள்ளிக்குப் போகும்போது ஒரு சிறு துணிப்பை என் மேல் சட்டையில் குத்தப்பட்டு இருக்கும். அதன் மேல் என் பெயரும், வகுப்பு விவரமும் கலர் நூலால் தைக்கப்பட்டு இருக்கும் (அம்மாவின் கைத்திறன்). உள்ளே கொஞ்சம் பஞ்சும், ஒரு துண்டு ரப்பரும். ஏன் தெரியுமா? குண்டு வெடிக்கும் சப்தத்தில் காது செவிடாகாமல் இருக்க பஞ்சை காதில் அடைத்துக்கொண்டு, ரப்பரைப் பல்லில் கடித்துக்கொள்ள வேண்டும்.

எங்கள் வகுப்பாசிரியை தங்கம் மைக்கேல், அபாயச் சங்கு ஒலித்தவுடன் முண்டியடித்துக்கொண்டு ஓடாமல், நிதான வேகத்துடன், எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பதுங்குமிடத்துக்குப் போவது பற்றி ஒத்திகை அளித்திருந்தார். அங்கே போய் அமர்ந்ததும், எங்களைப் பாட வைத்தும், கதை சொல்லியும் நேரம் போவது தெரியாமல் மகிழ்விப்பார், தங்கம் டீச்சர்.

நான் மருத்துவக் கல்லூரியில் கடைசி வருட மாணவியாக இருந்தபோது ஒருநாள் வார்டில் நடந்துசென்றுகொண்டிருந்தேன். அப்போது ‘கல்யாணி...’ என்று கூப்பிடும் குரல் கேட்டுத் திரும்பினால், வயதான பெண் நோயாளி. கிட்டப் போனபோதுதான் கூப்பிட்டது தங்கம் மைக்கேல் டீச்சர் என்று தெரிந்தது! என்னைக் கட்டிப் பிடிக்காத குறையாய், கண்ணீர் மல்க ‘நீ டாக்டரா... அடி கண்ணே...’ என்றார். நெஞ்சு நெகிழ்ந்த தருணம் அது.

சில நேரம் அபாயச் சங்கு மதிய உணவு இடைவேளை நெருங்கும்போது ஒலிக்கும். அப்போது சாப்பாட்டுப் பையுடன் போய் அங்கேயே சாப்பிடுவோம். மண் பானையில் கொதிக்க வைத்து ஆறிய நீரும், குவளையும் இருக்கும். அப்போதெல்லாம் பள்ளியில் தினந்தோறும் 2 - 3 பெரிய தாமிர ‘பாய்லர்’களில் தண்ணீர் கொதிக்கும். அது வகுப்பறையில் உள்ள மண் பானைகளில் நிரப்பப்படும். குடிதண்ணீர் குப்பிகளை வீட்டிலிருந்து கொண்டு போவதில்லை.

இப்படியிருக்கும்போது ஒரு பின்னிரவில் அபாயச் சங்கு. கூடவே விமானங்கள் பறக்கும் சப்தம். மண்ணிலிருந்து விண்ணில் சுடும் பீரங்கிகளின் ஓசை. ஆம்... புலி புழக்கடையிலிருந்து நிஜமாகவே வந்துவிட்டது! ஜப்பானிய விமானங்கள் சென்னை துறைமுகத்தைத் தாக்கின. அங்கு சேமித்து வைக்கப்பட்டு இருந்த எரிபொருள் பற்றி எரிந்தது. குண்டுவெடித்த துண்டுகள் பொது மருத்துவமனைவரை சிதறின. இரண்டு நாட்களுக்குப் பிறகு என் மூத்த சகோதரி, மருத்துவக் கல்லூரி மாணவியான அவள், ஒரு சின்னத் துண்டு, மரத்தில் பதிந்திருந்ததைக் கொண்டு வந்து வீட்டில் காண்பித்தாள்.

நாங்கள் விடியும்வரை சாமான் அறையில் பதுங்கி இருந்தோம். நான் பயந்ததாகவோ, அழுததாகவோ நினைவில்லை.

பொழுது விடிந்தது. வீட்டுப் பெரியவர்களும் அண்டை அயலாரும் கூடிக் கூடி பேசினார்கள். வீட்டில் வானொலிப் பெட்டி இல்லாத காலம் அது. சொல்லப்போனால் எங்கள் வீட்டில் அப்போது மின்சார இணைப்புகூட இல்லை. செய்திகளை அறிய ‘தி இந்து’ பத்திரிகை மட்டும்தான். திரையரங்குகளில் திரைப்படம் தொடங்கும் முன் ‘நியூஸ் ரீல்’ போடுவார்கள். அதில் உலகப் போர்க் காட்சிகள் காண்பிக்கப்படும். அன்றெல்லாம் ‘சோப்பு, சீப்பு, பிஸ்கெட்’ விளம்பரங்கள் எல்லாம் கிடையாது.

இரண்டொரு நாளில், மிக முக்கியமான பணிகளில் இருப்பவர்கள் தவிர மற்றவர்கள் எல்லாம் சென்னையிலிருந்து ‘புலம் பெயர்ந்து’ மற்ற ஊர்களுக்குச் செல்லுமாறு அறிவித்தார்கள். மதுரை அருகில் என் பெரியப்பா வசிக்கும் கிராமத்துக்குச் செல்ல முடிவு செய்யப்பட்டது. நாங்கள் வரும் செய்தியை அவருக்கு அறிவிக்க, திருவல்லிக்கேணி தபால் நிலையத்தில் இருந்து அந்த ஊர் தபால் நிலையத்துக்குத் தொலைபேசியில் ‘வக்கீல்’ வீட்டுக்குச் செய்தி சொல்லுமாறு கேட்டுக் கொண்டோம்.

‘குட்டிக்கும் நாய்க்கும் குடிபோகக் கொண்டாட்டம்’ என்ற பழமொழிக்குத் தக்க எனக்கு ஒரே குஷி. பெரியப்பாவுக்குப் பத்துப் பெண்கள். அதில் ஒன்பதாவதும், பத்தாவதும் என் வயது கொண்டவர்கள். நானும் என் குடும்பத்தில் ஒன்பதாவது கடைக்குட்டி.

மதுரைக்குப் புகைவண்டியில் புறப்பட்டோம். ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் நீங்கள் பார்த்தது போன்ற பெட்டிகள். நீராவி வண்டி. பலகணி வழியே புகையும், கரி துணுக்குகளும் வரும். மதுரையிலிருந்து ஊருக்குப் பேருந்து பயணம். வாகன எரிபொருள் கட்டுப்பாடு, தட்டுப்பாடு. இந்தப் பேருந்து ‘கரி வாயு’வினால் ஓடும். ஆமாம்... சாதாரண கட்டைக்கரி, அடுப்புக்கரிதான். வாகனத்தின் பின்னால் பெரிய ‘டிரம்’ ஒன்று இருக்கும். அதன் அடியில் இந்தக் கரியடுப்பு பற்ற வைக்கப்படும். அடுப்பங்கரை ஊதுகுழலுக்குப் பதில் இதில் ஒரு பிடி வைத்து கையால் சுற்றினால் காற்றை ஊதும். ‘ட்ரொய்ங்... ட்ரொய்ங்...’ என்று கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் சுழற்றிய பிறகுதான் பேருந்து ஓடத் தயாராகும்.

ஊர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து இரட்டை மாட்டுக் கூண்டு வண்டியில் ‘ஜல்... ஜல்...’ என்று மாட்டுக் கழுத்து மணிகள் ஒலிக்க பயணம். பின்னால் கம்பியைப் பிடித்துக்கொண்டு காலை தொங்கப்போட்டுக்கொண்டு நான் சவாரி செய்தேன்.

பெரியாறு பாசன வாய்க்காலை ஒட்டிய சாலை. ஒரு அரச மரமும் பிள்ளையாரும் இருக்கும் இடத்தில் வலது புறம் திரும்பினால் அக்ரகாரம். அதன் பாதி வழியில் இடப்புறம் பெரியப்பாவின் வீடு. தெரு வீடுதான். இரண்டு படிகள் ஏறியதும் வலதுபுறம் சின்ன திண்ணை. ‘மாப்பிள்ளைத் திண்டு’ என்று அழைக்கப்பட்ட சாய்மானத்துடன் இடதுபுறம் பெரிய திண்ணையில் என் பாட்டி கால் நீட்டி அமர்ந்திருந்தார். சரோஜியும் ராஜமும் ஓடி வந்து என் கைகளைப் பிடித்துக்கொண்டார்கள்.

பிறகு என்ன? தட்டுப்பாடுகளும், ‘பிரேசில்’ அரிசி என்னும் கோந்து மாதிரி சாதமும், சோள அடையும், இருட்டடிப்பும், அபாயச் சங்கும், தூரத்துப் பழைய கனவுகள் ஆயின. ஒரு மாதம் கழிந்தது. என் சகோதர, சகோதரிகள் கல்லூரிக்கும், அப்பா பணிக்கும் திரும்ப வேண்டி வந்தது. சென்னையில் பள்ளிகள் திறக்கப்படவில்லை. அதனால், என்னை ஊரிலேயே விட்டுவிடத் தீர்மானிக்கப்பட்டது. மூன்று மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டபோது என் ‘படிப்பு’ (ஒண்ணாங் கிளாஸ்) ஊரிலேயே தொடரட்டும் என்று விட்டுவிட்டார்கள்.

அந்த வீடும், முற்றமும், மல்லிகைப் பந்தலும், பவளமல்லிச் செடியும், அடுக்களையும், கூடமும், தோட்டத்துக் கிணறும், மாட்டுக் கொட்டகையில் பசுங் கன்றும்... எப்பேர்ப்பட்ட அனுபவங்கள்! இளவயதில் மனதில் பதிந்தவை. ‘போர்ப் புலி’யின் நல்ல பக்க விளைவுகள். இன்றும் அந்த சில மாதங்கள் ‘ஆக்ஷன் ரீப்ளே’ மாதிரி என் மனதில் ஓடுகின்றன. நாவின் சுவைக்கு இனிப்பு தற்காலிகமானது. ஆனால், இவையோ நினைத்தாலே இனிக்கும் நிலையான நினைவுகள்!

- சந்திப்போம்... சிந்திப்போம்..!

கட்டுரையாளர்: கல்யாணி நித்யானந்தன்,
இதயநோய் நிபுணர் (பணி நிறைவு),

டாக்டர் கல்யாணி நித்யானந்தன், 1969-ல் தமிழகத்தின் முதல் கரோனரி சிறப்பு சிகிச்சைப் பிரிவு சென்னையில் அமையக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர்.

தொடர்புக்கு:joenitya@yahoo.com
ஓவியம்: வெங்கி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

8 days ago

கருத்துப் பேழை

8 days ago

கருத்துப் பேழை

8 days ago

கருத்துப் பேழை

9 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

22 days ago

கருத்துப் பேழை

22 days ago

கருத்துப் பேழை

22 days ago

மேலும்