மத்திய அரசால் கொண்டுவரப்பட்டு செப்டம்பர் 20, 2020 அன்று நிறைவேறியுள்ள மூன்று வேளாண் சட்டங்களான ‘வேளாண் உற்பத்தி ஊக்குவிப்புச் சட்டம்’, ‘வேளாண் சேவைகள் திருத்தச் சட்டம்’ மற்றும் ‘அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம்’ சர்ச்சைகளை உருவாக்கியுள்ளன. இந்த மசோதாக்களால் விவசாயிகளின் எதிர்காலம் முற்றிலும் பாதிக்கப்படும் என்றும், பல காலமாக நடைமுறையிலுள்ள பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை மூலமாகக் கொள்முதல் செய்யப்படுவது நின்றுவிடும் என்றும், மாநில அரசுகளுக்கு விவசாயச் சந்தையிலிருந்து கிடைக்கும் வரி வருவாய் குறையும் என்றும் எதிர்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. உண்மையில், இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிரானவையா அல்லது நன்மை தரக்கூடியவையா என்பதைத் தெரிந்துகொள்வோம்.
ஏன் இந்த மசோதாக்கள்?
வேளாண் விளைபொருட்கள் வா்த்தக மசோதா வேளாண் சந்தையில் பெரிய சீர்திருத்தங்களைக் கொண்டுவரும். உணவு தானிய உற்பத்தியில் 292 மில்லியன் டன்களையும், தோட்டப் பயிர்களின் உற்பத்தியில் 311 மில்லியன் டன்களையும் கடந்து இன்று உலகின் மிகப் பெரிய வேளாண் துறையாக இந்தியா உருவெடுத்துள்ளபோதும், விவசாயிகளின் இன்றைய (2015-16) சராசரி மாத வருமானம் வெறும் ரூ.8,931 மட்டுமே; பெரும்பாலான சிறு, குறு விவசாயக் குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்வதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
விவசாயிகளின் வருமானக் குறைவுக்கு வேளாண் சந்தையில் வியாபாரிகளாலும் தரகா்களாலும் நடத்தப்படும் தில்லுமுல்லு ஒரு முக்கியக் காரணம். ஏபிஎம்சி என்று சொல்லக்கூடிய ஒழுங்குமுறை வேளாண் சந்தையில் உரிமம் உள்ள வியாபாரிகள் மட்டுமே பொருட்களை வாங்க முடியும் என்ற நடைமுறை தற்போது உள்ளது. இதனால், வியாபாரிகள் தங்களுக்குள்ளாகவே கூட்டு சோ்ந்து கார்டெல் போன்ற அமைப்பை ஏற்படுத்தி, மலிவான பல காரணங்களைக் கூறி குறைந்த விலையை நிர்ணயித்து விவசாயிகளின் லாபத்தைச் சுரண்டுவதும், வேளாண் பொருட்களை அங்கு விற்பதற்கு சுங்கக்கட்டணம் மற்றும் வரி விகிதங்கள் அதிகமாக வசூலிக்கப்படுவதும் நடக்கிறது. இவற்றுக்குப் பதிலாக, விவசாயிகள் வேளாண் பொருட்களை எங்கு, யாரிடம் விற்க வேண்டும் என்பதைத் தாங்களே முடிவுசெய்துகொள்ளும் வகையிலேயே இன்றைய சீர்திருத்தம் அமைந்துள்ளது.
அடுத்து, நிறைவேறியுள்ள வேளாண் உற்பத்தி ஊக்குவிப்பு மசோதாவானது விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும். இந்தியாவில் மொத்தமுள்ள விவசாயிகளில் 80% மேற்பட்டோர் சிறு, குறு விவசாயிகள். இவர்கள் மூலதனப் பிரச்சினையில் மட்டுமல்லாமல், பயிர்ச் சாகுபடியில் புதிய விதை மற்றும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதிலும் பல சிரமங்களைச் சந்தித்துவருகிறார்கள். சிறு விவசாயிகள் என்பதால் இவா்களின் பேரம் வணிகர்களிடம் எடுபடாமல் நெடுங்காலமாகச் சுரண்டப்படுகிறார்கள். இதற்கான தீர்வாக ஒப்பந்தப் பயிர்ச் சாகுபடி முறையைக் கொண்டுவர இந்த மசோதா வழிவகுக்கிறது. இதன் மூலமாக, விருப்பப்படும் விவசாயிகள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து பயிர்களுக்குக் கிடைக்கக்கூடிய விலையைப் பயிர்ச் சாகுபடியின் ஆரம்பக் கட்டத்திலேயே உறுதிசெய்துகொள்ள முடியும். இதனால், சந்தையில் திடீரென ஏற்படும் விலைக் குறைவு ஆபத்திலிருந்து தப்பிக்க முடியும். ஒப்பந்த முறையில் கரும்புப் பயிர் நெடுங்காலமாகத் தமிழகம் மற்றும் பல மாநிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுவருவதை இங்கே சுட்டிக்காட்டலாம்.
அடுத்து, நிறைவேறியுள்ள அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா விவசாயிகளின் வருமானத்தை உயா்த்த உதவக்கூடும். வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்வதில் உள்ள தடைகளையும், சேமிப்புக் கிடங்குகள் மற்றும் குளிர்பதனக் கிட்டங்கிகளை ஏற்படுத்த தனியார் முதலீடுகளை ஈா்ப்பதற்கும் இது உதவும். நம் நாட்டின் தோட்டப் பயிர்களின் மொத்த உற்பத்தியான 311 மில்லியன் டன்களில் வெறும் 15% பொருட்களை மட்டுமே குளிரூட்டப்பட்ட கிட்டங்கிகளில் சேமிக்க வசதிகள் உள்ளன. தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள சட்டத் திருத்தத்தால் வேளாண் பொருட்களைச் சேமித்து விலை அதிகரிக்கும் காலங்களில் விற்று வருமானத்தை அதிகரிக்க முடியும். கிட்டங்கி வசதிகளை ஏற்படுத்துவதில் தனியார் துறை முதலீடுகளை இது ஈர்க்க உதவும்.
தேவையற்ற அச்சங்கள்
இந்த மசோதாக்கள் தொடர்பான அச்சங்கள் தேவையற்றவை. எந்த ஒரு அரசும் குறைந்தபட்ச ஆதார விலைத் திட்டத்தை நீக்கத் துணியாது; அப்படி நீக்கினால் அதன் விளைவு மிகவும் மோசமாக இருக்கும் என்பது எல்லோருக்குமே தெரியும். இந்தச் சட்டச் சீர்திருத்தங்களால் தமிழ்நாடு போன்ற பல மாநிலங்கள் வருவாயை இழக்க நேரிடும் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை; ஏனெனில், பெருவாரியான மாநிலங்களில் மண்டிக் கட்டணம் வெறும் 1-2% மட்டுமே. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எங்கு வேண்டுமானாலும் விற்றுக்கொள்ளலாம் என்ற முழுச் சுதந்திரத்தை இந்த மசோதாக்கள் கொடுத்துள்ளன. பல காலமாக வணிகர்கள், இடைத்தரகா்களின் பிடியில் சிக்கித் தவித்த விவசாயிகளுக்கு தற்போது நல்ல காலம் பிறந்திருக்கிறது!
- அ.நாராயணமூா்த்தி, முன்னாள் உறுப்பினா், விவசாயச் செலவு மற்றும் விலை ஆணையம், இந்திய அரசு, புதுடெல்லி.
தொடர்புக்கு: narayana64@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago