அமெரிக்கப் பன்மைத்தன்மையின் வெற்றி!

By ஆசை

இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் வெளிநாடுகளில் சாதனைகளை நிகழ்த்தும்போதோ, உயர்ந்த அந்தஸ்துக்கு அவர்கள் வரும்போதோ இயல்பாகவே பெருமிதம் அடைகிறோம். இந்திரா நூயி, சுந்தர் பிச்சை போன்றோரை எடுத்துக்காட்டலாம். அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக இந்திய-ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை அறிவித்த பிறகு தமிழகத்திலும் இந்தியாவிலும் உலகெங்கும் அதிகம் உச்சரிக்கப்படும் பெயர்களுள் ஒன்றாக கமலா ஹாரிஸ் ஆகிப்போனது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ஓக்லாந்து நகரில் 1964-ல் அக்டோபர் 20 அன்று பிறந்த கமலா ஹாரிஸின் தாய்வழி பூர்வீகம் சென்னை என்றுதான் பெரும்பாலான உலகப் பத்திரிகைகள் எழுதிவருகின்றன. இன்னும் பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்து மன்னார்குடிக்கு அருகில் உள்ள பைங்காநாடு கிராமம்தான் அவரது பூர்வீகம் என்று ‘இந்து தமிழ்’ நாளிதழில் செய்தி வெளியானது. இந்த நுணுக்கம் மிகவும் அவசியமானது. ஏனென்றால், சென்னை-அமெரிக்கா என்பதைவிட பைங்காநாடு-அமெரிக்கா என்பதன் நுட்பங்களும் நீளமும் அதிகம்.

அரசியல் வாழ்க்கைக்கான வித்து

கமலா ஹாரிஸின் தாய்வழி தாத்தா பி.வி.கோபாலன் வெளியுறவுத் துறை அதிகாரியாக இருந்தவர். அவரின் பெண் ஷியாமளா மேற்படிப்புக்காக 19 வயதில் அமெரிக்கா சென்றார். அவரை அந்நாடு வரவேற்கவில்லை. இந்தியாவில் ஷியாமளா மேல்வகுப்பினராகப் பார்க்கப்பட்டாலும் நிறவெறி அமெரிக்காவைப் பொறுத்தவரை அவர் ஒரு கறுப்பினத்தவரே! அந்தச் சூழல் ஷியாமளாவைப் புலம்பெயர்ந்தவர்கள், கறுப்பினத்தோருக்கான செயல்பாட்டாளராக மாற்றியது.

கறுப்பின உரிமைச் செயல்பாட்டாளரும் ஜமைக்காவைச் சேர்ந்தவருமான டொனால்டு ஹாரிஸை அவர் மணந்துகொண்டார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள்: கமலா தேவி ஹாரிஸ், மாயா லட்சுமி ஹாரிஸ். குடியுரிமைப் போராட்டங்கள், அணிவகுப்புகள் போன்றவற்றின்போது ஷியாமளாவும் டொனால்டு ஹாரிஸும் தங்கள் குழந்தைகளைக் குழந்தைகளுக்கான தள்ளுவண்டியில் வைத்துத் தள்ளியபடி கலந்துகொண்டார்கள் என்று கமலா பின்னாளில் நினைவுகூர்கிறார். அவரது அரசியல் வாழ்க்கைக்கான வித்து அவர் தவழும் காலத்திலேயே இடப்பட்டிருக்கிறது. கமலாவுக்கு 7 வயது இருக்கும்போது பெற்றோர் இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர்.

கமலா ஹாரிஸின் குழந்தைப் பருவம் கலப்பினச் சூழலில் கழிந்தது. இந்திய, ஆப்பிரிக்க, அமெரிக்கக் கலாச்சாரம் மூன்றையும் பின்பற்றியே ஷியாமளா தன் குழந்தைகளை வளர்த்தார். வெள்ளையினக் குழந்தைகளும் கறுப்பினக் குழந்தைகளும் கலந்து வளரும், படிக்கும் சூழல் உருவாக வேண்டுமென்ற முன்னெடுப்புகள் நிகழ்ந்த 60-களின் பிற்பகுதி அது. மேற்கு பெர்க்லியிலிருந்து வடக்கு பெர்க்லியில் உள்ள பள்ளிக்கு கமலா ஹாரிஸ் அனுப்பப்பட்டார். நிறப் பாகுபாடு களைவதற்கான நடவடிக்கைகள் எடுப்பதற்கு முன்பு 95% வெள்ளையினக் குழந்தைகள் மட்டுமே படித்துவந்த பள்ளி அது. கமலா ஹாரிஸின் இந்தப் பின்புலம் தற்போதைய வரலாற்றுக்கு மிகவும் முக்கியமானது.

பன்மைத்துவப் பாதை

பள்ளிப்படிப்பை முடித்ததும் ஹோவர்டு பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலும் பொருளாதாரமும் படித்தார். அதை அடுத்து 1989-ல் ஹேஸ்டிங் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தார். 1990-1998 வரை ஓக்லாந்தில் மாவட்ட இணை அட்டர்னியாகப் பணியாற்றினார். தனது பணிக் காலத்தில் பாலியல் வன்முறை, கும்பல் வன்முறை, போதைமருந்து கடத்தல் போன்ற குற்றங்களின் மீது மிகவும் கடுமை காட்டினார். அவர் சான் ஃப்ரான்ஸிஸ்கோவின் அட்டர்னி ஜெனரலாக இருந்தபோது போதை மருந்து குற்றங்களில் ஈடுபட்ட இளைஞர்கள், சிறுவர்கள் போன்றோர் சிறைத்தண்டனையை அனுபவிப்பதற்குப் பதிலாக அவர்கள் படிப்பைத் தொடரவோ, நல்ல வேலையில் சேரவோ வழிவகுத்தார். 2004-ல் மாவட்ட அட்டர்னி ஆனார். 2010-ல் கலிஃபோர்னியா மாகாணத்தின் அட்டர்னி ஜெனரலாகப் போட்டியிட்டு வென்றார். அப்படி அந்தப் பதவிக்கு வந்த முதல் ஆப்பிரிக்க-அமெரிக்கர், முதல் இந்திய-அமெரிக்கர் அவர்தான்.

1990-களின் மத்தியில் அரசியலர் வில்லி பிரௌனுடன் கமலா ஹாரிஸ் உறவில் இருந்தார். ஆனால், அது திருமணத்தில் முடியவில்லை. 2014-ல் யூதரான டக்ளஸ் எம்ஹாஃபும் கமலா ஹாரிஸும் மணந்துகொண்டனர். ஏற்கெனவே, தாயின் இந்து மதம், தந்தையின் கறுப்பின பாப்டிஸ்ட் கிறித்தவம் என்ற பன்மைத்தன்மை பின்னணியில் இருந்த கமலாவுக்கு டக்ளஸ் மூலம் யூத மதமும் வந்துசேர்ந்துகொண்டது. கமலாவே தான் இந்து கோயிலுக்கும் கறுப்பின பாப்டிஸ்ட் திருச்சபைக்கும் செல்வதாகச் சொல்லிக்கொள்பவர். கமலா ஹாரிஸின் அரசியல் வாழ்க்கையில் முக்கியமான திருப்புமுனை 2015-ல் வந்தது. ஜனநாயகக் கட்சியின் பார்பரா பாக்ஸர் அரசியலிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்ததும் அவர் இடத்தில் அடுத்தது தான் நிற்கப்போவதாக கமலா ஹாரிஸ் அறிவித்தார். 2016-ல் நடந்த தேர்தலில் அவர் வெற்றிபெற்று செனட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2017-ல் பொறுப்பேற்றார். அட்டர்னி ஜெனரலாக அவர் பெற்ற அனுபவம் நாடாளுமன்றத்தில் அவருக்கு மிகவும் உதவியது. எதிர்த் தரப்பை அவர் துருவித் துருவிக் கேள்விகள் கேட்டார். இது எல்லாமே கமலா ஹாரிஸை அடுத்த நிலையை நோக்கித் தள்ளியது.

ஜனநாயகக் கட்சியின் சார்பில் அடுத்த அதிபர் தேர்தலில் தான் போட்டியிடப்போவதாக கமலா ஹாரிஸ் 2019-ல் அறிவித்தார். ஆரம்பத்தில் அவருக்கு ஓரளவு செல்வாக்கு இருந்தது. தற்போது கமலா ஹாரிஸைத் துணை அதிபர் வேட்பாளராக யார் அறிவித்தாரோ அதே ஜோ பிடனைக் கடந்த ஆண்டு கமலா ஹாரிஸ் எதிர்த்துக் களம் கண்டார். ஒரு நேருக்கு நேர் நிகழ்ச்சியில் ஜோ பிடனின் இனவாத நிலைப்பாடுகளை வைத்து அவரைக் கேள்விகேட்டது பலராலும் திரும்பிப் பார்க்கப்பட்டது. எனினும், 2019-ன் இறுதியில் கமலா ஹாரிஸின் செல்வாக்கு குறையவே அதிபர் வேட்பாளர் போட்டியிலிருந்து அவர் விலகிக்கொண்டார்.

பல முதன்மைகள்

ஆனால், 2020 அவருக்கு வேறு பல செய்திகளை வைத்திருந்தது. கரோனா பெருந்தொற்றை ட்ரம்ப் எதிர்கொள்ளும் விதத்தை கமலா ஹாரிஸ் கடுமையாக விமர்சித்தார். கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃப்ளாய்ட் காவல் துறையினரால் கொல்லப்பட்டது கமலா ஹாரிஸுக்குக் கூடுதல் விசையை அளித்தது. சற்றே இனவாதக் கருத்துகள் கொண்ட ஜோ பிடன் கறுப்பினத்தோர், புலம்பெயர்ந்தோர்களைத் தனது வாக்கு வட்டத்துக்குள் ஈர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஜோ பிடனின் அரசியல் கணக்குகளுக்கு கமலா ஹாரிஸ் பொருந்திவந்தார். அமெரிக்கச் சரித்திரத்தில் ஒரு பெருங்கட்சியின் முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க, முதல் இந்திய-அமெரிக்கத் துணை அதிபர் வேட்பாளர் என்று பல முதல்களுக்கு கமலா ஹாரிஸ் சொந்தமாகியிருக்கிறார். இந்த இணை வெற்றிபெற்றால் இன்னும் பல முதன்மைகளுக்கு கமலா ஹாரிஸ் சொந்தக்காரர் ஆவார்.

கமலா ஹாரிஸின் துணை அதிபர் தேர்வு என்பது அமெரிக்கா தன் உயிர்நாடியாகக் கொண்டுள்ள பன்மைத்தன்மையின் பிரதிபலிப்பு. கமலா ஹாரிஸ் துணை அதிபர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து பூரித்துப்போயிருக்கும் இந்தியர்கள் பலரும் சோனியா காந்தி குறித்து என்ன கருத்து கொண்டிருந்தனர் என்றும், அவர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு இருந்தபோது எத்தகைய எதிர்வினைகளை ஆற்றினார்கள் என்பதையும் யோசித்துப்பார்க்க வேண்டும். கமலா ஹாரிஸை ‘வந்தேறி’ அடையாளம் சூட்டி விலக்கிவைக்காமல் தனது இனவெறி வரலாற்றின் பாவக் கறையைக் கழுவக் கிடைத்த மற்றொரு வாய்ப்பாக (முதல் வாய்ப்பு ஒபாமா) அமெரிக்கா கருதுகிறது. உலகின் மூத்த ஜனநாயகம் இவ்வாறாக உலகுக்கே வழிகாட்டுகிறது. ஜனநாயக வேட்பாளரான ஜோ பிடனுக்குத் தற்போது 77 வயது ஆகிறது. ஆகவே, அடுத்த அதிபராகும் வாய்ப்புகூட கமலா ஹாரிஸுக்கு இருக்கிறது. அப்படி நடக்கும்போது அது அமெரிக்காவின் பன்மைத்தன்மைக்குக் கிடைத்த வெற்றியாக இருக்கும்.

- ஆசை. தொடர்புக்கு: asaithambi.d@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

6 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

16 days ago

கருத்துப் பேழை

16 days ago

கருத்துப் பேழை

16 days ago

கருத்துப் பேழை

19 days ago

கருத்துப் பேழை

19 days ago

கருத்துப் பேழை

19 days ago

கருத்துப் பேழை

26 days ago

கருத்துப் பேழை

26 days ago

கருத்துப் பேழை

26 days ago

மேலும்