எங்கே போனது காங்கிரஸின் சமரசக் கலை?

By செய்திப்பிரிவு

ராஜஸ்தானில் அசோக் கெலாட்டுக்கும் சச்சின் பைலட்டுக்கும் இடையிலான மோதல் பலரிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த மோதல் எல்லாத் தரப்புகளுக்கும் தோல்வியையே தந்திருக்கிறது. முரண்பாடான, பன்மையான கருத்துகள், சுயங்கள், ஆளுமைகள், லட்சியங்கள் ஆகியவற்றுக்கு இடையே இணக்கம் ஏற்படுத்தும் கலையில் காங்கிரஸ் மிகவும் தேர்ந்த கட்சி என்பதால், தற்போதைய மோதல் ஏற்படுத்திய கவலை மிகவும் வெளிப்படையாகத் தெரிகிறது. சுதந்திரத்துக்கும் முன்பே கட்சிக்குள் பல்வேறு தரப்பினரையும் எப்படி உள்ளடக்குவது என்பதிலும், உட்கட்சிப் பூசல்களை எப்படித் தீர்ப்பது என்பதிலும் காங்கிரஸ் முன்னுதாரணங்களை ஏற்படுத்தியிருந்தது.

கொஞ்சம் வரலாறு. 1929-ல், நிறைய உள்விவாதங்களுக்குப் பிறகு லாகூரில் நடைபெற்ற கட்சி அமர்வில் ‘பூரண சுயராஜ்ஜியம்’ கோருவது என்று காங்கிரஸ் முடிவெடுத்தது. கட்சிக்குப் புதுத் தலைவரும் தேவைப்பட்டது. கட்சியின் மூத்த தலைவர்களின் எதிர்ப்புகளையும் ஐயங்களையும் மீறி இளம் ஜவாஹர்லால் நேருவைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தார் காந்தி. “ஜவாஹர்லால் ஒழுங்கை நேசிப்பவர். அவர் தீவிரவாதப் போக்குடையவர்தான்; தன்னைச் சுற்றி உள்ளவர்களைத் தாண்டி சிந்திப்பவர்தான். ஆனால், எந்த விஷயத்தையும் கைமீறிப் போகும்படி பிடித்துத் தள்ளாத அளவுக்கு அவர் அடக்கமானவரும் நடைமுறையாளரும் ஆவார்” என்று மனிதர்களையும் போக்குகளையும் கூர்மையாக மதிப்பிடக்கூடியவரான காந்தி வாதிட்டார்.

கட்சி தடுமாற்றம் அடையாமல், அதே நேரத்தில் இளம் தலைமுறையினரின் லட்சியங்களுக்கு இடமளிக்கும் வகையில், ஒரு உத்தியை காந்தி முன்வைத்தார். ஜவாஹர்லால் நேரு மிகுந்த ஆற்றல் கொண்டவர் மட்டுமல்லாது, இளைஞர்களுடனும் அறிவுஜீவிகளுடனும் நெருங்கிய தொடர்புகொண்டவர். இதையெல்லாம் பூரண சுதந்திரத்தை நோக்கிய போராட்டத்தில் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய தேவையை காந்தி புரிந்துகொண்டார். சுதந்திரத்துக்குப் பிறகு, காந்தியும் போய்விட்ட பிறகு, பல தரப்புகளையும் உள்ளடக்குவதற்கான நெறிமுறைகளை காங்கிரஸ் மறுபடியும் புரட்டிப்பார்க்க வேண்டியிருந்தது. பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிரான சுதந்திரப் போராட்டம் என்ற லட்சியவாதமானது புது தேசத்தைக் கட்டமைப்பதற்கான சித்தாந்தத்தின் தேவைகளுக்கு வழிவிட வேண்டியிருந்தது.

நேருவும் சர்தார் வல்லபபாய் படேலும் இயல்பிலும் சிந்தனையிலும் வேறுபாடுகள் கொண்டிருந்தாலும் ஒரு விஷயத்தில் மட்டும் மிகவும் தெளிவாக இருந்தார்கள்: பிரிவினைக்குப் பிறகான சூழ்நிலை காங்கிரஸுக்குள் ஒருங்கிணைப்பு, நிலைத்தன்மை, தொடர்ச்சி ஆகியவை இருக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியது. ஆகவேதான், அதுவரை கட்சிக்குள் ஒரு தீவிரப் போக்குடைய பிரிவாகக் கருதப்பட்டுவந்த காங்கிரஸ் சோஷலிஸக் கட்சிக்கு இரண்டு தெரிவுகள் கொடுக்கப்பட்டன: ஒன்று, அது தன்னைக் கலைத்துக்கொள்ள வேண்டும், இல்லையானால் கட்சியை விட்டு வெளியேற வேண்டும்.

முக்கியமான தலைவர்களான ஆச்சார்ய நரேந்திர தேவும் ஜெயப்ரகாஷ் நாராயணும் தங்கள் பழைய சகாக்களை விட்டுப் பிரிவதென்று முடிவெடுத்தார்கள். அடுத்த சில ஆண்டுகளில், ஆச்சார்ய கிருபளானி, என்.ஜி.ரங்கா போன்றோர் புதிய தேசத்தின் உருவாக்கத்தின் திசை, கொள்கைகள் ஆகியவை குறித்த கருத்து வேறுபாடுகள் காரணமாகக் கட்சியை விட்டுப் பிரிந்து சென்றனர் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய ரஃபி அஹ்மத் கித்வாய், அஜித் பிரசாத் ஜெயின் போன்றோரும் பிறரும் பிரிந்து சென்றனர். (பிற்பாடு திரும்பி வரவும் செய்தனர்).

நேருவிய ஆண்டுகளில் பிராந்தியத் தலைமைகளுக்கு இடையில் ஆக்கபூர்வமான ஒத்திசைவு ஏற்பட்டது. நீக்குப்போக்காக நடந்துகொள்வதற்கும் முரண்படுவோரையும் மாற்றுக் கருத்துகள் கொண்டோரையும் உள்ளடக்குவதற்கும் நெறிமுறைகள் உருவாக்கப்பட்டன. புதிய ஆற்றல்கள், புதிய குரல்கள் கட்சியின் ஜனநாயகத்தன்மையை அதிகப்படுத்தின. அதே நேரத்தில், ஆதாயங்களை அடைவதற்கான போட்டிகளும் அதிகரித்தன. உட்கட்சிப் பூசலைக் கட்சித் தலைமை நியாயமான முறையில் பேசித் தீர்த்துவைத்தது. கூடுதலாக, தேசத்திலேயே அதிக அளவுக்கு வாக்குகளைத் திரட்டக்கூடியவராக நேரு அறியப்பட்டிருந்தார். இந்த உண்மையும் தலைமையின் அதிகாரத்துக்கும் கட்டுப்பாட்டுக்கும் வலு சேர்த்தது.

உட்கட்சிப் பகைமைகளாலும் தனிப்பட்ட ஆசைகளாலும் ‘விவகாரம் கைமீறிப் போகும்படி’ காங்கிரஸ் தலைவர்கள் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்பதை நேருவிய ஆண்டுகள் வளர்த்தெடுத்த கருத்தொருமிப்பின் கலாச்சாரம் வலியுறுத்தியது. இந்த மந்திரம்தான் 1964, 1966, 1967 ஆகிய மூன்று ஆண்டுகளில் தலைமையில் ஏற்பட்ட மாற்றங்களின்போது காங்கிரஸ் சமாளிப்பதற்கு உதவியது. எதிரிகளான இந்திரா காந்தியும் மொரார்ஜி தேசாயும் அமைச்சரவை சகாக்களானார்கள். ஆனால், காங்கிரஸும் மற்றவர்களைப் போல நடந்துகொள்ள ஆரம்பித்தது. தேசத்தின் அதிகாரத்தில் காங்கிரஸ் கட்சி கொண்டிருந்த வலுவான கட்டுப்பாட்டைத் தகர்க்கும் வகையிலான புதிய சக்திகளைக் கட்டவிழ்த்துவிடும்படி அக்கட்சியின் கொள்கைகளும் அரசியலும் அப்போது இருந்தன. பல தரப்புகளை உள்ளடக்கும் போக்கில் இந்திரா காந்தி ஆண்டுகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டது; பிரதமர் மேலாதிக்கமும் தனிமனித வழிபாடும் சேர்ந்து காங்கிரஸிடம் அமைப்புரீதியாக இருந்த வெளிப்படைத்தன்மையையும் உட்கட்சி நேர்த்தியையும் போக்கிவிட்டதுடன் குடும்ப ஆதிக்கத்தைப் புனிதப்படுத்தின.

1977-ல் காங்கிரஸை முதன்முறையாக ஆட்சி அதிகாரத்திலிருந்து தூக்கியெறிந்த ஜனதா கட்சி மூன்று ஆண்டுகளுக்குள் சீர்குலைந்தது. இதற்குக் காரணம் அவர்களிடம் கலாச்சாரம் இல்லை, அனுபவம் இல்லை, மொரார்ஜி தேசாய், சரண் சிங், ஜகஜீவன் ராம் ஆகியோர் பிரதமராகும் கனவில் இருந்ததால், அதை சமரசம் செய்துவைக்க எந்த வழிமுறையும் இல்லை. மறுபடியும் 1989-ல் ஜனதா தளம் அரசு தள்ளாடியது, ஏனெனில் வி.பி.சிங், தேவி லால், சந்திர சேகர் ஆகியோருக்கிடையே சமரசம் பேச யாருமில்லை. 1996-ல் மறுபடியும் ஐக்கிய முன்னணி அரசு சரிந்துவிழ நேரிட்டது. ஏனெனில், ஆளுமைப் பண்பு குறைந்த மனிதர்களால் பொறுப்புடனும் கட்டுப்பாட்டுடனும் நடந்துகொள்ள முடியவில்லை. காங்கிரஸின் அரவணைக்கும் போக்கை நெருக்கடிநிலைக்குப் பிறகான ஜனதா பரிவாரத்தால் பின்பற்ற முடியவில்லை. அதன் விளைவாக, ஜனதா தளம் பத்துக்கும் மேற்பட்ட குழுக்களாகப் பிரிந்தது; பெரும்பாலும், அவை யாவும் குடும்பக் கட்சிகளாக உருவெடுத்தன.

காங்கிரஸின் அரவணைப்பு வழிமுறையை ஓரளவு பின்பற்றத் தெரிந்த ஒரே கட்சி பாஜகதான். வாஜ்பாய்தான் மக்களின் அபிமானம் பெற்ற தலைவர் என்பதை எல்.கே.அத்வானியால் அங்கீகரிக்க முடிந்தது. வாஜ்பாயும் அத்வானியின் சக்தியையும் மதிப்பையும் உணர்ந்தார். எனினும், பாஜகவும் மாநிலங்களில் நடைபெறும் அதிகாரப் போட்டிகளைச் சமாளிக்கத் திணறிக்கொண்டிருக்கிறது. ஆனாலும், எல்லா அதிகாரக் கட்டுப்பாடுகளையும் அந்தக் கட்சி மத்தியில் கொண்டிருப்பதால், கட்சிக்குள் காணப்படும் குழுவாத வேட்கைகளைக் கட்டுப்படுத்தவும் அரவணைக்கவும் முடிகிறது. இதில் பாஜக எந்த அளவுக்கு வெற்றிகரமாகச் செயல்படுகிறது என்பதை அந்தக் கட்சி அதிகாரத்தில் இல்லாதபோதுதான் பார்க்க முடியும்.

ஒரு தேசியக் கட்சி வலுவான, மக்களிடையே பிரபலமான, செயல்படக்கூடிய, திறமைவாய்ந்த ‘மேலிட’த்தைக் கொண்டிருந்தால், மாநிலப் பிரிவுகளிடையே காணப்படும் மோதல்கள் சமாளிக்கக்கூடிய எல்லைக்குள் இருக்கும். மக்கள் சிந்தனையை அணிதிரட்டல், புதுக் கருத்துகளை அறிமுகப்படுத்தல், சித்தாந்தத்தை வலுப்படுத்தல், பெருமிதத்தையும் விசுவாசத்தையும் வளர்த்தெடுத்தல், கட்சித் தொண்டர்களிடையே ஒற்றுமையை முன்னெடுத்தல் போன்ற அடிப்படையான செயல்திட்டத்தைக் கட்சித் தலைமை செய்யாமல் போனால் அது தன் செயல்திறனை இழந்துவிடும்.

காங்கிரஸுக்குள் உள்ள பிரச்சினைகள் சமாளிக்க முடியாத அளவுக்குப் போய்விட்டதுபோல் தெரிகிறது. ஏனெனில், அதன் தலைமை சட்டபூர்வமான அதிகாரத்தை மட்டுமே செலுத்துகிறது. அதற்குத் தார்மீகரீதியிலான, அரசியல்ரீதியிலான செல்வாக்கு இல்லை. இன்னும் மோசம் எதுவென்றால், அது பாரபட்சமானதாக ஆகிவிட்டது, அர்த்தமற்ற, இலக்கற்ற போரொன்றில் ஈடுபட்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக, கேப்டன் அமரிந்தர் சிங்குக்கு எதிராக தேவையில்லாமல் நவ்ஜோத் சிங் சித்துவை முன்னிறுத்த மேலிடம் முயன்றது. மத்திய பிரதேசத்தில் நிலைமை கட்டுக்குள் மீறும் வகையில் ஜோதிராதித்ய சிந்தியாவை அது தூண்டிவிட்டது. இப்போது பொறுமையற்ற, திமிர்பிடித்த சச்சின் பைலட்டின் முறை.

திறமை, லட்சியம், இளமை போன்றவற்றுக்கு அறைகூவல் விடுப்பது நவீன ஜனநாயக விருப்புறுதிகளை உறுதிப்படுத்துவது என்றாலும் கட்சியானது நிலப்பிரபுத்துவ விசுவாசத்திடம், குடும்ப அரசியலிடம் சிக்கிக்கொண்டிருக்கிறது என்பதுதான் இதில் முக்கியமான முரண். இது போதாதென்று காந்திகளைப் போல ‘இளம் பைலட்’களிடமும் தலைமையை நோக்கி முன்னேறுவதற்கான வீரியமும் உத்வேகமும் இல்லை. செல்வாக்கு மங்கிக்கொண்டிருக்க, தலைமைக்கான பொறுப்புகளிலும் தவறிக்கொண்டிருக்க இன்னொரு குடும்பத்தையே அவர்கள் சார்ந்துகொண்டிருக்கிறார்கள்.

- ஹரிஷ் காரே, டெல்லியைச் சேர்ந்த இதழாளர்.

© தி இந்து, தமிழில்: ஆசை

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்