‘ஊரடங்கு, ஊரடங்குன்னு தொடர்ந்தோம்னா நாசமாப் போய்டுவோம்!’- கட்டிடத் தொழிலாளர்களின் குமுறல்

By கே.கே.மகேஷ்

விவசாயத்துக்கு அடுத்து அதிகமானோருக்கு வேலை அளிப்பது கட்டுமானத் துறை. ஊரடங்கு தளர்வுகள் வழியே கட்டிட வேலைக்கு அனுமதி தந்தது அரசு. ஏனைய துறைகளை ஒப்பிட இவர்கள் நிலை மேம்பட்டதாக இருக்கலாம் என்பது பொதுச் சமூகத்தின் எண்ணம். ஆனால், அப்படிப்பட்ட துறையிலேயே கேட்கும் வேதனைக் குரல்கள் மூச்சுத் திணறடிக்கின்றன.

எம்.எஸ்.பாண்டி, கிரானைட் கற்களை ஒட்டுபவர்.

கழுத கெட்டா குட்டிச்சுவர்ங்கிற மாதிரி, கிராமத்துல விவசாயம் பொய்ச்சுதுன்னா ஒருத்தருக்கு முதல்ல சோறு போடக்கூடிய தொழில் கட்டிடத் தொழில்தான். எந்த வேலையும் தெரியாட்டியும் கல்லை, மண்ணைத் தூக்கிப் போட்டாவது பிழைச்சுக்கலாம். அப்புறமா தொழில் கத்துக்கிட்டு நிமர்ந்தாளு, கொத்தனாரு, சென்ட்ரிங், டைல்ஸ் ஒட்டுறதுன்னு வளர்ந்துடலாம். நான் அப்படி வந்தவன்தான். இன்னிக்கு கிரானைட் ஒட்டிக்கிட்டு இருக்கேன். எத்தனை வருஷ சர்வீஸ் இருந்தாலும் இந்தத் தொழில்ல மாசச் சம்பளம் எல்லாம் வாங்க முடியாது. வாரச் சம்பளம்தான். அதிகபட்ச சம்பளமே ஒரு நாளைக்கு எண்ணூறு ரூவாதான். அதனால, மாசத்துல இருபது நாளைக்காவது வேலைக்குப் போனாத்தான் குடும்பம் நடத்த முடியும். ஒரு நாள் வேலையில்லாம சும்மா இருந்தாலும், புருஷன் பொண்டாட்டி சண்ட வந்திடும். முழுசா மூணு மாசமா வேலையில்லன்னா எங்க நிலைமைய யோசிச்சுப் பாருங்க. மாசம் பதினஞ்சாயிரம், இருபதாயிரம் செலவு செஞ்ச இடத்துல அரசாங்கம் கொடுக்குற ஆயிரம் ரூவா எம்மாத்திரம்? ஒண்ணும் முண்ட முடியலை.

எஸ்.சித்தன், கிரேன், கலவை இயந்திரம் இயக்குபவர்.

புலம்பெயர்ந்து வேலை பார்க்கிறதுல முக்காவாசிப் பேரு கட்டிடத் தொழிலாளர்கள்தான். புலம்பெயர் தொழிலாளர்கள்னு சொன்னா, வெளி மாநிலத்துலேர்ந்து இங்க வந்து வேலை பார்க்குறவங்கன்னு மட்டும் நினைக்காதீங்க. ஊரு விட்டு ஊரு போறவங்களும் புலம்பெயர் தொழிலாளர்கள்தான். காண்ட்ராக்டர் மதுரையில் தொழில் செஞ்சா இவனும் மதுரையில இருப்பான். அவரு திருச்சியில ஒரு வீட்டு வேலையை எடுக்குறார்னா இவனும் திருச்சிக்குப் போயிடுவான். பக்கத்தூர் வேலைன்னா, வாரத்துக்கு ஒருக்க, கொஞ்சம் தூரமா இருந்தா மாசத்துக்கு ஒருக்கதான் வீட்டுக்கே போவான். இப்படி இருக்கிறவன் எப்படி சார் வீட்டுக்குள்ள உட்கார்ந்திருக்க முடியும்? ஊரடங்குக்குப் பின்னாடி வேலையெல்லாமே குறைஞ்சுடுச்சு. அங்க ஒண்ணு, இங்க ஒண்ணுன்னு வர்ற வேலையையும் அரசாங்கம் விதிக்குற கட்டுப்பாடுகள் நாசமாக்கிடுது. ஒரு நாள் மண்டலம்னு சொல்றாங்க, ஒரு நாள் மாவட்டம்னு சொல்றாங்க; எங்கேருந்து சார் எங்களை மாதிரி ஆளுங்க வெளியூர் வேலைக்குப் போறது? எங்களை மாதிரி ஆளுங்களால இ-பாஸ் எல்லாம் எடுக்க முடியுமா?

பொன்.குமார், தொழிற்சங்கச் செயல்பாட்டாளர்.

தமிழ்நாட்டுல மட்டும் எழுபது லட்சம் கட்டிடத் தொழிலாளர்கள் இருக்காங்க. அதாவது, மாநிலத்துல கிட்டத்தட்ட பத்துல ஒருத்தரோட குடும்பம் இந்தத் தொழிலோடு சம்பந்தப்பட்டிருக்கு. இன்னும் இது சார்ந்து இருக்குறவங்களையும் சேர்த்தீங்கன்னா, இது பெரிய எண்ணிக்கை. ஊரடங்கை அரசாங்கம் தயார் ஆக்குறதுக்கான ஒரு நடவடிக்கையா சில வாரங்கள் கொண்டுவந்ததோடு முடிச்சுக்கிட்டிருக்கணும். இப்படி நித்தம் ஒரு முடிவு, தினம் பல கட்டுப்பாடுகள்னு நீட்டிச்சுக்கிட்டேபோனா, இல்லாதபட்ட ஜனம் எப்படி வேலைக்குப் போக முடியும், எப்படி வாழ முடியும்? நிவாரணம்னு அரசாங்கம் தந்தது கட்டிடத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவுசெஞ்சுக்கிட்ட 33 லட்சம் பேருலேயேகூட வெறும் 12.2 லட்சம் பேருக்குத்தான். அதுவும் டெல்லி அரசாங்கம் மாதிரி மாசம் அஞ்சாயிரம் கொடுங்கன்னு கேட்டோம். ஏன்னா, தொழிலாளர்கள் கட்டி சேர்ந்த பணமே வாரியத்துல ரூ.3,200 கோடி இருக்குது. ஆனா, ரெண்டு மாசத்துக்கு மட்டும் வெறும் ஆயிரம் கொடுத்துட்டு கதையை முடிச்சுட்டாங்க. இதெல்லாம் கடுமையான பாதிப்பைக் கீழ உண்டாக்கிட்டிருக்கு. ஆனா, அரசாங்கத்துக்கு அதோட தீவிரம் இன்னும் உறைக்கலை!

பாண்டிச்செல்வம், கொத்தனார்.

பூராம் வெளிமாநிலத் தொழிலாளிங்களை இறக்கி ருசி கண்டுட்டாய்ங்க நம்மூரு மொதலாளிங்க. சல்லீசுக் கூலியில அவய்ங்க மாடா உழைச்சாய்ங்க. நடுவுல சாப்பிடுறதுக்குக்கூட பத்து நிமிஷந்தான். கட்டிடத்திலேயேகூடத் தங்கிக்குவாய்ங்க. இப்பம் அவங்க சொந்த ஊர் போய்ட்டதும் இங்கே உள்ள ஆளுங்களைக் கூப்பிடுறாய்ங்க. நம்மாளுக்கு வேலை இல்லைங்கிறதைப் பயன்படுத்திக்கிட்டு, முன்னாடி அவய்ங்க வாங்குன கொத்தடிமைச் சம்பளத்துக்கே நம்மளையும் கூப்பிடுறாய்ங்க. வேற வேலை இல்லைங்கிறதால இப்படி நம்மாளும் போறான். இது என்னாகுதுன்னா, எல்லார் கூலியையும் பாதிக்குது. அரைக்கூலி, முக்காக்கூலிக்குத்தான் இப்பம் வேலைக்குப் போக வேண்டியிருக்கு; கழுதை, இதாவது கிடைக்குதேன்னு! ஆனா, இது நல்லதில்ல, பாருங்க. வாரத்துல பாதி நாள்கூட வேலை இல்லை, அதுவும் அரைக்கூலி, முக்காக்கூலின்னா எப்படிச் சமாளிக்க முடியும்? அரசாங்கம் முதல்ல பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தணும். ஊரடங்கு, ஊரடங்குன்னு தொடர்ந்தோம்னா, நாசமாப் போய்டுவோம்.

மூக்கையா, செங்கல் சூளைத் தொழிலாளி.

நீங்க கட்டிடத் தொழில்னு சொல்ற இந்தத் தொழில்ல குழி தோண்டுறவங்க, கம்பி வளைக்கிறவங்கனு 42 பிரிவு இருக்கு. அந்தத் தொழிலாளர்கள்லேயே ரொம்ப ரொம்பக் குறைஞ்ச சம்பளத்துக்கு வேலை பாக்குறது நாங்கதான். கொத்தடிமைத்தனத்துலருந்து கொஞ்சம் கொஞ்சமா மீண்டுவந்தவங்க நாங்க; இந்த கரோனா திரும்பவும் அந்தக் கொத்தடிமைத்தனத்துக்கே கொண்டுபோய் சேர்த்திடும்போல இருக்கு. வேலை குறையக் குறைய வேலை தர்றவங்க சொல்றது எல்லாத்தையும்தானே கேட்க வேண்டியிருக்கும்! அப்படியும் ஓட்டம் இல்லை, வருமானம் இல்லை. இப்படியே போனா என்னாகும்னும் தெரியலை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்