கரோனாவுக்குப் பிறகு, ஊரடங்குக் கட்டுப்பாடுகள் படிப்படியாக விலக்கப்பட்டபோதும்கூடப் பல தொழில்கள் முடக்கத்திலேயே உள்ளன. மணமக்களின் பெற்றோர் மட்டுமே கலந்துகொள்ளும் திருமணப் புகைப்படங்களைப் பார்த்து ‘ஆஹா… எவ்வளவு எளிமையான திருமணங்கள்!’ என்று மெச்சுவது சரிதான். ஆனால், பத்துப் பேர் மட்டுமே சமூகம் இல்லை. திருமணம் என்பது எவ்வளவு பெரிய சந்தை, ஒவ்வொரு திருமணத்திலும் அழைப்பிதழ் தொடங்கி மாங்கல்யம் வரை ஒவ்வொன்றின் பின்னணியிலும் எவ்வளவு தொழில்கள் இருக்கின்றன, எத்தனை லட்சம் தொழிலாளர்கள் இருக்கின்றனர், அவர்களுடைய நிலைமையெல்லாம் இன்றைக்கு என்னவென்று தெரிந்தால், இப்படியான எந்த ஒரு விஷயத்தையுமே ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க மாட்டோம். இயல்பான எளிமை வேறு; ஊரடங்குக் கட்டுப்பாடு கொண்டுவந்திருக்கும் முடக்கம் வேறு. ஒரு முடக்கம் எத்தனை குடும்பங்களைப் பாதிக்கிறது என்பதை வீட்டில் முடங்கியிருக்கும் திருமணத் தொழிலாளர்கள் பகிர்ந்துகொள்கின்றனர்.
மணி சுவாமி, புரோகிதர்.
கோயில் அர்ச்சகர்களுக்கு அதிகபட்ச சம்பளமே ரெண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய்தான். அந்த வருமானமோ தட்டுக்காசோ பெரிசா கைகொடுக்காது. திருமணங்களில் புரோகிதம் செஞ்சா கிடைக்கிற தொகைதான் அவங்க வாழ்க்கையோட ஆதாரம். இப்ப கோயில்களையும் மூடி, திருமணங்களையும் சுருக்கச் சொல்லிட்டாங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் கடந்த மூணு மாசங்கள்ல பதினாலு கோயில் கும்பாபிஷேகம், இருபது திருமண புரோகிதம் - கிரகப்பிரவேச கணபதி ஹோமம் ரத்தாகியிருக்கு. ஒண்ணும் சொல்லிக்கிற நெலைமை இல்லை சார். கிருமியைத் தவிர்க்கிற பாதுகாப்பு அணுகுமுறையோட நம்ம பழைய வாழ்க்கைக்குச் சீக்கிரம் திரும்பணும். அப்படியில்லைன்னா பொருளாதாரம் கிருமியைவிட மோசமா நம்மளைச் சிதைச்சுடும்!
மூர்த்தி, மண்டப உரிமையாளர்
வருசத்துக்கே மொத்தம் எழுபது முகூர்த்த நாட்கள்தான். கோடை விடுமுறை, அதிக முகூர்த்தம் எல்லாம் இருக்கிறதால ஏப்ரல், மே, ஜூன் மாசத்துலதான் அதிகமா கல்யாணம், சடங்கெல்லாம் நடக்கும். செய்வினை வெச்ச மாதிரி, சரியா இந்த மாசங்கள் முடங்கிப்போச்சு. ஏப்ரலில் 11, மேயில் 15, ஜூனில் 9… ஆக, இந்த மூணு மாசத்துல, எங்க மண்டபத்துல மட்டும் 35 கல்யாணங்கள் ரத்தாகி இருக்கு. மண்டபம் பூட்டியே கிடந்தாலும் காவலாளிகள், தூய்மைப் பணியாளர்கள், மண்டபப் பராமரிப்பில் இருந்த ஊழியர்களுக்கான சம்பளம்னு மாசம் குறைச்சலா இருபத்தஞ்சாயிரம் ரூபாய் ஆகுது. மின்சாரக் கட்டணம், வரி எல்லாம் தனி. கிராமப் பகுதியில் இருக்கிற இந்த மண்டபத்துக்கே கட்டிட வரி, தொழில் வரியெல்லாம் சேர்த்து வருசத்துக்கு இருபத்தஞ்சாயிரம்னா நகர்ப் பகுதியில இருக்கிற பெரிய மண்டபங்களுக்கு எவ்வளவு வரி வரும்னு கணக்குப் பண்ணிக்கோங்க. கரோனா வந்ததுமே, மண்டப உரிமையாளர்களைக் கூப்பிட்டு அரசாங்க அதிகாரிங்க கூட்டம் போட்டாங்க. அவங்க சொன்னபடி, மருந்து அடிக்கும் ஸ்பிரே, சானிடைசர், டிஷ்யூ பேப்பர் எல்லாம் வாங்கிவெச்சுருக்கோம். மண்டபத்தைத் திறக்க எப்ப அனுமதிக்கப் போறாங்களோ தெரியல. முக்கியமான சீசனை இழந்துட்டோம். அட, எங்களை விடுங்க… ஒவ்வொரு கல்யாணத்தையும் நம்பி எத்தனை தொழிலாளர்கள் இருக்காங்க? கல்யாணத்துல அம்பது பேருக்குத்தான் அனுமதின்னு ஆயிட்டா, பலரு பத்திரிகைகூட அடிக்கிறதில்லை. ரெண்டு மாலையோடு பூ வேலை முடிஞ்சுடுது. மேளவாத்தியம்கூடத் தவிர்த்திடுறாங்க. அப்படின்னா எத்தனை வகை தொழில்கள் பாதிக்கப்பட்டிருக்கும்! மூணு மாசமா யாருக்கும் ஒத்த ரூபா வருமானம் இல்லீங்க!
குமார், சமையலர்.
ஒன்பது வகை கூட்டு, பருப்பு, சாம்பார், புளிசேரி, ரசம், மோர், மூணு வகை பாயாசம், போளின்னு நாஞ்சில் நாட்டுக் கல்யாண விருந்துக்குத் தாழக்குடி சமையல் ரொம்பப் பிரசித்தம். தாழக்குடி கிராமத்துல மட்டும் 700 பேருக்கு மேல சமையல் தொழிலைச் சார்ந்து இருக்கோம். கடந்த மூணு மாசங்கள்ல எனக்கு மட்டுமே முப்பத்தஞ்சுக்கும் அதிகமான ஆர்டர்கள் ரத்தாகிடுச்சு. ஆயிரம் பேருக்குக் குறையாம சமையல் நடக்குற கல்யாணங்கள்ல வெறும் அம்பது பேருக்குத்தான் சாப்பாடுன்னா, எத்தனை பேருக்கு வேலை இருக்கும்? நாற்பது பேர் வேலை பார்த்த இடத்துல, நாலு பேரே அதிகம்னு ஆகிடுச்சி. ஒவ்வொரு கல்யாணத்துக்கும் பந்தி பரிமாறுறவங்க மட்டும் முப்பது பேர் வேலை இழந்திருக்காங்க. மூணு மாசமா வருமானமே இல்லைன்னா அந்தந்த வீடுகள் எப்படி இருக்கும் பாருங்க. பலருக்கு விருந்து பரிமாறுன கை அய்யா… இப்படியே போனா என்னாகும்னு இன்னைக்குப் பசியை நெனைச்சுப் பதறுறாங்க. இதெல்லாம் புரியாதவங்க வீட்டுக்குள்ள உட்கார்ந்துக்கிட்டு ‘ஊரடங்கு போடு!’ன்னு பேசுறாங்க!
ராஜேஷ்குமார், புகைப்படர்.
இந்த மூணு மாசத்துல மட்டும் எங்களுக்கு ஆறு லட்ச ரூபா வருமான இழப்பு. பலருக்கு வேலை இழப்பு. எங்களுக்கே மொத்தம் 35 கல்யாணம் ரத்தாகிருச்சு. ஒரு லட்ச ரூபாய்க்கு அட்வான்ஸ் வாங்கியிருந்த ஒரு கல்யாண வீட்டுக்கு வெறும் பத்தாயிரம் ரூபாய்க்கு போட்டோ எடுத்துக் குடுத்திருக்கேன். அப்படின்னா அதுல எத்தனை பேருக்கு வேலை கொடுக்க முடியும்? இன்னும் பல பேரு வீடுகளுக்குள்ளதானே கல்யாணம்னு செல்போனிலேயே படம் எடுத்துக்கிறாங்க. வெளிப்பார்வைக்கு இது சின்ன விஷயமா தெரியலாம். ஆனா போட்டோகிராபர், வீடியோகிராபர் மட்டுமல்லாம, ஆல்பம் டிசைனிங் செய்றவங்க, வீடியோ எடிட்டிங், ஆல்பத்தை பிரிண்ட் செய்யுற அச்சகம், ஒளிப்பதிவுக் கருவிகளை வாடகைக்கு விடுறவங்கன்னு தமிழ்நாடு முழுக்க ஒன்பது லட்சம் குடும்பங்களோட வேலை, வருமானம் சம்பந்தப்பட்ட விஷயம் சார் இது. விவரம் தெரியாதவங்க, ‘எல்லாம் ஆடம்பரம்’னு போறபோக்குல சொல்லிடுவாங்க. அரசோ, பொதுச் சமூகமோ எங்களை மாதிரியானவங்க பாதிக்கப்பட்டிருக்காங்கன்னு உணர்ந்த மாதிரிகூடத் தெரியலைங்கிறதுதான் பெரிய வருத்தமா இருக்கு!
லைலஸ், மேடை அலங்காரர்.
மேடை அலங்காரத் தொழில்ங்கிறது லட்சக்கணக்கான முதலீட்டுல உபகரணங்கள், அலங்காரப் பொருட்களை உள்ளடக்கினது. நிறைய தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்குறது. திருமணங்கள், அரசியல் கூட்டங்கள், பெரிய நிகழ்ச்சிகள் எதுவும் இல்லைங்கிறதால, மூணு மாசமா சொல்லிக்கிற மாதிரி ஒண்ணுமே இல்லை. தொழிலாளர்களை எப்படிப் பராமரிக்கிறதுன்னும் தெரியலை. இவ்வளவுக்கும் எங்களோடது பெரிய நிறுவனம். அப்படின்னா சின்ன நிறுவனங்களோட நிலைமையைப் பாருங்க!
- என்.சுவாமிநாதன்,
தொடர்புக்கு: swaminathan.n@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago