தற்போது அமெரிக்காவில் எழுந்திருக்கும் போராட்டங்கள் அரசியலை அவதானிக்கும் எவருக்கும் ஒரு முக்கியமான ஆவணம். இந்தப் போராட்டங்கள் எப்படித் தொடங்கி, எப்படிக் கொண்டுசெல்லப்பட்டு, எப்படி முடிகின்றன என்பதை நாம் அனைவரும் தொடர்ந்து கவனிக்க வேண்டும். நவதாராளமயக் காலத்தில் போராட்டங்கள் எப்படி சித்தாந்தமற்றவையாக மாற்றப்பட்டிருக்கின்றன என்பதையும், சிவில் சமூக அமைப்புகள் அவற்றைக் கைக்கொண்டு எப்படி ஒரு முக்கியமான அரசியல் கேவலை நீர்த்துப்போக வைக்கின்றன என்பதையும் நாம் புரிந்துகொள்ள அவசியப்படும் தருணங்கள் இவை.
ஜார்ஜ் ஃப்ளாய்டு மீது அரச நிறுவனமான காவல் துறையின் ஒரு பிரதிநிதி காட்டிய மேலாதிக்க ஒடுக்குமுறை, அவரின் உயிரைப் பறித்திருக்கிறது. இதற்கு எதிராக அமெரிக்காவில் இப்போது நடந்துகொண்டிருக்கும் போராட்டங்களில் சில போக்குகள் உருவாகியிருக்கின்றன. மெல்ல ட்ரம்ப் மீதான கோபமாக இந்தப் போராட்டம் மாறுகிறது. ஆங்காங்கே பல சிவில் சமூக அமைப்புகள் குழுக்களை ஒருங்கிணைத்து ஒவ்வொரு நாளும் புது இலக்குகளுடன் வெவ்வேறு வடிவங்களையும் வகுத்துப் போராட்டங்களை முன்னெடுக்கின்றன. ஒவ்வொரு வடிவத்தின் சுவாரஸ்யத்துக்கேற்ப அது சமூகத் தளத்தை ஆள்கிறது. அவ்வடிவங்களை நாம் செய்ய மறுக்கும் போராட்டங்களின் குற்றவுணர்வில் ரசித்துப் பகிர்கிறோம்.
மக்களின் போராட்டங்களை அரசும் வெவ்வேறு வடிவங்களைக் கொண்டு எதிர்கொள்கிறது. சித்தாந்தப் புரிதல் இல்லாமல் அரசு வடிவங்களை எதிர்கொள்ளும்போது, மக்கள் திணறுகிறார்கள். உதாரணமாக, மியாமியில் நடந்த சம்பவம் ஒன்று. போராட்டக்காரர்கள் அங்கிருக்கும் காவல் நிலையத்தை நோக்கி ஊர்வலம் போகின்றனர். நெருங்குகையில் கோபமாக, ஆக்ரோஷமாகக் கோஷங்கள் போடுகின்றனர். அந்தக் காவல் நிலையத்தில் இருந்த காவலர்கள் வெளியே வந்து, ஒற்றைக் காலை மடித்து மொத்தமாக அமர்ந்து, ‘மன்னித்துவிடுங்கள்’ எனப் போராட்டக்காரர்களிடம் கோருகின்றனர். அவர்களுக்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை. பதிலுக்கு அவர்களும் காவலர்களருகே வந்து முழங்காலிட்டு அமர்ந்து பிரார்த்திக்கின்றனர். கண்ணீர் சிந்துகின்றனர். உங்களுக்கு இந்தியாவில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின்போது,காவல் துறைக்குப் பூக்கள் அளிக்கப்பட்டது ஞாபகம் இருக்கிறதா? ஜல்லிக்கட்டு போராட்டம்?
அரசுக்குச் சித்தாந்த வலுவும், அமைப்புசார் அரசியல் பின்னணியும் அற்ற போராட்டங்களை எதிர்கொள்வது மிக எளிது. வலிக்காமல் அடிப்பதில் வல்லமை பெற்றவை சிவில் சமூக அமைப்புகள். அவை நடத்தும் போராட்டங்கள் சுவாரஸ்யம் கொடுப்பவை. அந்த சுவாரஸ்யங்கள் போராட்டங்களில் பங்குபெறும் தனிநபர்களுக்கு சமூக வலைதளங்களில் சுலபமாக நாயகத்தன்மை கொடுக்கக்கூடியவை. இத்தகு போராட்டங்களை மட்டுமே விரும்பும் மக்களுக்கும் ஓர் இனிப்பான சிறிய வெற்றி கிடைத்துவிட்டால் பெரும் சந்தோஷம். ஆனால், உண்மையில் ஏற்கெனவே இருக்கும் அமைப்பை இருத்திவைப்பதாகத்தான் இந்தப் போராட்டங்கள் ஒவ்வொன்றும் முடித்து வைக்கப்படும்.
அமெரிக்காவின் உள்நாட்டுப் போருக்கு அடிப்படையாக அமைந்ததே நிறவெறிதான். ஆதலால், இது ட்ரம்ப்பாலும் வந்ததில்லை; ட்ரம்ப்போடு முடிந்துபோவதும் இல்லை. அமெரிக்க அரசின் உறுப்பில் பணிபுரியும் காவலருக்கு நிறவெறி இருக்கிறதெனில், அந்த அமைப்பு நிறவெறியைப் பொருட்படுத்தவில்லை என்றே நாம் புரிந்துகொள்ள வேண்டும். பல கறுப்பினத்தவர் காவலர்களால் கொல்லப்பட்டிருக்கின்றனர். பெரிய தண்டனைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டதில்லை. அரச உறுப்பில் பணிபுரிபவர்கள் என்பதைத் தாண்டி, நிறவெறி கொண்ட காவலர்கள் அரசால் காப்பாற்றப்படுகிறார்கள் என்றால், அந்த அரசுக்கு நிறவெறி இருப்பதைப் பற்றிய கவலையில்லை என ஆகிறது. சரியாகச் சொல்வதெனில், அமெரிக்க அதிகாரமும் அதன் அமைப்பும் நிறவெறியில் ஊறியிருப்பதாகவே புரிந்துகொள்ள வேண்டும். நம்மூரில் சாதிவெறி இந்த இடத்தில் இருக்கிறது.
அமைப்பில் இதைப் புரட்டிப்போட பெரும் சீர்திருத்தம் வேண்டும். அதற்குச் சித்தாந்த வலுமிக்க அரசியல் இயக்கங்கள் இதை ஒரு தொடர் போராட்டமாக முன்னெடுக்க வேண்டும். எவருமே நாயகனாக விரும்பும் இன்றைய காலத்தில், சித்தாந்தத்தை முன்னெடுக்கும் போராட்டங்கள் எந்தளவுக்கு மக்கள் விருப்பைப் பெறும் அல்லது அந்தச் சிக்கலை உட்கொள்ளும் வடிவங்களில் நாம் எப்படி போராட்டங்களை முன்னெடுக்கப்போகிறோம்? உற்றுக் கவனிப்போம். இன்றைய அரசியல் சூழலை நாம் புரிந்துகொள்ள அது உதவும்!
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago