தேர்தல் ஆண்டுக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறது தமிழகம். 2021 மே மாதத்துடன் முடிவடையும் சூழலில், ஆட்சியைத் தொடர்ந்து தக்கவைப்பதற்கான ஆட்டத்தை அதிமுக தொடங்கிவிட்டது. கரோனாவை எதிர்கொள்வது தொடர்பான எதிர்க்கட்சிகள் எந்த விமர்சனத்தை முன்வைத்தாலும், ‘கொள்ளைநோய்க் காலத்திலும் அரசியல்செய்கிறார்கள்’ என்று சொல்வது அதிமுகவினரின் வழக்கம். ஆனால், இந்தக் கொள்ளைநோய்க் காலகட்டத்திலேயே தேர்தலுக்கான எல்லா ஏற்பாடுகளையும் முடுக்கிவிட்டிருக்கும் முதல் கட்சியும் அதுதான்.
கட்சிக்குள் சீரமைப்புப் பணிகளைத் தொடங்கியிருப்பதோடு, நேரடியாகவே தேர்தல் ஆலோசனைக் கூட்டங்களையும் நடத்த ஆரம்பித்துவிட்டது அதிமுக. திமுக இந்த முறை ஆட்சிக்கு வருவதைத் தவிர்த்துவிட்டால், அடுத்து பாஜகவின் வளர்ச்சிக்கு எந்தத் தடையும் இல்லை என்ற கணக்கோடு பாஜகவும் அதிமுகவுக்கு வியூகங்களில் உதவக் காத்திருக்கும் நிலையில், பெரும் அறிவிப்புகளுக்கு முதல்வர் பழனிசாமி திட்டமிட்டிருக்கிறார். எப்போதும் திமுகவின் தேர்தல் அறிக்கை அதன் பெரும் தாக்குதலாக இருக்கும் என்றால், இந்த முறை அதிமுகவின் நேரடி அறிவிப்புகளே முன்கூட்டிய பெரும் தாக்குதலாக இருக்கும் என்று சொல்கிறார்கள். மேலிருந்து இப்படி அறிவிப்புகள் வழி கவனம் ஈர்க்கும் வேலையைத் தலைவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்றால், கீழே திமுகவுக்குச் சவால் விடுக்கும் வகையில், மக்களை ஒருங்கிணைக்கும் பணியைக் கட்சியினர் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
நிவாரணமே வா, வா!
கரோனா ஊரடங்கு சமயத்தில் திமுக முன்னெடுத்த ‘ஒன்றிணைவோம் வா!’ நிவாரணப் பணிகள் தமிழ்நாடு முழுக்க மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. அதிமுகவினரே இதைக் கட்சித் தலைமையின் கவனத்துக்குக் கொண்டுசென்றிருக்கின்றனர். விளைவாக, அதிமுக சார்பிலும் நிவாரண உதவிகளை வழங்குதல் எனும் வியூகத்தைத் தேர்தல் பணிகளில் முதன்மையானதாக அது கைக்கொள்ளத் தொடங்கியிருக்கிறது.
அமைச்சர்களில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் இருவரும் இதில் முன்வரிசையில் நிற்கிறார்கள். விராலிமலையிலும் திருமங்கலத்திலும் ஏழை - பணக்காரர், சொந்தக் கட்சி – எதிர்க்கட்சி என்று எந்த வேறுபாடும் இல்லாமல், வீட்டுக்கு வீடு பிரத்யேக அட்டைகளை வழங்கி, வாரந்தோறும் ஒரு நிவாரணப் பொருள் என தினமும் வழங்கிக்கொண்டிருக்கிறார்கள் அதிமுகவினர். மாஸ்க் ஒரு நாள், சோப் ஒரு நாள், சானிடைசர் இன்னொரு நாள், அரிசி ஒரு நாள், காய்கறி மற்றும் மளிகைத் தொகுப்பு ஒரு நாள், ஆயிரம் ரூபாய் ரொக்கம் இன்னொரு நாள் என்று வழங்குவதோடு, அவர்கள் அளித்திருக்கும் குடும்ப அட்டையில் அது பதியவும் படுகிறது.
இலக்குகளாகும் உதவிகள்
மக்களுக்கு மட்டும் நிவாரணம் கொடுத்தால் தேர்தலில் எப்படி ஜெயிக்க முடியும்; கட்சிக்காரர்களைக் கவனிக்க வேண்டாமா? டி.கல்லுப்பட்டியில் நடந்த அதிமுக வாக்குச்சாவடி நிர்வாகிகள் கூட்டம் கூடவே அவர்களுக்கு ‘நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி’யாகவும் நடந்தது. ஊருக்கு ஊர் இது விரிகிறது.
இரு வாரங்களாகத் தமிழக அமைச்சர்கள் பலரும் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்குச் சுழல் நிதி வழங்குவதில் மும்முரமாக இருக்கிறார்கள். கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, ‘குடும்ப அட்டை இருந்தாலே ரூ.50 ஆயிரம் கடன் வேண்டி கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பிக்கலாம்’ என்று வெளியிட்டிருக்கும் அறிவிப்பு, பெண் வாக்குகளை அள்ளும் வலுவான அஸ்திரமாகப் பார்க்கப்படுகிறது. மலையடிவாரப் பகுதிகளில் இருக்கும் வனக் குழுவினருக்கான உதவி வழங்கும் திட்டத்தை ஏற்கெனவே திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கிவிட்டார். இப்படி வேளாண் துறை தொடங்கி மீன்வளத் துறை வரையில் திட்டங்கள் வரிசை கட்டுகின்றன.
அமைச்சர்கள் மட்டும் அல்ல; அமைச்சர் கனவில் இருப்பவர்களும் களத்தில் காசோடு நிற்கிறார்கள். நெல்லை மாநகர் மாவட்டச் செயலாளர் தச்சை கணேசராஜா ஓர் உதாரணம். நெல்லை மாவட்டத்தில் அமைச்சர் இல்லாத குறையைப் போக்க வேண்டும் என்று இறங்கியிருக்கும் இவர், நிவாரணம் என்ற பெயரில் ஏராளமான உதவிகளை அள்ளிவிடுகிறார்.
அமைப்புக்குள் சீர்திருத்தம்
அதிமுகவில் ஒன்றியச் செயலாளர்களுக்கும் கிளைச் செயலாளர்களுக்குமான உறவை இடையில் இருக்கும் ஊராட்சிச் செயலாளர் பதவி கெடுக்கிறது என்ற குற்றச்சாட்டின் பேரில்தான் ஒட்டுமொத்தமாக அந்தப் பதவிகளை ஒழித்துக்கட்டியிருக்கிறது அதிமுக. வாக்குச்சாவடி குழு வரையில் இனி ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் நேரடியாகக் கிளைகளைத் தொடர்புகொள்ள இது வழிவகுக்கும். தகவல் தொழில்நுட்ப அணியின் முக்கியத்துவம் உணர்ந்து மண்டலவாரியாக அதைப் பிரித்து, சுறுசுறுப்பான நிர்வாகிகளை அதில் நியமித்திருக்கிறார்கள். அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையைப் போல ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த அரசு செய்த விஷயங்களைச் சாதனைகளாகப் பறைசாற்றும் பணி அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. கூடவே, திமுக மீதான தாக்குதல்களையும் அவர்கள் தொடுப்பார்கள்.
பொதுவாக, திமுக வியூகங்களைத் திட்டமிடுவதில் பல துறை நிபுணர்களின் ஆலோசனைகளையும் பெறும். இப்போது அதிமுகவும் அதே பாணியைக் கையில் எடுக்கிறது. திமுகபோலவே அதுவும் ‘தேர்தல் வியூக வகுப்பாளர்கள்’ உதவியைப் பெற்றிருக்கிறது. அதிமுக அடியெடுத்துவைத்துவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் ஜோர்களை எல்லாக் கட்சிகளுமே விரைவில் தொடங்கிவிடும் என்று எதிர்பார்க்கலாம்.
- கே.கே.மகேஷ்,
தொடர்புக்கு: magesh.kk@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago