தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு கருணாநிதி எப்படி ஒரு முக்கியமான காரணமாக இருந்தார்?

By செய்திப்பிரிவு

தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகள் தொழில் துறை வளர்ச்சிக்கு என்ன செய்தன என்று கேட்பவர்களுக்கு, தமிழ்நாட்டில் அந்நாள் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் மத்திய உணவு அமைச்சராகவும் இருந்த சி.சுப்பிரமணியனின் சுயசரிதையைப் பரிந்துரைக்கும் பழக்கம் எனக்குண்டு. வெறும் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம் மட்டுமே 1967-ல் காங்கிரஸை வீழ்த்தி திமுகவை ஆட்சிக்குக் கொண்டுவரவில்லை; வேலைவாய்ப்பின்மைக்கும் பஞ்சத்துக்கும் பசி பட்டினிக்கும் அதில் ஒரு முக்கியமான பங்குண்டு என்பதை அந்தப் புத்தகத்தைப் படிப்பவர்கள் உணர்ந்துகொள்வார்கள்!

குஜராத் - தமிழகம் ஒப்பீடு

பண்டைய தமிழகத்தின் வணிகப் பெருமைகளுடன் நவீனத் தமிழகத்தை ஒப்பிட முடியாது. நவீன இந்தியாவின் பொருளாதாரம் என்பது குஜராத்திகளின் பொருளாதாரம். குஜராத்திகள் குஜராத்திலும் பின்னர் மஹாராஷ்டிரத்திலும் தங்களை நிலைநிறுத்திக்கொண்டதால், இந்த இரு மாநிலங்களே இந்தியாவின் தொழில் துறையைக் கையில் வைத்திருக்கின்றன. ஒரு ரிலையன்ஸுடன் அம்பானியுடன் ஒப்பிட்டால் தமிழ்நாட்டின் மிகப் பெரிய பல நிறுவனங்களை ஒன்றுசேர்த்தால்கூட அது சுண்டைக்காய்க்குச் சமானம்தான். சுதந்திரத்துக்குப் பின் வட இந்தியாவுக்கே வளர்ச்சித் திட்டங்களில் முன்னுரிமை அளிக்கப்பட்டது. திராவிட நாடு முழக்கம், பின்னாளில் மாநில சுயாட்சி என்று அண்ணா போர் முழக்கமிட முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருந்தது தமிழகம் வஞ்சிக்கப்பட்டதுதான். இப்படிப்பட்ட பின்னணியில் 50 ஆண்டுகளில் குஜராத், மஹாராஷ்டிரத்துக்கு அடுத்த நிலையில் - இங்கே தொழில் துறை வளர்ந்திருப்பதே ஒரு சாதனை!

தமிழ்நாட்டு வணிகச் சமூகங்கள் என்று எடுத்துக்கொண்டால் குறிப்பிடத்தக்க வரலாற்று நீட்சியைக் கொண்ட ஒரே வணிகச் சமூகமாக நாட்டுக்கோட்டை செட்டியார் சமூகம் இருந்தது. அவர்களது பிரதான வணிகம் முத்து, பிற்காலத்தில் வட்டித்தொழில் என்றானது. காரைக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு மட்டும் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட வட்டி நிறுவனங்கள் நடந்த காலம் உண்டு. இரண்டாம் உலகப் போரின்போது பர்மா, மலேசியாவில் செல்வத்தையும் பல லட்சம் ஏக்கர் நிலங்களையும் இழந்த பின் அவர்களும் முடங்கினார்கள்.

சுதந்திரத்துக்குப் பிறகு தொழில் முதலீட்டின் பக்கம் அவர்கள் வந்தார்கள் என்றாலும், முருகப்பா குழுமம், எம்.ஏ.எம். குழுமம் போன்ற சில குழுமங்களைத் தாண்டி அவர்கள் மேலே செல்லவில்லை. இவை நீங்கலாக வேறு எந்தச் சமூகத்துக்கும் பெரிய அளவிலான தொழில் முதலீடுகள் கிடையாது. விதிவிலக்கு பிராமணச் சமூகம். தமிழகத்தில் பிராமணர்களிடமே சொல்லிக்கொள்ளும்படியான தொழில் முதலீடுகள் பெரிய அளவில் எல்லாத் துறைகளிலும் இருந்தன. டிவிஎஸ், சிம்சன், மெட்ராஸ் சிமென்ட்ஸ், சேஷசாயி என்று இந்தப் பட்டியல் மிகப் பெரியது. காங்கிரஸ் ஆட்சி தமிழகத்தில் நடந்தபோது இந்த நிறுவனங்களில் பலவும் அதன் பின்னணியில் இருந்தன. பலனடைந்தன.

திமுக எதிர்கொண்ட சவால்கள்

பிராமணரல்லாதோர் இயக்கமாக வளர்ந்து ஆட்சியில் உட்கார்ந்த திமுகவுக்குத் தொழில் துறையை வளர்த்தெடுப்பதில் இருந்த சவால்களை மேற்கண்ட பின்னணியில் பொருத்திப்பார்த்தால் விளங்கும். ஒருபுறம், குஜராத் போன்ற பொருளாதாரம் நம்மிடம் கிடையாது. மறுபுறம், டெல்லியில் ஆட்சியில் உட்கார்ந்திருந்தவர்கள் அந்நாளில் திமுகவைத் தடைசெய்ய நேரம் பார்த்துக்கொண்டிருந்தவர்கள். தமிழகத்தில் தொழில் துறையைக் கையில் வைத்திருந்தவர்களோ திமுகவைச் சங்கடமாகப் பார்த்தவர்கள். இந்த நெருக்கடிகளினூடாகவே தொழில் துறையை வளர்த்தெடுத்தது திமுக. தமிழர், தமிழ் நிறுவனங்கள் என்ற எல்லைக்குள் எல்லோரையும் அரவணைத்தது. தொழில் வளர்ச்சிக்கும் முதலீடுகளுக்கும் ஏற்ற வன்முறையற்ற அமைதியான சூழலை வளர்த்தெடுத்தது.

காமராஜர் ஆட்சியில் தமிழகத் தொழில் துறையில் சில முக்கியமான கட்டுமானங்கள் உருவாக்கப்பட்டன. என்றாலும், தமிழ்நாட்டில் இன்றுள்ள தொழில் துறைக்கான முழுக் கட்டுமானங்களில் பெரும் பகுதி திராவிடக் கட்சிகளின் ஆட்சிக் காலகட்டத்தில், குறிப்பாக திமுக ஆட்சிக் காலகட்டத்திலேயே உருவாக்கப்பட்டன. காமராஜர் பார்வையும் கருணாநிதி பார்வையும் என்றுகூட தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை ஒப்பிடலாம். தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்காக, எந்தெந்தப் பகுதிகளில் எந்தெந்தத் தொழில்கள் நடைபெறுகின்றனவோ அவற்றை ஊக்குவிக்கும் வகையில் காமராஜர் தொழிற்பேட்டைகளை உருவாக்கினார். ஓர் உதாரணம்-திண்டுக்கல்லில் பூட்டு தயாரிக்கும் தொழிற்பேட்டை. கருணாநிதி தொழில் சூழல் இல்லாத இடங்களிலும் தொழிற்பேட்டைகளை உருவாக்கினார். தமிழக வரலாற்றில் 1971 – 1976 காலகட்டம் முக்கியமானது. தமிழகத்தின் ஒவ்வொரு 50-வது கிலோ மீட்டரிலும் ஒரு தொழிற்பேட்டை இருக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு திமுக அரசு செயல்பட்ட காலகட்டம் அது. சென்னை தொடங்கி நாகர்கோவில் வரையில் அப்போதுதான் பல தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டன. மானிய விலையில் இடம், தடையில்லா மின்சாரம், விரைவான தொழில் ஒப்புதல் போன்றவற்றால் தொழில் முனைவோர் பெருகினர்.

கருணாநிதியின் முன்னகர்வுகள்

டெல்லியுடனான உறவை மாநிலத்துக்குத் திட்டங்களைக் கொண்டுவரும் உறவாக வளர்த்தெடுத்தவர் கருணாநிதி. சேலம் உருக்காலை அதன் தொடக்கம். டெல்லியிலேயே உட்கார்ந்து இந்திராவுடன் சண்டை போட்டு அவர் கொண்டுவந்த திட்டம் அது. மத்திய அரசின் ஆதிக்கத்தைத் தொழில் துறையில் நீர்த்துப்போகச் செய்யும் வகையில் அவர் யோசனையில் உதித்ததே மாநில – மத்திய – தனியார் கூட்டு முதலீட்டுத் திட்டம். அப்படி உருவானவைதான் தூத்துக்குடி ஸ்பிக், மதுரை தமிழ்நாடு கெமிக்கல்ஸ், காரைக்குடி டிசிஎல், மெட்ராஸ் பெர்ட்டிலைசர்ஸ் எல்லாம். அதேபோல, மத்திய அரசின் பொதுத் துறை மாதிரி, மாநில அரசின் பொதுத் துறை நிறுவனங்களையும் உருவாக்கினார். இதில் ஒன்று தனியார் பங்களிப்புடன் கூடியது, மற்றொன்று அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள். அதாவது பூம்புகார் கப்பல் நிறுவனம், டான்ஸி நிறுவனம் (தமிழ்நாடு இன்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் லிட்), தமிழ்நாடு அக்ரோ இன்டஸ்ட்ரி போன்றவை. இத்திட்டத்தின்படி தொழில் தொடங்குவதற்கு மட்டுமே அரசு உதவும். மற்றபடி வரவு-செலவு அனைத்தையும் அவர்களே செய்துகொள்ள வேண்டும். இதே பாணியில் தீப்பெட்டி, நெசவு என்று பல்வேறு சிறுதொழில்களுக்கான கூட்டுறவு நிறுவனங்களும் உருவாக்கப்பட்டன. இவற்றில் பல தனியாருடன் போட்டியிட முயன்று தோற்றாலும் இந்த முயற்சியின் பின்னிருந்த கனவு மெச்ச வேண்டியது.

1990-களில் மத்திய அரசின் தாராளமயமாக்கல் கொள்கையைத் தமிழகம் கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்டது. 1996-2001 திமுக ஆட்சிக் காலகட்டமும் மிக முக்கியமானது. தகவல் தொழில்நுட்பத் துறை ஒரு புரட்சியை உண்டாக்கும் என்பதைக் கணித்து நாட்டிலேயே முதல் முறையாக 1997-ல் அத்துறைக்கான கொள்கையை அறிவித்தார் கருணாநிதி. இதற்கு ஏழு ஆண்டுகளுக்குப் பின்னரே வாஜ்பாய் காலத்தில் தேசிய தகவல் தொழில்நுட்பக் கொள்கை வெளியானது. ஒருபுறம் ‘டைடல் பார்க்’ மூலம் நிறுவனங்களை இங்கு ஈர்த்தபோது, மறுபுறம் அங்கு வேலைவாய்ப்புகளுக்கு நம் மாணவர்களைத் தயாராக்கும் வகையில் உயர் கல்வித் துறையையும் முடுக்கிவிட்டார் கருணாநிதி. 1999-ல் அவர் நடத்திய உலகத் தமிழ் இணைய மாநாடு இன்னொரு முக்கியமான செயல்பாடு. இன்று இணைய உலகில் தமிழ் முன்னே நிற்க பல வகைகளில் விதை போட்ட நிகழ்வு அது. அதேபோல, தமிழ்நாட்டை மின் ஆளுகையின் கீழ் கொண்டுவரும் முயற்சியின் தொடக்கமாக திருவாரூர், திருவள்ளூர் மாவட்டங்களில் மின் நிர்வாகத்தைக் கொண்டுவந்தார். இதன் பின்னிருந்த கனவுகள் பெரியவை.

தமிழகத்தில் இன்றைய இளம் தலைமுறையினர் பலர் “திராவிட இயக்கம் – குறிப்பாக, கருணாநிதி தமிழ்நாட்டுக்கு என்ன செய்தார்?” என்று ஃபேஸ்புக்கில் கமென்ட் போடும்போதெல்லாம் நான் இதைத்தான் நினைத்துக்கொள்வேன்: நம்மை ஏனைய சமூகங்களுக்கு முன் கணினிக்கு முன் கொண்டுவந்ததும்கூட அவர்கள் செய்த மகத்தான சாதனை என்று!

- சுபகுணராஜன், வரலாற்று ஆய்வாளர், முன்னாள் கலால் துறை அதிகாரி. தொடர்புக்கு: subagunarajan@gmail.com

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ நூல் இப்போது கெட்டி அட்டையில், ஆவணப்படுத்தத்தக்க நூலாகக் கிடைக்கிறது. விலை ரூ.300. இப்போது 25% சிறப்புத் தள்ளுபடியும் உண்டு.

நூலைப் பெற அணுகுங்கள்: 044-30899000, 74012 96562, 74013 29402

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்