19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே வைரஸ் குறித்து உலகம் அறியத் தொடங்கிவிட்டாலும், ஒரு வைரஸுக்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிக்க 75 ஆண்டுகளுக்கு மேல் ஆனது. இந்த மருந்தே பிற்காலத்தில் எய்ட்ஸ் சிகிச்சைக்கான மருந்துகளிலும் ஒன்றானது.
உலகில் வைரஸ்களுக்கு எதிராகச் செயலாற்றும் வகையில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட மருந்து 'ஏசைக்ளோவிர்' (Acyclovir). 1970 இல் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் எதிர்ப்பு மருந்துக்கு 'ஏசைக்ளோகுவானோசைன்' என்ற பெயரும் உண்டு. ஹெர்பஸ் சிம்ப்ளெக்ஸ் வைரஸ் (வாய் அம்மைக் கிருமி) அல்லது வாரிசெல்லா ஸூஸ்டர் (அக்கி அம்மைக் கிருமி), சின்னம்மை (Chickenpox) ஆகிய வைரஸ் நோய்களுக்கு இது மருந்தாகத் தரப்பட்டது. இந்த மருந்தைக் கண்டறிந்தவர்கள் அமெரிக்க உயிர்ம வேதியியலாளர்கள், மருந்தியலாளர்கள் ஜெர்ட்ரூடு பி. எலியன் (Gertrude B Elion), ஜார்ஜ் ஹெர்பர்ட் ஹிட்சிங்க்ஸ் (George Herbert Hitchings).
புதிய முறை
லிதுவேனியா-போலந்தைச் சேர்ந்த யூதப் பெற்றோர்களுக்குப் பிறந்தவர் ஜெர்ட்ரூட் எலியன். 1944இல் பர்ரோஸ் வெல்கம் ஆய்வகத்தில் (பிற்காலத்தில் கிளாஸ்கோ ஸ்மித்கிளைன் நிறுவனமாக மாறியது) பணியில் சேர்ந்தார். அவருக்குச் சிறிது காலம் முன்பாக 1942இல் சேர்ந்து, அதே ஆய்வகத்தில் ஜார்ஜ் ஹிட்சிங்க்ஸ் பணிபுரிந்துவந்தார். எலியனும் ஹிட்சிங்க்ஸும் 40 ஆண்டுகளுக்கு இணைந்து பணிபுரிந்தார்கள். இருவரும் இணைந்து வைரஸ் எதிர்ப்பு மருந்துகள், ரத்தப் புற்றுநோய், மலேரியா, சிறுநீர் பாதைத் தொற்று, கீல்வாத நோய்களுக்கு மருந்தைக் கண்டறிந்தார்கள். 1950களிலேயே ரத்தப்புற்றுநோய்க்கு மருந்தைக் கண்டறிந்தார்கள். 1957இல் ருமட்டாய்டு ஆர்த்ரிட்டிஸ் எனப்படும் மூட்டுவலிக்கு மருந்தைக் கண்டறிந்தார்கள்.
» சென்னையில் கரோனா; கொழிஞ்சாம்பாறைக்கு ஊரடங்கு: துணை சபாநாயகர் பேச்சு நடத்தியும் அகலாத துயரம்
அவர்களுக்கு முந்தைய ஆராய்ச்சியாளர்கள் பல முறைகளை ஆராய்ந்து பார்த்து, அவற்றில் சரியானவற்றை மட்டும் தேர்வுசெய்து கொண்டிருந்தார்கள். அதற்கு பதிலாக இவர்கள் இருவரும் புதுமையான ஆராய்ச்சி முறைகளைக் கையாண்டதாலேயே, இத்தனை மருந்துகளை அவர்களால் கண்டறிய முடிந்தது.
புற்றுநோய் செல்கள், பாக்டீரியா, வைரஸ், நோய்க்கிருமிகளின் செல்களுக்கும் மனித செல்களுக்கும் இடையிலான உயிர்ம வேதியியல் வேறுபாடுகளில் மட்டுமே, அவர்கள் இருவரும் கவனம் செலுத்தி ஆராய்ந்தார்கள். வெறும் யூகம், தோல்வியடைந்த முந்தைய நடைமுறைகளுக்குப் பதிலாக உயிர்ம வேதியியல், உடலியல் அடிப்படை செயல்முறைகளைப் புரிந்துகொள்வதில் கவனம் செலுத்தினார்கள். அதன் அடிப்படையில் கண்டறியப்பட்ட மருந்துகள், ஒன்று நோய்க்கிருமிகளைக் கொல்லவோ பெருக விடாமல் தடுப்பதையோ நோக்கமாகக் கொண்டிருந்தன. நோய்க்கிருமிகள் அல்லது செல்கள் படியாக்கம் செய்யப்படுவதைத் தடுப்பது அல்லது அது சார்ந்த செயல்முறைகளைத் தடுக்கும் வகையில் அவர்களுடைய மருந்துகள் செயல்பட்டன. அதேநேரம் இந்த மருந்துகள் கிருமிகள் குடியிருக்கும் மனிதர்களின் இயல்பான செல்களைப் பாதிக்காமலும் இருந்தன.
வைரஸ் எதிர்ப்பு
1970இல் இருவரும் இணைந்து கண்டறிந்த ஏசைக்ளோவிர், உலகின் முதல் வைரஸ் எதிர்ப்பு மருந்து. செல்களில் காணப்படும் டி.என்.ஏ., வைரஸ்களில் காணப்படும் ஆர்.என்.ஏ. ஆகியவற்றில் இயற்கையாகவே நியூக்ளியோசைடு (Nucleoside) போன்றவை இருக்கும். இயற்கை நியூக்ளியோசைடுகளைப் போன்ற செயற்கை நியூக்ளியோசைடுகளைக் கொண்டது ஏசைக்ளோவிர் மருந்து. ஒரு செல் அல்லது வைரஸின் படியெடுக்கும் நடைமுறை (பெருகும் செயல்பாடு) நடந்துகொண்டிருக்கும்போது மரபணுப் பொருளுடன் இந்த மருந்தும் சேர்ந்தால், அதற்குப் பிறகு அந்த வைரஸோ செல்லோ இயற்கையான நியூக்ளியோசைடுடன் சேர முடியாமல் தடுக்கப்பட்டுவிடும். இதன் காரணமாக டி.என்.ஏ., ஆர்.என்.ஏ. இழைகள் புதிதாக உருவாக முடியாமல், படியெடுக்கும் நடைமுறை தடைபடும். இதன் காரணமாக அந்த வைரஸ்களால் பெருக முடியாமல் போய்விடும்.
ஏசைக்ளோவிர் மருந்து ஹெர்பஸ் சிம்ப்ளெக்ஸ் வைரஸ் (வாய் அம்மைக் கிருமி), வாரிசெல்லா ஸூஸ்டர் (அக்கி அம்மைக் கிருமி) நோயால் பாதிக்கப்பட்ட செல்களுக்கு எதிராகச் செயல்படுவதில் ஆற்றல் மிகுந்தது. இந்த மருந்து வாய் வழியாக, தோலின் மேற்பகுதியில், ஊசி வழியாகச் செலுத்தப்படக்கூடியது. எய்ட்ஸுக்கான மருந்தாக 'ஸிடோவுடைன்' உடனும், உறுப்புமாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படாமலிருக்க 'மைகோபீனோலேட் மாபேட்டில்' போன்ற மருந்துகளுடன் ஏசைக்ளோவிர் மருந்தும் சேர்த்துக் கொடுக்கப்படுவது உண்டு.
நோபல் பரிசு
மேற்கண்ட மருந்துகளைக் கண்டுபிடித்த பெண் அறிவியலாளர் ஜெர்ட்ரூட் எலியனால் படிப்புக்காக முழு நேரம் செலவிட முடியாத காரணத்தால், கடைசிவரை அவரால் முனைவர் பட்டம் பெற முடியவில்லை. அதேநேரம் ஆபத்தான நோய்களுக்கு மருந்தைக் கண்டறிவதில் அவர் செய்த சாதனை ஈடு இணையற்றது. 1983இல் ஓய்வுபெற்றுவிட்டாலும், அதற்குப் பிறகு எய்ட்ஸுக்கான முதல் மருந்தான அஸிடோதைமிடைனைக் கண்டறிவதிலும் ஜெர்ட்ரூட் எலியனின் பங்களிப்பு இருந்தது. ஏசைக்ளோவிர் மருந்தும் எய்ட்ஸ் சிகிச்சையில் பயன்படுத்தப்பட்டது.
ஏசைக்ளோவிர் உட்பட வேறு பல முக்கிய மருந்துகளைக் கண்டறிந்ததற்காக ஜெர்ட்ரூட் எலியன், ஜார்ஜ் ஹிட்சிங்க்ஸ், ஜேம்ஸ் பிளாக் ஆகியோருக்கு 1988இல் நோபல் மருத்துவப் பரிசு கூட்டாக வழங்கப்பட்டது.
தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago