ஜவாஹர்லால் நேரு இந்திய விடுதலைப் போராட்டத்தில் காந்தி தலைமையில் பல போராட்டங்களில் ஈடுபட்டு 3,256 நாட்கள் - ஏறத்தாழ ஒன்பதரை ஆண்டுகாலம் சிறையில் இருந்தார். 1947-ல் இந்தியாவின் பிரதமராகப் பொறுப்பேற்ற அவர், 1964 வரை 16 ஆண்டுகாலம் இந்தியாவை வளர்த்தெடுத்தார். பேராற்றல் மிக்க இந்த மனிதர் தன்னுடைய நாளை எப்படிச் செலவிட்டிருப்பார்?
குளிர் காலத்தில்கூட காலை 6.30 மணிக்கு எழுந்துவிடுவார். கோடையிலோ அரை மணி நேரம் முன்னதாகவே எழுந்துவிடுவார். அடுத்த ஒரு மணி நேரம் பத்திரிகைகளைப் படிப்பதற்கும், யோகா பயிற்சிக்கும் செலவிடுவார். காலை 7.30 வாக்கில் அந்த நாளின் வல்லமைமிக்க சவால்களை சந்திப்பதற்காகத் தயாராகிவிடுவார். தன்னுடைய தனி அறையில் தினந்தோறும் வந்து குவியும் ஏராளமான கடிதங்களை முதலில் படிப்பார். ஒரு நாளைக்கு சராசரியாக 500 கடிதங்களும் தந்திகளும் அவருக்கு வந்துகொண்டிருந்தன. காலை உணவை எடுத்துக்கொள்ள அவருக்கு 15 நிமிடங்களுக்கு மேல் ஆகாது. வழக்கமாகக் காலை உணவில் மேற்கத்திய உணவு வகைகளுடன் பழச்சாறு, முட்டை, தானியம், வாட்டப்பட்ட ரொட்டி, காபி ஆகியவை இருக்கும். அவரது மகள் இந்திரா அநேகமாக எப்போதும் அருகில் இருப்பார். இந்திராவின் இரண்டு குழந்தைகளும் விடுமுறைக் காலங்களில் உடன் இருப்பார்கள்.
அவருடைய தீன்மூர்த்தி பவன் வீட்டிலிருந்து இறங்கி தரைத்தளத்தில் உள்ள அவரது அலுவலகத்துக்கு 8.15 மணி அளவில் வருவார். அங்கு அவரைச் சந்திக்க எப்போதும் சிலர் காத்திருப்பார்கள். 15 நிமிடங்களுக்குள் அவர்களிடம் பேசி அனுப்பிவிடுவார். பிறகு, வளர்ப்புப் பிராணிகளுடன் சிறிது நேரத்தைச் செலவிடுவார்.
நாடாளுமன்ற அவை நடைபெறாத காலங்களில் நேரு தன்னுடைய வெளியுறவு அமைச்சக அலுவலக அறையில் நாள் முழுவதும் இருப்பார். காலை 9 மணி முதல் 1.30 மணி வரையிலும், மதிய உணவுக்குப் பிறகு 2.45 முதல் 6.30 அல்லது 7 மணி வரையிலும் அங்கு இருப்பார். இங்கு வெளிநாட்டுத் தூதுவர்கள், வருகைதரும் பெருமக்கள், அமைச்சரவை சகாக்கள், கட்சித் தொண்டர்கள் என்று முடிவில்லாமல் வந்துகொண்டே இருப்பவர்களைச் சந்திப்பார். மலைபோல் குவிந்திருக்கும் கோப்புகளைக் கருத்தூன்றிப் படிப்பார். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உடனடியாக முடிவெடுக்க வேண்டிய விஷயங்கள் பலவற்றை அவர் கவனிக்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் சந்திப்புகள் நடைபெறும். சந்திப்புகளுக்கு இடைப்பட்ட நேரங்களில் அவரது சுருக்கெழுத்தாளர்கள் எழுதுவதற்கான விவரங்களைச் சொல்வார். உண்மையில், இவைதான் தடைபடாத அவரது அலுவலகப் பணிகளாகும். மேலும், வந்திருப்பவர்கள் தன்னிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே குறிப்புகளை எடுத்துக்கொள்வார். நேரடியாக சந்தித்துப் பேசி முடித்த பிறகு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு அவருக்கு இது உதவும்.
நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களின்போது அவருடைய வேலைத்திட்டம் இதுபோலத்தான் இருக்கும். கேள்வி நேரமாக இருந்தால் அவர் மதியம் வரை அவையில் இருப்பார். முக்கியமான விவாதங்களின்போது அவை முடியும் வரை அமர்ந்திருப்பார். நாளின் எஞ்சிய நேரத்தில் அவர் இரண்டாம் தளத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் இருந்தபடி அலுவல்களைக் கவனிப்பார். கூட்டத்தொடர்களின்போது நேரமின்மை காரணமாக அமைச்சரவைக் கூட்டம், கட்சியின் கூட்டங்கள் போன்றவை காலை 11 மணிக்கு முன்பாகவோ அல்லது மாலையிலோ அவரது இல்லத்தில் நடத்தப்படும். மாலை 6.30 அல்லது 7 மணிக்கு அவர் வீடு திரும்பும்போது, அங்கு காத்திருப்பவர்களை இரவு 8.30 மணி வரை பார்க்க வேண்டியிருக்கும். வந்திருப்பவர்களை ஒவ்வொருவராக அழைத்துப் பேசி அனுப்பிவிட்டு இடைப்பட்ட நேரத்தில் விடுபட்டுப்போன விவரங்களை எழுதுமாறு சுருக்கெழுத்தாளர்களைப் பணிப்பார்.
இரவு உணவு குடும்பத்தாருடன் இயல்பான முறையில் நடக்கும். அரிதான ஒருசில சமயங்களில் தனிச் சிறப்புமிக்க விருந்தினர்களுக்கு அரசாங்க விருந்து நடைபெறும். நாள் முழுவதும் வேலைப்பளுவின் காரணமாக சந்திக்கவியலாது போன அமைச்சரவை சகாக்கள், தூதர்கள் ஆகியோர் வீட்டில் நடைபெறும் இரவு விருந்துக்கு அழைக்கப்படுவர். இதுபோன்ற சமயங்களில் இரவு 10.30 வரை அங்கிருப்பார். மாலையில் அரசாங்க விழாக்களில் இரவு 10.30 வரை அவர் கலந்துகொள்ள நேரிடும். இதுபோன்ற நேரங்களில் அவர் வீட்டில் உள்ள தனது அலுவலக அறைக்கு வந்து நள்ளிரவு வரையிலோ அதற்கு மேலுமோ அங்கு பணிபுரிவார்.
தினமும் 16 மணி நேரம் இடைவெளி இல்லாமல் உழைத்தவர். இரவு 2 மணிக்குத் தூங்கச் சென்றாலும் காலை வழக்கமான நேரத்தில் எழுந்துவிடுபவர். நேருவின் இவ்வளவு அர்ப்பணிப்புமிக்க உழைப்புக்குக் காரணம் அவர் மக்கள் மீது கொண்டிருந்த அன்பும், இந்தியாவின் எதிர்காலம் மீது கொண்டிருந்த கனவும்தான்!
- ஆ.கோபண்ணா, ஆசிரியர், தேசிய முரசு.
தொடர்புக்கு: desiyamurasu@gmail.com
மே 27: நேரு நினைவு தினம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
3 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago