பொதுவாகவே, அரசு மருத்துவமனைகளின் மீது நமக்கு ஒரு பார்வை உண்டு: அரசு மருத்துவமனை சுத்தமாக இருக்காது, வார்டுகள் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படாது, அரசு மருத்துவர்கள் தங்களது சொந்த கிளினிக்கில்தான் ஒழுங்காக வைத்தியம் பார்ப்பார்கள், அரசு மருத்துவமனை என்பதே ஏழைகளுக்கான இடம். அதே நேரத்தில், தனியார் மருத்துவமனைகளைப் பற்றி மிக உயர்வான எண்ணம் இருக்கும். ஆனால், நமது கற்பிதங்களை எல்லாம் கரோனா முற்றிலுமாக உடைத்துவிட்டது.
இந்தியாவில் கரோனா பரவத் தொடங்குகிறது என அறிந்தவுடன் அனைத்து தனியார் மருத்துவமனைகளும் தங்களது சேவைகளைப் பெரும்பாலும் நிறுத்திக்கொண்டன. தனியார் கிளினிக்குகள் காலவரையின்றி மூடப்பட்டிருக்கின்றன. பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைகள்கூட அவசர சிகிச்சை தவிர, தங்களது அத்தனை சேவைகளையும் உடனடியாக நிறுத்திக்கொண்டன. அரசு மருத்துவமனைகளோ அப்படிச் செய்யவில்லை. முன்பிருந்ததைவிட இப்போதுதான் அவர்கள் மிகத் தீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
தனியாரும் சமூகப் பொறுப்பும்
உலகத் தரமான வைத்தியம், மக்கள் மீதான உண்மையான அக்கறை என்று சொன்ன தனியார் மருத்துவமனைகளின் வாசகங்களெல்லாம் வெற்று விளம்பரங்களாய் இன்று தனித்துத் தெரிகின்றன. ஏன் தனியார் மருத்துவமனைகளால் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் சேவை செய்ய முடியவில்லை என்றால், சமூகப் பொறுப்பை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதே காரணம். குஜராத்தில், மூடப்பட்ட தனியார் மருத்துவமனைகளை உடனடியாகத் திறக்கச் சொல்லி சமீபத்தில் அரசாங்கம் அறிக்கை வெளியிட்டது. அப்படித் திறக்காத தனியார் மருத்துவமனைகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தது. மஹாராஷ்டிரம் இன்னும் ஒரு படி மேலே போய், மருத்துவமனைகளைத் திறக்கவில்லை என்றால், மருத்துவர்களின் லைசன்ஸ் ரத்துசெய்யப்படும் என்று கரோனா நோயாளிகளுக்கு வைத்தியம் மறுத்த தனியார் மருத்துவர்களைக் கடுமையாக எச்சரித்தது. அந்த அளவுக்கு அந்த மாநிலங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளும் மருத்துவர்களும் இந்தச் சமூகத்தின் மீதான எந்த விதப் பொறுப்பும் பிணைப்பும் இன்றி இருந்தார்கள் என்பதை இந்தச் சம்பவங்களிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.
அரசு மருத்துவர்களின் உறுதி
தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 1,80,000 மருத்துவர்கள் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிகிறார்கள். அதில் 12,000 பேர் கிராமப்புற அரசு மருத்துவமனைகளில் பணிபுரிபவர்களாக இருக்கிறார்கள். ஆனால், இதுவரை நமது அரசு மருத்துவர்கள் யாரும் தனியார் மருத்துவர்களைப் போல தங்கள் கடமைகளிலிருந்து ஒதுங்கிக்கொள்ளவில்லை. கரோனா அபாயத்தை முழுமையாக உணர்ந்திருந்தும் எந்த ஒரு மருத்துவப் பணியாளரிடமிருந்தும் சிறு சஞ்சலம்கூட வெளிப்படவில்லை. தங்களது குடும்பத்தை விட்டு, தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு தொடர்ச்சியாக கரோனா சிகிச்சைப் பணியில் ஈடுபடுகிறார்கள். சரியான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாதிருந்த சூழலிலும்கூட, தங்களுக்குப் பரிசோதனை செய்ய அரசு தயங்கும் நேரத்தில்கூட, அவர்கள் தங்களது பணியைத் தொடர்ந்துகொண்டிருந்தார்கள். நாடு முழுக்கவுமே இதைப் பார்க்க முடிகிறது. இதற்கு மிக முக்கியமான காரணம், நமது அரசு மருத்துவர்களுக்கு இருக்கும் சமூகப் பொறுப்பும் சமூக அர்ப்பணிப்பும்தான்.
இந்தச் சமூகப் பொறுப்பும் சமூக அர்ப்பணிப்பும் அவர்களுக்கு எப்படி வந்தது? இப்படி அரசு மருத்துவமனைகளுக்குப் பணியாற்ற வரும் கணிசமானோர் சாதிரீதியான இடஒதுக்கீட்டின் விளைவாக வந்த ஏழை, எளிய தொடக்க தலைமுறையினராக இருப்பதும், முதுநிலைப் படிப்பில் அரசாங்க மருத்துவர்களுக்குக் கிடைக்கும் 50% இடஒதுக்கீட்டின் வழியாக வந்தவர்களாக இருப்பதும் ஒரு முக்கியமான காரணம். கிராமப்புறங்கள் உள்ளிட்ட நமது அரசு மருத்துவமனைகளில் பணிபுரியக்கூடிய மருத்துவர்களில் பெரும்பாலான மாணவர்கள் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பைச் சார்ந்தவர்களாகவே இருக்கின்றனர்.
இந்தியா முழுவதுமே அரசு மருத்துவர்கள் பணி குறிப்பிடத்தக்கதாக இருந்தாலும், சமூகநீதியில் கவனம் செலுத்திய தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பு இன்று நாட்டிலேயே வலுவானதாகப் பார்க்கப்படுகிறது. சரியான வகையில் அமல்படுத்தப்படும் இடஒதுக்கீடு, எப்படி ஒரு துறையைச் சிறப்பானதாக மாற்றும் என்பதற்கு நமது மருத்துவத் துறைதான் சரியான உதாரணம். தமிழ்நாட்டில் சமூக நீதிக்காக நடந்த நீண்ட நெடிய போராட்டங்களின் விளைவு இது.
‘நீட்’டால் என்ன நடக்கும்?
இப்படிப்பட்ட மாணவர்கள் மருத்துவத் துறையில் நுழைவதைத் தடுக்கும் வகையில் ‘நீட்’ தேர்வு அமைந்திருக்கிறது என்றும், அது நமது மருத்துவத் துறையின் அடிப்படைக் கட்டுமானத்துக்கே ஆபத்தானது என்றும் சமூக ஆர்வலர்களால் தொடர்ச்சியாகச் சொல்லப்பட்டுவருகிறது. இவ்வேளையில், கடந்த இரண்டு வருடங்களாக அரசு மருத்துவர்களுக்கு முதுநிலைப் படிப்பில் வழங்கப்பட்டு வந்த 50% இடஒதுக்கீடும் பறிக்கப்பட்டிருக்கிறது. மேலும், அனைத்து இந்திய தொகுப்புக்கு வழங்கும் மருத்துவ முதுநிலைப் படிப்புக்கான இடங்களில் ‘ஓபிசி’ இடஒதுக்கீடும் பறிக்கப்பட்டிருக்கிறது. இதன் வழியாக, இப்படிப்பட்ட ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவத் துறைக்கு வருவது தொடர்ச்சியாகத் தடுக்கப்படும் ஆபத்து இருக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால், யாரால் நமது மருத்துவக் கட்டுமானம் மிகவும் பலமாக இருக்கிறதோ அவர்களெல்லாம் முற்றிலுமாக இந்தத் துறையிலிருந்து எதிர்காலத்தில் அகற்றப்பட்டுவிடும் ஆபத்து இருக்கிறது.
இன்று கரோனா தடுப்புப் பணியிலும், கரோனாவால் ஏற்படும் இறப்பைத் தடுப்பதிலும் மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டுவரும் தமிழக மருத்துவத் துறையில் இருக்கும் மருத்துவர்கள் யாரும் ‘நீட்’ எழுதியவர்கள் அல்ல. ஒரு நல்ல மருத்துவர் என்பதற்கு அடையாளம் ‘நீட்’ தேர்வில் அவர் எவ்வளவு மதிப்பெண் வாங்குகிறார் என்பதில் அல்ல; நெருக்கடியான காலகட்டத்திலும், தன்னலன் பாராது எப்படி சமூகப் பொறுப்புடன் மக்கள் நலனில் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறார் என்பதில்தான் இருக்கிறது. அந்த வகையில், தமிழக அரசு மருத்துவர்கள் மற்ற மாநில மருத்துவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார்கள். இந்த நிலை தொடர வேண்டும் என்றால், இதுவரை பின்பற்றிவந்த நமது சமூக நீதிக் கொள்கைகளை இன்னும் உறுதியாகப் பின்பற்ற வேண்டும். அது நமது வரலாற்றுக் கடமை.
- சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர். தொடர்புக்கு: sivabalanela@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago