நினைவிருக்கட்டும்… தேர்ந்தெடுக்கப்படப்போகிறவர் திமுக, அதிமுக உறுப்பினர் அல்ல; தமிழ்நாட்டின் குரல்!

By செல்வ புவியரசன்

நாடாளுமன்றத்தில் நடந்துவரும் விவாதங்கள் தற்போது இருப்பதைக் காட்டிலும் இன்னும் கொஞ்சம் தரம் கூட வேண்டும். நம் நாட்டை உலகமே பார்த்துக்கொண்டிருக்கிறது என்ற எண்ணத்தோடு அந்த விவாதங்களின் தரம் அமைய வேண்டும்! – இப்படிச் சொல்லியிருப்பது யார் தெரியுமா? மக்களவையின் மிக இளம் வயது உறுப்பினர் இந்திர ஹங் சுப்பா. கடந்த வாரம் ஒரு கருத்தரங்கில் இப்படிப் பேசியிருக்கிறார். சிக்கிம் மாநிலத்தை மக்களவையில் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே ஒரு உறுப்பினரான இவர், சிக்கிம் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறை ஆய்வு மாணவர். மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒற்றை உறுப்பினர் என்பதால் தன்னுடைய பொறுப்பு அதிகம் என்கிறார் சுப்பா.

இப்படிப் பேசுவதற்கான தகுதி சுப்பாவுக்கு உண்டு என்று தாராளமாகச் சொல்லலாம். கன்னிப்பேச்சுக்காகக் கிடைத்த மூன்று நிமிட வாய்ப்பில் பிரதமரைப் பாராட்டியபடியே நீர் மேலாண்மை, விளையாட்டுத் துறை மேம்பாடு, போக்குவரத்துத் தொடர்புத் திட்டங்களை வரவேற்றும் அதேசமயம் வடகிழக்கின் தேவைகளையும் குறிப்பாகச் சுட்டிக்காட்டிப் பேசியவர் பலரது கவனத்தையும் ஈர்த்தார். குடியுரிமைச் சட்டத் திருத்த முன்வடிவு விவாதிக்கப்பட்டபோது தனக்குக் கிடைத்த இரண்டு நிமிட வாய்ப்பில், இந்தச் சட்டத்திலிருந்து சிக்கிமை விலக்க வேண்டும் என்ற சட்டபூர்வமான விவாதத்தை ரத்தினச்சுருக்கமாக முன்வைத்தார்.

அசத்தும் புதியவர்கள்

புதியவர்கள் பலர் இப்படி தேசிய அளவில் கவனம் ஈர்க்கின்றனர். லடாக்கைச் சேர்ந்த பாஜக உறுப்பினர் ஜம்யங்க் சேரிங் நம்க்யாலை ஓர் உதாரணமாகச் சொல்லலாம். காஷ்மீர் இரண்டாகப் பிரிக்கப்பட்டதை நியாயப்படுத்தி இவர் பேசுகையில், லடாக்கியர்கள் எப்படிப் பாதிக்கப்பட்டார்கள் என்று அவர் பேசிய விதம் பாஜகவுக்கு அதன் நடவடிக்கையை நியாயப்படுத்திக்கொள்ள பெரிதாக உதவியது. திரிணமூல் காங்கிரஸின் மகுவா மோய்த்ராவைப் பற்றி விவரிக்கவே வேண்டாம். ஆளுங்கட்சியைத் திணறடிக்கும் அவருடைய ஆவேச வாதங்கள் இந்தியாவைத் தாண்டியும் இன்று அவர் மீது கவனம் குவிக்கின்றன.

இந்த மக்களவைக்குப் பல முக்கியமான ஆளுமைகளைத் தமிழகம் அனுப்பியிருக்கிறது. முக்கியமான விவாதங்களில் அவர்கள் பங்கெடுக்கின்றனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக மோசமான முன்னுதாரணம்தான் தேசிய அளவில் அதிகம் தமிழகத்தைப் பிரநிதித்துவப்படுத்தியது. வேலூர் தொகுதியின் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுகவின் கதிர் ஆனந்த் துரைமுருகன் தன்னுடைய கன்னிப்பேச்சில் வெளிப்படுத்திய கட்சி மற்றும் குடும்ப விசுவாசம்; அவையில் உள்ளவர்கள் அத்தனை பேரையும் நெளியவைத்தது. இதற்குக் கொஞ்சமும் குறைவில்லாதது மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் நவநீதகிருஷ்ணனின் ‘காஷ்மீர் பியூட்டிஃபுல் காஷ்மீர்...’ திரைப்படப் பாடல்.

தமிழகத்தின் இரு திராவிடக் கட்சிகளுக்குமே நாடாளுமன்றத்துக்கு நல்ல உறுப்பினர்களை அனுப்பிவைத்த பாரம்பரியம் உண்டு. நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த உரைகளுக்கு அண்ணாவிடமிருந்து உதாரணங்களைத் தொடங்கலாம். அதேபோல, மிக மோசமான உதாரணங்களுக்கும் இரு கட்சிகளிலுமே குறைவில்லை. விஷயம் என்னவென்றால், நாடாளுமன்ற விவாதங்கள் நாளுக்கு நாள் தீவிர முக்கியத்துவம் பெற்றுவருகின்றன.

தினம் ஒரு சட்ட முன்முடிவு

2019-ல் பதினேழாவது மக்களவை பதவி ஏற்றுக்கொண்ட பிறகு கூடிய முதல் கூட்டத்தில் 38 சட்ட முன்வடிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவற்றில் 28 சட்ட முன்வடிவுகளுக்கு மக்களவையிலும் மாநிலங்களவையிலும் ஒப்புதல் அளிக்கப் பட்டிருக்கின்றன. இந்தச் சட்ட முன்வடிவுகள் எதுவும் விரிவாக விவாதிக்கப்படுவதற்காக நாடாளுமன்றக் குழு எதற்கும் அனுப்பப் படவில்லை. மாநிலங்களவையில் 35 அமர்வுகளில் 31 சட்ட முன்முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலான சட்ட முன்வடிவுகள் மூன்றிலிருந்து நான்கு மணி நேர விவாதத்திலேயே ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டன.

இந்திய அரசமைப்புச் சட்டத்தை இயற்றும்போது அரசமைப்புச் சட்ட அவையில் மூன்று முறை வரைவுகள் முன்வைக்கப்பட்டு விவாதங்கள் நடந்த பின்னரே இறுதி வடிவம் அளிக்கப்பட்டன. அதனாலேயே உலகளவில் எழுதப்பட்ட மிகப் பெரிய அரசமைப்புச் சட்டத்தைப் பெற்றிருக்கிறோம் என்று பெருமை பேசிக்கொண்டிருக்கிறோம். அத்தகைய அரசமைப்புச் சட்டத்தின் அடியொற்றியே நாடாளுமன்ற அவைகளை நாம் உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். இயற்றப் படுகிற எந்தவொரு சட்டமும் குறைந்தபட்சம் இரண்டு தடவை யாவது விவாதிக்கப்பட வேண்டும் என்பதுதான் இரண்டு அவைகள் இடம் பெற்றிருப்பதன் நோக்கம். ஆனால், மக்களவையையும் மாநிலங்களவையையும் பெரும்பான்மையைச் சோதிக்கிற இடமாகவே மாற்றிக்கொண்டிருக்கிறோம்.

இயந்திர வேகத்தில் இப்படி தினம் தினம் புதிய சட்ட முன்வடிவுகள் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்படும்போது ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு வேலை சுலபமாக முடிந்துவிடுகிறது. ஆனால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொரு சட்டத்தின் முன்வடிவையும் மேலோட்டமாக வாசித்து முடிப்பதற்குள் கூட்டத்தொடரே முடிந்துவிடக்கூடும். அதிலும், தமிழகத்தைப் போன்ற தேசிய அரசியலில் கூட்டாட்சி குறித்த ஒரு மாற்றுப்பார்வையை முன்வைத்து இயக்கம் நடத்திக்கொண்டிருக்கும் மாநிலத்தில், சட்ட முன்வடிவுகள் குறித்தும் அரசின் திட்டங்கள் குறித்தும் நிதிநிலை அறிக்கை குறித்தும் தங்கள் ஆதரவை மட்டுமல்ல, அதற்கான விமர்சனத்தைச் செய்யவும் இரவு பகலாக உழைக்க வேண்டியிருக்கிறது.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஏறக்குறைய ஒரு ஆய்வாளரைப் போல செயல்பட வேண்டியிருக்கிறது. இந்த அவசியத்தை மறுக்க முடியாமல்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆய்வு உதவி யாளர்களையும் நியமிக்கிறார்கள். திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, மாற்றுப்பாலினர் குறித்த தனது தனிநபர் சட்ட முன்வடிவை இப்படி ஆய்வு மாணவர்களுடன் இணைந்து உருவாக்கியதை ஓர் உதாரணமாகச் சொல்லலாம்.

உறுப்பினர்களுக்குக் கூடுதல் பொறுப்பு

மக்களவை உறுப்பினர்கள் தனது தொகுதியின் பிரதிநிதிகள் என்பதால் தொகுதி சார்ந்த பணிகளுக்கும் கணிசமான நேரத்தை ஒதுக்க வேண்டியிருக்கிறது. ஒப்பீட்டளவில் மாநிலங்களவை உறுப்பினர்கள் இந்தப் பொறுப்பிலிருந்து கொஞ்சம் விலகி நிற்கிறார்கள். அரசமைப்புச் சட்டத்தின்படி பண மசோதாவைத் தவிர மற்ற விஷயங்களில் மக்களவைக்குப் பல வகையிலும் இணையானது மாநிலங்களவை. அதன் 250-வது அமர்வையொட்டி துணைக் குடியரசுத் தலைவர் வெளியிட்ட நூலில் மாநிலங்களவையின் இதுவரையிலான செயல்பாடுகளைப் பற்றி பட்டியலிடப்பட்டிருக்கிறது.

அரசமைப்புச் சட்டத் திருத்தங்கள் உட்பட இதுவரை ஐந்து சட்ட முன்வடிவுகள் மக்களவையால் நிறைவேற்றப்பட்ட பிறகு, மாநிலங்களவையால் ஒப்புதல் பெறாமல் போயிருக்கின்றன. மக்களவையால் நிறைவேற்றப்பட்ட 120 சட்ட முன்வடிவுகளில் மாநிலங்களவை திருத்தங்களை மேற்கொண்டிருக்கிறது.

மக்களவையில் இயற்றப்படுகிற சட்டங்களை மீண்டும் ஒரு முறை மாநிலங்களவையில் நிறைவேற்றுவது ஒரு சடங்கு அல்ல. மாறாக, மீண்டும் ஒருமுறை அங்கு விவாதிக்கப்பட வேண்டும். ஆகவே திமுக, அதிமுக இரு கட்சிகளும் இம்முறை மாநிலங்களவைக்கு உறுப்பினர்களை அனுப்புகையில் கட்சி விசுவாசத்தைத் தாண்டி, விவாத ஆற்றலுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அண்ணா தொடங்கிய பாரம்பரியம் மீட்டெடுக்கப்பட வேண்டும்.

- செல்வ புவியரசன்,

தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்