2024இல் நடைபெற்ற குடிமைப் பணித் தேர்வை இந்திய அளவில் 5.83 லட்சம் பேர் எழுதியிருந்த நிலையில், 1,009 பேர் (2.5%) முதன்மைத் தேர்வுக்குத் தகுதி பெற்றுள்ளனர். அதேவேளையில், தமிழகத்தைச் சேர்ந்த 57 பேர் இத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகக் குடிமைப் பணித் தேர்வில் தமிழகம் எதிர்பார்த்த அளவில் சோபிக்காத நிலையில், இந்த முறை நம்பிக்கையூட்டும் வகையில் தேர்வு முடிவுகள் அமைந்திருக்கின்றன.
அரசின் திட்டங்கள் / கொள்கைகள் உருவாக்கத்திலும் அமல்படுத்தலிலும் குடிமைப் பணி அதிகாரிகளின் பங்களிப்பு பிரதானமானது. 1960கள் தொடங்கிப் பல பத்தாண்டுகளாகத் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் குடிமைப் பணி அதிகாரிகளாகக் கோலோச்சினர். எனினும், கடந்த சில ஆண்டுகளில் நிலவரம் மாறிவிட்டது. 2014இல் குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 11% தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். 2017இல் இது 7% ஆகவும், 2019இல் 6.69% ஆகவும் குறைந்தது. 2020இல் 5% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். 2023இல் குடிமைப் பணித் தேர்வில் தமிழகத்தில் முதன்மையான மாணவராகத் தேர்வானவர், தேசிய அளவில் 107ஆவது இடத்தில்தான் இருந்தார். உயர் கல்வி மொத்தச் சேர்க்கை விகிதத்தில் (ஜிஇஆர்) இந்தியாவிலேயே தமிழகம் முதன்மையான இடத்தில் இருந்தும், குடிமைப் பணித் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறாதது கவலை அளிக்கும் விஷயமாக நீடித்தது.
இந்தச் சூழலில், 2024 குடிமைப் பணித் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் முன்பைவிடச் சிறப்பாகப் பரிமளித்திருக்கிறார்கள். 2023இல் தமிழகத்திலிருந்து 45 பேர் தேர்வாகியிருந்த நிலையில், 2024இல் 57 பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இவர்களில் 50 பேர் தமிழக அரசு முன்னெடுத்திருக்கும் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகையுடன் பயின்று பயிற்சி எடுத்துக்கொண்டவர்கள். இவர்களில் 18 பேர், தமிழக அரசு நடத்தும் இலவச உண்டு உறைவிடப் பயிற்சி மையங்களில் தங்கிப் பயின்றவர்கள். இந்த முறை, தேசிய அளவில் வெற்றிபெற்ற முதல் 50 மாணவர்களில், ஐந்து பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த வெற்றிக்கு ‘நான் முதல்வன்’ திட்டம் முக்கியக் காரணமாக இருந்திருப்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின்கீழ் இயங்கிவரும் ‘நான் முதல்வன்’ போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக, குடிமைப் பணித் தேர்வின் முதல் நிலைத் தேர்வை எழுதுபவர்களுக்கு மாதம் தலா ரூ.7,500 என 10 மாதங்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதன்மைத் தேர்வு எழுதுபவர்களுக்கு ரூ.25,000 வழங்கப்படுகிறது. நேர்முகத் தேர்வு வரை செல்பவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்று இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசு தெரிவித்திருப்பது கவனிக்கத்தக்கது. பயிற்சி மாணவர்களிடம் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், தங்கள் பணி அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட ஓராண்டிலேயே இத்தகைய வெற்றி கிடைத்திருப்பது எதிர்காலம் குறித்து மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது.
பொதுவாக, குடிமைப் பணித் தேர்வுகள் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை எழுதும் மாணவர்களில் பெரும்பாலானோருக்கு மீண்டும் மீண்டும் தேர்வுக்குத் தயாராகும் வகையில் குடும்பப் பின்னணியோ, பொருளாதாரச் சூழலோ அமைவதில்லை. இப்படியான சூழலில், குடிமைப் பணித் தேர்வு எழுதுபவர்களை ஊக்குவிக்கும் திட்டங்கள் விரிவுபடுத்தப்பட வேண்டும். குடிமைப் பணியின் சிறப்புகள் குறித்து பள்ளி வகுப்புகளிலும் உயர் கல்வி நிறுவனங்களிலும் மாணவர்களுக்கு ஆர்வம் ஊட்டப்பட வேண்டும். பாடக் கல்வியுடன், சிந்திக்கும் திறன், பகுப்பாய்வுத் திறன் போன்றவற்றையும் வளர்த்தெடுக்க வேண்டும். அது குடிமைப் பணிகளில் தமிழர்கள் அதிகம் இடம்பெறுவதை நிச்சயம் உறுதிசெய்யும்!