குறைவான கட்டணத்தில் மக்களுக்குப் பாதுகாப்பான பயணத்தை வழங்குவது மட்டுமல்லாமல், கழிப்பறை வசதிகளைக் கொண்டிருப்பதும் ரயில் சேவையின் தனிச்சிறப்பு. ஆனால், ரயிலை ஓட்டும் லோகோ பைலட்களுக்கும் உதவி லோகோ பைலட்களுக்கும் இயற்கை உபாதைகளைத் தீர்த்துக்கொள்ளக் கழிப்பறை வசதி இல்லை என்பது வருந்தத்தக்க முரண்பாடு.
இந்தியாவில் ஏறக்குறைய 15,000 ரயில் இன்ஜின்கள் இயக்கப்படுகின்றன; ஏறக்குறைய 80,000 ஓட்டுநர்களும் 57,000 உதவி ஓட்டுநர்களும் பணிபுரிகின்றனர். குறுகிய நேரப் பயணம் எனில், வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையக் கழிப்பறையையோ, பயணிகளின் கழிப்பறையையோ இவர்கள் பயன்படுத்த வேண்டியிருக்கிறது; இடைநிறுத்தங்கள் இல்லாப் பயணம் எனில், குறைந்தபட்சம் ஆறு மணி நேரமாவது காத்திருக்க வேண்டும்.
ரயில் நிலையங்களின் கழிப்பறையை ஓட்டுநர்கள் பயன்படுத்துவதால் ரயிலை இயக்குவது தாமதமடையும்போது, நிர்வாகத்துக்கு விளக்கம் கூற வேண்டியுள்ளது. இன்ஜின் அறையில் சிறுநீர் கழிக்கும் வசதி என்பது ஓட்டுநர்களின் 172 ஆண்டுகாலக் கோரிக்கை.
1988லிருந்து பெண்களும் ரயில் ஓட்டுநர்களாக நியமிக்கப்பட்ட நிலையில், ஓட்டுநர்களுக்குக் கழிப்பறை வசதி வேண்டும் என்கிற கோரிக்கை தீவிரமடைந்தது. 2016இல் பயோ டாய்லெட் பொருத்தப்பட்ட இன்ஜின் அறிமுகப்படுத்தப்பட்டது. ரயில் ஓட்டுநர் அமைப்புகள் இதை வரவேற்றாலும், இதிலுள்ள சில கட்டுப்பாடுகள் விமர்சிக்கப்பட்டன. உண்ணவும் கழிப்பறையைப் பயன்படுத்தவும் தங்களுக்கு இடைவேளை வேண்டும் என்பதும் ரயில் ஓட்டுநர்களின் நெடுங்காலக் கோரிக்கையாக உள்ளது.
இந்த நிலையில், ரயில் ஊழியர்களின் கோரிக்கைகள், சேவையின் தரம் குறித்த உயர்மட்டக் குழுக் கூட்டம் ஏப்ரல் முதல் வாரத்தில் நடைபெற்றது. ரயில்வேயும் அதன் ஆராய்ச்சிப் பிரிவான ஆர்டிஎஸ்ஓவும் கூட்டத்தில் சில பரிந்துரைகளைச் சமர்ப்பித்துள்ளன. அவற்றின்படி, ஓட்டுநர்களுக்கு இடைவேளை வழங்குவது செயல்பாட்டு நோக்கில் சாத்தியமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதுகாப்பான இயக்கத்தை உறுதி செய்வதற்கும் விபத்துக்குப் பிந்தைய ஆய்வுகளின்போது ஊழியர்களுக்கு உதவுவதற்கும் இன்ஜின் அறைக்குள் ‘குரல் - காட்சிப் பதிவுக்கான தொழில்நுட்ப அமைப்பு’ நிறுவப்படவுள்ளது. இந்தத் திட்டம் தங்களது சுதந்திரத்துக்கு எதிரானது என ஊழியர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். அதிவேக ரயில்களின் வேகம் 110 கி.மீலிருந்து 130 கி.மீ. ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஓட்டுநர்களின் மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்கிற கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ், ரயில்வே துறையிடம் பிரத்யேகமாகச் சில கேள்விகளை முன்வைத்ததில் கிடைத்த பதில்கள் ஏப்ரல் 21 அன்று வெளியிடப்பட்டன. இதுவரை 883 பழைய இன்ஜின்களில் சிறுநீர் கழிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் புதிய இன்ஜின்கள் இதே வசதியுடன் தயாரிக்கப்படுவதாகவும் ரயில்வே துறை தனது பதிலில் தெரிவித்துள்ளது.
இன்ஜின் அறைக்குள் மிகை வெப்பநிலையால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க இதுவரை 7,075 இன்ஜின்களில் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் ஆறுதல் அளிக்கின்றன. ஓட்டுநர்களுக்கு அடிப்படைத் தேவைகளுக்கான இடைவேளை அளிப்பதில் ரயில்வே காட்டும் இறுக்கமான நடைமுறை விலகுவதும் அவசியம்.
கடந்த பத்து ஆண்டுகளில் நிகழ்ந்த விபத்துகளில், 485 விபத்துகளுக்கு மனிதத் தவறே காரணம் என ரயில்வே தரப்பில் கூறப்படுகிறது. ஓட்டுநர்கள் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைவிடக் கூடுதலாகப் பணிபுரிய வேண்டிய கட்டாயம், இயற்கைத் தேவைகளைத் தீர்ப்பதில் உள்ள சங்கடங்கள் போன்றவையும் விபத்துகளுக்கு வழிவகுத்திருக்கலாம். 2024-25 நிதியாண்டில் இந்தியா ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் 1,681 இன்ஜின்களைத் தயாரித்து, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை முந்தியது.
ஆனால் இந்த நாடுகளில் கழிப்பறையுடன் கூடிய இன்ஜின்களே வடிவமைக்கப்படுகின்றன. போதிய ஓய்வும் இடைவேளையும் அங்குள்ள ஓட்டுநர்களுக்கு அளிக்கப்படுகின்றன. அந்த நடைமுறை இந்தியாவிலும் சாத்தியமாவது அவசியம். பயணிகளுக்குத் தரமான சேவை அளிப்பது, ரயில்வேயின் வருவாயை அதிகரிப்பது ஆகியவற்றைப் போலவே, ஓட்டுநர்கள், உதவி ஓட்டுநர்கள் ஆகியோரின் நலனிலும் ரயில்வே துறை அக்கறை செலுத்த வேண்டும்.