சிறப்புக் கட்டுரைகள்

பிட்டி தியாகராயர் நினைவு நூற்றாண்டு: நீதிக்கட்சியின் தந்தை

வெற்றிச்செல்வன்

சென்னையில் உள்ள தியாகராய நகர் என்கிற பெயருக்குச் சொந்தக்காரரான பிட்டி தியாகராயர் நீண்ட காலப் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டவர். ஏறத்தாழ நூறாண்டு களுக்கு முன்பு தோன்றிய பார்ப்பனரல்லாதார் இயக்கத்துக்குக் கால்கோள் இட்டவர்களுள் முக்கியமானவர்.

1852 ஏப்ரல் மாதம் 27ஆம் நாள் பிறந்த தியாக​ராயர், சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். படிப்பை முடித்த பின்னர் நெசவு, தோல் ஏற்றுமதி உள்ளிட்ட தொழில்களை மேற்கொண்ட தியாக​ராயருக்கு அரசியலில் ஆர்வம் பிறந்தது. 1884ஆம் ஆண்டு ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் ஆசிரியர் ஜி.சுப்​பிரமணியம் உள்ளிட்ட பெருமக்​களால் சென்னை மகாஜன சபை என்கிற அமைப்பு தொடங்​கப்​பட்டது. அதன் உருவாக்​கத்தில் தியாக​ராயர் முக்கியப் பங்கு வகித்​தார்.

மக்கள் பிரச்சினைகளை அரசுக்கு எடுத்​துச்​செல்லும் பணியைச் செய்த இந்த அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்​பின​ராகத் திறம்படச் செயலாற்றினார் தியாக​ராயர். இன்றும் இந்தச் சபையின் கட்டிடம் ‘தி இந்து’ நாளிதழ் அலுவல​கத்தின் அருகே இருப்​பதைக் காணலாம். சிறிது காலம், காங்கிரஸ் கட்சி​யிலும் இணைந்து பணியாற்றிய தியாக​ராயர், 1887ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற மூன்றாவது அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் கலந்து​கொண்​டார்.

மாநகராட்சிப் பணிகள்: சென்னை மாநகராட்​சியின் உறுப்​பினராக 1882ஆம் ஆண்டு தேர்ந்​தெடுக்​கப்பட்ட தியாக​ராயர் ஏறக்குறைய நாற்ப​தாண்​டுகள் அப்பொறுப்பில் இருந்​தார். மேலும் அதன் தலைவராகவும் நான்கு ஆண்டுகள் பணியாற்றி​னார். அந்த வேளையில், நகரில் கழிவுநீர் அகற்றும் திட்டங்கள், பொதுச் சுகாதாரம், நகர விரிவாக்கம் என்று பல்வேறு திட்டங்​களைச் செயல்​படுத்​தி​னார். சூளைப் பகுதி, மாம்பலம் ஆகிய பகுதி​களைச் சீர்படுத்தி விரிவுபடுத்தும் பணிகளை மேற்கொண்​டார். எனவேதான் மாம்பலம் பகுதிக்குத் தியாகராய நகர் என்று பெயரிட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்​றப்​பட்டு, அவ்வாறே பெயரும் சூட்டப்​பட்டது.

கல்விப் பணிகள்: தம்முடைய சொத்தில் ஒரு பங்கைக் கல்விப் பணிக்காக அளித்தவர் தியாக​ராயர். அவரால் தொடங்​கப்பட்ட நடுநிலைப் பள்ளி பின்னாளில் கல்லூரியாக வளர்ச்சி பெற்றது. பச்சையப்பன் அறக்கட்​டளையின் உறுப்​பின​ராக​வும், தலைவராகவும் இருந்த தியாக​ராயரின் முயற்​சி​யால், அறக்கட்டளை நிதியின் மூலம் செங்கல்​வ​ராயர் தொழில்​நுட்பப் பயிற்சிக்​கூடம் தொடங்​கப்​பட்டது. தியாக​ராயரின் கல்விப் பணிகளில் இன்றளவும் நினைவு​கூரப்​படுவது அவரது மதிய உணவுத் திட்டம்.

பள்ளி​களில் மாணவர் வருகையை அதிகரிக்கும் நோக்கத்​துடன் இத்திட்டம் கொண்டு​வரப்​பட்டது. முதலில் ஒரு பள்ளியில் அறிமுகப்​படுத்​தப்பட்ட இத்திட்டம், பின்னர் ஐந்து பள்ளி​களுக்கு விரிவுபடுத்​தப்​பட்டது. இதன் பயனாக, 1922-23இல் 811ஆக இருந்த இந்த ஐந்து பள்ளி​களின் மாணவர் எண்ணிக்கை 1924-25இல் 1,671ஆக உயர்ந்தது.

கோயில் திருப்​பணிகள்: தியாக​ராயர் தமது வாழ்நாளில் சென்னையின் பார்த்​த​சாரதி கோயில், கபாலீசுவரர் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்​களுக்குத் திருப்பணி செய்துள்ளார். அதேவேளை நீதிக்​கட்சி ஆட்சி​யின்​போது, கோயில்களை நிர்வகிக்கும் நோக்கில் கொண்டு​வரப்பட்ட இந்து சமய அறநிலையத் துறைச் சட்டம் நிறைவேறு​வ​திலும் இவருடைய பங்களிப்பு குறிப்​பிடத்​தக்கதாக இருந்தது.

நீதிக்​கட்​சியின் தோற்றம்: 1916ஆம் ஆண்டு நவம்பர் 20 அன்று சென்னை வேப்பேரியில் நடைபெற்ற ஒரு கூட்டம் தமிழ்​நாட்டின் வரலாற்றில் குறிப்​பிடத்தக்க ஒரு நிகழ்வாக அமைந்தது. அதில் தியாக​ராயர், டாக்டர் நடேசன், டாக்டர் தரவத்து மாதவன் (டி. எம்.நாயர்), எம்.சி.​ராஜா, அலமேலு மங்கைத் தாயாரம்​மாள், டாக்டர் உஸ்மான் சாயபு உள்ளிட்ட பார்ப்​பனரல்லாத தலைவர்கள் பலர் கலந்து​கொண்​டனர்.

இக்கூட்​டத்​தில்தான் ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ என்று அழைக்​கப்பட்ட நீதிக்​கட்சி தோன்று​வதற்கான அடித்தளம் இடப்பட்டது. இதனையடுத்து திராவிட இயக்கத்தின் முதல், முக்கிய ஆவணமாகக் கருதப்​படும் பார்ப்​பனரல்​லாதார் அறிக்கை தியாக​ராயரின் கையொப்​பத்​துடன் 20.12.1916 அன்று வெளியானது. கல்வி, வேலைவாய்ப்பு​களில் பார்ப்​பனரல்​லா​தாரின் நிலை குறித்து விவரித்த இவ்வறிக்கை, அவர்களுடைய முன்னேற்​றத்​துக்கான வழிமுறைகள் என்ன என்பதைப் பற்றியும் விவாதித்​திருந்தது.

இதனைத் தொடர்ந்து 1917 டிசம்பர் 28, 29 நாட்களில் சென்னை அண்ணா சாலையில் நீதிக்​கட்​சியின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. இதன் வரவேற்புக் குழுத் தலைவராக தியாக​ராயர் பணியாற்றி​னார். தமது மாநாட்டு உரையில், ராமானுஜர், பசவய்யா போன்றோரை மேற்கோள் காட்டிப் பேசிய தியாக​ராயர், பார்ப்​பனரல்​லாதார் முன்னேற வேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்​தி​னார்.

நீதிக்​கட்சி சென்னை மாகாணத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த​போது, முதலமைச்சர் பதவி இவரைத் தேடி வந்தது. எனினும் அப்பொறுப்பை ஏற்க மறுத்து கடலூர் சுப்ப​ராயலு முதலமைச்​ச​ராவதற்குப் பரிந்துரைத்​தார். இவ்வாறு பல்வேறு சிறப்பு​களைப் பெற்ற தியாக​ராயர், 28.04.1925இல் மறைந்​தார்.

தியாக​ராயர் மறைந்த​போது, வேறு ஒரு தலைவர் நிரப்ப முடியாத இடத்தை பார்ப்​பனரல்​லாதார் இயக்கம் இழந்தது என்று ‘தி இந்து’ நாளிதழ் எழுதியது. தற்போதைய சென்னை நகரம் தியாக​ராயரின் உழைப்பின் பரிணாமம் என்று கூறுவது மிகையாகாது என்று திரு.​வி.கல்​யாணசுந்​தரனார் தமது ‘நவசக்தி’ இதழில் பாராட்டி இருக்​கிறார். தியாக​ராயர் மறைந்து நூறாண்​டுகள் ஆனபோதும், சமூகநீதித் தளத்தி​லும், நிர்வாகத் தளத்திலும் அவரது பணிகள் என்றென்றும் நினைவு​கூரப்​படும்.

ஏப்ரல் 28: தியாக​ராயரின் நூறாவது நினைவு நாள்​

- தொடர்புக்கு: vetriblackshirt@gmail.com

SCROLL FOR NEXT