அன்றாடம் என்பதே இயற்கையின் காலப் பரிமாணம் ஆகும். மானுடம் நினைவுசேகரம், அறிவுசேகரம் போன்றவற்றால் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று பிரித்து, வரலாற்றுத் தொடர்ச்சியை உருவாக்கிக்கொள்கிறது. அதன் விளைவுகளைத் தத்துவார்த்த மானுடவியல் நோக்கில் ஆராயும் கட்டுரைத் தொடர் இது.
உடல் எவ்வாறு இயங்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்காகத்தான் மனித உடல் புலனுலகத்தை ஏற்படுத்திக்கொள்கிறது. அதாவது ஓர் ஆபத்து தன்னை நோக்கி வருகிறது என்றால், எவ்வளவு வேகமாக ஓட வேண்டும் அல்லது தனக்குத் தேவையான ஒரு பொருள், தான் வேட்டையாடும் விலங்கு எவ்வளவு தொலைவில் இருக்கிறது; அதனை அடைய எவ்வளவு ஆற்றலைச் செலவிட்டு ஓட வேண்டும் என்பன போன்றவற்றைத் தீர்மானம் செய்வதற்காக ஆற்றலைக் காலமாகவும், காலத்தை இடமாகவும் காட்சிப்படுத்தும் புலனுலகம் உருவாகிறது.
ஒவ்வோர் உயிரினமும் தன் இயக்கத்துக்கு ஏற்பப் புலனுலகை உருவாக்கிக்கொள்கிறது. நான் ஒரு அறையில் நுழைந்து விளக்கைப் போட்டால் அங்கே சுவரில் ஒரு பல்லி, தான் விழுங்கப்போகும் பூச்சியை நோக்கித் தெளிவாக அசைவுகளை மேற்கொள்கிறது. நான் நுழைந்ததையோ, விளக்கைப் போட்டதையோ அது பொருட்படுத்துவதில்லை; அதன் புலனுலகில் இச்செயல்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை.
அதே போலத்தான் மானுடப் புலனுலகும். இது அனைத்து மனிதர்களுக்கும் பொதுவாக இருப்பதால் ‘புறவயமான’ உண்மை என்கிறோம். அந்தப் புறவயம், மானுடப் பொதுவான இயங்குதளம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதனால் தனக்குப் புலப்படும் உலகில் பயணிப்பது என்பது மானுட உயிரியின் இயல்பு.
அன்றாடம் என்கிற காலப்பரிமாணத்தில் பயணம் என்பது உடல் எவ்வளவு தூரம் செல்ல முடியுமோ, அவ்வளவு தூரம் செல்வதாகவே இருந்துள்ளது. ஆப்பிரிக்கக் கண்டத்தில் உருவெடுத்த ஆதிமனிதர்கள் கூட்டம் கூட்டமாகப் பூவுலகின் நிலப்பரப்பெங்கும் பரவியதாகவே இன்றைய மரபணு ஆய்வுகள் அனுமானிக்கின்றன. இவ்வாறான பயணங்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளில் நிகழ்ந்த இடப்பெயர்வுகள். தலைமுறை, தலைமுறையாகப் பயணப்பட்டு பூமிப்பரப்பின் பல்வேறு பகுதிகளிலும் குடியேறியிருக்கிறார்கள்.
உழுதுண்டு வாழும் சமூகங்கள் தோன்றிய பிறகுதான் ஒரே ஊரில் குடியிருப்பது என்கிற வழக்கம் தோன்றியது. உற்பத்தி பெருகி வர்த்தகம் தோன்றியபோது, உற்பத்திப் பொருள்களைக் கொண்டுசெல்லப் போக்குவரத்து பெருகியது. பல்வேறு விலங்குகள் இழுக்கும் வண்டிகள், நதிகளில் செல்லும் படகுகள், கடலில் செல்லும் கப்பல்கள் எனப் பல்வேறு போக்குவரத்து முறைகள் தோன்றின. இவையனைத்தும் மனிதர்கள், விலங்குகள் உடலாற்றலால் இயங்கப் பெறும் வாகனங்களாகவே இருந்தன. மனித உடலின் இயக்கம் அன்றாட வெளியிலிருந்து அதிகம் வேறுபடவில்லை.
தானியங்கி இயந்திர வாகனங்கள்: ஓர் இயந்திரத்தின் உடலினுள் எரிபொருள்களை எரித்து, அதனால் உருவாகும் ஆற்றலைக் கொண்டு அதனுடன் பிணைக்கப்பட்ட சக்கரங்களை இயக்கும் சாத்தியம் பதினெட்டாம் நூற்றாண்டில் வடிவமைக்கப்பட்டது. இந்த உள்ளெரி ஆற்றல் இயந்திரம் (internal combustion engine) பெரும் தொழிற்சாலைகளில் இயந்திரங்களை இயக்கவும், தானாகவே ஆற்றல் பெற்று நகரும் வாகனங்களை உருவாக்கவும் வகை செய்தது. இயந்திரங்கள் மூலம் பெருமளவு உற்பத்தி, இயந்திரங்கள் மூலம் பண்டங்களைத் தொலைதூரங்களுக்குக் கொண்டுசெல்லுதல் ஆகிய இரண்டும் சேர்ந்து மானுட வாழ்வை அடியோடு புரட்டிப் போட்டன.
நீராவி ரயில்கள், கப்பல்கள், பின்னர் பெட்ரோல், டீசல் நிரப்பிய கார்கள், பேருந்துகள், லாரிகள் என்று அதிகரித்த பயண வேகம், வானில் பறக்கும் விமானங்களை உற்பத்தி செய்ததால் முந்தைய காலங்களிலிருந்து இருபதாம் நூற்றாண்டை முற்றிலும் துண்டித்தது என்றால் மிகையாகாது. ஏனெனில் மனித உடலின் புலனுலகைக் கட்டமைக்கும் ஆற்றல்-இயக்கம்-புறவெளி என்பதைக் கடந்து மனித உடல் மிக வேகமாக உலகில் பயணப்படும் சாத்தியங்கள் உருவாயின.
மனித உடலின் புலனுலகை மீறிய பயணம், நுகர்வின் சாத்தியங்களைப் பன்மடங்கு அதிகரிப்பதாகவே உணரப்பட்டது. கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள்: ‘தித்திக்கத் தித்திக்கப் பேசிக்கொண்டு / திக்குகள் எட்டிலும் ஓடிக்கொண்டு / வரவை மறந்து செலவு செய்து / உயரப் பறந்து கொண்டாடுவோம்... காலை ஜப்பானில் காபி/மாலை நியூயார்க்கில் காபரே / இரவில் தாய்லாந்தில் ஜாலி / இனிமேல் நமக்கென்ன வேலி...உலகம் நமது பாக்கெட்டிலே/வாழ்க்கை பறக்கட்டும் ராக்கெட்டிலே’.
இதைவிட சுருக்கமாகப் பயணத்தின் வேகத்தையும், நுகர்வு-புலன் இன்பப் பெருக்கத்தையும் இணைத்துக் கூற முடியாது. உதாரணமாக, உங்கள் வீட்டுக்கு அருகே ஒரு கார்ப்பரேட் சங்கிலித் தொடர் பல்பொருள் அங்காடிக் கிளையிருந்தால் அங்கே நீங்கள் ஃபிஜி ஆப்பிள், செர்ரி பழம், ஸ்டிராபெர்ரி என்று உங்கள் நிலப்பரப்புக்குத் தொடர்பற்ற பல்வேறு பொருள்களை வாங்கலாம்.
இதன் மறுபக்கம்தான் வான்வெளித் தாக்குதல்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள். நீங்கள் போரில் கொல்லப்பட, போர் வீரராக இருக்க வேண்டியதில்லை. எளிய விவசாயியாக, தொழிலாளியாக இருந்தாலும் எங்கிருந்தோ வீசுப்படும் குண்டுகளில் நீங்கள் கொல்லப்பட முடியும்; சிதறிப் போக முடியும்; காஸா, உக்ரைனில் நிகழ்வதுபோல. பயணத்தின் வேகம் அதிகரிக்க, அதிகரிக்க நுகர்வும், ஆதிக்கப் போட்டியும், வன்முறையும் அதிகரிக்கின்றன.
காந்தியின் எதிர்க்குரல்: தானியங்கி இயந்திர வேகத்தை, அதன் மூலம் பெருகும் உற்பத்தி, நுகர்வுப் பெருக்கம் ஆகியவற்றை உலகமே கொண்டாடிய காலத்தில், அதற்கு நேரதிராகச் சிந்தித்த ஒருவராக காந்தி இருந்தார். அவருடைய ‘ஹிந்த் ஸ்வராஜ்’ நூலில், ‘மனிதன் வேகமாகப் பயணம் செய்ய வேண்டும் என்று கடவுள் நினைத்திருந்தால் கால்களுக்குப் பதில் சக்கரங்களைக் கொடுத்திருப்பார்’ என எழுதினார். புலன் இன்பத் திளைப்பும், வன்முறையும் நாணயத்தின் இருபக்கங்கள் என்று அவர் கருதினார்.
‘இங்கிலாந்து என்ற சிறு தீவு தொழில்மயமானதே உலகில் இப்படியொரு தாக்கத்தை ஏற்படுத்தினால், இந்தியாவும் சீனாவும் தொழில்மயமானால் வெட்டுக்கிளிக் கூட்டம் தாக்கிய வயல்போல உலகம் ஆகிவிடும்’ என்றார். அவரது குரல் எடுபடவில்லையானாலும், சுற்றுச்சூழல் சீர்கேடு அதனை மெய்ப்பித்து வருகிறது. ஆனால், இது எலான் மஸ்க்கின் காலம். அவரைப் போன்றவர்கள் பூவுலகில் சுற்றச்சூழல் சீர்கெடுவதற்குள், செவ்வாய்க் கோளில் குடியேறிவிடலாம் என்று நினைக்கிறார்கள். மானுடப் பயணம், ‘எங்கே செல்லும் இந்த பாதை?’ என்று தெளிவற்று இருக்கிறது.
- தொடர்புக்கு: rajankurai@gmail.com