ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் 266ஆவது தலைவரான போப் பிரான்சிஸின் (88) மறைவு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களைத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. உலக நாடுகளின் தலைவர்கள் போப் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருக்கின்றனர். அனைத்துத் தரப்பு மக்களையும் அரவணைக்கும் தன்மை கொண்டிருந்த போப் பிரான்சிஸ், போர்களுக்கு எதிராகத் தொடர்ந்து பேசிவந்தார். அமைதியை விரும்புபவர்கள் மத்தியில், அவரது மறைவு பெரும் சோர்வை ஏற்படுத்தியிருப்பதில் ஆச்சரியம் இல்லை.
சிரியாவைச் சேர்ந்த போப் கிரிகோரி III பொ.ஆ.741இல் மறைந்த பிறகு ஐரோப்பியர் அல்லாத ஒருவர் ரோமின் பிஷப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அந்த வகையில் போப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் லத்தீன் அமெரிக்கர் போப் பிரான்சிஸ். புனித பீட்டர் அரியணைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் யேசு சபையினரும் இவரே.
கத்தோலிக்கத் திருச்சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதல் கடந்த 12 ஆண்டுகளில் தன் செயல்கள் மூலம் பலரையும் வியக்கவைத்தார். போப்பின் அரியாசனத்தில் அமர்ந்தபடி கார்டினல்களை வரவேற்கும் வழக்கத்துக்கு மாறாக, நின்றபடி தனது கார்டினல்களை வரவேற்றார். ஆடம்பரத்தைவிடப் பணிவையே போப் பிரான்சிஸ் விரும்பினார். தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த ஆடம்பர வாகனமான லிமோசினைத் தவிர்த்து, கார்டினல்கள் பயன்படுத்தும் பேருந்தில் செல்வதைத் தேர்ந்தெடுத்தார்.
போப் பிரான்சிஸ் இருவேறு முனைகளிலும் செயல்பட்டவர். பாலியல் தொடர்பான விஷயங்களில் மரபார்ந்த கருத்துகளைக் கொண்ட பழமைவாதிகளோடு ஒத்த கருத்தைக் கொண்டிருந்தபோதும், சமூக நீதிக்கான தாராளவாதப் பார்வையால் முற்போக்காளர்களுடனும் இணக்கமான போக்கைக் கடைப்பிடித்தார்.
பழமைவாதமற்ற போப்பின் பின்னணி, அவர் வாடிகனுக்குப் புத்துயிர்ப்பு அளிப்பார் என்கிற நம்பிக்கையை மக்களிடையே விதைத்தது. போப் அவர்களை ஏமாற்றவில்லை. ஆனால், அவரது சில முற்போக்குக் கருத்துகளும் செயல்பாடுகளும் வாடிகன் அதிகாரவர்க்கத்தினர் மத்தியின் அவருக்கு எதிர்ப்பைச் சம்பாதித்துக்கொடுத்தன.
2001இல் அவர் கார்டினலாக நியமிக்கப்பட்டதிலிருந்தே, ஒரு மத குருவுக்கான அதிகார குணங்களைத் தவிர்த்து எளிமையை விரும்பும் சாதாரண மனிதர் எனப் பெயர் எடுத்தார். தனது புதிய பொறுப்புக்கான சிவப்பு - ஊதா நிற ஆடையைத் தவிர்த்து பாதிரியாருக்கான கறுப்பு ஆடையையே அணிந்தார். தனது பிரசங்கங்களில் அனைத்து மனிதர்களையும் உள்ளடக்கிய சமூகம் குறித்துப் பேசினார்.
மக்களின் ஏழ்மையைக் கண்டுகொள்ளாத அரசாங்கங்களை விமர்சித்தார். மரபுவழிக் கீழைத் திருச்சபையினுடனான ஆயிரம் ஆண்டுகாலப் பிணக்கைத் தீர்ப்பதில் பெரும் முயற்சிகளை மேற்கொண்டார். அதன் விளைவாக, 1054ஆம் ஆண்டில் நடந்த ‘பெரும் சமயப் பிரிவு’க்குப் பிறகு கான்ஸ்டாண்டைன்நோபிளின் தலைவர் முதல் முறையாக போப் பிரான்சிஸின் பதவியேற்பில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
எல்லாவற்றுக்கும் மேலாக உலக அமைதியை போப் பிரான்சிஸ் விரும்பினார். பல்வேறு மதப்பிரிவுகளைச் சேர்ந்தவர்களுடன் உரையாடினார். கியூபாவுடனான அமெரிக்காவின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இணக்கப்போக்கில் போப்பின் பங்கு முக்கியமானது. இஸ்ரேல், பாலஸ்தீன அதிபர்களை அமைதிக்கான தனது பிரார்த்தனையில் பங்கேற்க அழைத்தார். ‘நான் இஸ்லாமிய தீவிரவாதத்தைப் பற்றிப் பேசினால் கத்தோலிக்கத் தீவிரவாதத்தையும் பேச வேண்டியிருக்கும்’ என்றார்.
காஸாவில் போர் நிறுத்தம் வேண்டும், அமைதி திரும்ப வேண்டும் என்பதை போப் பிரான்சிஸ் தொடர்ந்து வலியுறுத்திவந்தார். தினமும் மாலையில் காஸாவின் கிறிஸ்தவர்களை அழைத்து நலம் விசாரிப்பதையும் அவர்களோடு உரையாடுவதையும் வழக்கமாக வைத்திருந்தார்.
நிமோனியாவின் தாக்குதலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் தனது ஈஸ்டர் உரையில் காஸா போர் நிறுத்தம் குறித்து வலியுறுத்தினார். போப் பிரான்சிஸின் இறுதி விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் பாலஸ்தீனத்திலும் இஸ்ரேலிலும் அமைதி திரும்புவதற்கான பணிகளில் உலக நாடுகள் ஈடுபடுவதுதான் அவருக்கான உண்மையான அஞ்சலியாக அமையும்.