சிறப்புக் கட்டுரைகள்

வெப்ப அலையும் சமூக நீதியும்!

அ.சங்கர் பிரகாஷ்

தமிழ்நாட்டில் கோடைக்காலம் எப்போதுமே கடுமையானது. ஆனால், காலநிலை மாற்றத்தால் தூண்டப்பட்ட வெப்ப அலைகள் இப்போது மிகவும் தீவிரமடைந்து, உடல்நலப் பாதிப்புகளுக்கும் சமூக நீதிப் பிரச்சினைகளுக்கும் வழிவகுத்திருக்கின்றன.

இவை பொருளாதாரத்தில் பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட மக்களையும், நகரங்களில் வெயிலில் உழைக்கும் தொழிலாளர்கள், பெண்கள், முதியோர், குழந்தைகள் என அனைவரையும் கடுமையாகப் பாதிக்கின்றன. பெரும்பாலான மக்கள் கான்கிரீட், அஸ்பெஸ்டாஸ், தகரத்தால் மேற்கூரை கொண்ட வீடுகளில்தான் வாழ்கின்றனர். கான்கிரீட் வீடுகள் பகலில் வெப்பத்தைக் கிரகித்து, இரவிலும் உட்புறத்தை வெப்பமாகவே வைத்திருக்கின்றன.

அஸ்​பெஸ்​டாஸ், தகரத்தால் ஆன கூரைகள் கொண்ட வீடுகளின் உள்ளே 35-40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவு​கிறது. சென்னை போன்ற பெருநகரங்​களில், நகர்ப்புற வெப்பத் தீவு விளைவு (Urban Heat Island Effect) இந்நிலையை மேலும் மோசமாக்கு​கிறது. கான்கிரீட் கட்டிடங்​களின் அதிகரிப்பும், மரங்கள் - பசுமைப் பரப்பின் குறைவும் கிராமப்பு​றங்​களைவிட நகரங்களை அதிக வெப்ப​முள்ளவையாக மாற்றுகின்றன.

மாநிலத் திட்டக் குழுவின் அறிக்கைப்படி சென்னை, தூத்துக்​குடி, வேலூர் ஆகியவை வெப்பமான மாவட்​டங்களாக அறியப்​படு​கின்றன. இவற்றின் இரவு நேர சராசரி நிலப்​பரப்பு வெப்பநிலை 2001–2003 காலக்​கட்​டத்தில் 23 டிகிரி செல்சியஸாக இருந்தது, 2021–2023 காலக்​கட்​டத்தில் 24.5 டிகிரி செல்சியஸாக உயர்ந்துள்ளது.

இது கிராமப்பு​றங்​களைவிட 3-5 டிகிரி செல்சியஸ் அதிகம். 2014 முதல் வெப்பத்தால் ஏற்படும் அசௌகரிய நாள்களின் எண்ணிக்கை 41.5% உயர்ந்துள்ளது. 1985-2014 காலக்​கட்​டத்தில் ஆண்டுக்குச் சராசரியாக 107 நாள்கள் அசௌகரியமாக இருந்த நிலையில், 2050ஆம் ஆண்டுக்குள் இது 150 நாள்களாக அதிகரிக்கும் என மதிப்​பிடப்​பட்​டுள்ளது. இங்கு ‘அசௌகரிய நாள்’ என்பது சராசரி வெப்பநிலை 29 டிகிரி செல்சி​யஸைத் தாண்டி, ஈரப்பதம் 30 சதவீதத்தை​விடக் குறைவாக உள்ள நாள்களைக் குறிக்​கிறது.

தமிழ்​நாட்டின் மக்கள்​தொகையில் 74% பேர் 35 டிகிரி செல்சி​யஸைத் தாண்டிய வெப்பநிலையை எதிர்​கொள்​கின்​றனர். நெருக்கமான குடியிருப்புப் பகுதி​களில் காற்றோட்​ட​மின்மை இந்தப் பிரச்சினையை மேலும் தீவிரப்​படுத்து​கிறது. இதனால், வெப்ப நெருக்கடி (Heat Stress), வெப்பத்தால் ஏற்படும் நோய்கள் போன்ற பாதிப்புகள் ஏற்படும் ஆபத்துகள் அதிகம்.

வெப்பத்தில் தொழிலா​ளர்கள்: தமிழ்​நாட்டின் மொத்த வேலைத் திறனில் சுமார் 92% தொழிலா​ளர்கள் முறைசாராத் துறைகளில் பணிபுரி​கின்​றனர். கட்டு​மானத் தொழிலா​ளர்கள், வாகன ஓட்டுநர்கள், சாலையோர வியாபாரிகள் போன்றோர் போதிய நிழல், உடலை வெப்பத்​திலிருந்து பாதுகாக்கும் சூழல் அல்லது ஓய்வு நேரம் இன்றி, நீண்ட நேரம் வெயிலில் உழைக்​கின்​றனர். இவர்களில் பெரும்​பாலானோர் தினமும் 8 - 10 மணி நேரம் நேரடி சூரிய வெப்பத்தை எதிர்​கொண்டு பணியாற்றுகின்​றனர்.

இதன் விளைவாக, இத்தொழிலா​ளர்கள் பல்வேறு உடல்நலப் பாதிப்பு​களைச் சந்திக்​கின்​றனர். நீரிழப்பு, வெப்ப மயக்கம், அயர்ச்சி ஆகியவை பரவலாகக் காணப்​படு​கின்றன. கடுமையான சூழல்​களில், பிற உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள் உயிரிழக்கும் அபாயமும் ஏற்படு​கிறது. ஓர் ஆய்வின்படி, வெப்ப அலை நிலவும் காலத்தில் முறைசாராத் தொழிலா​ளர்கள் உடல்நிலை சரியில்​லாமல் விடுப்பு எடுப்பது, மருத்​துவச் செலவுகள் போன்ற​வற்றுக்​காகத் தங்கள் மாத வருமானத்தில் 40% வரை இழக்கின்​றனர். இத்தகைய வருமான இழப்பை ஈடுசெய்ய எந்த முன்னெடுப்பும் அரசிடம் இருப்பதாகத் தெரிய​வில்லை. இது தற்காலத்தின் முக்கிய சமூகநீதிப் பிரச்சினை.

2024 அக்டோபர் 6 அன்று, சென்னையில் நடைபெற்ற இந்திய விமானப்படை வான் சாகச நிகழ்ச்சிக்காக லட்சக்​கணக்கான மக்கள் மெரினா கடற்கரையில் கூடினர். கடுமையான வெப்பத்​தால், ஐந்து பேர் உயிரிழந்​தனர், நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்​துவ​மனை​களில் சேர்க்​கப்​பட்​டனர்.

தமிழ்​நாட்டின் மருத்​துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், அந்த இறப்புகள் ‘உயர் வெப்பநிலை​’யால் ஏற்பட்டவை என்பதை உறுதிப்​படுத்​தி​னார். ஆனால், தேசிய நோய்க் கட்டுப்​பாட்டு மையத்தின் தரவுகள், 2024இல் தமிழ்​நாட்டில் வெறும் இரண்டு வெப்பம் தொடர்பான இறப்புகளை மட்டுமே பதிவுசெய்​துள்ளது. இது உண்மையான பாதிப்பைக் குறைத்து மதிப்​பிடு​வதைக் காட்டு​கிறது.

அரசின் பொறுப்பு: தமிழ்நாடு அரசு வெப்ப அலைகளை மாநிலப் பேரிடராக அறிவித்து, பேரிடர் நிதியைப் பயன்படுத்தும் நிலையை உருவாக்கி​யுள்ளது. இதன்மூலம், வெப்பம் தொடர்பான இறப்பு​களுக்கு இழப்பீடு வழங்கு​வதற்​கும், நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்​வதற்கும் வழி ஏற்பட்​டுள்ளது.

மாநிலத் திட்டக் குழு வெப்பத் தணிப்பு உத்தியாக (Heat Mitigation Strategy) சில குறுகிய - நீண்ட கால நடவடிக்கைகளைப் பரிந்துரைத்​துள்ளது. வெப்பத்தின் தீவிரத்தைக் கருத்​தில்​கொண்டு இத்தகைய முன்னெடுப்புகள் மேற்கொள்​ளப்​படுவது பாராட்​டத்​தக்கது; என்றாலும், அரசின் அணுகு​முறையில் ‘மக்களே வெப்பத்தை எதிர்​கொள்ளத் தங்களைத் தகவமைத்​துக்​கொள்ள வேண்டும்’ என்கிற எண்ணமே பெரும்​பாலும் மேலோங்கி இருப்பது தெரிகிறது.

வீடுகளின் மேற்பரப்பை வெண்பூச்சு செய்வதன் மூலம் உள் வெப்பநிலையை 2-5 டிகிரி செல்சியஸ் வரை குறைக்க முடியும். இதற்குச் சில ஆயிரங்கள் வரை செலவாகும். பெரும்​பாலான மக்களுக்குத் தங்கள் வீடுகளை வெப்பத்தை எதிர்​கொள்ளும் வகையில் மாற்றியமைக்கவோ, குளிர்விக்கும் வசதிகளை ஏற்படுத்தவோ பொருளாதார வசதி இல்லை. உயர்ந்து​வரும் வெப்பநிலையை எதிர்​கொள்ள, குளிர்​விப்பு வசதிகள் தமிழ்​நாட்டின் சமூக-பொருளா​தா​ரத்தில் பின்தங்கிய மக்களுக்கு ஒரு சொகுசு அல்ல, மாறாக அடிப்​படைத் தேவையாக மாறியுள்ளது.

இதற்குத் தீர்வாக, ஆற்றல் திறன் கொண்ட மின்விசிறிகள், குளிர்​சாதனங்​களுக்கு அரசு மானியம் வழங்கலாம். நகரங்​களில் பசுமைப் பரப்பு குறைவாக உள்ள பகுதி​களில் குளிர்சாதன வசதி, சுத்தமான குடிநீருடன் கூடிய சமூகக் குளிர்விக்கும் மையங்களை (Community Cooling Centres) அமைக்​கலாம். நகரத் திட்ட​மிடலும் இதில் முக்கிய பங்கு வகிக்​கிறது.

பசுமைப் பரப்பை விரிவாக்கு​வதும், ஈரநிலங்களை மீட்டெடுப்​பதும் வெப்பத்தைக் குறைக்க உதவும். ‘பசுமைத் தமிழ்​நாடு’ திட்டம், மாநில நிலப்​பரப்பில் மரங்களின் பரப்பை 33%ஆக உயர்த்த இலக்கு நிர்ண​யித்​துள்ளது. இதை அடைய, புதிய மரக்கன்​றுகளை நட்டு வளர்ப்பது ஒருபுறம் இருக்க, தற்போதுள்ள வளர்ந்த மரங்கள் வெட்டப்​ப​டாமல் பாதுகாக்​கப்​படு​வதும் மிக அவசியம்.

மாற்றத்​துக்கான அழைப்பு: வெப்ப அலையின் தாக்கத்தை எதிர்​கொள்ளத் தனிநபர் சார்ந்த தகவமைப்பு வசதிகளை மேற்கொள்வது மட்டுமே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைத் தராது. அமைப்பு​ரீ​தியான மாற்றங்கள் மிகவும் முக்கியம். காலநிலை மாற்றத்​திற்குக் காரணமற்​றவர்​கள்​தான், அதன் மோசமான விளைவு​களால் அதிகம் பாதிக்​கப்​படு​கிறார்கள் என்கிற முரண்​பாட்டைச் சரிசெய்ய வேண்டும். எனவே, காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் சமமாகப் பகிரப்​படு​வ​தில்லை என்பதை உணர்ந்து, வெப்பத்தை எதிர்​கொள்​வதற்கான வழிமுறைகளை நல்வாழ்​விற்கான அடிப்படை உரிமையாக அரசு அங்கீகரிக்க வேண்டும்.

குறுகிய கால நிவாரணத்​திலிருந்து நீண்ட காலக் கட்டமைப்பு வசதி மாற்றங்​களுக்கு நாம் உடனடியாக மாற வேண்டும். இயற்கை அடிப்​படையிலான தீர்வுகள், செயல்​திறன் மிக்க குளிர்​விப்பு முறைகள், தொழிலாளர் நலப் பாதுகாப்பு ஆகியவற்றில் முதலீடு செய்வதன் மூலம், வெப்பத்தை எதிர்​கொள்ளும் திறனை​யும், சமூக நீதியையும் ஒருங்கே உறுதிப்​படுத்​தலாம்.

மாவட்டக் காலநிலைப் பணிக்​குழுக்கள் இத்தகைய முயற்சிகளை முன்னெடுக்கும் திறன் கொண்டவை; ஆனால், அதற்கு நடைமுறைப்​படுத்​தக்​கூடிய கொள்கைகளும், மனிதவள​மும், போதிய நிதி ஆதரவும் அவசியம். தமிழ்​நாட்டில் அதிகரித்து​வரும் வெப்ப அலைகள் வெறும் தீவிர வானிலை நிகழ்வுகள் அல்ல; இவை சமூக-பொருளாதார ஏற்றத்​தாழ்வுகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் அவசரநிலை என்பதைப் புரிந்து​கொள்ள வேண்டும்​.

- தொடர்புக்கு: shankarprakash@live.com

SCROLL FOR NEXT