எழுத்தாளரும் கல்வியாளருமான சாலை செல்வம், தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பாடத்திட்டக் குழு உறுப்பினராகவும் தமிழ்நாடு கல்விக் கொள்கைக் குழு உறுப்பினராகவும் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர். குழந்தைகளின் கல்வி சார்ந்து மதுரையில் இயங்கும் கூழாங்கல் கல்வி ஆய்வு மையத்தின் இயக்குநர் - செயலராக இருந்திருக்கிறார். அசிம் பிரேம்ஜி அறக்கட்டளையின் புதுச்சேரி பிரிவில் ஆசிரியர் பயிற்றுநராகப் பணிபுரிந்துவரும் இவர், தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர். மாற்றுக்கல்வி சார்ந்து செயல்பட்டுவரும் அவருடனான நேர்காணல்:
தொடக்கத்தில் பெண்கள் சார்ந்து செயல்பட்டுவந்த நீங்கள் சிறார் இலக்கியம், வாசிப்பு சார்ந்து செயல்படத் தொடங்கியது எப்போது? - பெண்களுடன் இணைந்து வேலை செய்வது என்பது குழந்தைகளையும் உள்ளடக்கியது. பெண்கள் மத்தியில் பணியாற்றுவதற்குக் குழந்தைகளின் மேம்பாடும் அவசியம் என்று தோன்றியபோது கல்வி சார்ந்து பணியாற்றுவது இயல்பாக நடந்தது. அந்தக் காலத்தில் நாம் பயின்றபோது கிடைத்ததோடு ஒப்பிட்டதில், வாசிப்பு குறைவாக இருப்பது தெரிந்தது. அந்தக் காலத்தில் நான் படித்த ‘பகல் கனவு’, ‘டோட்டோசான்’, ரஷ்ய இலக்கியமான ‘குழந்தைகள் வாழ்க’ (ஷ. அமோனஷ்விலி) போன்ற புத்தகங்கள், குழந்தைகளிடம் பெரியவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும், கல்வித்தளம் எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்த்தின.
இந்தக் காலத்துக் குழந்தைகளிடம் பள்ளிப் பாடங்களைத் தாண்டிய வாசிப்பு எந்த அளவுக்கு இருக்கிறது? - பாடப் புத்தகங்களையும் கதைப் புத்தகங்களையும் ஒப்பிட முடியாது. நம்மிடம் ஒரு கதை மரபு இருக்கிறது. எதையுமே கதையாகக் கேட்டு, வாசித்து, இலக்கிய அனுபவமாகச் சுவைத்து அறிந்துகொள்வோம். சிக்கலான விஷயங்களைக்கூடக் கதைப் புத்தகங்களின் வழியாக மிக எளிதாகக் குழந்தைகளிடம் கொண்டுசேர்க்கலாம் என்பதால் குழந்தைகளை வாசிக்க வைப்பது கடினமாக இருப்பதில்லை. பொதுவாகக் குழந்தைகள், பெரியவர்களைப் பார்த்துத்தான் பலவற்றையும் கற்றுக்கொள்கிறார்கள்.
நாம் நினைப்பதுபோல் குழந்தைகள் திறன்பேசியை எடுப்பதுபோல் தாங்களாகவே புத்தகத்தை எடுப்பார்கள் என்று நினைக்கக் கூடாது. படி, படி என்று அறிவுரைபோல் சொல்வதும், ‘புத்தகம் வாங்கிக்கொடுத்துவிட்டோம்... படி’ என்பதும் அவர்களை வாசிக்க வைக்காது. அதற்கு நம் முயற்சியும் தேவை. ஒரு குழந்தை வாசிக்க வேண்டும் என்றால் வீட்டில் பெற்றோரும் பள்ளியில் ஆசிரியர்களும் வாசிக்க வேண்டும், குழந்தைகளுக்குப் படித்துக்காட்ட வேண்டும்.
குழந்தைகள் வாசிக்கும் அளவுக்குத் தரமான சிறார் புத்தகங்கள் தமிழில் இருக்கின்றனவா? - குழந்தைகள் வாசிக்க வேண்டும் என்றால் அதற்குச் சில விதிகள் இருக்கின்றன. ஒன்று தரமான புத்தகங்கள் அல்லது குழந்தைகள் விரும்பக்கூடிய புத்தகங்கள். குழந்தைகள் எந்த அளவுக்கு மொழியை அறிந்திருக்கிறார்களோ அதற்கேற்பப் புத்தகங்கள் இருக்க வேண்டும். என் சிறு வயதில், என் அம்மா ரஷ்ய மொழிபெயர்ப்பு நூல்களை வாங்கிக்கொடுத்தார். அவற்றை நாங்கள் படிக்க வேண்டும் என்று வாங்கினாரா அல்லது அதில் வரும் வண்ணப்படங்களைக் கொண்ட கதைகள் அம்மாவுக்குப் பிடிக்குமா எனத் தெரியாது.
ஆனால், உலகளாவிய புத்தகங்கள் குழந்தைகளைக் கவரும் வகையில் இருப்பதைப் போல், தமிழிலும் அதுபோன்ற முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. தாரா பதிப்பகம் போன்ற சில பதிப்பகங்கள் தமிழ்ப் புத்தகங்களை ஆங்கிலத்துக்குக் கொண்டுசெல்வதன் மூலம் அவை உலகளாவிய கவனத்தைப் பெறுகின்றன. அவர்கள் வெளியிட்ட ‘நானும் தொழிலாளி’, ‘பூக்காரம்மா பொன்னி’, ‘சர்வர் பாபு’ போன்ற எளிய புத்தகங்கள் பரவலாகக் கவனம் பெற்றிருக்கின்றன.
கல்வித் துறையோடு சேர்ந்து அரசுப் பள்ளி மாணவர்களின் வாசிப்பை ஊக்குவிக்கும் திட்டங்களில் பங்கேற்றது குறித்துச் சொல்ல முடியுமா? - அரசுப் பள்ளி ஆசிரியர்களோடு இணைந்து குழந்தைகளுக்கான புத்தகங்கள் எழுதும் பணியில் நானும் எழுத்தாளர் வ.கீதாவும் ஈடுபட்டோம். ஆசிரியர்களே எழுதி, வரைந்து 96 புத்தகங்களை உருவாக்கினோம். அவற்றை அரசுப் பள்ளிகளில் சுழற்சி முறையில் தோரணம் போல் தொங்கவிட்டிருப்பார்கள். தங்களுக்கு விரும்பியதைக் குழந்தைகள் வாசிக்க இது நல்ல வாய்ப்பாக அமைந்தது.
‘புத்தகப் பூங்கொத்து’ என்கிற அந்தப் புத்தக வரிசைக்கு முன், அதற்கான கையேட்டைத் தயாரித்தோம். கிராமங்களில் குழந்தைகள் பாடுகிற பாடல்கள், அவர்களுக்குள் சொல்லிக்கொள்ளும் கதைகள், விளையாட்டுகள் போன்றவற்றையும் அந்தப் புத்தகத்தில் சேர்த்திருந்தோம். அப்பா, அம்மா இருவரைப் பற்றியும் சொல்லும்போது இருவரும் வேறு வேறல்ல, இருவரும் எல்லா வேலைகளையும் செய்யக்கூடியவர்கள் என்று பாலினச் சமத்துவத்தை வலியுறுத்தியும் எழுதியிருக்கிறோம்.
அந்தக் காலத்தில் சொல்லப்பட்ட சிலவற்றைக் காலத்துக்கு ஏற்ப மாற்றியமைக்கவும் வேண்டும். புகழ்பெற்ற ‘தோசையம்மா தோசை’ பாடலை, ‘அம்மாவுக்கு ஐந்து, எனக்கு மூணு போதாது, இது அரிசி மாவும் உளுந்து மாவும் கலந்து சுட்ட தோசையல்ல, கடையில் வாங்கின மாவு..’ என்று மாற்றியிருப்போம். எதையுமே விமர்சித்துக்கொண்டே இருப்பதைவிட, அதை மாற்று வடிவங்களில் தரலாம்.
தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பாக மூன்று ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட ‘இளந்தளிர் இலக்கியத் திட்ட’த்துக்குச் சிறார் எழுத்தாளர்களிடம் இருந்து படைப்புகளைப் பெற்று 200 புத்தகங்கள் வரை வெளியிடப்பட்டிருக்கின்றன. இது தவிர எஸ்.எஸ்.ஏ. திட்டத்தின்கீழ் வாசிப்பு இயக்கத்தில் 140 புத்தகங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
சிறார் புத்தகங்களில் பாலினச் சமத்துவப் பார்வை இருக்கிறதா? - நிறைய உண்டு. கமலா பாசின் ‘ஆண்பிள்ளை யார்? பெண்பிள்ளை யார்?’ என்று ஒரு கதை எழுதியிருக்கிறார். அது கதை உணர்வையும் கொடுக்கும்; பாலினச் சமத்துவத்தைக் குழந்தைகள் எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடிய வகையிலும் இருக்கும். பெண்ணால் மரம் ஏற முடியும், ஆணால், தோசை சுட முடியும் என்று சொல்வதன்மூலம் ஒரு கருத்தைத் திணிப்பதாக இல்லாமல், இதைச் செயல்படுத்த முடியும் என்று குழந்தைகள் உணரும் வகையில் இருக்கும்.
‘கூடு’ பெண்கள் வாசிப்பரங்கம் சார்பாக 15 ஆண்டுகளுக்கு முன் ‘மாதவிடாய்’ கையேடு ஒன்றை வெளியிட்டோம். பொதுவாகப் பெண்ணுடலைப் பற்றிய கற்பிதம் இங்கே அதிகம். அதனால், அறிவியல்பூர்வமான தகவல்களோடு பலவற்றை விளக்கினோம். கருப்பைக்கும் கற்புக்கும்கூட வேறுபாடு தெரியாதவர்கள் நம்மிடையே உண்டு. கருப்பை என்பது நம் உடலில் இருக்கும் ஓர் உறுப்பு. அதன் வேலைகளைப் பற்றிச் சொல்வதோடு உடல் பாதுகாப்பு, சுகாதாரம் போன்றவற்றையும் இணைத்து அனுபவக் கதைகளாக அதில் வெளியிட்டோம். மாதவிடாய் குறித்த எதிர்மறை மனநிலையை மாற்றும் வகையில் அந்தக் கையேடு இருந்தது.
அண்மைக் காலமாகப் பெண்கள் முற்போக்காக, நவீனச் சிந்தனையோடு இருக்கும்போது ஆண்களில் சிலர் பெரியார், அம்பேத்கரைப் போல் நவீனச் சிந்தனை கொண்டவர்களாக இல்லையோ எனத் தோன்றுகிறது. ஆணின் இயலாமையும் அகந்தையும் ஏதோவொரு விதத்தில், அவர்களோடு பயணிக்கும் பெண்களைப் பாதிக்கிறது. குடித்துவிட்டு வன்முறைகளில் ஈடுபடுவது, குடும்பப் பொறுப்புகளை எடுத்துக்கொள்ளாமல் இருப்பது என்கிற நிலையில் பெண்ணைவிட ஆணுக்கு நிறைய சொல்ல வேண்டியிருக்கிறது. அதை மனதில் வைத்துத்தான் பதின்பருவ ஆண்களுக்கான புத்தகத்தை எழுதியிருக்கிறேன்.
வாசிப்புக்காக நீங்கள் நடத்திவரும் அமைப்புகளின் செயல்பாடுகள் பற்றிச் சொல்லுங்கள்... பெண்களின் உரையாடல் வாசிப்பு சார்ந்து, அரசியல் சார்ந்து இருக்க வேண்டும் என்பதற்காக மதுரையில் ‘கூடு’ பெண்கள் வாசிப்பரங்கத்தை நடத்திவருகிறோம். 40 பெண்கள் சேர்ந்து 15 நாள்களுக்கு ஒரு முறை புத்தகத்தை வாசித்து, விவாதிப்பதை வழக்கமாகச் செய்துவருகிறோம். சமீப ஆண்டுகளாக ‘கூழாங்கல்’ குழந்தைகள் நூலகத்தை நடத்திவருகிறோம். குழந்தைகள் சேர்ந்து வாசித்தல், சத்தமாக வாசித்தல், வாசித்ததை உரையாடுதல் என அதன் செயல்பாடுகள் இருக்கும்.
- தொடர்புக்கு: brindha.s@hindutamil.co.in