ஓர் ஆடம்பர மாளிகையில் இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருந்தினர்கள் ஒவ்வொருவராக வந்து சேர்கிறார்கள். விருந்து முடிந்து நீண்ட நேரம் கழிந்த பிறகும் ஒருவராலும் அந்த வீட்டைவிட்டு வெளியேற முடியவில்லை. கதவுகள் பூட்டப்பட்டிருக்கவில்லை என்றாலும், ஒருவராலும் திறக்க முடியவில்லை. வீடு திரும்ப வேண்டும் என்று துடிக்கிறார்கள். யாரும் அவர்களைத் தடுக்கவும் இல்லை. ஏன் இப்படி இங்கே அடைந்து கிடக்கிறோம் என்று ஒருவருக்கும் புரியவில்லை.
நெரிசல் அதிகரிக்கிறது. மோதல் வெடிக்கிறது. தண்ணீருக்குத் தட்டுப்பாடு. குழப்பமும் அச்சமும் அவநம்பிக்கையும் பகையும் பிய்த்துத் தின்கின்றன. பெருந்தொற்றுக் காலத்தில் லூயி புனுவல் எழுதி, இயக்கிய திரைப்படம் (The Exterminating Angel) இணையத்தில் ‘ஆபரா’வாக வெளிவந்தபோது அடைந்து கிடந்த வீட்டுக்குள் இருந்தபடி அதைப் பார்த்தவர்களால் அந்த விசித்திரமான சூழலோடு சுலபமாக ஒன்றிப்போக முடிந்தது.
பெருந்தொற்றுக் கால வாசிப்பு: உயிர் குடிக்கும் கொள்ளை நோயிலிருந்து தப்பியோடிய பத்து பேர், ஓரிடத்தில் கூடி உரையாடத் தொடங்குகிறார்கள். அப்போது அவர்கள் பரிமாறிக்கொண்ட கதைகளை 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இத்தாலிய எழுத்தாளர் ஜியோவன்னி பாவ்காஷோ (The Decameron) தொகுத்திருக்கிறார். பெருந்தொற்றுக் காலத்தில் உலகம் அதிகம் வாசித்த நூல்களுள் இச்சிறுகதைத் தொகுப்பும் அல்பெர் கம்யு, டேனியல் டிஃபோ ஆகியோர் எழுதிய தொற்று குறித்த படைப்புகளும் இடம்பெற்றுள்ளன.
ஹோமர், டால்ஸ்டாய், புரூஸ்ட், தஸ்தாயெவ்ஸ்கி என்று தொடங்கி பலரைப் பெருந்தொற்றுக் காலத்தில் மக்கள் புதிதாகக் கண்டறிந்திருக்கிறார்கள். புதிய வெளிச்சங்களைப் பெற்றிருக்கிறார்கள். அவர்களுடய படைப்புகளைச் சமகாலத்தில் பொருத்திப் புதிய விவாதங்களையும் முன்னெடுத்திருக்கிறார்கள்.
செவ்வியல் படைப்புகளின் இயல்பு அது என்கிறார் இத்தாலிய எழுத்தாளர் இடாலோ கால்வினோ. ஒரு செவ்வியல் படைப்பு அள்ளித் தருவதை, அது ஒருபோதும் நிறுத்திக்கொள்வதில்லை. அதை யாராலும் படித்து முடித்துத் தீர்த்துவிட முடியாது என்கிறார் அவர். ஒவ்வொரு தலைமுறையும் ஏதோ ஒரு காரணத்துக்காகச் செவ்வியலுக்குத் திரும்பிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.
அரசியல் சூழல் அச்சுறுத்துகிறதா? கட்டுக்கடங்காத அதிகாரம் உங்களை நிம்மதியிழக்கச் செய்கிறதா? ஜார்ஜ் ஆர்வெலும் மார்கரெட் ஆட்வுட்டும் இன்ன பிறரும் உங்களை அரவணைத்துக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள். வறுமையும் வெறுமையும் வாதையும் உங்களைப் பிய்த்துத் தின்கின்றனவா? நீங்கள் இந்த உலகில் தனியாக இல்லை. வாழ்வின் பொது இயல்பு அது என்கிறார் தஸ்தாயெவ்ஸ்கி. இறக்கை கட்டி வேறோர் உலகுக்குப் பறந்துவிடத் துடிக்கிறீர்களா? உங்களை அழைத்துச் செல்ல டால்ஸ்டாய் காத்துக் கிடக்கிறார்.
வாசிப்பு ஏற்படுத்தும் திறப்புகள்: ஏன் செவ்வியல் நூல்களுக்குத் திரும்ப வேண்டும் என்னும் கேள்விக்கு விளக்கமான, தெளிவான காரணங்களை முன்வைத்தவர்களுள் ஒருவர் கால்வினோ. ஒரு செவ்வியல் நூலை இதுவரை படிக்கவில்லை என்பதில் கூச்சமோ அவமானமோ கொள்ளத் தேவையில்லை. மெத்தப் படித்த பண்டிதர்களின் பார்வைக்கே வராத புத்தகங்கள் மலையளவு குவிந்திருக்கின்றன. எனவே தயக்கமின்றிச் செவ்வியல் உலகுக்குள் அடியெடுத்து வையுங்கள் என்னும் நம்பிக்கையூட்டும் சொற்களோடு புன்னகைத்தபடி கதவுகளைத் திறக்கிறார் இடாலோ கால்வினோ.
ஒரு செவ்வியல் படைப்பை நாம் முதல் முறை வாசிக்கிறோமா இரண்டாவது முறையா அல்லது பத்தொன்பதாவது முறையா என்பது முக்கியமல்ல. ஒவ்வொரு வாசிப்பிலிருந்தும் நம்மால் புதிதாக எதையேனும் பெற்றுக்கொள்ள முடியும் என்கிறார் கால்வினோ. இளவயதில் நாம் வாசித்த செவ்வியல் படைப்புகளை இப்போது மறந்துபோயிருப்போம்.
ஆனால் நமக்கே தெரியாதபடி நம் சிந்தனையை, கண்ணோட்டத்தை, வாழ்க்கை முறையை அந்நூல்கள் மாற்றி அமைத்திருக்கும். வளர்ந்த பிறகு அதே புத்தகங்களைத் திரும்பவும் எடுத்து வாசிக்கும்போதுதான் நமக்குள் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன, அந்த மாற்றங்களை எந்தெந்த நூல்கள் ஏற்படுத்தியிருக்கின்றன என்பது புலப்படும்.
நாமே உருவாக்கிக்கொண்ட நம்பிக்கைகள் என்று நாம் கருதும் பலவும், நாம் எப்போதோ வாசித்த நூல்களிலிருந்து திரட்டிக்கொண்டவைதாம் என்பதைச் செவ்வியல் படைப்புகளை மறுவாசிப்புக்கு உட்படுத்தும்போது உணர முடியும். செவ்வியல் நூல்கள் நாம் அறியாதவற்றைக் கற்றுக்கொடுக்கின்றன என்று கருத வேண்டாம்.
நாம் நன்கறிந்த, நன்குணர்ந்த விஷயங்களையும் அவை பேசுகின்றன. நம் அச்சங்கள், தவிப்புகள், கனவுகள், போராட்டங்கள், போதாமைகள் அனைத்தும் ஏற்கெனவே விவாதிக்கப்பட்டிருக்கின்றன என்னும் உணர்வு நம்மை வலுப்படுத்தும். வாழ்வின்மீதும் எதிர்காலத்தின்மீதுமான நம் நம்பிக்கையை அதிகப்படுத்தும்.
வாழ்நாள் பந்தம்: எல்லாரும் சொல்கிறார்கள் என்பதற்காகவோ பலன் கிடைக்கும் என்பதற்காகவோ ஒரு நூலை வாசிப்பதைவிட, மெய்யான நேசத்தோடு ஒரு செவ்வியல் படைப்பை நெருங்கிச் சென்று வாசிப்பதுதான் சிறந்தது என்கிறார் கால்வினோ. எந்தவிதக் கட்டாயமும் இன்றி, நாமே ஒரு நூலை எடுத்து வாசிக்கும்போதுதான் நமக்கும் நாம் வாசிக்கும் நூலுக்கும் இடையில் தனிப்பட்ட உறவொன்று உருவாகிறது என்கிறார் அவர். ஒருமுறை மலர்ந்துவிட்டால் வாழ்நாள் முழுவதும் தொடரும் பந்தமாக இது அமையும்.
ஏன் என்று மட்டுமல்ல, ஒரு செவ்வியல் நூலை எப்படி வாசிக்க வேண்டும் என்றும் கால்வினோ சொல்கிறார். ஒரு செவ்வியல் நூலை அணுகுவதற்குச் சுருக்கம், அறிமுகம், விளக்கம், விவாதம், விமர்சனம், ஆய்வு என்று பல வழிமுறைகள் இருக்கின்றன. இவற்றுள் பல சிறந்தவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், இவை எதுவும் அவை பேசும் படைப்புக்கு ஈடாகாது.
ஒரு செவ்வியல் நூலை வாசிப்பதற்கு நமக்கு யாருடைய உதவியும் தேவைப்படாது. நேரடியாக எடுத்து வாசிப்பதே ஒரே வழி. அதுவே சிறந்த வழியும்கூட என்கிறார் கால்வினோ. ஒரு செவ்வியல் படைப்பு நம்மோடும் நம் வாழ்வோடும் சேர்ந்து நம் கரம் பற்றிப் பயணிக்கலாம். அல்லது நம் நினைவுகளின் ஆழமான இடுக்குகளில் மறைந்துகொண்டு நாம் அறியாமலேயே நம்மில் ஒரு பகுதியாக வாழ்ந்துகொண்டிருக்கலாம் என்கிறார் கால்வினோ.
திசைகாட்டும் செவ்வியல்: இதிகாசங்களும் தொன்மக் கதைகளும் தேவதைக் கதைகளும் நம் கற்பனை உலகை இன்னமும் ஆண்டுகொண்டிருக்கின்றன. இனியும் ஆளும். தமிழ் உள்ளவரை சங்க இலக்கியங்கள் வாழும். பாரதியும் புதுமைப்பித்தனும் நம் கூட்டுநினைவுகளை ஆண்டுகொண்டிருப்பவர்கள் அல்லவா? மக்கள் போராட்டங்களால் இந்தியா கொந்தளித்தபோது, பாகுபாடுகள் நம்மை அச்சுறுத்திய போது கபீரையும் தாகூரையும் காந்தியையும் அல்லவா நாம் துணைக்கு அழைத்தோம்? அபுனைவு நூல்களுக்கும் இது பொருந்தும்.
வரலாறு இன்று ஒரு நவீனச் சமூக அறிவியல் துறையாகச் செழித்து வளர்ந்து நிற்கிறது. புதிய அணுகுமுறைகளைக் கையாண்டு புதிய வரலாறுகள் எழுதப்பட்டு வருகின்றன. இருந்தும் வரலாற்றில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் – சாமானியர்கள் தொடங்கி வரலாற்று ஆய்வாளர்கள்வரை – ஹெரோடோடஸ், தூசிடிடிஸ், சீஸர், கிப்பன்ஸ் ஆகியோரை இன்னமும் வாசித்துக்கொண்டு
தான் இருக்கிறார்கள். இன்னமும் ஆராய்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். தத்துவத் துறை மாணவர்களும் சரி, பேராசிரியர்களும் சரி இன்னும் செவ்வியல் தத்துவவியலாளர்களோடு தொடர்ச்சியாக உரையாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். சாக்ரடீஸும் அரிஸ்டாட்டிலும் ஹெகலும் இன்றும் தத்துவ உலகை ஆண்டுகொண்டிருக்கிறார்கள்.
எப்படிப் பார்த்தாலும் நவீன வாழ்வைப் புரிந்துகொள்ளச் செவ்வியல் ஆக்கங்களைக் காட்டிலும் சிறந்த வழி இருப்பதாகத் தெரியவில்லை. நம் காலத்தை மட்டுமல்ல, எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சக்திகளில் ஒன்றாகவும் செவ்வியல் நூல்களே திகழப்போகின்றன.
ஏப்ரல் 23: உலகப் புத்தக நாள்
- தொடர்புக்கு: marudhan@gmail.com