தலையங்கம்

பொருளாதாரக் குற்றவாளிகள் இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்! 

செய்திப்பிரிவு

பஞ்சாப் தேசிய வங்கியில் பெருமளவில் கடன் மோசடி செய்து வெளிநாட்டுக்குத் தப்பிச்சென்ற வைர வணிகர் மெகுல் சோக்சி பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டிருப்பது, அவரை இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்கான முதல் கட்டமாக அமையுமா என்கிற எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.

பிரபல வைர வணிகரான நீரவ் மோடியும் அவரது தாய்மாமன் மெகுல் சோக்சியும், 2011 – 2017 காலக்கட்டத்தில் மிகப் பெரிய வங்கி மோசடியில் ஈடுபட்டவர்கள். நீரவ் மோடியின் நிறுவனமும், மெகுல் சோக்சியின் நிறுவனமும் மும்பையில் உள்ள பஞ்சாப் தேசிய வங்கிக் கிளையில் ஈடு ஏதும் தராமல் கடன் பெற்று வணிகம் செய்து வந்தனர்.

மொத்தம் ரூ.13,500 கோடி அளவுக்கு மோசடி நடந்த நிலையில், 2018இல் இருவரும் வெளிநாட்டுக்குத் தப்பிச்சென்றனர். 2018 ஜனவரியில் இந்தியாவிலிருந்து தப்பிச் செல்வதற்கு ஓராண்டுக்கு முன்பே, முதலீட்டுத் திட்டத்தின் மூலம் கரீபியன் தீவு தேசமான ஆன்டிகுவா நாட்டின் குடியுரிமையை வாங்கிவிட்டார் சோக்சி.

ஆன்டிகுவாவில் மூன்று ஆண்டுகளாகத் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துவந்த சோக்சி திடீரெனக் காணாமல் போனதாகவும், கடத்தப்பட்டதாகவும் பின்னர் அண்டை நாடான டொமினிகாவில் கைதுசெய்யப்பட்டதாகவும் 2021இல் முதன்மைச் செய்திகள் வெளியாகின.

இதைத் தொடர்ந்து, இந்தியாவிலிருந்து தனி விமானத்தில் எட்டு அதிகாரிகள் கொண்ட குழு டொமினிகாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அவரை இந்தியாவுக்குக் கொண்டுவருவதில் பல சட்டச் சிக்கல்கள் இருந்தன. சோக்சி வேறொரு நாட்டின் குடியுரிமையைப் பெற்றுவிட்டார் என்பதால் அவர் ஒரு இந்தியக் குடிமகன் அல்ல என்று அவரது வழக்கறிஞர்கள் வாதிட்டனர். ஆனால், போலியான ஆவணங்கள் மூலம்தான் ஆன்டிகுவா நாட்டின் குடியுரிமையை சோக்சி பெற்றிருக்கிறார் என்று இந்தியத் தரப்பு வாதிட்டது. பல கட்ட முயற்சிகள் நடந்த நிலையிலும், சோக்சியை இந்தியாவுக்குக் கொண்டுவர முடியவில்லை.

முன்னதாக, நீரவ் மோடி 2019 அக்டோபரில் லண்டனில் கைதுசெய்யப்பட்டார். இவர்களைப் போலவே இந்தியாவில் வங்கி மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர் விஜய் மல்லையா ஏற்கெனவே 2017இல் லண்டனில் கைதுசெய்யப்பட்டிருந்தார். எனினும், இவர்களும் சட்டரீதியில் கிடைக்கும் அனுகூலங்களைச் சாமர்த்தியமாகப் பயன்படுத்தி, தாங்கள் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதைத் தடுத்துவருகின்றனர். இவ்விஷயத்தில் இன்றுவரை இந்திய அதிகாரிகளுக்குச் சாதகமான பலன் கிடைக்கவில்லை.

இந்நிலையில், சிபிஐ, அமலாக்கத் துறையின் கோரிக்கையின்பேரில் பெல்ஜிய அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டிருக்கும் சோக்சியை இந்தியாவுக்கு நாடு கடத்துவதும் எளிதான காரியமாக இருக்காது. புற்றுநோயாளியான அவர் இந்தியச் சிறைகளின் தரம் குறித்த வாதங்களை முன்வைக்கக்கூடும். அவரது மனைவி பெல்ஜியம் குடியுரிமை பெற்றவர் என்பதும் கவனிக்கத்தக்கது.

தவிர, தேடப்படும் பொருளாதாரக் குற்றவாளியாக சோக்சியை அறிவிக்க வேண்டும் என்றும், அவரது சொத்துகளை முடக்க வேண்டும் என்றும் அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கு மும்பை நீதிமன்றத்தில் ஏறத்தாழ ஏழு ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.

இதுபோன்ற முட்டுக்கட்டைகளைத் தகர்க்க இந்தியாவின் விசாரணை அமைப்புகள் இன்னும் முனைப்புடன் செயல்பட வேண்டும். 2018இல் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விளக்கமளித்த மத்திய அரசு, மோசடி செய்து நாட்டைவிட்டு ஓடிய 28 பேரை இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்கான பணிகள் நடப்பதாகச் சுட்டிக்காட்டியிருந்தது.

ஏழு ஆண்டுகளாக நீடித்துவரும் அந்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும். சாமானியர்கள் வங்கிகளிடமிருந்து கடன் பெறுவதற்காகப் பெரும்பாடு பட வேண்டியிருக்கும் சூழலில், பெருநிறுவன முதலாளிகள் மிக எளிதாகப் பெரும் தொகையை வங்கிகளிடமிருந்து கடனாகப் பெற்றுவிடுகின்றனர்.

அதிகார மட்டத்தில் தங்களுக்கு இருக்கும் செல்வாக்கு, பணபலம் ஆகியவற்றைப் பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுகின்றனர். ஒருகட்டத்தில் நாட்டைவிட்டுத் தப்பிச்சென்றுவிடுகின்றனர். இனி அப்படிச் செய்ய யாருக்கும் துணிச்சல் எழாத வகையில், மெகுல் சோக்சி வழக்கை ஒரு முன்னுதாரணமான வழக்காக அரசு கையாள வேண்டும்.

SCROLL FOR NEXT