தலையங்கம்

ஈரான் மக்களின் மீட்சியே முக்கியம்!

செய்திப்பிரிவு

பல்வேறு நாடுகளால் ஈரான் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சூழலில், அந்நாட்டுடன் அணுசக்தித் திட்டம் தொடர்பாக அமெரிக்கா மீண்டும் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. அணு ஆயுதங்கள் உற்பத்தியில் ஈரான் ஈடுபடுவதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நெடுங்காலமாகவே குற்றம்சாட்டி வந்தன.

அணு ஆயுதப் பரவல் தடுப்பு உடன்படிக்கையின்படி, மின்சாரம், மருத்துவம் சார்ந்த பணிகளுக்காக மட்டுமே அணு ஆற்றலைப் பயன்படுத்திவருவதாக ஈரான் கூறியது. ஈரானுக்குச் சில பொருளாதாரத் தடைகளை 1980இல் முதன்முதலாக அமெரிக்கா விதித்தது.

ஈரானில் ரகசிய அணுஉலைக் கட்டமைப்புகள் கண்டறியப்பட்டதாக 2002இல் கண்டனங்கள் எழுந்தன. கச்சா எண்ணெய் ஏற்றுமதியை முதன்மை வருவாய் ஆதாரமாகக் கொண்டுள்ள ஈரானின் பொருளாதாரம், தொடர்ச்சியான தடைகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. தடைகள் விலக்கப்படுவதற்காக அணு சக்திப் பயன்பாட்டுக் கொள்கையைத் தளர்த்திக்கொள்ள ஈரான் முன்வந்தது. இதன் விளைவாக 2015இல் விரிவான கூட்டுச் செயல் திட்டம் (ஜேசிபிஓஏ) ஈரானுக்கும் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட ஆறு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தானது.

இதன்படி, அணுகுண்டுத் தயாரிப்பை நிறுத்தும்வகையில், தன்னிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் இருப்பைக் குறைக்கவும் பன்னாட்டு அணு ஆற்றல் முகமையின் (ஐஏஇஏ) சோதனைகளுக்கு உடன்படவும் ஈரான் ஒப்புக்கொண்டது. இதற்குப் பதிலாக ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகள் விலக்கிக்கொள்ளப்பட்டன.

2018இல் அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்த ஒப்பந்தத்தை ஈரான் மீறுவதாகக் கூறி, அதிலிருந்து விலகிக்கொண்டதோடு, ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்தார். இதையடுத்து ஈரான் மீண்டும் யுரேனியச் செறிவூட்டல் செயல்பாடுகளைத் தொடர்ந்தது.

2015ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி, மின்சார உற்பத்திக்கும் ஆய்வுகளுக்குமாக 3.67% செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை 300 கி.கி. அளவிலேயே ஈரான் கொண்டிருக்க வேண்டும். ஆனால், அணு ஆயுதங்களைத் தயாரிக்கும்வகையில் 60% செறிவூட்டப்பட்ட யுரேனியம் 275 கி.கி. ஈரானிடம் உள்ளதாக அண்மையில்கூட விமர்சனங்கள் எழுந்தன. தற்போதைய அதிபர் டிரம்ப் பொறுப்பேற்றவுடன் கையெழுத்திட்ட அரசாணைகளில், ஈரானுக்கு அதிகபட்ச அழுத்தம் கொடுப்பது தொடர்பானதும் அடங்கும்.

‘ஈரான் போரை விரும்பினால், நாங்களும் அதையே அளிப்போம்’ எனக் கூறிவந்த டிரம்ப், நேரடிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியது உலக நாடுகள் எதிர்பாராதது. ஈரானின் அணுசக்திப் பயன்பாடு தொடர்பாகப் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.

இரு தரப்புக்கும் நட்பு சக்தியான ஓமன் நாட்டில் முதல் பேச்சுவார்த்தை ஏப்ரல் 12 அன்று நடந்தது. ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி, மத்தியக் கிழக்குப் பகுதிக்கான அமெரிக்காவின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். பேச்சுவார்த்தை நம்பிக்கை அளிக்கும் விதத்தில் சென்றதாக இரு தரப்புமே தெரிவித்துள்ளன.

எனினும், அமெரிக்காவின் மிரட்டல் அணுகுமுறை, ஈரானின் இறையாண்மை குறித்த கவலையை ஏற்படுத்துகிறது. மத்தியக் கிழக்கு நாடுகளின் கச்சா எண்ணெய் வளத்தைப் பயன்படுத்திக்கொள்ள அமெரிக்கா எப்போதுமே பாரபட்சமான நடவடிக்கைகளில் இறங்கும் என்கிற வாதங்களையும் புறக்கணிக்க முடியாது.

வேலைவாய்ப்பின்மை, பண மதிப்பின் சரிவு போன்றவற்றால் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களின் மனநிலை மாறியிருப்பதை ஈரான் அரசும் புரிந்துகொள்ள வேண்டும். அமெரிக்காவின் ஆதிக்கம், ஈரானின் ராஜதந்திரம் ஆகியவற்றையெல்லாம் தாண்டி, ஈரான் மக்களின் பொருளாதார மீட்சியும், இன்னொரு போரைத் தவிர்க்க வேண்டிய பொறுப்புமே இந்தப் பேச்சுவார்த்தையில் முதன்மையாக ஒலிக்க வேண்டும்.

SCROLL FOR NEXT