சிறப்புக் கட்டுரைகள்

அம்பேத்கர் பேரறிவின் ஓயாத பேரலை

கோ.ரகுபதி

சாதி கட்டமைப்பு ஒடுக்கப்படுவோர் மேல் சுமத்துகின்ற இன்னல்களை அனுபவித்த அம்பேத்கர் கல்வியால் பெற்ற பாரிஸ்டர், டாக்டர் பட்டங்களைப் ‘பொருளீட்டுவதற்குப் பயன்படுத்தாமல்’, அவற்றைச் சமூக விடுதலைக்கான பேரறிவாகவும் பேரியக்கமாகவும் உருமாற்றினார்.

ஐரோப்பாவிலிருந்து திரும்பிய பின்னர், அவருடைய இயக்கச் செயல்பாடுகள் பிரிட்டிஷ்-இந்தியாவில் பேரசைவுகளை ஏற்படுத்தின. அம்பேத்கருக்கும் மதராஸ் மாகாணத்தில் செயல்பட்டுவந்த சமூக விடுதலை இயக்கங்களுக்கும் ஆழமான நட்பு உருவானது. அவரை காங்கிரஸ் இயக்கம் விமர்சித்தது; சாதியைப் பேண விரும்பிய வைதீகர்கள் எதிர்த்தனர். அம்பேத்கர் எப்போதும் ஏதோ ஒரு கோணத்தில் பேசப்பட்டார்; இக்காலத்திலும் அது தொடர்கிறது.

​முரண்பட்ட நிலைப்​பாடுகள்: தொடக்கக் காலத்தில் அவரைத் தமிழில் ‘அம்பெட்​கார்’, ‘அம்பரிட்​கார்’ என எழுதினர். அம்பேத்​கருக்கும் பெரியாருக்கும் இருந்த கருத்​தியல் ஒற்றுமையால் அவரது ஒவ்வொரு அசைவும் ‘குடி அரசு’ பத்திரி​கையில் வெளியாகின. நாசிக் சமத்துவ சங்கம் மே 1929இல் நடத்திய கூட்டத்தில் ‘டாக்டர் அம்பெட்​கார்’ ஒரு மணி நேரத்​துக்கும் மேலாகப் பேசிய தலைமைப் பேருரையை 1929இல் ‘குடி அரசு’ வெளியிட்டது. இதுதான் தமிழில் முதலில் வெளியான அம்பேத்​கரின் பேச்சு என ஊகிக்​கலாம்.

அம்பேத்கர் தனித்​தொகுதி, இரட்டை வாக்குரிமை கோரிக்கைகளை முன்னெடுத்​த​தாலும் இவற்றை காந்தியும் காங்கிரஸும் எதிர்த்​த​தாலும் மதராஸ் மாகாணத்தில் இவர்களுக்கு ஆதரவும் எதிர்ப்பும் கொந்தளித்தன. இக்கோரிக்கையை முதலில் எம்.சி.ராஜா முன்னெடுத்த​போது, அம்பேத்கர் அதைக் கவனப்​படுத்​தவில்லை. அதன் அவசியத்தை உணர்ந்து அம்பேத்கர் அதைக் கைக்கொண்​ட​போது, எம்.சி.ராஜா அதைக் கைவிட்​டார். இதனால் ஒடுக்​கப்​படுவோர் இயக்கங்​களுக்​குள்ளேயே முரண்பட்ட நிலைப்​பாடுகள் உருவாகின.

1930களில் ஒரு வாரப் பத்திரி​கையில் கேலிச் சித்திரங்கள் வழியாகவும் அம்பேத்​கருக்கான எதிர்​வினைகள் வெளிப்​பட்டன. அவற்றில் ஒரு கேலிச்சித்திரம், ஒடுக்​கப்​பட்டோர் ‘தீண்​டாமை’ என்கிற எரிகிற வீட்டிலிருந்து தப்பிக்க, எம்.சி.ராஜா போன்றோர் முன்வைக்கும் ‘கலப்புத் தொகுதி’ என்கிற வாகனத்தைத் தேர்ந்​தெடுக்க வேண்டும்; ‘தனித்​தொகுதி’ என்கிற முதலைகளின் பிடியில் உள்ள குளத்தில் விழுந்து​விடக் கூடாது என அறிவுறுத்​தியது.

தனித் தொகுதியை ‘குடி அரசு’ இதழும், சுயமரியாதை இயக்க​மும், அதன் நன்னிலம் தாலுகா மாநாடும் (07 ஜூன் 1931), பொதுவுடைமை இயக்கமும் ஆதரித்தன. கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக் குழு உறுப்​பினர் பி.டி.ரணதிவே எழுதி ‘ஜனசக்தி’ 1945இல் வெளியிட்ட ‘ஆறு கோடி தீண்டா​தார்’ நூலில் தனித் தொகுதியை ஆதரித்​திருந்​தார்.

வசிப்​பிடம், தண்ணீர்த் தொட்டி, இடு/சுடுகாடு எனப் பொது நிறுவனங்கள் அவர்களுக்​கெனத் தனியாகக் கட்டமைக்​கப்​பட்​டுள்ள​போது, இரட்டை வாக்குரிமையும் தனித் தொகுதியும் இக்காலத்​துக்கும் அவசியம் என்கிற கோரிக்கை தவிர்க்க இய​லாதது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இதற்கென மதுரையில் 22.01.2005இல் மாநாடும் நடத்தி​னார்.

மதம் என்ன சட்டையா? - தீண்டாமைக் கொடுமையால் ஒடுக்​கப்​படு​கின்ற மக்கள் மாற்று மதத்தைத் தழுவ வேண்டும் என அம்பேத்கர் அறைகூவல் விடுத்​தார். மஹம்மதிய, கிறிஸ்​துவாதி மதங்களில் தீண்டாதார் பிரவேசிப்பது கண்டிக்​கத்​தக்​க தென்​றும், அங்கு போனாலும் தீண்டாதார் ஒதுக்கியே வைக்கப்​படு​வ​தா​யும், இந்து மதத்திலிருந்து கொண்டே உரிமை​களுக்குப் போராட வேண்டும் என்றும் இரட்டைமலை சீனிவாசனும் எம்.சி.​ராஜாவும் அம்பேத்​கருடன் முரண்​பட்​டனர்.

‘பிற மதஸ்தர்​களுக்குச் சமூக சமத்துவ விஷயத்தில் நமது உயர் சாதி மக்கள் அளிக்கும் உரிமைகூட, தங்கள் சொந்த இந்து மதத்தையே சேர்ந்​தவர்களான தாழ்த்​தப்பட்ட மக்களுக்கு அளிக்க​வில்லை யென்றால் அது மிகவுங் கொடுமையல்லவா! என்று நாம் கேட்கிறோம்’ என ‘ஆனந்த​ போ​தினி’ தலையங்கம் தீட்டியது.

இருப்​பினும், ‘நினைத்தபோது போட்டிருக்கும் சட்டையைக் கழற்றியெறிந்து​விட்டு வேறு சட்டையை மாட்டிக்​கொள்​வதுபோல் மதம் சட்டையல்ல என்பதைத் தாழ்த்​தப்பட்ட வகுப்​பாரும் டாக்டர் அம்பேத்​கரும் அறிய வேண்டு​மென்று நாம் விரும்​பு​கிறோம்’ என மதமாற்​றத்தை எதிர்த்தது.

மதராஸ் மாகாணத்தில் அம்பேத்​கருக்கு முன்னரே ஒடுக்​கப்​படுவோர் கிறிஸ்​து​வத்தையும் இசுலாமி​யத்தையும் சுயமாகத் தழுவிய​தா​லும், அயோத்​தி​தாசர் ‘தமிழ் பெளத்​த’த்தை முன்னெடுத்​த​தாலும் அம்பேத்​கரின் மதமாற்ற அறைகூவலை அம்மக்​களும் பெரியாரும் ஆதரித்​தனர். அம்பேத்​கரைப் பின்பற்றி பெளத்​தத்தைத் தழுவுவது இயக்கமாக இக்காலத்​திலும் உயிரோட்டமாக இருக்​கிறது.

மசோதாவும் மகளிரும்: நிலவுடைமைச் சாதிப் பெண்கள் அனுபவிக்​கின்ற இன்னல்​களைத் தீர்க்க இந்துச் சட்டத்​தில், “பலதார மணம் கூடாது, சொத்தில் பெண்களுக்குப் பங்கு வேண்டும், விவாகரத்து செய்ய பெண்களுக்கும் உரிமை உண்டு” என்பது போன்ற திருத்​தங்களை அம்பேத்கர் முன்மொழிந்​தார். இவற்றை அக்காலத்​திலேயே பெண்கள் தொடர்ந்து கோரிக்கை​விடுத்து வந்தனர். அம்பேத்​கரின் இத்திருத்​தங்களை ஆதரித்து ‘திராவிட நாடு’ 1950 ஏப்ரலில் தலையங்கம் எழுதியது.

சில மாநிலங்​களில் செயல்பட்ட மாதர் சங்கங்​களைப் போல், 1950இல் அம்பேத்​கரின் பிறந்த நாளிலேயே சென்னை தேனாம்​பேட்​டையில் நடைபெற்ற திமுக பெண்கள் மாநாட்​டிலும் அம்பேத்​கரின் திருத்​தங்களை உடனடியாக நிறைவேற்றக் கோரித் தீர்மானம் நிறைவேற்றினர்; தினமும் ஏராளமான தந்தி​களையும் அனுப்​பினர். 1951 அக்டோபர் தலையங்​கத்​தில், இந்துப் பெண்களுக்கு மேன்மையளிக்கும் சட்டம் இது எனச் சுட்டிக்​காட்டி, ‘அறிஞர் டாக்டர் அம்பேத்​கரின் இந்து சட்டத் திருத்த மசோதா இந்தியப் பாராளு​மன்​றத்தில் இறுதி​யாகக் கைவிடப்​பட்டது’ என ‘திராவிட நாடு’ வருந்​தியது.

மதிவாணனும் சம்பந்​தனும்: காலனிய காலத் தமிழ் அச்சு ஊடகங்கள் பெண், ஆண் ஆளுமை​களின் வாழ்க்கை வரலாற்றை வெளியிட்டன. ‘திராவிட நாடு’ பத்திரிகை ஜூலை 1950இல் ‘படிப்பகம்’ பக்கத்​தில், மதிவாணனின் ‘டாக்டர் அம்பேத்கர்’ என்ற நூலை ஆம்பூர் கஸ்பா அம்பேத்கர் பதிப்​பகத்தில் கிடைக்கும் எனக் குறிப்​பிட்டது.

அம்பேத்​கரின் வரலாற்றைத் தமிழில் எழுதிய முதல் நூல் இதுவாகக்கூட இருக்​கலாம். கல்விக்கான ஒரு மாத இதழில், 1951இல் முன் அட்டையில் அம்பேத்கர் நிற்கின்ற முழு நிழற்​பட​மும், ‘டாக்டர் அம்பேத்கர், இந்திய யூனியன் சட்ட மந்திரி’ என்ற தலைப்​பிட்டு வெளியானது.

‘டாக்டர் - அம்பேத்கர்’ என்ற தலைப்பில் தெ.பா.சம்​பந்தன் எழுதிய இக்கட்டுரை 8 பக்கங்​களைக் கொண்டது. உலக அறிஞர் அகராதியில் அம்பேத்கர் வாழ்க்கை ஒரு சோக நாடகம், ‘ஒடுக்​கப்​பட்டோரை ஓரணியில் திரட்டிய இதய ஜோதி’, ‘படிப்பில் மாணிக்கம்’ என்று வர்ணித்து அம்பேத்​கருடைய The Problem of the Rupee என்ற அரிய புத்தகத்தை உலகப் பொருளாதார வித்தகர்கள் பாராட்​டியதைச் சுட்டு​கிறார்.

வழக்கறிஞர் தொழிலைச் செய்ததில் அவர் அனுபவித்த இடையூறுகளை விவரித்து, அவரையும் அவருக்கு உதவிய பிராமணரையும் வழக்கறிஞர்கள் சிலர் கடுஞ்​சொற்​களால் திட்டியபோது அம்பேத்கர் சற்று கோபமாகவே, “ஒருநாளைக்கு நான் இந்த நாற்காலியில் உட்காரத்தான் போகிறேன்.

அப்போது நீங்கள் என்னை என் பிரபுவே (My Lord) என்று கூறத்தான் போகிறீர்கள்” என்று சொன்ன​தாகவும் 1942இல் அம்பேத்​கருக்கு நீதிபதி பதவி கிடைத்​த​தாக​வும், ஆனால் அவர் அதை நிராகரித்​த​தாகவும் குறிப்​பிடும் சம்பந்தன், ‘அதைச் செய்திருந்தால் அவர் சபதம் நிறைவேறி இருக்​குமல்​லவா?’ என வினவு​கிறார்.

‘ஆண்ட​வனால் செய்யப்பட்ட ஓர் ஏற்பாட்டை – தீண்டாமையை - ஒரு சாதாரண மனிதர் சட்ட விரோத​மான​தாக்​கி​விட்டார் எனக் காங்கிரஸ் பத்திரி​கைகள் ‘நம் கால மனு’ என எழுதின. தீண்டாமை நீடித்​தாலும் அதை வேண்டுமென மேடையேறிக் கூற இயலாத நிலையை அம்பேத்கர் உருவாக்​கி​விட்​டார்’ என சம்பந்தன் கூறுகிறார். அம்பேத்​கரின் பேரறிவு ஒடுக்​கப்​படு​வோருக்கும் ஒடுக்கு​வோருக்கும் விடுதலைக் கருவி​களாகப் பரிணமித்து ஓயாத அலையாய் வீசுகிறது.

- தொடர்புக்கு: ko.ragupathi@gmail.com

SCROLL FOR NEXT