ஆய்வாளர், பேராசிரியர், பெண்ணியவாதி, நாடகக் கலைஞர், நாடகாசிரியர், நெறியாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் என்று பல அடையாளங்கள் இருந்தாலும் ‘அரங்கச் செயல்பாட்டாளர்’ என்று அழைக்கப் படுவதையே விரும்புபவர் அ.மங்கை. இந்தியாவின் முக்கிய ஆளுமைகளில் ஒருவரான இவர், நாடகம், மொழிபெயர்ப்பு, பாலினச் சமத்துவம் போன்ற துறைகளில் சிறப்பாகப் பங்களித்தமைக்காகத் தேசிய அளவிலும், உலக அளவிலும் பெரிதும் மதிக்கப்படுகிறார். அவருடைய நேர்காணல்:
ஆங்கில இலக்கியப் பேராசிரியரான நீங்கள், நாடகக் கலைஞராக எப்படி உருவானீர்கள்? - மகளிர் இயக்கம் சார்ந்த ஜனநாயக உணர்வுதான் மக்களிடம் பணியாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தை என்னிடம் ஏற்படுத்தியது. எழுத்து, பத்திரிகை, மொழிபெயர்ப்பு போன்ற பணிகளைச் செய்துவந்தேன்.
இறுதியில் மக்களைச் சென்றடைய நாடகமே சிறந்தது என்கிற முடிவுக்கு வந்தேன். என் இருபதுகளிலேயே நாடகத் துறைக்கு வந்துவிட்டேன். நாடகக் கலைஞரான பிறகுதான், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஆனேன். பின்னர் ஸ்டெல்லா மேரி கல்லூரியில் பணியாற்றினேன்.
‘சென்னை கலைக்குழு’, ‘சக்தி’, ‘மெளனக் குரல்’, ‘பல்கலை அரங்கம்’, ‘மரப்பாச்சி’ போன்ற கலைக் குழுக்களில் உங்களின் பங்களிப்பு, முன்னெடுப்புகள் பற்றிச் சொல்லுங்கள்... தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பாக 1984ஆம் ஆண்டு உருவானது ‘சென்னை கலைக் குழு’. இதில் நான், பிரளயன், இன்னும் பலர் பங்கேற்றோம். 1986இல் ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ‘சக்தி கலைக் குழு’வை ஆரம்பித்தோம். 1987இல் சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து, முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மேடையாக, ‘பல்கலை அரங்கக் குழு’வை உருவாக்கினோம்.
1992இல் எம்.எஸ்.சுவாமிநாதன் நிறுவனத்தின் ஒரு திட்டமாக ‘மெளனக் குரல்’ ஆரம்பிக்கப்பட்டது. பெண்ணியத்தில் வேரூன்றிய மீனா சுவாமிநாதனுடன் இணைந்து பல்வேறு நாடகங்களை நடத்தினோம். 2006இல் ‘மரப்பாச்சி’ என்கிற கலைக் குழுவை மக்கள் கவிஞர் இன்குலாபுடன் உருவாக்கி, இன்றுவரை இயங்கிக்கொண்டிருக்கிறேன்.
தமிழ் நாடகங்களின் தனித்துவம் என்று எதை நினைக்கிறீர்கள்? - தமிழ் நாடகங்களுக்குத் தொடர்ச்சியான மரபு இருக்கிறது. 1942இல் ‘இந்திய மக்கள் நாடக மன்றம்’ (Indian People’s Theatre Association) மூலம் தேச விடுதலையை மையமாகக் கொண்டு நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. அக்காலத்தில் வங்கப் பஞ்சம் போன்ற மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து கம்யூனிஸ்ட் இயக்கங்கள் நேரடியாகக் கலை நிகழ்ச்சிகள் நடத்தின. 1950களில் திராவிட இயக்கங்களின் நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன.
‘பராசக்தி’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, நாடகக் கலைஞர்கள் திரைத் துறையிலும் கால்பதித்தனர். பெரியார் கொள்கைகள், திராவிட இயக்கக் கருத்துகள் மேடைகளில் முழங்க ஆரம்பித்தன. எம்.ஆர்.ராதா, என்.எஸ்.கிருஷ்ணன், கே.பி.சுந்தராம்பாள் போன்ற கலைஞர்கள் புகழின் உச்சியில் இருந்தனர். 1978இல் தொடங்கப்பட்ட ‘கூத்துப்பட்டறை’, ‘நிஜ நாடக இயக்கம்’, ‘பரீக் ஷா’ ஆகியவை நவீன நாடகங்களின் கட்டியமாக அமைந்தன. இந்தியாவில் தமிழ் நாடக வரலாறு தனித்தன்மை கொண்டது.
பெண்ணிய நாடகங்களின் தேவையை எப்போது உணர்ந்தீர்கள்? உங்களுடைய பெரும்பாலான நாடகங்கள், புத்தகங்கள், மொழிபெயர்ப்புகள் அதை மையப்படுத்தியே இருக்கின்றனவே. சமூகத்தில் நிலவும் பாலினப் பேதங்களைக் களைவதற்கும் பெண்களின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்கும் உடலை மையப்படுத்தும் நாடகம் சிறந்த ஊடகமாக இருக்கும் என்று எண்ணினேன். இன்குலாப், வ.கீதா ஆகியோருடன் இணைந்து நாடக ஆக்கங்களை உருவாக்கி மேடையேற்றும் பெரும்பேறு எனக்குக் கிடைத்த வளமான பெறுமதி.
‘மெளனக் குரல்’, ‘மரப்பாச்சி’ குழுக்களில் அனைத்துப் பாலினத்தவர்களையும் பங்கேற்க வைத்தோம். இந்தக் குழுக்களில் சரிபாதி பெண்கள் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதைவிட அதிகமாகவே பெண்கள், திருநர் இருந்தனர். சமூகத்தில் பாலினச் சமத்துவத்தைக் கொண்டுவருவது அவ்வளவு எளிதல்ல. ஆனால், என் நாடகங்களிலாவது ஓரளவு அவற்றைக் கொண்டுவந்ததில் மகிழ்ச்சி. என் தனிவாழ்வும் அதற்கேற்ற சூழலை வழங்கும் வகையில் அமைத்துக்கொண்டது கூடுதல் வலு.
தமிழ்நாட்டில் நிகழ்த்துக் கலைக்கான எதிர்காலம் எப்படி இருக்கிறது? - நான் நேர்மறையாகத்தான் சிந்திப்பேன். நாடகக் குழுக்கள், நாடகப் பயிற்சிப் பள்ளிகள் ஆகியவை குறைவாக இருந்தாலும், இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், இவை மட்டுமே போதுமானவை அல்ல. நாங்கள் நீண்ட காலமாகப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் நிகழ்த்துக் கலையைப் பாடமாக்க வேண்டும் என்று போராடி வருகிறோம். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்திலும் புதுவைப் பல்கலைக்கழகத்திலும் மட்டுமே இதற்கான வாய்ப்பு இருக்கிறது.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நாடகத் துறை ஒரு காலத்தில் பேராசிரியர் சே.இராமானுஜம் தலைமையில் சிறப்பாக இயங்கியது. இன்று முழுமையான துறையாக இயங்க இயலாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. அங்கே படித்து வந்தாலும், வேலை வேண்டுமே? நிறைய பேர் நாடகக் கலை மீது ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் நாடகங்களுக்குப் பயிற்சி, ஒத்திகை, நிகழ்த்து தலுக்கோ, நாடகக் கலைஞர்கள் சந்தித்துக்கொள்ளவோ அரசு சார்ந்த மலிவுக் கட்டண அரங்கங்களே இல்லை.
டிக்கெட் வசூலிக்கும் நாடகங்களுக்குத்தான் சபாக்களில் இடம் கிடைக்கும். எங்களைப் போன்றவர்கள் அல்லயன்ஸ் பிரான்செஸ், கதே இன்ஸ்டிடியூட் போன்ற அயல்நாட்டு மையங்களைத்தான் அண்டியிருக்க வேண்டியிருக்கிறது. தமிழ்நாடு அரசு நிகழ்கலைக் கல்விப் புலம், நாடகங்களுக்கான அரங்கங்கள், பயிற்சி மையங்கள் ஆகியவற்றை உருவாக்கிக் கொடுத்தால், நாடகக் கலை நல்ல வளர்ச்சி காணும்.
தொடர்ச்சியாக மொழிபெயர்ப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறீர்கள். ‘தேரி காதை’யை மொழிபெயர்த்த அனுபவத்தைச் சொல்லுங்கள். மணிமேகலை நாடகம் நடத்திய பின், பெண்ணிய வரலாற்று ஆசிரியர், டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியர் உமா சக்ரவர்த்தியின் மூலம் ‘தேரி காதை’ மீது எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. பெளத்தப் பிக்குணிகள் எழுதிய பாடல்களின் தொகுப்புதான் தேரி காதை.
பாலி மொழியில் இயற்றப்பட்டது. இது உலக அளவில் கிடைக்கும் முதல் பெண்கள் கவிதைத் தொகுதி. இது முன்வைக்கும் அரசியல், பெண்ணியவாதத்தின் அடிப்படை அம்சங்களைக் காட்டுவதாக இருக்கிறது. ஆங்கில மொழிபெயர்ப்பு மூலம் இந்த நூலை மொழிபெயர்க்க மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆனது. சமீபத்தில் மறுபதிப்பு வந்திருக்கிறது.
முன்பு இருந்ததுபோல் வீதி நாடகங்களை இப்போது அதிகம் பார்க்க முடிவதில்லை. வெகுஜனக் கலையாக இருந்த நாடகம், இப்போது குறிப்பிட்ட சிலருக்கான கலையாக மாறிவிட்டதா?
வீதி நாடகங்கள் எளிய மக்களுக்கானவை; அரசியல் பேசுபவை. நம் சமூகத்தில் குடும்பக் கட்டுப்பாடு போன்ற பரப்புரைகளில் விழிப்புணர்வை ஊட்டியிருக்கின்றன. வீதி நாடகங்களை அரங்குக்குள் நடத்தி, பணம் கொடுத்துப் பார்க்கச்சொல்ல முடியாது. இன்றும் வீதி நாடகங்கள் நிகழ்த்தப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. அது ஒரு பாடமாகப் பல இடங்களிலும் கற்றுக்கொள்ளப்படுகிறது.
உங்கள் ‘நாம் பார்ப்போமே’ பாடல், போராட்டங்களில் ஓர் ஆயுதமாகப் பயன்பட்டுக்கொண்டிருக்கிறதே... பாகிஸ்தானில் உருது மொழியில் ஃபயஸ் எழுதி, சர்வாதிகாரத்துக்கு எதிராக இக்பால் பானு பாடிய பாடல் அது. நானும் என் மகள் பொன்னியும் சேர்ந்து அதை மொழிபெயர்த்தோம். ‘எழுத்து எங்கும் பயணிக்கும்’ என்பதை ‘நாம் பார்ப்போமே’ நிரூபித்துள்ளது. இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் இந்தப் பாடல் குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்புப் போராட்டங்களில் எதிரொலித்திருக்கிறது. இலங்கையிலும், புகலிட நாடுகளிலும் சில ஆண்டுகளுக்கு முன் ஆட்சியாளருக்கு எதிராக நடந்த ‘அரகலய’ போராட்டங்களின்போதும் இது பாடப்பட்டது.
நாடகம், எழுத்து, மொழிபெயர்ப்பு போன்றவற்றில் எது உங்களுக்கு நிறைவு தருவதாக இருக்கிறது? - எல்லாம்தான்! எதிலும் பெண்ணியம், மார்க்சியம் இருப்பதுதான் முக்கியம். பெண்ணியம் இல்லாத மார்க்சியத்தை ஏற்றுக்கொள்ள மாட்டேன். அதேபோல 40 ஆண்டுகளாக நான் பல்வேறு துறைகளில் பணியாற்றினாலும் களத்தில் செயல்படுவதையே மிக முக்கியமானதாகக் கருதுகிறேன். நிலத்தில் வேர் ஊன்றாமல் கிளை பரப்ப முடியாது. சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டுவரக் களச் செயல்பாடு முக்கியமானது. அதனால் ‘அரங்கச் செயல்பாட்டாளர்’ என்று நான் அழைக்கப்படுவதையே விரும்புகிறேன்.
- தொடர்புக்கு: sujatha.s@hindutamil.co.in