மும்பை தீவிரவாதத் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்டவர்களில் முக்கியமானவரும் பாகிஸ்தானைச் சேர்ந்தவருமான தஹாவர் ஹுசைன் ராணா, அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டிருப்பது, இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்குக் கிடைத்திருக்கும் ராஜதந்திர வெற்றி. இதன்மூலம் மும்பை தீவிரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானின் தொடர்பு குறித்து உலகத்துக்கு அம்பலப்படுத்தும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது.
2008 நவம்பர் 26 அன்று, தீவிரவாதிகள் கடல் வழியாக மும்பைக்குள் ஊடுருவி, நடத்திய தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தியாவின் வர்த்தகத் தலைநகர் எனக் குறிப்பிடப்படும் மும்பையில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் உலகையே அதிரவைத்தது.
பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 10 பேர் இந்தத் தாக்குதலை முன்னின்று நடத்தினர். பாதுகாப்புப் படையினர் நடத்திய பதிலடியில் ஒன்பது தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், உயிருடன் பிடிபட்ட அஜ்மல் கசாப்புக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 2012இல் அவர் தூக்கிலிடப்பட்டார்.
இந்தத் தாக்குதலில் தொடர்புடையதாகக் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ராணாவும் ஒருவர். பாகிஸ்தானில் பிறந்து ராணுவத்தில் மருத்துவராகப் பணியாற்றிய ராணா, சிகாகோவில் ஒரு குடியேற்ற ஆலோசனை நிறுவனத்தை வைத்திருந்தார். மும்பை தீவிரவாத நடவடிக்கையின் மூளையாகச் செயல்பட்டவரான டேவிட் கோல்மேன் ஹெட்லி என்கிற தாவூத் சயீத் கிலானி, தாக்குதலுக்கு முன்பாக இந்தியாவுக்குப் பயணிக்க இந்த நிறுவனத்தைப் பயன்படுத்தியதுதான் இவ்வழக்கின் முக்கியக் குற்றச்சாட்டு.
டேவிட் ஹெட்லியின் கூட்டாளியான ராணா, லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளால் மும்பை தாக்குதலுக்குப் பணிக்கப்பட்டவர், கோபன்ஹேகன் செய்தித்தாள் அலுவலகத்தைத் தாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தவர். அமெரிக்காவில் 2009இல் கைதுசெய்யப்பட்ட ராணா, மும்பை தாக்குதலில் குற்றவாளியாக அமெரிக்காவால் அறிவிக்கப்படவில்லை. எனினும், பிற தீவிரவாத நடவடிக்கைகளுக்காக 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது.
இந்நிலையில், மும்பை தீவிரவாதத் தாக்குதல் வழக்கு தொடர்பாக அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். இதற்காக இந்தியத் தரப்பிலிருந்து நீண்ட காலமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி அதிபர் டிரம்பைச் சந்தித்த பிறகு, ராணாவை நாடு கடத்த ஒப்புக்கொள்ளப்பட்டது. அந்த வகையில் ராணா நாடு கடத்தப்பட்டிருப்பது மத்திய அரசுக்கும் புலனாய்வு அமைப்புகளின் விடாமுயற்சிக்கும் கிடைத்த வெற்றி.
மும்பை தாக்குதல் மட்டுமல்ல, இந்தியாவில் நடந்த பிற தீவிரவாதச் செயல்களிலும் பாகிஸ்தானின் தொடர்பு நிரூபிக்கப்பட்டுள்ளது. அஜ்மல் கசாப் வழக்குக் குற்றப்பத்திரிகையிலும் லஷ்கர்-இ-தொய்பாவின் தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டது. மேலும், மும்பை தாக்குதலில் ராணாவின் பங்குக்கான ஆதாரங்களை இந்திய உளவுத் துறை அமைப்புகள் ஏற்கெனவே சேகரித்துள்ளன. தற்போது அவரைச் சட்டத்தின் முன் நிறுத்தவும், நீதியை நிலைநாட்டவும், வழக்கை முடிவுக்குக் கொண்டுவரவும் இந்த நாடு கடத்தல் ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது.
மும்பை தாக்குதல் வழக்கில் பாகிஸ்தானின் பங்கை அம்பலப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டிய நேரம் இது. இந்தச் சதியில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுக்கு நேரடியான பங்கு இருக்கிறதா, லஷ்கர்-இ-தொய்பா இந்தச் சதியை எப்படிச் செயல்படுத்தியது, பிற வெளிநாட்டுச் சக்திகளுக்குத் தொடர்பு இருக்கிறதா என்பன போன்ற கேள்விகளுக்குத் தேசியப் புலனாய்வு முகமையின் விசாரணை மூலம் உறுதியான பதில்கள் கிடைக்கும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதில் தொடர்புடையவர்களுக்குத் தண்டனை பெற்றுத் தருவதன் மூலம் மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும்.