சிறப்புக் கட்டுரைகள்

புள்ளி ராஜாக்களுக்கு அறிவு வருமா?

கா.சு.துரையரசு

அண்மையில் இணையத்தில் கசியவிடப்பட்ட ஒரு நடிகையின் அந்தரங்கக் காணொளியைச் சிலர் மும்முரமாகச் சமூக ஊடகங்களில் பதிவிட்டனர். குறிப்பிட்ட அந்த நடிகை அது தொடர்பாக விளக்கம் அளித்த பின்னரும் விவாதங்கள் தொடர்ந்தன. இந்தப் பதிவுகளுக்கு வந்த பின்னூட்டங்கள் இன்னும் மோசமானவை. ஏதோ விளையாட்டாக, கேளிக்கையாக உரையாடுவதுபோலப் பலர் அந்தக் காணொளியைத் தாங்களும் பார்க்க வேண்டும் என்கிற எண்ணத்தை வெளிப்படுத்தினர்.

அதற்காகப் பின்னூட்டங்களில் புள்ளி வைத்தனர். இது ஓர் எடுத்துக்காட்டுதான். ஆபாசமான பதிவுகளை, பின்னூட்டங்களை வெளியில் திட்டிக் கொண்டே நமது சமூகம் அந்தப் போக்கை வளர்த்து வருகிறது. ஒவ்வொரு மனதுக்குள்ளும் இருக்கும் விகாரம், நகைச்சுவை என்கிற பெயரால் நாகரிகமாக அங்கீகரிக்கப்படுவது சமூகத்துக்குக் கேடு.

​பா​சாங்கான சமூகம்: பொதுவாக, நமது சொந்த விஷயங்களை மற்றவர்​களிடம் பகிர்ந்து​கொள்ள ரொம்பவே யோசிப்​போம். நமக்கு மிகவும் நெருக்​க​மானவர்​களிடமும் அதேபோல ‘இவரிடம் நமது அந்தரங்க விஷயங்கள் பத்திரமாக இருக்கும்’ என்று நாம் நம்பு​கிறவர்​களிடமும் மட்டும்தான் அதனைப் பகிர்​வோம்.

அப்படி இருக்​கும்போது பாலியல்​ரீ​தியில் சுரண்​டலுக்கு உள்ளான ஒருவரின் காணொளி, இன்னொரு​வரின் அந்தரங்க விஷயமாக நமக்குத் தோன்ற​வில்லை. மாறாக, அவற்றைச் சமூக ஊடகங்​களில், பொதுவெளியில் கேட்டுப்​பெறுவது வெகு சாமர்த்தியமாக ‘நகைச்​சுவை’ என்கிற கேடயத்தால் பாதுகாக்​கப்​படு​கிறது.

ஆண்-பெண் இருவரும் பரஸ்பர சம்மதத்தோடு தனித்​திருக்கும் காணொளி​களும் சமூக ஊடகங்​களில் கசியவிடப்​படு​கின்றன. அப்போதும் ‘எதையும் பார்க்​காமல் நான் நம்ப மாட்டேன்’ என்றோ, ‘நான் புள்ளி வெச்சேன்... இன்னும் வீடியோ வரல’ என்றோ பின்னூட்டம் இடுபவர்கள், மீம்ஸ் பகிர்ந்து​கொள்​பவர்கள் ஆண்களாகத்தான் இருக்​கின்​றனர். ஏன் பெண்களுக்கு ஒரு புள்ளி வைத்து, அவற்றைக் கேட்டுப் பெற்று ‘கண்டு களிக்​கும்’ எண்ணம் தோன்று​வ​தில்லை?

காரணம், பிரச்சினையின் இன்னொரு கோணத்தையும் பெண்கள் பார்க்​கிறார்கள். மேற்கண்ட காணொளிகள் பற்றிப் பேசும்​போதோ, அவற்றைப் பற்றிய செய்தி​களைக் காணும்​போதோ, பெண்களிடம் பரிவுணர்வே ஏற்படு​கிறது. பாதிக்​கப்பட்ட பெண்ணின் பக்கம் நின்றுதான் பெண்கள் பேசுகிறார்கள். ஏனென்​றால், பெண்களுக்​குத்தான் அந்த வலி தெரியும்.

காலம்​தோறும் பெண்: காலங்​கால​மாகத் தங்கள் மீது திணிக்​கப்பட்ட அடக்கு​முறைகளை எதிர்த்துப் பெண்கள் பல்வேறு துறைகளில் பணிபுரி​கிறார்கள். சாதனை படைக்​கிறார்கள். இவற்றுக்கு இடையே, அன்றாட வாழ்க்கையில் பாலியல் தொந்தர​வு​களைப் பெண்கள் எதிர்​கொள்​கிறார்கள். இப்படி இருக்கையில் பாலியல்​ரீ​தியில் தாக்கப்பட்ட ஒரு பெண்ணின் காணொளி, பெண்களுக்குப் பரிவுணர்வைத் தூண்டுவது இயல்பு​தானே!அப்படி​யென்றால் இந்தப் ‘புள்ளி ராஜா’க்களை வளர்த்து​விட்டது எது? ‘ஆணாதிக்​கம்’.

டெல்லியில் நிர்பயா வன்தாக்​குதலை நடத்திய குற்ற​வாளி, “இரவு நேரத்தில் ஒரு பெண் பிள்ளைக்குச் சாலையில் என்ன வேலை? அப்படி இருந்தால் இப்படித்தான் நடக்கும்” என்று சொன்ன​போது, அவர் தன் தரப்பில் நியாயம் இருப்​ப​தாகக் கருதி​யிருப்​பார். ஆனால் அது அநியாயம், வக்கிரம். ஆனால், அந்த ‘நியாய உணர்வை’ எது கொடுக்​கிறது - ‘ஆணாதிக்​கம்​’​தானே?

ஆளுக்கொரு நியாயம்: அதே ஆணாதிக்க மனப்பான்மை, தனது வீட்டுக்குள் பிரச்சினை என்று வருகிறபோது கத்திக் கூப்பாடு போடுகிறது. தன் வீட்டுப் பிள்ளையின் அந்தரங்கக் காணொளி வெளியா​னால், ‘புள்ளி வைப்பதும் கண்டு களிப்​பதும் உலக வழக்கம்​தானே!’ என்று கடந்து​வி​டாமல் ஆண்கள் அறச்சீற்றம் காட்டு​வார்கள்; அரற்றத் தொடங்கு​வார்கள். அதாவது - தனக்காக ஒரு முகம்... சமூகத்​துக்காக ஒரு முகம்.

இதுகுறித்த உரையாடல்கள் விரிவான அளவில் நிகழ்த்​தப்​படும்​போதுதான் பாதிக்​கப்​பட்​ட​வரின் இடத்திலிருந்து பார்க்கும் பார்வை இப்படியான ஆணாதிக்க மனப்பான்மை கொண்ட​வர்​களுக்கு வரும். மற்ற சமூகக் கொடுமை​களில் பாதிக்​கப்​பட்டோர் சமூகத்​துடன் உரையாடுவதை ஒப்பிடு​கை​யில், இணையப் பாலியல் வன்தாக்​குதலில் பாதிக்​கப்​பட்டோரும் மீண்டோரும் உரையாடுவது வெகு சொற்ப​மாகவே இருக்​கிறது. புகழ்​ பெற்​றவர்கள் மட்டுமே ஓரளவுக்கு இதிலிருந்து மீண்டுவர முடிகிறது. சாமானியர்​களின் குரல்கள் சன்னமாகவே ஒலிக்​கின்றன.

வெளியே வந்த வாச்சாத்தி பெண்கள்: சாமானியர்​களின் குரல் கேட்கும்போது பொதுச் சமூகம் திடுக்​கிடு​வதையும் அக்கறையோடு அதனைக் கேட்ப​தையும் பார்க்​கும்போது சற்று ஆறுதலாக இருக்​கிறது. 1992இல் தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராமத்தில், சந்தனமர தேடுதல் வேட்டை என்கிற பெயரில் வனத் துறையினரும் காவல் துறையினரும் வருவாய் துறையினரும் செய்த பாலியல் வன்கொடுமைகள் இதற்கொரு எடுத்துக்காட்டு.

அண்மையில் மதுரையில் நடைபெற்ற மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டுப் பேரணியைத் தொடங்கி வைத்தவர்கள் வாச்சாத்தி பெண்கள்​தான். பாதிக்​கப்பட்ட பெண்கள் நேரடி​யாகப் பேசும்போது சமூகம் பேச்சற்றுப் போய் விடுகிறது. அதேபோல, காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்​கப்பட்ட சிதம்பரம் பத்மினியின் வழக்கும் மிக முக்கிய​மானது. விரைவில் அவரது வாழ்க்கையும் திரைப்​படமாக உருவெடுக்க இருக்​கிறது.

பாலியல்​ரீ​தியில் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்களையே குற்ற​வாளி​யாக்கும் ஆணாதிக்கச் சமூகத்தின் பார்வையை, இதுபோன்ற படைப்பு​களும் உரையாடல்​களும் சுக்குநூறாக உடைக்​கும். சரி, ஒவ்வொரு வேதனைக் கதையும் திரைப்​படமாக, அரசியல் இயக்கமாக மாறினால்தான் சமூகம் அக்கொடுமைகளை நிறுத்​திக்​ கொள்​ளுமா?

சட்ட நடவடிக்கை: இந்தியத் தகவல் தொழில்​நுட்பச் சட்டத்​தின்படி, பாலியல் உள்ளடக்​கத்தை உருவாக்கிப் பதிவேற்று​வதும் பகிர்​வதும் கடும் குற்றம். எனவே, ‘புள்ளி வைத்தால் லிங்க் பகிரப்​படும்’ என்று அறிவிப்​பவர்களை உடனடி​யாகச் சட்டத்தின் முன்பு நிறுத்த, காவல் துறையின் இணையக் குற்றத் தடுப்புப்​பிரிவு களமிறங்க வேண்டும். அதேபோல, இதுபோன்ற பதிவுகளை அனைத்துச் சமூக ஊடகங்​களும் தடை செய்வதுடன் காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். பெண்களின் கண்ணி​யத்தைக் குலைக்கும் இவர்களைப் போன்ற​வர்​களின் கணக்குகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்​கலாம்.

அந்தரங்கம் அம்பல​மாக்​கப்பட்ட பெண்ணின் வாழ்வு நிலைகுலைவது குறித்துப் போதுமான அளவுக்கு விவாதங்கள் நடப்பது​இல்லை. பாதிக்​கப்​பட்டோர் தொலைக்​காட்சி விவாதங்​களில் பங்கெடுத்துத் தம் வலியைப் பேச வேண்டும். அது சமூகத்தின் மனசாட்சியை நிச்சயம் உலுக்​கும். அந்தக் கொடுமையி​லிருந்து வெளிவர அவர்களுக்குத் துணிச்​சலும் ஊக்கமும் அளிக்​கப்பட வேண்டும்.

அதேபோல, சமூகவிய​லா​ளர்கள், உளவிய​லா​ளர்கள், இணையக் குற்ற வல்லுநர்கள், காவல் துறையினர், பெண்ணி​ய​வா​திகள், மகளிர் ஆணையங்கள், கைம்பெண்கள் ஆணையம், தொண்டு நிறுவனங்கள், மகளிர் அமைப்பு​களின் பிரதி​நி​திகள் ஆகியோரைக் கொண்டு இணையத்தில் பெண்களின் பாதுகாப்பு - பாதிப்பு, மறுவாழ்வு குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். பாதிக்​கப்​பட்​டோரின் மனநலம், உடல் நலம், சமூகத் தகைமை, குடும்ப ஏற்பு (acceptance) ஆகியவற்றை ஆய்வுசெய்து அறிக்கை​யாகத் தர வேண்டும். அதனைப் பொதுவிலும் பகிரலாம்.

மாற வேண்டிய மனோபாவம்: கண்களுக்குத் தெரியாத கேமராக்கள் பெருகி​விட்ட இந்நாள்​களில், கையிலுள்ள திறன்பேசியே உளவாளியாக மாறும் வாய்ப்புள்ள இணையக் குற்ற உலகில், நமது அந்தரங்கம் படம் பிடிக்​கப்​படு​வதும் விற்கப்​படு​வதும் சாத்தி​யம்​தான். எனவே, ஒரு பாலியல் சுரண்டல் காணொளியைக் காண நேர்ந்தால் பொறுப்புள்ள, நாகரி​கமடைந்த குடிமக்களாக நாம் நடந்து​கொள்​ள வேண்டும். அதற்குத் தடையாக உள்ள வக்கிர மனதையும் ஆணாதிக்க மனோபாவத்தையும் ஆண்கள் விட்டொழிக்க வேண்டும்.

அதேபோல பிரபலமாக இருக்கும் பெண்களைப் பற்றி - குறிப்​பாகத் திரைப்படம் உள்ளிட்ட ஊடகங்​களைச் சேர்ந்த பெண்களைப் பற்றி தவறான செய்திகள் கசியும்போது அதை வைத்து சுவாரசியமாக விவாதம் நடத்தும் பெண்களையும் பார்க்க முடிகிறது. சமூக ஊடகங்​களில் பேசப்​படும் தகவல்​களின் உண்மைத்​தன்மை பற்றி சரியாகத் தெரியாமல், பிரபலமடைவதன் பின்னணியில் பெண்கள் எதிர்​கொள்ளும் பிரச்சினை​களும் புரியாமல் அது பற்றி வம்பு பேசும் வழக்கத்தை சில பெண்கள் மத்தி​யிலும் காண முடிவது வருத்​தம்​தான்.

ஊடகங்​களும் பாலியல் சுரண்டல் செய்தி​களைப் பாதிக்​கப்​பட்​டோரின் பார்வையில்​இருந்தே செய்தி​யாக்க வேண்டும். ஒரு சமூகத் தீங்குக்கு எந்த வடிவத்​திலும் நாம் பார்வை​யாள​ராகவோ, பங்கேற்​பாள​ராகவோ, நமுட்டுச் சிரிப்புடன் கடந்து செல்பவ​ராகவோ இருந்து​விடக் கூடாது. அப்படி இருந்து​விட்​டால், தீங்கு விளைவிப்​போருக்கும் நமக்குமான இடைவெளி சிறிதுதான் என்றே அதற்குப் பொருள்​!

- தொடர்புக்கு: editdurai@gmail.com

SCROLL FOR NEXT