சிறப்புக் கட்டுரைகள்

சமூகம் ஆதரிக்கும் வேளாண்மை: நெதர்லாந்து கற்றுத்தரும் பாடம்

வெ.ஜகதீஸ்

இயற்கை வேளாண்மை குறித்து தமிழ்நாட்டில் பரவலாகப் பேச்சு இருக்கிறது. வேதிக் கலப்பற்ற காய்கறிகளை வாங்கப் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். என்றாலும் விளைபொருள்களின் விலை, விநியோகம் போன்றவற்றில் பல்வேறு சிக்கல்கள் நிலவுகின்றன. சமீபத்தில் நான் நெதர்லாந்துக்குச் சென்றிருந்தபோது, நஞ்சில்லாத காய்கறி உற்பத்தி / நுகர்வு முறையால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி நேரடியாக அறிந்துகொள்ள முடிந்தது. அவை, நம்மூருக்கும் பொருத்தமானவைதான்.

கல்​லூரித் தோழிகளின் முன்னெடுப்பு: அமெரிக்​கா​விலும் ஐரோப்பிய நாடுகளிலும் நஞ்சில்லாத காய்கறிகளை வாங்கச் சிறந்த வழியாக இருப்பது ‘சமூகம் ஆதரிக்கும் வேளாண்மை’ (Community Supported Agriculture). இயற்கை முறையில் உணவு உற்பத்தி செய்பவர்கள் தனியாகவோ, கூட்டாகவோ சொந்த / குத்தகை நிலத்தில் காய்கறிகள், பழங்களை உற்பத்தி செய்கிறார்கள்; வீடுகளுக்குச் சென்றோ அல்லது மையமான இடங்களுக்குக் கொண்டு​சென்றோ அவற்றை விநியோகிக்​கிறார்கள். இதற்கு வேளாண் பருவம் தொடங்கும் முன்னரே நுகர்வோர் பணம் செலுத்தி உறுப்​பின​ராகிவிட வேண்டும். நெதர்​லாந்தில் இது சிறப்​பாகச் செயல்​படுத்​தப்​படு​கிறது.

நெதர்​லாந்தின் தலைநகர் ஆம்ஸ்​டர்​டா​முக்கு மேற்கே 13 கி.மீ. தொலைவில் ‘De Stadsgroenteboer’ என்கிற காய்கறித் தோட்டம் கடந்த ஏழு ஆண்டு​களாகச் செயல்​படுத்​தப்​படு​கிறது. கல்லூரித் தோழிகள் ஐந்து பேர் கூட்டாக இதை நடத்து​கின்​றனர். ஆரம்பத்தில் நஞ்சில்லாத உணவை விரும்பும் நெருங்கிய நண்பர்கள் சிலரின் தேவைக்கான உற்பத்​தி​யாகத்தான் இது தொடங்​கியது. பின்னர், அதன் நன்மையை உணர்ந்த மக்களின் ஆதரவால் இத்திட்டம் விரிவடைந்தது.

எப்படிச் செயல்​படுத்து​கிறார்கள்? - நெதர்​லாந்தில் டிசம்பர் முதல் மார்ச் வரை கடும் குளிர் நிலவும். அந்த நேரத்தில் சில பயிர்களை மட்டும் மூடிய கூடாரத்தில் வளர்க்​கிறார்கள். ஏழு மாதங்கள் திறந்​தவெளியில் வேளாண்மை செய்கிறார்கள். வருடம் முழுவதும் அவ்வப்போது மழை பெய்து​கொண்டே இருக்​கிறது. சராசரி வெப்பநிலை 10 - 25 டிகிரி செல்சியஸ் வரை இருக்​கிறது. பருவத்தைப் பொறுத்து 20 வகையான காய்கள், சில கீரைகள், பழங்கள் விளைவிக்​கப்​படு​கின்றன. ஐந்து பேர் தினமும் வேலை செய்கின்​றனர்.

அவ்வப்போது என்ன உற்பத்​தி​யாகிறதோ அதை எல்லா உறுப்​பினர்​களுக்கும் பிரித்து அனுப்பு​கிறார்கள். அதிக மழை, நத்தை, புழுத் தாக்குதல், களை ஆகியவைதான் இவர்களுக்குப் பெரிய சிக்கல். நாளுக்​கு நாள் நிலையற்ற, கடுமையான இயற்கைச் சூழலில், கரிமச்​சத்தை இழந்து நிற்கும் மண்ணில் நோய்களும் பூச்சிகளும் பயிர்களை எளிதில் தாக்கு​கின்றன. இதனால் இயற்கை முறையில் திட்ட​மிட்ட உற்பத்தியை உருவாக்க முடிவ​தில்லை. அப்படியான இழப்புகளை உணவைப் பெறும் பண்ணை உறுப்​பினர்​களுக்குத் தெரியப்​படுத்​தும்​போது, அவர்கள் நிலவரத்தைப் புரிந்து​கொள்​கிறார்கள்.

தரமான (Quality), நிறைவான (Quantity) உற்பத்தி கிடைத்​தா​லும், கிடைக்​கா​விட்​டாலும் விவசா​யியின் உழைப்பு ஒன்று​தான். அதற்கான ஊதியத்தைத் தந்தால் மட்டுமே இயற்கை வேளாண்​மையைச் சாத்தி​யப்​படுத்த முடியும். விவசாயி - நுகர்வோர் என இருதரப்​பினருக்கும் நன்மை தருகின்ற, நடைமுறைச் சாத்தி​ய​முள்ள எளிய தீர்வை நெதர்​லாந்து மாதிரி முன்வைக்​கிறது. முன்னரே பணத்தைச் செலுத்தி, வரும் விளைச்சலை ஏற்றுக்​கொள்ளும் நுகர்​வோரின் ஆதரவு இதில் மிக அவசிய​மானது.

எதிர்​பார்ப்புகள்: தமிழ்​நாட்டின் 8 கோடி பேருக்குத் தினமும் சுமார் 1.5 லட்சம் டன் காய்கறி தேவைப்​படு​கிறது. நெதர்​லாந்தைப் போன்று முன்னரே பணம் செலுத்தி இயற்கைக் காய்கறிகள் பெறுபவர்கள் தற்போது இங்கு குறைவு. காரணம், இயற்கையான உற்பத்தி இன்று சாத்தி​யமில்லை என்கிற எண்ணம் பரவலாக இருக்​கிறது.

இயற்கை வேளாண்​மையைப் பொறுத்தவரை - கேட்கும் அளவு கிடைக்க வேண்டும், பருவங்​களைத் தாண்டி எப்போதும் கிடைக்க வேண்டும், வீட்டுக்கே கொண்டு​வந்து தரப்பட வேண்டும், விலை குறைவாக இருக்க வேண்டும், வெளிநாட்டு ரகங்கள் வேண்டும் என்றே பலரும் விரும்​பு​கிறார்கள். இயற்கை வேளாண் விளைபொருள்கள் எங்கு, எப்படி உற்பத்தி செய்யப்​படு​கின்றன, அவை உடலுக்கு உண்மை​யிலேயே ஆரோக்​கிய​மானவையா என்பன போன்ற தகவல்கள் வெளிப்​படை​யாகத் தெரியாத நிலையில், இயற்கை வேளாண்மை குறித்த சந்தேகங்கள் பலரிடமும் தொடர்​கின்றன.

மாற்றத்​துக்கு என்ன வழி? - விருப்பம் உள்ளவர்கள் தனியாகவோ கூட்டாகவோ முதலில் மூன்று அல்லது ஐந்து குடும்​பங்​களின் மாதக் காய்கறி தேவையைக் கணக்கிட்டு, இயற்கை வேளாண்மைக்கான வேலையைத் தொடங்​கலாம். நடைமுறைச் சிக்கல்​களைத் தாண்டி, அனுபவம் அதிகரிக்​கும்போது உறுப்​பினர்களை அதிகரித்​துக்​கொள்​ளலாம்.

நீங்கள் நுகர்​வோராக இருந்தால் நஞ்சில்லாத உணவை விரும்பும் 5-10 நண்பர்கள் ஒன்றாகச் சேர்ந்து, அருகில் உள்ள இயற்கை விவசா​யியைச் சந்தித்து உற்பத்தி செய்துதருமாறு கேட்கலாம். ஒவ்வொரு மாவட்​டத்​திலும் தீவிரமான இயற்கை விவசா​யிகள் பெரும்​பாலும் மற்றவரோடு தொடர்பில் இருப்​பார்கள். சமூக வலைத்தளங்​களையும் பயன்படுத்​தலாம்.

உள்ளூரைச் சேர்ந்த வேளாண் விற்பனை​யாளரும் நுகர்​வோரும் தொடர்ந்து சந்தித்​துக்​கொள்​ளும்போது ஒருவரையொருவர் நன்கு புரிந்து​கொள்ள முடியும். இதில் ஏமாற்று வேலைகள் நடக்காது. நேரடியாக உள்ளூரிலிருந்து வருவதால் போக்கு​வரத்​துக்கான (Food miles) தேவை குறையும், இடைத்​தரகர் செலவு​களைக் குறைத்து, அறுவடை செய்த சில மணி நேரத்தில் (Fresh) சத்துகள் குறையாமல் காய்கறிகளைப் பெற்றுக்​கொள்​ளலாம்.

அன்றாட உணவில் அரிசி, பருப்பின் அளவைவிடப் பச்சைக் காய்கறிகளின் அளவைக் கூட்டுவது உடலுக்குப் பலவிதங்​களில் நன்மை தருகிறது என்பதை அலோபதி மருத்​துவர்கள் முதல் சித்த மருத்​துவர்கள் வரை பரிந்துரைக்​கிறார்கள்.

அப்படிப்பட்ட காய்கறிகள் நஞ்சில்லாத முறையில் விளைவிக்​கப்​பட்டவையாக இருக்க வேண்டும். இன்றைய உணவுச் சூழலின் சிக்கல்​களில் மலைத்​துப்போய் நின்று​வி​டாமல், ஆர்வம் உள்ளவர்கள் இயன்றதைச் செய்யத் தொடங்​கினாலே நல்லதொரு மாற்றத்தைக் காண முடியும். விவசாய நிலத்தின் பாதுகாப்பு, விவசா​யிகள் - விவசாயத் தொழிலா​ளர்​களின் வாழ்வு, விரைவாக அழிந்து​வரும் இயற்கை வளங்கள் பற்றிய சிந்தனை மேலோங்​கினால் நிச்சயம் மாற்றம் நிகழும்​!

- தொடர்புக்கு: anbufoodgarden@gmail.com

SCROLL FOR NEXT