ஸோனாலி பாலி ஆற்றின் மணலில் வெயில் சாய்ந்து விழுந்து கொண்டிருந்தது என்று துவங்குகிறது நீலகண்ட பறவையைத் தேடி நாவல். வெளிர் நீல ஆகாசம், ஸ்படிகம் போலத் தெளிந்த தண்ணீர். சுற்றிலும் தர்பூசணி விளையும் வயல்கள். பின்பனிக் காலத்தின் மாலைநேரம். கார்த்திகை மாதத்தின் கடைசி நாட்கள். வயதான ஈசம் ஷேக் அறிமுகமாகிறார். டாகுர் வீட்டு தனபாபுவிற்குப் பிள்ளை பிறந்திருப்பதாக மகிழ்ச்சியான செய்தி வருகிறது.
அந்த வீட்டை நோக்கி ஈசம் புறப்படுகிறார். அவரோடு நாமும் செல்லத் துவங்குகிறோம். கால இயந்திரத்தில் பயணிப்பது போல நாவல் நம்மை வேறு காலத்திற்குள், வேறு நிலவெளிக்குள் அழைத்துச் சென்றுவிடுகிறது.
அதீன் பந்த்யோபாத்யாயே 1971ல் வங்க மொழியில் எழுதிய ‘நீலகண்ட பஹீர் கோஜே’ என்ற நாவல் தமிழில் ‘நீலகண்டப் பறவையைத் தேடி’ என வெளியாகியுள்ளது. இதன் மொழிபெயர்ப்பாளர் கிருஷ்ணமூர்த்தி. சாகித்ய அகாதமி பரிசு பெற்ற இந்நாவலை நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டுள்ளது.
அதீன் பந்த்யோபாத்யாயே கிழக்கு வங்காளத்தின் டாக்கா அருகேயுள்ள ரைனாடி கிராமத்தில் பிறந்தவர். இந்த நாவலின் களமும் அந்த ஊர் தான். இந்தியப் பிரிவினைக்கு முந்தைய காலத்தில் கதை நடக்கிறது. நூற்றாண்டிற்கு முந்தைய இந்திய கிராம வாழ்க்கை எப்படியிருந்தது என்பதை நாவல் மிகவும் நுணுக்கமாகச் சித்தரிக்கிறது. அதுவும் கவித்துவமான காட்சிப்படிமங்களுடன். நாவலின் மகத்தான இரண்டு கதாபாத்திரங்கள் பெரிய பாபு எனப்படும் மணீந்திர நாத் மற்றும் ஜோட்டன். இழந்த காதலின் நினைவில் சஞ்சரிக்கிறார் மணீந்திரநாத். ஜோட்டன் அணையா நெருப்பான உடலின்பத்தில் திளைக்கிறாள். ஒரே விளக்கின் இரு சுடர்கள் தான் இருவரும்.
நிறைவேறாத காதலைப் போன்ற துயரம் எதுவுமில்லை. அது மனதின் மூலையில் நிரந்தர இருட்டாகத் தங்கி விடுகிறது. உடைந்த கிளையொன்று மரத்திலே காய்ந்து தொங்குவதைப் போலத் தீராத வலி தருவதாகிறது. காதல் தோல்வி என்று அதனைச் சொல்லக் கூடாது. தோற்கடிக்கப்பட்ட காதல் என்றே சொல்ல வேண்டும். நீலகண்ட பறவையைத் தேடி நாவலில் அப்படியொரு காதல் இடம்பெறுகிறது. பெரிய பாபு என்றும், பைத்தியக்கார பாபு என்றும் அழைக்கபடும் மணீந்திர நாத், வசதியான நிலப்பிரபுவின் மகன். அழகன். அவர் கல்கத்தாவுக்குப் படிக்கச்சென்ற போது பாலின் என்ற ஆங்கிலோ இந்தியப் பெண் மீது காதல் கொள்கிறார். பேரழகியான அவளுக்கு நீண்டு உயர்ந்த மூக்கு, நீலக்கண்கள். பாப் கட் செய்த தலை. கீட்ஸின் கவிதைகளை ஆசையாகப் படிப்பவள்.
பாலின் கிறிஸ்துவச் சமயத்தைச் சேர்ந்தவள் என்பதால் அந்தக் காதலை மணீந்திர நாத்தின் தந்தை ஏற்க மறுக்கிறார். தந்தையின் பேச்சை மணீந்திர நாத்தால் மீற முடியவில்லை தந்தையே வேறு பெண்ணைப் பார்த்து அவருக்குத் திருமணம் செய்து வைக்கிறார். இந்த ஏமாற்றத்தில் மணீந்திர நாத் மனம் உடைந்து பித்தாகி விடுகிறார்.
பொம்மைக் கல்யாணம் போலவே அந்தத் திருமணம் நடக்கிறது. மணப்பெண்ணிற்குத் தனது கணவனின் காதலைப் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் அவர் நிகழ்வுலகில் வாழவில்லை, எங்கோ கனவில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார் என்பதைத் திருமணமான முதல்நாளே அறிந்து கொண்டு விடுகிறாள். அதன் பிறகான காலத்தில் தாயை இழந்த குழந்தையை அரவணைத்துக் கொள்வதைப் போல அவரைத் தேற்றுகிறாள். அவரது நலம் நாடுகிறாள்.
நாவல் முழுவதும் ஸோனபாலி ஆற்றின் கரையில் மணீந்திரநாத் நீலகண்ட பட்சியைத் தேடிக் கொண்டிருக்கிறார். நித்திய ஏக்கத்தின் வடிவம் தான் நீலகண்டப் பட்சி. அவர் தன்னை மறந்த நிலையில் கொட்டும் மழையில் நனைகிறார். இடுகாட்டில் போய் அமர்ந்து கொள்கிறார். ஏரியில் படகோட்டி அலைகிறார். வேதனை மீறும் போது தனது கைகளைக் கடித்துக் காயமாக்கிக் கொள்கிறார். எந்த மருத்துவராலும் அவரைக் குணமாக்க முடியவில்லை.
மணீந்திரநாத்தின் பித்து நிலையை அவரது கிழத்தந்தையால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மகனின் நிலைகுத்திய பார்வை. தன்னை மறந்த செயல்கள் அவரைக் குற்றவுணர்வு கொள்ளச் செய்கின்றன. ‘ ‘நீங்கள் அவளை விரட்டிவிட்டீர்கள். நான் சமுத்திரத்தைப் பார்த்ததில்லை. ஆனால் வசந்த காலத்து வானத்தைப் பார்த்திருக்கிறேன்.
அந்த வானத்திற்குக் கீழே ஸோனாலி பாலி ஆற்றின் நீரில் அவளுடைய முகம் தெரிகிறது. வானத்திலுள்ள ஏதாவது ஒரு பெரிய நட்சத்திரம் நீரில் பிரதிபலித்தால் என் அன்புக்குரிய பாலின் தூர தேசத்திலிருந்து என்னிடம் சொல்வது போலிருக்கிறது. குளிர்காலத்தில் புற்களின் மீதுள்ள பனித்துளிகளைப்பார்த்திருக்கிறேன். அந்தப் பனித்துளியைப் போலப் பவித்ரமான பெண்ணின் முகத்தை என்னிடமிருந்து பிரித்துவிட்டீர்களே அப்பா.’’ என மணீந்திரநாத்தின் வெறித்த பார்வை சொல்வதைப் போல உணருகிறார்.
ஸோனாலி பாலி ஆறு எப்படியிருக்கும் என நாவலை வாசிக்கும் தமிழ் வாசகனுக்குத் தெரியாது. ஆனால் தான் அறிந்துள்ள ஒரு ஆற்றின் நினைவோடு ஸோனாலி பாலியை மனதிற்குள் உருவாக்கிக் கொள்வான். ஸோனாலி பாலி என்ற சொல்லே அதன் பொன்னிறத்தை உணர்த்தி விடுகிறது. எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் ஆற்றின் வசீகரமும், ஆற்றோடுஇணைந்து வாழும் மனித வாழ்க்கையும் ஒன்று போலத்தானிருக்கிறது.
சுபசெய்தியை சொல்வதற்காக இருட்டிற்குள் ஈசம் நடந்து செல்லும் போது பாதை தெரிவதில்லை. வழியெங்கும் கேட்கும் பூச்சிகளின் சப்தத்தை நம்மாலும் கேட்க முடிகிறது. இருட்டிற்குக் கைகள் அதிகம். அது நம் பின்னால் இருந்து முதுகைத் தட்டும். அப்படி இருட்டின் அகன்ற கரங்கள் தன்னைப் பிடித்து இழுப்பதாக உணரும் ஈசம் மயங்கி விழுகிறார். நாவலாசிரியன் தீட்டும் இது போன்ற சித்திரங்கள் அபூர்வமானவை. பேரழகு மிக்கவை. நாவலின் முக்கியக் கதாபாத்திரமான பெரிய பாபு மணீந்திரநாத் அறிமுகமாகும் விதம் அபாரமானது. அவர் இருட்டில் ஒரு ஆமையின் மீது உட்கார்ந்திருக்கிறார். அது தன்னுடைய கால்களை நீட்டி முகத்தைத் தூக்கி அவரைக் கடிக்க முயற்சி செய்கிறது.
வானெங்கும் மங்கிய நிலவொளி. அவர் வளர்த்த ஆயிரக்கணக்கான நீலகண்டப் பட்சிகள் ஆகாயத்தின் ஏதோவொரு மூலையில் காணாமல் போய்விட்டதைத் தேடுவது போலத் தனது கைகளை அகல விரித்துத் தேடுகிறார். கைதட்டிப் பறவைகளை அழைக்கிறார். நினைவில் பறக்கும் பறவையை நேரில் எப்படிப் பிடிக்க முடியும். அந்தக் காட்சி அபூர்வமான கவித்துவத்துடன் மனதைக் கவ்வும் வேதனையுடன் எழுதப்பட்டிருக்கிறது. கருமேகம் சூழ்வதைப் போல மதவேற்றுமை அந்தக் கிராமத்தைச் சூழ்வதையும் அதன் விளைவுகள் திருவிழாவில் கலவரமாக மாறுவதையும் நாவல் உண்மையாகச் சித்தரிக்கிறது. நாவலின் ஊடே காந்தியின் சட்டமறுப்பு இயக்கம் வருகிறது. பிரிட்டீஷ்காரர்கள் ஜனங்களைத் தடியடி செய்து விரட்டுகிறார்கள். உண்மையின் பொன்னிற இழைகளைக் கொண்டு நெய்யப்பட்டதாலேயே இந்த நாவல் மகத்தான இலக்கியப் படைப்பாக இன்றும் கொண்டாடப்படுகிறது.