தலையங்கம்

அரசமைப்புச் சட்டத்தை ஆட்சியாளர்கள் நீர்த்துப்போக வைக்கலாமா?

செய்திப்பிரிவு

தெலங்கானாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் இணைந்த பாரத ராஷ்டிரிய சமிதி (பிஆர்எஸ்) கட்சியைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏ-க்களைத் தகுதிநீக்கம் செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவரும் நிலையில், ‘மாநிலத்தில் இடைத்தேர்தல்கள் இருக்காது’ என்று சட்டமன்றத்தில் முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியதற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

‘அரசமைப்புச் சட்டத்தின் 10ஆவது அட்டவணையை முதல்வர் கேலி செய்கிறார்’ என்றும் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது. ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் அரசமைப்புச் சட்டத்தை மதிக்க வேண்டியதன் அவசியத்தை உச்ச நீதிமன்றத்தின் இந்த வார்த்தைகள் உணர்த்துகின்றன.

தெலங்கானாவில் 2023 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. எதிர்க்கட்சியான பாரத ராஷ்டிரிய சமிதி கட்சியைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏ-க்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். கட்சி தாவிய எம்.எல்.ஏ-க்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி பிஆர்எஸ் கட்சி தெலங்கானா சட்டப்பேரவைத் தலைவரிடம் மனு அளித்தது.

நடவடிக்கை எடுப்பதில் காலம் தாழ்த்தப்படுவதாகக் குற்றம்சாட்டிய அக்கட்சி, தெலங்கானா உயர் நீதிமன்றத்தை செப்டம்பர் 2024இல் நாடியது. இந்த வழக்கில், தகுதிநீக்க மனு மீது 4 வாரங்களுக்குள் விசாரணையைத் திட்டமிடும்படி சபாநாயகருக்கு உயர் நீதிமன்றத் தனி நீதிபதி உத்தரவிட்டார்.

தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து சட்டமன்றச் செயலாளர் உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் 2024 நவம்பரில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் சபாநாயகருக்கு நியாயமான கால அவகாசத்தை வழங்குவதாக டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து பிஆர்எஸ் கட்சியின் எம்.எல்.ஏ. கெளசிக் ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், ஏ.ஜி.மாசி தலைமையிலான அமர்வு இவ்வழக்கை விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில்தான், பி.ஆர்.எஸ்.கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸுக்குத் தாவிச் சென்றாலும் இடைத்தேர்தல் நடத்தப்படாது என்கிற ரீதியில் முதல்வர் ரேவந்த் ரெட்டி சட்டமன்றத்தில் பேசினார். அவரது பேச்சு உச்ச நீதிமன்ற அமர்வின் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. இதில் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ள 10ஆவது அட்டவணை என்பது கட்சித் தாவல் தடைச் சட்டம் தொடர்பானது. 1985இல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது கொண்டுவரப்பட்ட சட்டம் இது.

உயர்ந்த பொறுப்பில் உள்ள முதல்வர் அரசமைப்புச் சட்டத்தை நீர்த்துப்போக வைக்கும் அளவுக்குச் சட்டமன்றத்தில் பேசியிருப்பது கவலைக்குரியது. மேலும், பொதுவாகச் சொல்லப்படும் கருத்துகளைவிட சட்டமன்றத்தில் பேசும் கருத்துகள் பலம் வாய்ந்தவை; அவற்றுக்குப்புனிதத் தன்மையும் உண்டு என்று நீதிமன்றம் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது. சட்டமன்றத்தில் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று எண்ணுகிற ஆட்சியாளர்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கருத்து ஒரு பாடம்.

மேலும், ஒரு கட்சி சார்பாகத் தேர்தலில் நின்று வெற்றி பெறும் மக்கள் பிரதிநிதியை, வேறு கட்சிக்கு மாறுவதற்கு ஊக்கப்படுத்துவதைப் போலச் சட்டமன்றத்திலேயே பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது வாக்களிக்கும் மக்களுக்குச் செய்கிற துரோகமாகும். இதை அரசியல் கட்சிகள் மனதில் நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும்.

எதிர்காலத்தில் அரசமைப்புச் சட்டத்தில் உள்ள சட்ட விதிகளைக் குறைத்து மதிப்பிடும் வகையில் பேசுவதை ஆட்சியாளர்கள் கண்டிப்புடன் தவிர்க்க வேண்டும். தெலங்கானா முதல்வருக்கு எதிரான உச்ச நீதிமன்றத்தின் கருத்துகள் காங்கிரஸுக்கு மட்டுமல்ல, அனைத்துக் கட்சிகளுக்கும் பொருந்தும்!

SCROLL FOR NEXT