மகாகவி பாரதியின் திருநாளை எட்டையபுரத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சீரும் சிறப்புமாக நடத்தினார். இதை அன்றைய அரசியல் தலைவர்கள், தமிழ் அறிஞர்கள் பலரும் பாராட்டி சீராட்டினார்கள். சிவாஜி கணேசனுக்கு புகழ்மாலை சூட்டினார்கள்.
இதுகுறித்து, 1958-ல் ‘சுதேசமித்திரன்’ ஏட்டில் எட்டையபுரம் தி.சுவாமிநாதன் எழுதிய கட்டுரை வருமாறு:
“இவ்வருடம் (1958) பாரதி விழாவை என் சொந்தச் செலவில் நடத்துகிறேன். அனைவரும் திரண்டு வருக” என்று பத்திரிகைகளில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அறிக்கை விட்டிருந்தாரல்லவா? அவ்விழாவில் கலந்து கொள்ளத்தான் எட்டையபுரத்தை நோக்கி பாரதி அன்பர்கள் படையெடுத்துக் கொண்டிருந்தார்கள்.
சென்னையிலிருந்து வரவேற்புக் கமிட்டித் தலைவர் சிவாஜி கணேசன் தலைமையில் 33 பெரிய கார்களில் கலைஞர்கள் எட்டையபுரத்தை நோக்கிப் புறப்பட்டார்கள். 100 கவிஞர்கள் அப்பவனியில் காரில் பாரதியின் உருவப்படம் வைத்து, பாரதி பாடல்களைப் பாடிக் கொண்டே சென்னையிலிருந்து வந்தார்கள். அந்தக் கார்களில் ‘பாரதி விழாக் குழு’ என்று பெயர் ஒட்டப்பட்டிருந்தது. ஒன்று, இரண்டு, மூன்று இலக்கமிடப்பட்டு, ஒன்றன் பின் ஒன்றாகக் கார்கள் வந்த காட்சி, உண்மையிலேயே கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
சென்னையிலிருந்து எட்டையபுரம் வரையிலும் பாதையோரங்களில் ரசிகர்கள் திரள் திரளாகக் கூடிநின்று ஆரவாரம் செய்தனர். சென்ற இடங்களிலெல்லாம் ஏராளமான மக்கள் கூடி நின்று, அமோக வரவேற்புக் கொடுத்து ‘நடிகர் திலகம் சிவாஜி கணேன் வாழ்க! கவிஞருக்கு விழா நடத்தும் கலைஞர் கணேசன் வாழ்க’ என்று ஒலித்த கோஷம் விண்ணைப் பிளந்தது. இரவு 2.30 மணிக்கு கோவில்பட்டிக்கு வந்து சேர்ந்தார்கள். நடு இரவிலும் கூட மக்கள் ஊர் எல்லைகளில் கூட்டம் கூட்டமாக நின்று, வரவேற்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்த 400 மைல் நீளமுள்ள பவனி, தமிழ்நாட்டுச் சரித்திரத்திலேயே இதுதான் முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது. செப்.10-ம் தேதி காலை சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யுடன் கலைஞர்கள் அனைவரும் எட்டையபுரம் வந்து விழா ஏற்பாடுகளைப் பார்த்துவிட்டு, கட்டபொம்மன் வாழ்ந்த பாஞ்சாலங்குறிச்சிக்கும், வ.உ.சி. பிறந்த ஒட்டப்பிடாரத்துக்கும் சென்று வந்தார்கள். அன்று மாலை 5 மணிக்கு விழா ஏற்பாடுகளைப் பார்வையிட நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எட்டையபுரம் வந்தார்.
பாரதி மணிமண்டபத்தைப் பார்வையிட்டார். பாரதியின் உருவப் படத்துக்கு மலர்மாலை போட்டு, மரியாதை செலுத்தினார். சாரைசாரையாக 50 கார்கள் சிவாஜி கணேசன் பின்னால் வரவே, விழாப் பந்தலில் ஒரே கூட்டம். போலீஸாரும் தொண்டர்களும் வந்து கூட்டத்தைச் சமாளித்தார்கள். ‘நடிகர் திலகம் சிவாஜிகணேசன் வாழ்க’ என்ற கோஷம் அரங்கத்தை அதிரச் செய்தது.
பதினொன்றாம் தேதியன்று காலை சுமார் 10 மணிக்குப் பாரதி விழாக் கமிட்டியில் இருந்த திரைப்பட இயக்குநர் ஏ.பி.நாகராஜன் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டு, குரல் எழுப்பிக் கொண்டிருந்தார்.
எந்தக் காரில் யார் செல்ல வேண்டும் என்பதற்குக் கூடப் பட்டியல் தயாரித்துக் கச்சிதமாக அவர் ஏற்பாடுகளைச் செய்திருந்தார். டைரக்டர் சோமு எல்லோரையும் வரவேற்றார். விழாவுக்கு வந்திருந்தவர்களையும், கலைஞர்களையும் அமைச்சர்கள், தமிழ் அறிஞர்கள் ஆகியோரையும் கோவில்பட்டியிலுள்ள லாயல் மில்ஸ் மற்றும் லட்சுமி மில்ஸ் பங்களாவில் தங்க வைத்திருந்தார்கள்.
கோவில்பட்டியிலிருந்து ஒரு காரில் முதல் அமைச்சர் காமராஜர் ஒருபுறமும், நிதி அமைச்சர் சுப்பிரமணியம் மறுபுறமும் அமர்ந்திருக்க, நடுவே பாரதி விழாக் கமிட்டித் தலைவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீற்றிருக்க, ஐம்பது கார்கள் பின்தொடர்ந்தது. ஒரு மாபெரும் ஊர்வலம் புறப்பட்டு, எட்டையபுரத்துக்கு வந்து சேர்ந்தது. வீதி நெடுகிலும் ‘பாரதி கணேசன் வாழ்க, தமிழ்நாட்டுக் கலைஞர்கள் வாழ்க’ என்று மக்கள் ஆரவாரம் செய்தனர்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் எட்டையபுரத்தில் ராஜா உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் அமைந்துள்ள பிரமாண்டமான பந்தலில் கூடியிருந்தார்கள். பந்தல் வாசலில் பாரதியின் படம் வைக்கப்பட்டிருந்தது. படத்தின் இருபுறங்களிலும் இரண்டு குத்து விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன.
காருக்குறிச்சி அருணாச்சலத்தின் நாதஸ்வர இன்னிசையுடன் விழா தொடங்கியது. கல்வி மந்திரி சி.சுப்பிரமணியம் தேசியக் கொடியேற்றி வைத்து பேசும்போது, ‘பாரதி விழா வருடந்தோறும் எட்டையபுரத்தில் சிறப்பாக நடைபெற வேண்டும். எட்டையபுரத்தில் பாரதி விழா ஆண்டுதோறும் நடத்த அரசாங்கமும் தன் பங்கைச் செலுத்தத் தயாராக இருக்கிறது’ என்று கூறினார்.
பாரதி விழா வரவேற்புக் கமிட்டித் தலைவர் சிவாஜி கணேசன் வரவேற்புப் பிரசங்கத்தைக் கவிதையாகக் கணீர் என்று பேசியதை அனைவரும் பாராட்டினார்கள்.
சென்னை ராஜ்ய முதன்மந்திரி காமராஜ் விழாவைத் தொடங்கி வைத்துப் பேசுகையில், பாரதி விழாவை நடத்த முன்வந்த கலைஞர் சிவாஜி கணேசனை வெகுவாகப் பாராட்டினார். அவ்வை டி.கே.சண்முகம் அழகான தமிழ்ச் சுவை மிகுந்த தலைமை உரையைப் பேசி முடித்தவுடன், பாரதி மண்டபத்தைக் கட்டித் தந்த பேராசிரியர் ‘கல்கி’ ரா.கிருஷ்ணமூர்த்தியின் உருவப் படத்தை ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் திறந்து வைத்தார். அவர் பேசும்போது, பேராசிரியர் ‘கல்கி’ தமிழ்நாட்டுக்குச் செய்த சேவைகளை விளக்கி, தமிழ் வளர்ச்சிக்கான அவரது சேவைகளைத் தமிழ்நாடு என்றும் மறக்காது என்று குறிப்பிட்டார்.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் உருவப்படத்தை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திறந்து வைத்துப் பேசுகையில், “இந்தச் சிரிக்கும் முகம் கலைஞர்களிடையே வேற்றுமை வளர வேண்டாமென்று கேட்கிறது. ஒரு கலைஞன் உயர்ந்தவன், மற்றொருவன் தாழ்ந்தவன் என்று பாகுபாடு காட்டக் கூடாது என்று சொல்லுகிறது” என உணர்ச்சி ததும்பப் பேசினார். இத்துடன் முற்பகல் நிகழ்ச்சி முடிவடைந்தது.
பாரதி விழாவில் களைகட்டிய இசைக் கச்சேரி
பிற்பகலில் நடைபெற்ற விழாவில் கே.சாரங்கபாணி, மதுரை டி.ராமகிருஷ்ணன், கே.டி.கோசல்ராம், பி.டி.சம்பந்தம், சகஸ்ரநாமம், ம.பொ.சி., ஜீவானந்தம், சின்ன அண்ணாமலை, தியாகி சோமையாஜுலு ஆகியோர் பாரதியாரைப் பற்றிப் பேசினார்கள்.
அன்று இரவு விழாப் பந்தலில் நடக்கவிருந்த பாட்டுக் கச்சேரிக்காகப் பந்தலில் 2 மணி நேரத்துக்கு முன்பே கூட்டம் அலைமோத ஆரம்பித்தது. முதல் பந்தலுக்குள் எழுத்தாளர்களுக்கென்றும் நிருபர்களுக்கென்றும் விசேஷப் பார்வையாளர்களுக்கென்றும் தனித்தனியாக வசதி செய்யப்பட்டிருந்த இடங்களை எல்லாம் பொது ஜனங்கள் ஆக்கிரமித்துக் கொண்டனர். தலைவர்கள் உட்கார வேண்டிய மேடையில் உள்ள இடத்தையும் சுவீகரித்துக் கொண்டனர்.
இன்னும் ஐந்து நிமிட நேரம் போனால், எங்கே சங்கீத வித்துவான்கள் உட்கார வேண்டிய இடமும் பறிபோய் விடுமோ என்று நான் கவலைப்பட்டுக் கொண்டிருந்த சமயம், நல்ல வேளையாக இசையமைப்பாளர் ஜி.ராமநாதன் வந்து தமக்குரிய இடத்தில் அமர்ந்து, கச்சேரியைத் தொடங்கினார். அவர் பாட ஆரம்பித்ததும் சபையில் நிசப்தம் நிலவியது. இரவு 8.30 மணிக்கு கே.பி.சுந்தராம்பாள் கோஷ்டியினர் இசை நிகழ்ச்சியுடன் முதல் நாள் விழா நிறைவடைந்தது.
‘பாரதி’ கணேசனான சிவாஜி கணேசன்
பாரதி விழாவின் இரண்டாவது நாள் நிகழ்ச்சி இலக்கிய அரங்கம். இலக்கிய அரங்கில் கலந்து கொள்ள அதிகாலையிலேயே பாரதி அன்பர்கள் பந்தலில் நிரம்பி விட்டார்கள். இலக்கிய அரங்கத்தை அமைச்சர் பக்தவத்சலம் தொடங்கி வைத்துப் பேசுகையில், பாரதி விழாவை சிவாஜி கணேசன் நடத்த முன் வந்ததைப் பாராட்டியதோடு, வருடந்தோறும் எட்டையபுரத்தில் பாரதி விழா சிறப்பான முறையில் கொண்டாட இன்றே அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
மேலும், பாரதி விழாவை மிகச் சிறப்பாக நடத்திய சிவாஜி கணேசனை ‘பாரதி கணேசன்’ என்று அழைப்பதுதான் தகுந்தது என்றும் கூறினார். விழாத் தலைவர் ம.பொ.சிவஞானம் தமது தலைமை உரையில் ‘பாரதி கணேசன்’ என்று சிவாஜி கணேசன் பெயரை மாற்றி வைக்க வேண்டுமென்று கூறியதை வரவேற்று, ‘தமிழ்நாடு என்று நமது மாகாணத்துக்குப் பெயர் வைக்கத் தயங்கும் மந்திரிகள்’ என்று தனது பேச்சில் குறிப்பிட்டார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இலக்கிய அரங்கில் மு.வரதராசனார், கி.வா.ஜகந்நாதன், ஆர்.சீனிவாசராகவன், ஐயம்பெருமாள் கோனார், ‘கல்கி’ துணை ஆசிரியர் பகீரதன், ஜீவானந்தம், புத்தனேரி சுப்பிரமணியம், ரா.பி.சேதுப்பிள்ளை மற்றும் பல தமிழ் அறிஞர்கள் பேசினார்கள்.
பாரதியின் தாய்மாமனார் ரா.சாம்பசிவ ஐயர், தம்பி விஸ்வநாதன் ஆகியோர் பாரதியின் பாடல்களைப் பாடினார்கள். மாலையில் சி.எஸ்.ஜெயராமன் இசை நிகழ்ச்சிக்குப் பின் சொக்கலால் அதிபர் ஹரிராம் சேட் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. கடைசியாக அமைந்த ஹரிராம் சேட் கச்சேரி இந்த ஆண்டு விழாவில் நட்சத்திரக் கச்சேரியாக அமைந்தது. விழாவில் நடைபெற்ற ஐந்து சங்கீதக் கச்சேரிகளும் (காருக்குறிச்சி நாதஸ்வரக் கச்சேரி உட்பட) சிறப்பாக அமைந்தன.
பொதுவாக, ‘ஐந்துக்கு இரண்டு பழுதில்லை’ என்று சொல்லுவார்கள். ஆனால், பாரதியார் விஷயத்தில் நூற்றுக்கு நூறு பங்கு வெற்றியாக, ஐந்து கச்சேரிகளும் அபாரமாய் அமைந்துவிட்டன.
பாரதி மணி மண்டபத்துக்கு சிவாஜி கணேசன் ஆயிரம் ரூபாய் செலவில் வழங்கிய மெர்க்குரி விளக்கை, தூத்துக்குடி ஏ.பி.சி.வீரபாகு, எம்எல்ஏ திறந்து வைத்துப் பேசினார்.
பாரதி விழாவுக்கு இந்த ஆண்டு அமைக்கப்பட்டிருந்த பந்தல் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. தழைகளாலும், குழைகளாலும், மலர்மாலைகளாலும், பச்சைத் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட பந்தல் தேவேந்திரனுடைய கொலு மண்டபம் போல் இருந்தது.
பந்தல் அலங்காரம் மட்டும் அல்ல; பந்தலில் வசதியாக உட்காரவும், நிகழ்ச்சிகளை சிரமமின்றி பார்க்கவும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்த பொதுக் காரியதரிசி ஜி.என்.வேலுமணியின் சேவை பெரிதும் பாராட்டத்தக்கது. இப்பந்தல் அமைக்க அவர், பதினைந்து தினங்கள் இரவெல்லாம் கண் விழித்துச் சேவை செய்ததை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
அதேபோல், விழாவின் ஏற்பாடுகளையெல்லாம் முழுப் பொறுப்பு ஏற்று, எட்டையபுரத்தில் ஒரு மாத காலம் தங்கி விழாவை வெற்றிகரமாய் நடத்தி முடித்த தனிப் பெருமை டி.பி.பொன்னுச்சாமி பிள்ளையைச் சாரும். ஒரு இளைஞரைப் போல் அவர் பம்பரமாகச் சுழன்று, விழாவின் ஒவ்வொரு வேலையையும் கவனித்து வந்ததை தமிழகமும், பாரதி அன்பர்களும் என்றும் மறக்க மாட்டார்கள்.
இந்த விழாவில் லட்சம் மக்கள் கலந்திருந்தார்கள். தண்ணீர் வசதிக்காக வைப்பாற்றிலிருந்து லாரி லாரியாக எட்டையபுரத்திற்குத் தண்ணீர் கொண்டு வந்து சேர்த்த, விழாக் கமிட்டி தலைவராக இருந்த எல்.வி.ராமகிருஷ்ணனை பாரதி அன்பர்கள் அனைவரும் மனமார வாழ்த்தினார்கள். இவ்வாறு பாரதி விழா பற்றி அந்த கட்டுரையில் சிலாகித்திருந்தார் தி.சுவாமிநாதன்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு இயல்பாகவே பாரதியார், வ.உ.சிதம்பரனார், வீரபாண்டிய கட்டபொம்மன் மீது அலாதியான பிரியம் உண்டு. அதனால்தான், பாரதி விழாவை இவ்வளவு சிறப்பாகக் கொண்டாடினார்.
சிறு வயதில் கட்டபொம்மன் நாடகத்தைப் பார்த்துத்தான் அவருக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசையே உருவானது. பின்னாளில் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படத்தில் கட்டபொம்மனாக நடித்து பெரும்புகழ் பெற்றார். அந்த வகையில், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு, கயத்தாறில் அவர் தூக்கிலிடப்பட்ட புளிய மரத்தின் அருகே தன்னுடைய சொந்த செலவில் வானுயர்ந்த சிலையை வைத்தார். அதை அன்றைக்கு குடியரசுத் தலைவராக இருந்த சஞ்சீவ ரெட்டியை அழைத்துவைத்து திறந்து வைத்தார்.
அதேபோல், ஜெமினி கணேசனுக்கும், சாவித்திரிக்கும் பாரதியார், காருக்குறிச்சி அருணாச்சலத்தின் மீது பற்றும் பாசமும் உண்டு. அந்த வகையில், கோவில்பட்டி கடலையூர் ரோடு சந்திப்பில் காருக்குறிச்சி அருணாச்சலத்துக்கு தங்களது சொந்த செலவில் சிலை வைத்தார்கள். ஏதோவொரு வகையில் திருநெல்வேலி மாவட்டத்தோடு இவர்களுக்கு ஒரு பிணைப்பு இருந்துள்ளது.
எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது பாரதி நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்தியதோடு, எட்டையபுரம் வளர்ச்சிக்காக பாரதி மகளிர் பாலிடெக்னிக் மற்றும் வேலைவாய்ப்பு பெருக்கக் கூடிய வகையில் பாரதி கைத்தறி நெசவு ஆலையையும் தொடங்கி வைத்தார்.
சுதந்திரப் போராட்ட தியாகியும், முற்போக்கு சிந்தனையாளருமான இரா.நல்லகண்ணு நம்மோடு உள்ளார். அவர் தண்டனைக்கு உள்ளான நெல்லை சதி வழக்கு, விடுதலைப் போராட்ட காலத்தில் லோன் துரை கொலை வழக்கு, பூச்சிக்காடு கள்ளுக்கடைக்கு தீ வைத்த வழக்கு, மாவடிப்பண்ணை மரம் வெட்டிய நிகழ்வு - இவற்றைக் குறித்தும், திருநெல்வேலி மாவட்டம் கயத்தாறில் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்ட கட்டபொம்மன் குறித்து வெளியான ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படத்துக்கும், உண்மையான வரலாறுக்கும் சில மாறுபாடுகள் உள்ளன. அவை குறித்தும் அடுத்தடுத்து விவரிக்கிறேன்...
மேலும், நெல்லை மாவட்டத்தில் கடும் பஞ்சம் நிலவியது... அதேபோல் வெள்ளச்சேதமும் ஏற்பட்டது. பஞ்ச காலத்தில், மாட்டுக்கு தீவனமாக வைக்கப்படும் பிண்ணாக்கை உணவாக உட்கொண்டது, வெள்ளக் காலத்தில் பாடப்பட்ட குஜிலிப் பாடல் பற்றியும் வரும் அத்தியாயங்களில் பார்ப்போம்...
(தொடர்வோம்)
முந்தைய பகுதி > ‘கல்கி’யின் விடாமுயற்சியால் உருவான பாரதி மண்டபம் - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 9
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago