அது 1965, எழுத்தாளர் நா.பார்த்தசாரதி ‘தீபம்’ என்ற பத்திரிகையைத் தொடங்கியிருந்தார். அதன் ஆரம்பக் கால இதழ்கள் ஒன்றில் ஹெப்சிபா ஜேசுதாஸனின் ‘புத்தம் வீடு’ நாவலைப் பற்றிய குறிப்பு வெளிவந்திருந்தது. அப்போதுதான் ஹெப்ஸிபா ஜேசுதாசன் என்ற பெயரும் ‘புத்தம் வீடு’ என்ற நாவலின் பெயரும் எனக்கு அறிமுகமானது.
எங்கள் பாளையங்கோட்டை, கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் ஊர். அங்கேஹெப்ஸிபா என்ற பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்தப் பெயரில் ஒரு நாவலாசிரியர் இருக்கிறார் என்பதைத் ‘தீபம்’ இதழ் மூலம்தான் தெரிந்துகொண்டேன். ‘புத்தம் வீடு’ நாவல் பற்றி செவிவழிச் செய்தியாக அந்த நாவல் பிரசுரமாக எழுத்தாளர் சுந்தர ராமசாமிதான் காரணம் என்பது தெரியவந்திருந்தது. சுந்தர ராமசாமி ‘புத்தம் வீடு’ நாவல் பிரதியை தமிழ்ப் புத்தகாலயம் பதிப்பகம் கண.முத்தையாவிடம் கொடுத்துப் பிரசுரிக்கச் சொன்னதாகக் கேள்விப்பட்டிருந்தேன். அதன்படி 1964இல் தமிழ்ப் புத்தகாலயம் வெளியீடாக வந்த அந்த நாவலை 1972இல்தான் எனக்குப் படிக்க வாய்த்தது. திருநெல்வேலியில் பள்ளிக்கூட நூல்களை விற்பனைசெய்யும் புத்தகக் கடைகள்தான் இருந்தன. 1970 வாக்கில் எழுத்தாளர் பா.ஜெயப்பிரகாசம் நெல்லை மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்தார். அவரது அலுவலகத்தில் ‘புத்தம் வீடு’ நாவல் இருந்தது. அவரிடமிருந்துதான் அந்த நாவலை வாங்கிப் படித்தேன். ரொம்பப் பிடித்திருந்தது. பல நாட்களுக்கு லிஸி, தங்கராஜ், கண்ணப்பச்சி என எல்லாக் கதாபத்திரங்களும் மனத்தில் புரண்டுகொண்டே இருந்தன.
‘புத்தம் வீடு’ நாவலின் தொனி குமரி மாவட்ட கிறிஸ்தவப் பின்புலத்திலிருந்து எழுந்தது. ஒரு அசாதாரணமான எளிய நடையில் ஹெப்ஸிபா இந்த நாவலை எழுதியிருக்கிறார். இந்த நாவலின் இலக்கிய அந்தஸ்துக்கு இந்த எளிய நடையும் ஒரு காரணம். குமரி மாவட்டக் கிறிஸ்தவ வட்டார வழக்கு நாவல் நெடுக இழையோடுகிறது. தன் வீட்டில், தன் குடும்பத்தில் புழங்கும் மொழியிலேயே ஹெப்ஸிபா ‘புத்தம் வீடு’ நாவலை எழுதியிருக்கிறார் என்று தோன்றுகிறது. அவரது மொழி நடையில் ஒரு நளினம் இருக்கிறது.
பனையேறித் தொழில் செய்யும் ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தையும் அந்தக் குடும்பம் வாழும் பனைவிளைக் கிராமத்தையும் அதன் கலாச்சாரத்தையும் இந்த நாவல் சித்தரிக்கிறது. நாவலில் மூன்று தலைமுறை மனிதர்கள் வருகிறார்கள். லிஸியின், அவளது குடும்ப உறுப்பினர்களின் கதையாகத் தன் போக்கில் இந்த நாவல் விரிந்து செல்கிறது. இந்தக் கதையை விவரிக்க நாவலாசிரியர் பெரிய பிரயத்தனம் எதையும் மேற்கொள்ளவில்லை. தன்னியல்பாகக் கதையைச் சொல்லிக்கொண்டு போகிறார்.
இந்தக் கட்டுரை எழுதுவதற்காக ‘புத்தம் வீடு’ நாவலை மீண்டும் வாசித்தேன். எழுபதுகளில் இந்த நாவலை முதன்முதலில் வாசித்தபோது ஏற்பட்ட இலக்கியப் பரவசம் இப்போதும் ஏற்பட்டது. இந்த நாவலின் முதல் பதிப்பு வெளிவந்து அறுபது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இன்றும் ‘புத்தம் வீடு’ உயிர்ப்புடன் இருப்பதைப் பார்த்து ஆச்சரியமாக இருக்கிறது. இது மகத்தான படைப்புகளுக்கே சாத்தியம். 1974இல் எழுத்தாளர் அம்பை, பெண் எழுத்தாளர்களைப் பற்றி ஆய்வு ஒன்று செய்துகொண்டிருந்தார். ஜெப்ஸிபா அப்போது திருவனந்தபுரத்தில் வாசித்துவந்தார். அந்த ஆய்வுக்காக அம்பை ஹெப்ஸிபாவைச் சந்திக்க திருவனந்தபுரம் சென்றபோது நானும் அவருடன் சென்றிருந்தேன். அவரது நாவலைப் போலவே ஹெப்ஸிபாவும் மிக எளிமையாக இருந்தார். அம்பை, அவருடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். நான் கேட்டுக் கொண்டிருந்தேன். ஹெப்ஸிபா வீட்டிலிருந்து வெளியே வரும் போதே மணி எட்டாகிவிட்டது. பஸ் ஸ்டாண்டில் நாகர்கோவில் பஸ்ஸைப் பிடித்தோம். அதிகக் கூட்டமில்லை. சிறிது நேரத்தில் மழை கொட்டியது.
களியக்காவிளைப் பக்கம் வரும்போது பிரேக் டெளன் ஆகிவிட்டது. நல்ல இருட்டு. மழை வேறு. கண்டக்டர் வருகிற பஸ்களை நிறுத்தி, பயணிகளை ஏற்றி விட்டுக் கொண்டிருந்தார். நாகர்கோவில் வரும்போது பத்துமணிக்கு மேலாகி விட்டது. சுந்தர ராமசாமி வீட்டில் இரவுப் பொழுதைக் கழிக்கலாம் என்று சொன்னேன்.அம்பை தயங்கினாலும் கடைசியில் ஒத்துக் கொண்டார். நாகர்கோவில் ஊரே அடங்கிக் கிடந்தது. எப்படியோ ராமசாமி வீட்டை நெருங்கினோம். அந்த நேரத்திலும் வீட்டுத் திண்ணையில் விளக்கெரிந்தது. சு.ரா., அவருடைய நண்பரான வடசேரி பத்மனாபனுடன் பேசிக் கொண்டிருந்தார். எங்களை வரவேற்றுச் சாப்பிட வைத்தார். மறக்க முடியாத இரவு அது.
ஹெப்ஸிபா, ‘மானீ’, ‘அனாதை’, ‘டாக்டர் செல்லப்பா’ போன்ற நாவல்களையும் பிற்காலத்தில் எழுதியிருக்கிறார். என்றாலும் அந்த நாவல்களை அவரது முதல் நாவலான ‘புத்தம் வீட்டு’க்கு இணையாகச் சொல்ல முடியாது. அந்த ‘புத்தம் வீடு’ என்கிற நாவல் காலத்தால் அழிக்க முடியாத ஒரு படைப்பு. பல தலைமுறைகளுக்கும் இந்த நாவல் இருக்கும் என்று தோன்றுகிறது; அதுபோல் அதை எழுதிய ஹெப்ஸிபா ஜேசுதாசனும்.
- வண்ணநிலவன், எழுத்தாளர்
ஹெப்ஸிபா ஜேசுதாசன், குமரி மாவட்டம் தக்கலை அருகே புலிப்புனத்தைச் சொந்த ஊராகக் கொண்டவர். பர்மாவிலும் இந்தியாவிலும் பள்ளிக் கல்வி பயின்றவர். திருவனந்தபுரத்தில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றியவர். ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். ‘Count down from Solomon’ என்ற பெயரில் தமிழ் இலக்கியப் படைப்புகளை ஆங்கிலத்தில் தந்துள்ளார். ‘புத்தம் வீடு’ (தமிழ்ப் புத்தகாலயம்) ‘டாக்டர் செல்லப்பா’ (தமிழ்ப் புத்தகாலயம்), அநாதை (அன்னம்), மா-னீ (அன்னம்) ஆகிய நாவல்கள் வெளிவந்துள்ளன. ‘சிறுகதை உலகம்’ என்றொரு சிறுகதைத் தொகுப்பும் வந்துள்ளது. இவரது படைப்புகளில் ‘புத்தம் வீடு’ மட்டும் காலச்சுவடு பதிப்பகத்தால் தமிழ் கிளாசிக் நாவலாக மறுபதிப்பு கண்டுள்ளது.