ஏடிஎம் கட்டணம்: சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம்!

By எம்எஸ்

கணக்கு வைத்திருக்கும் வங்கி அல்லாத மற்ற வங்கி ஏடிஎம்-களில் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் வசூலிக்கப்படும் கட்டணம் ரூ.17-ல் இருந்து ரூ.19 ஆக வரும் மே 1-ம் தேதி முதல் உயர்த்தப்பட விருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கி இருப்பை சரிபார்த்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு வசூலிக்கப் படும் கட்டணம் ரூ.6-ல் இருந்து ரூ.7 ஆக உயர்த்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வுக்கு ஏடிஎம்-களை நிர்வகிக்கும் செலவு அதிகரித்துள்ளதே காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முன்பெல்லாம் வங்கிகளில் பணம் எடுப்பதென்றால் வங்கிகளுக்குச் சென்று டோக்கன் வாங்கி நீண்ட வரிசையில் காத்திருந்து பணம் எடுக்க வேண்டும்.

தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக வங்கிக்கே செல்லாமல் எந்த நேரமும் ஏடிஎம் வழியாக பணம் எடுக்கும் நடைமுறை வந்தபிறகே வங்கிப் பணியாளர்களுக்கும் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் நிம்மதி ஏற்பட்டது.

இதர வங்கி ஏடிஎம்-களில் மெட்ரோ நகரங்களில் 3 முறையும், மெட்ரோ அல்லாத நகரங்களில் 5 முறையும் இலவசமாக எடுக்கலாம் என்ற எண்ணிக்கையை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் வசூலிக்கப்படும் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்திருப்பது சாதாரண மக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் முடிவாக அமைந்துள்ளது. பணப் பரிமாற்றத்தில் இந்தியா கடந்த சில ஆண்டுகளாக அபார வளர்ச்சி கண்டு வருகிறது.

கடந்த 2013-ல் 222 கோடியாக இருந்த மின்னணு பணப் பரிமாற்றம், 2024-ல் 20,784 கோடியாக உயர்ந்துள்ளது. இதன்மூலம் 2758 லட்சம் கோடி அளவுக்கு பணப் பரிமாற்றம் நடந்துள்ளது. இதில் கூகுள்பே, போன்பே போன்ற யுபிஐ மூலம் நடைபெறும் பணப் பரிமாற்றத்தின் பங்கு மிக அதிகம். கடந்த 2019-ல் 34 சதவீதமாக இருந்த யுபிஐ பணப் பரிமாற்றம் 2024-ல் 83 சதவீதமாக உயர்ந்துள்ளது.

யுபிஐ வசதி மூலம் பணப் பரிமாற்றம் நடைபெறுவது 100 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. இந்த மின்னணு பணப் பரிமாற்ற வளர்ச்சியை இந்தியா உலக நாடுகளுக்கும் விரிவுபடுத்தி சாதனை படைத்து வருவது ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படக் கூடிய விஷயமாகும்.

இந்த அளவுக்கு வளர்ச்சி கண்டு வரும் நிலையில், கட்டணம் என்ற பெயரில் பொதுமக்கள் மீது சுமைகளை அதிகரிக்கும்போது, கட்டணத்தை தவிர்க்கும் முயற்சியாக பொதுமக்கள் மீண்டும் பழைய முறைக்கு திரும்ப வாய்ப்பு ஏற்பட்டு விடும். தற்போது அனைத்து வங்கிகளும் குறைந்தபட்ச இருப்புக்கான அபராதம் உள்ளிட்ட பல கட்டணங்களை வாடிக்கையாளரின் அனுமதியின்றி கணக்கிலிருந்து எடுத்துக் கொள்கின்றன.

மக்களிடம் வசூலிக்கும் கட்டணம், அபராதம் ஆகியவை கோடிக்கணக்கில் வங்கிகளுக்கு கிடைப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கும் நிலையில், இதுபோன்ற ஏடிஎம் செலவுகளை அதிலிருந்து சமாளிக்க வேண்டுமே தவிர, மக்கள் தலையில் சுமத்தக் கூடாது. வங்கிகளுக்கு கிடைக்கும் வட்டி உள்ளிட்ட இதர வருவாயிலிருந்து செலவுகளை சமாளிப்பதே இதற்கான தீர்வாக அமையும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 hour ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்