தலையங்கம்

இணையவழிக் குற்றங்கள்: இறுக்கமான கடிவாளத்துக்கான தருணம்!

செய்திப்பிரிவு

இணையவழிக் குற்றங்கள் 2022-24இல், மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாகவும் ஏமாற்றப்பட்டோர் இழந்த தொகை 21 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே பெரும் அச்சுறுத்தலாக நீடித்துவரும் இந்தச் சிக்கல் வெவ்வேறு பரிமாணங்களில் அதிகரித்துவருவது மிகுந்த கவலைக்குரியது. மார்ச் 12 அன்று மாநிலங்களவையில் ஒரு கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய

மத்திய உள்துறை இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமார், கடந்த மூன்று ஆண்டுகளில் நடந்த இணையவழிக் குற்றங்கள் குறித்து ‘நேஷனல் சைபர்கிரைம் ரிப்போர்ட்டிங் போர்ட்டல்’ (என்சிசிஆர்பி) பதிவுசெய்துள்ள தகவல்களை வெளியிட்டார். அதன்படி, இந்திய அளவில் 2022இல் 39,925 குற்ற நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன; மொத்தம் ரூ.91.14 கோடி அபகரிக்கப்பட்டது.

குற்றங்களின் எண்ணிக்கை 2024இல் 1,23,672 ஆகவும் அபகரிக்கப்பட்ட தொகை ரூ.19,35.51 கோடி ஆகவும் பதிவாகியுள்ளது. அதாவது, குற்றங்கள் மூன்று மடங்கும் பாதிக்கப்பட்டோர் பறிகொடுத்த தொகை 21 மடங்கும் அதிகரித்துள்ளன. 2025இன் முதல் இரண்டு மாதங்களில் மட்டும் ரூ.210.21 கோடி அளவுக்கு இழப்பை ஏற்படுத்தும்வகையில் 17,718 குற்றங்கள் நடந்துள்ளன.

‘டிஜிட்டல் அரெஸ்ட்’ எனப்படுகிற இணையவழிக் கைது நடவடிக்கைகள் அதிகரித்துவருகின்றன. மோசடியில் ஈடுபடுவோர் காவல் துறை, சிபிஐ போன்றவற்றின் பிரதிநிதிபோல நடிப்பார்கள். போதைப்பொருள் உள்படத் தடைசெய்யப்பட்ட ஏதோ ஒரு பார்சல் அனுப்பப்பட்டுள்ளது; வரி ஏய்ப்பு நடந்துள்ளது இப்படி ஒருவர்மீது போலியாக ஏதேனும் குற்றம்சுமத்தி, வீட்டிலேயே சிறைவைப்பதைப் போல நாடகம் ஆடுவது இந்த மோசடியின் நடைமுறை.

குறிப்பிட்ட தொகையைச் செலுத்தும்படியும் விசாரணை முடிந்து குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்ட பின்னர், அந்தத் தொகை திருப்பி அளிக்கப்படும் எனவும் எதிராளி தெரிவிப்பார். இப்படிக் கோடிக்கணக்கில் பணம் அபகரிக்கப்படுகிறது. ஆந்திராவில் தகவல் தொழில்நுட்பத் துறை கோலோச்சும் சைபராபாத் பகுதியில் 2024இல் முந்தைய ஆண்டைவிட, 900% டிஜிட்டல் கைதுகள் அதிகரித்துள்ளதாகக் காவல் துறை ஆணையரகம் கூறுகிறது.

இந்திய இணையவழிக் குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையம் (14C), இக்காலக்கட்டத்தில் டிஜிட்டல் கைதுகளில் பயன்படுத்தப்பட்ட 83,668 வாட்ஸ்அப் கணக்குகளையும் 3,962 ஸ்கைப் ஐடிக்களையும் முடக்கியிருக்கிறது. கம்போடியா, லாவோஸ், மயன்மார் போன்ற நாடுகளிலிருந்து செயல்படும் மோசடிக் குழுக்கள் இக்குற்றங்களின் பின்புலத்தில் உள்ளன.

ஏற்கெனவே சட்டம் - ஒழுங்குப் பராமரிப்பு, குற்றங்கள் தொடர்பாகப் பணிச்சுமையோடு இயங்கிவரும் காவல் துறையிடம், இணையவழிக் குற்றங்களுக்குத் தீர்வு காண்பதற்குப் போதுமான பணியாளர்களோ, அதிநவீனத் தொழில்நுட்ப வசதியோ இல்லை.

இந்தச் சூழலில், மூத்த குடிமக்கள், தனியாக வசிப்போர் உள்பட எளிமையான இலக்குகளாகக் கருதப்படுவோரிடையே விழிப்புணர்வுப் பரப்புரை அழுத்தமாக நடைபெற வேண்டும். ‘இணையவழிக் கைது’ என்னும் நடவடிக்கை, இந்தியாவில் கிடையாது’ என்பது உணர்த்தப்பட வேண்டும்.

ஒருவேளை இணையவழிக் குற்றத்துக்குப் பலியாகிவிட்டால், உடனடியாக ‘1930’ என்னும் எண்ணைத் தொடர்புகொண்டு புகார் தெரிவிப்பது, இழந்த தொகையை மீட்பதற்கு அதிக சாத்தியங்களை ஏற்படுத்தும். ஒரு ரூபாய் பெறுமானமுள்ள பொருளுக்குக்கூட யுபிஐ பரிவர்த்தனை வழியே கட்டணம் செலுத்தும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில், பணம் செலுத்துபவர், பெறுபவர் ஆகிய இரு தரப்பினரும் இணையவழிப் பாதுகாப்பு குறித்த வழிமுறைகளை அறிந்துகொள்வது அவசியம்.

‘பேரைச் சொன்னாலும் ஊரைச் சொல்லக் கூடாது’ என்பது போன்ற சொல்லாடல்கள் தகவல் பரிமாற்றத்தில் நம் சமூகம் கடைப்பிடித்த நுட்பத்துக்குச் சான்று. அதன் தற்காலத் தொடர்ச்சியாக வங்கிக்கணக்கு எண், ஏடிஎம் பின் நம்பர் உள்பட எந்த விவரத்தையும் பிறருக்குக் கூறக் கூடாது என்பது நம் உள்ளுணர்வாகவே மாற வேண்டும்.

SCROLL FOR NEXT